Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » இதுதான் இஸ்லாம் (பகுதி-5)

இதுதான் இஸ்லாம் (பகுதி-5)

Article தொழுகையை நிலை நாட்டுதல்

இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளில் ஒன்று தொழுகை. படைத்த இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதித்து நம் வேண்டுதல்களைப் பணிவுடன் அவனிடம் கோரும் ஒரு வழிதான் தொழுகை.

2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

இத்தொழுகையைத் தினமும் ஐந்து வேளை அதற்குறிய நேரங்களில் கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்ற வேண்டுமென்று இஸ்லாம் கூறுகின்றது. தொழுகையானது அதனை நிலை நாட்டுபவனை தீமைகளிலிருந்தும் மானக்கேடான செயல்களிலிருந்தும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அநீதங்களிலிருந்தும் தடுக்கக்கூடியதாக உள்ளது என்பதை குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

9:45. (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக! இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

தொழுகையை பேணித் தொழுதல் வேண்டும். அது ஒவ்வொரு விசுவாசியின் கடமை என்பதை அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.

4:103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் – ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.

6:92. இந்த வேதத்தை – அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.

தொழுகையை தொழாமல் வீணாக்கினால் தண்டனை என்பதை குர் ஆன் கூறுவதைப் பாருங்கள்.

நாளை மறுமையில் (சுவனவாசிகள் நரகவாசிகளை நோக்கி )
உங்களை ஸகர் (நரகத்தில் நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.);
அவர்கள் (பதில்) கூறுவார்கள்; ”தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
”அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.
”(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
”இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
.”உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்” எனக் கூறுவர்).

நபி (ஸல்) அவர்கள் இறைதிருப்தியைப் பெறுவதற்காக இரவு நேரங்களில் கால்கள் வீங்க நின்று உபரியான தொழுகைகளை நிறைவேற்றினார்கள் என்பதைக் கீழ்காணும் நபிமொழி நமக்குணர்த்துகிறது.

முகீரா (ரலி) அறிவித்தார். சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள். (ஸஹீஹுல் புகாரி :1130)

மொத்தத்தில் தொழுகையை நிலைநாட்டுவோர் சுவனத்திலும் தொழாதோர் நரகத்திலும் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனங்கள் நபிமொழிகள் உணர்த்துகின்றன. நாளை மறுமையில் படைத்த இறைவன் தன் படைப்பாளிகளாகிய அவனது அடியார்களிடம் விசாரிக்கும் முதல் கேள்வியே தொழுகையைப் பற்றித்தான் என நபிமொழி ஒன்று கூறுகிறது. எனவே தொழுகையை நிலை நாட்டுவது ஒவ்வொரு அடியானின் முக்கிய கடமையாகிறது.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *