Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » [02] மொழிப் பெயர்த்தோனின் உரை

[02] மொழிப் பெயர்த்தோனின் உரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-2
அகிலத்தாரின் இரட்சகனான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனது சாந்தியும் சமாதானமும் இவ்வையகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரது தோழர்கள், குடும்பத்தவர்கள், அன்னாரது வழியை இறுதிநாள்வரை பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!

உமர் (ரலி) அவர்களிடத்தில் வந்த ஒரு யூதர், “அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனம் உள்ளது. நமது வேதத்தில் அந்த வசனம் அருளப்பட்டிருக்குமானால் நாம் அந்நாளை பெருநாள் தினமாக கொண்டாடியிருப்போம்” என்றார். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அது எந்த வசனம் எனக் கேட்டார், அதற்கு அவர் “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன், மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” என்ற வசனம் எனக் கூறினார் (5:3). அதற்கு உமர் (ரலி) அவர்கள் அந்த வசனம் அருளப்பட்ட நாளையும் அது எங்கு அருளப்பட்டது என்பதையும் நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரபாவில் இருக்கும்போது ஒரு வெள்ளிக்கிழமை நாளில் அது அருளப்பெற்றது என்றார். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நான் இந்தச் செய்தியை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், ஒரு யூதர் கூட மேற்கூறப்பட்ட வசனத்தின் மகத்துவத்தை விளங்கியிருந்தார். ஏனெனில் மார்க்கம் பரிபூரணமாகி விட்டது என்று சொல்லப்பட்டுவிட்டால் அதில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. இதற்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களில் அவர்கள் இடைச்செருகல் செய்ய ஆரம்பித்ததுதான் அவர்கள் வழி கெட்டுச் செல்வதற்கும், அல்லாஹ்வின் கோபத்தை பெறுவதற்கும் காரணமாக அமைந்தது.

நான் ஒரு பரிபூரணப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் இருக்கின்றேன் என்பதில் எந்த ஒரு முஸ்லிமிடமும் கடுகளவும் சந்தேகமில்லை. அப்படி அவன் சந்தேகிப்பானானால் அவன் முஸ்லிம் என்று சொல்வதற்கே தகுதியற்றவனாக ஆகிவிடுகின்றான். ஆனால் பெரும்பாலான முஸ்லிம்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்பொழுது இதை வெறும் கொள்கையாக ஏற்றிருக்கின்றார்கள் போன்றுதான் தோன்றுகிறது. காரணம் அந்த அளவு பித்அத்துகள் அவர்களிடத்தில் மலிந்து காணப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின்போது தனது தோழர்களிடம் கேட்டது “நான் உங்களுக்கு எத்திவைத்து விட்டேனா”? அங்கிருந்தோர் ஆம் என்று கூறியபோது “அல்லாஹ் நீயே இதற்கு சாட்சியாக இரு” என்று மூன்று முறை கூறினார்கள். எவன் ஒருவன் பித்அத்துகளை செய்கின்றானோ அவன் இந்த கூற்று பொய்யானது எனக் கூறிவிட்டுத் தான் அவைகளைச் செய்ய முன்வர வேண்டும்.

قال الإمام مالك رحمه الله: من ابتدع في الإسلام بدعة يراها حسنة فقد زعم أن محمدا خان الرسالة لأن الله يقول “اليوم أكملت لكم دينكم (المائدة: 3)
الإعتصام للشاطبي رحمه الله

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எவன் இஸ்லாத்தில் ஒரு பித்அத்தை உருவாக்கி அதை நன்மையாகக் கருதுகின்றானோ, அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியில் மோசடி செய்துவிட்டதாகத் தான் வாதிடுகின்றான். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: இன்றைய தினம் நான் உங்களது மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன்” (அல்மாயிதா: 3). (அல்இஃதிஸாம், ஷாதிபிக்குரியது).

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் கூற்று பித்அத்தின் அபாயத்தை அழகாகப் படம் பிடித்து காட்டியிருக்கும் என நம்புகிறேன்.

உண்மையிலேயே ஒருவன் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருப்பானானால் நபியவர்கள் காட்டித்தராத எந்த ஒரு செயலையும் ஒருபோதும் செய்வதற்கு அவன் முன்வர மாட்டான். ஆனால் நிலமை தலைகீழாக மாறி இருக்கின்றது. வணக்க வழிபாடுகள், குழந்தை பிறந்தது முதல், ஒரு ஜனாஸாவை கொண்டு போய் அடக்குகின்ற வரை பலவிதமான பித்அத்துகள் முஸ்லிம் உம்மத்தில் ஆதிக்கம் செலுத்தியிருப்பதை பார்க்கின்றோம்.

நாம் ஒவ்வொரு நன்மையான காரியத்தை செய்வதும் நாளை மறுமையில் வெற்றி பெற வேண்டுமென்பதற்கே. ஆனால் அந்த செயல்கள் நபியுடைய சுன்னாவின் நிழலில் செய்யப்படவில்லையானால் தோல்வியைத்தான் பெற்றுத்தரும் என்பதை பின்வரும் செய்தியை நீங்கள் படித்துப் பார்ப்பதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

“நாளை மறுமையில் நபியவர்கள் ஹவ்ழிலிருந்து தனது திருக்கரத்தால் தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்பார்கள் “அங்கு அந்தத் தண்ணீரை அருந்தியவருக்கு தாகமே ஏற்படாது” ஆனால் அங்கு வரும் சிலர் வானவர்களால் தடுக்கப்படுவர். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், அவர்களை விடுங்கள் அவர்கள் எனது சமூகத்தினர் என கூறுவார், உங்களுக்குப் பின் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கிய புதியவைகளை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று வானவர்கள் கூறுவர். எனக்குப் பின் மார்க்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்களுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும் என்று நபியவர்கள் கூறிவிடுவார்கள்”. (புஹாரி).

நாளை மறுமையில் மிகப்பெரிய ஒரு பாக்கியத்தை இழக்கப் போகின்றவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிது புதிதாக உருவாக்கி செய்பவர்களே. எனவே ஒவ்வொருவரும் இதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஷைத்தானின் மிகப் பெரிய ஒரு சூழ்ச்சியை அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

“அல்லாஹ் வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பி வைத்தோம் – ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் – ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் – இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு” (அந்நஹ்ல்: 63).

“அவர்களது தீய செயல்களை ஷைத்தான் அழகாக்கி வைத்தான்” என்பதை அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இது மிகக் கவனத்துடன் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் அதிகமாக ஷிர்க்கை, பித்அத்தை செய்பவர்களுக்கு ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகுப்படுத்திக் காட்டியிருக்கின்றான். அதனாலோ அப்படியானவர்களுக்கு குர்ஆன் சுன்னாவின் ஆதாரங்களின் அடிப்படையில் அதன் அபாயங்களை எடுத்துரைக்கும்போது கூட அவ்வாறான செயல்களை விடுவதற்கு முன் வருவதில்லை.

மற்றும் சிலர் புதுமையான விளக்கங்களைச் சொல்கின்றனர்.

உங்கள் கரங்களில் தவளும் இந்நூல் பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள், இஸ்லாத்தில் அதன் சட்டம், நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் எச்சரிக்க மறவாத ஒரு விடயம். ஸஹாபாக்கள், மற்றும் இமாம்கள் பித்அத்வாதிகள் விடயத்தில் எந்தளவு கடுமை காட்டியிருக்கின்றார்கள் போன்ற விடயங்களை சுருக்கமாக விளக்குகின்றது.

எனவே எனது சக்திக்குட்பட்ட வகையில் எளிய தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன். தமிழறிந்த சகோதரர்கள் அனைவரும் இதைப்படித்து பயன்பெறவேண்டுமென அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன். இதை சரிப்பார்த்துத் தந்த மௌலவி ஜமால் மதனி அவர்களுக்கும், மற்றும் ஏனைய சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக! இம்மொழிபெயர்ப்பில் என்னையறியாமல் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் அதனை சுட்டிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தங்களின் இஸ்லாமிய ஊழியன்
முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் (ஸீலானி)
இஸ்லாமிய அழைப்பாளன்,
அல்-ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

One comment

  1. very detailed article! jazakkalahu khairan!
    blindly following a particular scholar in islam is bidah?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *