Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » மூன்று செய்திகள்

மூன்று செய்திகள்

-முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி.
அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.

ஈமானின் உண்மையான சுவையை கண்டுகொண்டவர்:

“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை)

  1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது,
  2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
  3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

இவரல்லவோ முஃமின்!

  1. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் அண்டை வீட்டாரை நோவிக்காமல் இருக்கட்டும்.
  2. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்.
  3. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள், ஆதாரம்: புஹாரி).

மார்கக் கல்வியின் சபைகளை தேடிச் செல்வோம்:

“நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர்:

  1. வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார்.
  2. மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான்.
  3. மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்”

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூவாகிதில்லைஸி (ரலி), ஆதாரம்: புஹாரி).

இரண்டு விதமான கூலிகளை பெறுபவர்கள்:

மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன.

  1. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர்.
  2. மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.
  3. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர்.

இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புஹாரி).

நன்மையை நாடி பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட மஸ்ஜிதுகள் மூன்றாகும்:

  1. ‘மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவில் அமைந்துள்ளது).
  2. மஸ்ஜிதுன் நபவி (மதீனாவில் அமைந்துள்ளது).
  3. மஸ்ஜிதுல் அக்ஸா (பஃலஸ்தீனில் அமைந்துள்ளது) ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர நன்மையை எதிர்பார்த்துப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆதாரம்: புஹாரி)

உண்மையான இறைத்தூதர்:

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கறினார்கள். பிறகு:

  1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
  2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
  3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?”

என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), “வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,

  1. “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும்.
  2. சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.
  3. குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), “தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, “இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று கூறினார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள். உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

வஹியுடன் நேர்பட்ட மூன்று விடயங்கள்:

“மூன்று விஷயங்களில் இறைவன் என் கருத்துக்கேற்ப “வஹி” அருளியுள்ளான். அவை:

“இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!” என்று நான் கூறியபோது, “மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!” (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது.

  1. “இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!” என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது.
  2. நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக நடந்தபோது நபி(ஸல்) அவர்கள் “உங்களை விவாகரத்துச் செய்தால் உங்களை விடச் சிறந்த மனைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு ஆக்கிவிடுவான்” என்று கூறினேன். நான் கூறியவாறே (திருக்குர்ஆன் 66:05) வசனம் அருளப்பட்டது” என உமர்(ரலி) அறிவித்தார்.

 

மூன்று பெறும் பாவங்கள்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,

  1. அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று கூறினார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லிவிட்டு, “பிறகு எது?” என்று கேட்டேன்.
  2. “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று கூறினார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள்,
  3. “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி) முஸ்லிம்)

மூன்று விடயங்களில் மிகப் பெரிய பொய்யன்:

மஸ்ரூக் இப்னு அஜ்த (ரஹ்) அறிவித்தார், நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் “அன்னையே முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின?) அவற்றை உங்களிடம் தெரிவிக்கிறவர் பொய்யுரைத்துவிட்டார்.

  1. முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக), “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” எனும் (திருக்குர்ஆன் 06:103 வது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகிறவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (திருக்குர்ஆன் 42:51 வது) வசனத்தையும் ஒதினார்கள்.
  2. “உங்களிடம் முஹம்மது(ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்” என்று சொல்கிறவரும் பொய்யே கூறினார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை” எனும் (திருக்குர்ஆன் 31:34 வது) வசனத்தை ஓதினார்கள்.
  3. “உங்களிடம் முஹம்மத்(ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்” என்று சொன்னவரும் பொய்யே கூறினார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக) “தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்…” (எனும் 5:67 வது) வசனத்தை ஓதினார்கள். “மாறாக, முஹம்மத்(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களையே அவரின் (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி).

நிறைவான கூலியை பெறும் சமுதாயம்!:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்து உரையாற்றியபோது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும்.

  1. “தவ்ராத்” வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பட்டது. அவர்கள் “நண்பகல் வரை அதன்படி செயல்பட்டார்கள்; பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு “கீராத்” வழங்கப்பெற்றது.
  2. பின்னர் “இன்ஜீல்” வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகை வரை அதன்படி செயல்பட்டுவிட்டுப் பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு “கீராத்” வழங்கப்பெற்றது.
  3. நீங்கள் சூரியன் மறையும் வரை அதன்படி செயல்புரிந்தீர்கள். உங்களுக்கு இரண்டிரண்டு கீராத்துகள் (கூலியாக) வழங்கப்பட்டன.

(அப்போது) “தவ்ராத்” வேதக்காரர்கள் “எங்கள் இறைவா! இவர்கள் வேலை செய்தோ குறைந்த நேரம். கூலியோ அதிகம்!” என்றார்கள். அல்லாஹ், “நான் உங்களுக்குரிய கூலியில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் “அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), புஹாரி).

 

மூவரின் பிரார்த்தனைகள் சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்படுகின்றன:

  1. தந்தையின் பிரார்த்தனை,
  2. பிரயாணியின் பிரார்த்தனை,
  3. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்).

நமது ரப்பிடம் உறுதியுடன் பிரார்த்திப்போம்!

 

ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் பாவமான விடயமோ, உறவுகளை துண்டிக்கும் விடயங்களோ இல்லாமல் இருக்கும் போது அவனது பிரார்த்தனைக்கு இம் மூன்றில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் வழங்காமல் இருக்கமாட்டான்:

  1. அவனது பிரார்த்தனையை ஏற்று அவன் கேட்டதையே வழங்கிவிடுவான்.
  2. அல்லது அவனது பிரார்த்தனையை பாதுகாத்து நாளை மறுமையில் அதற்கு கூலி வழங்குவான்.
  3. அல்லது அவனுக்கு வரவிருக்கும் ஏதவாது ஒரு துன்பத்தை தடுத்துவிடுவான்.

அப்போது நபித்தோழர்கள் அப்படியெனில் நாம் அதிகம் அதிகம் அல்லாஹ்வை பிரார்த்திப்போம் என கூறினர், அதற்கு அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ் அதை விட அதிகம் வழங்குபவனாகவே இருக்கின்றான் என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி), ஆதாரம்: அஹ்மத்).

ஈமான் எப்போது பயனளிக்காது!

மூன்று விடயங்கள் வெளிப்பட்டு விட்டால் எவரது ஈமானும் அதன் பின் பயனளிக்கமாட்டாது (ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).

  1. சூரியன் மேற்கில் உதிக்க ஆரம்பித்துவிடல்.
  2. தஜ்ஜால் வெளிப்படுதல்.
  3. அதிசயப்பிரானி வெளிப்படுதல்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

தடுக்கப்பட்ட நேரங்கள்:

அல்லாஹ்வின் தூதர் மூன்று நேரங்களில் தொழுவதையும், ஜனாஸாக்களை அடக்குவதையும் எமக்கு தடை செய்தார்கள்:

  1. சூரியன் உதித்து அது உயரும் வரை,
  2. சூரியன் உச்சிக்கு வந்து அது சாயும் வரை,
  3. சூரியன் செம்மையடைந்து அது மரையும் வரை.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: உக்பதிப்னு ஆமிருல் ஜுஹனி (ரலி), ஆதாரம்;: முஸ்லிம்).

மூன்று விடயங்களுக்காக பொய் சொல்பவன் பொய்யனாகக் கருதப்படமாட்டான்:

  1. மக்களிடம் நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொய் சொன்னவன்.
  2. ஒரு கணவன், மனைவி தங்களுக்குள் பேசும் பேச்சுக்களில்.
  3. எதிரிகளுடன் நடைபெறும் போர்களத்தில்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உக்பதிப்னு அபீ முஈத் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

உண்மையில் உமது பொருள் எது?

அடியான் எனது பொருள், எனது பொருள் என கூறுகின்றான். அவனது பொருள்:

  1. அவன் உண்டு கழித்தவைகளும்,
  2. அவன் உடுத்தி கிளித்தவைகளும்,
  3. அவன் முன் கூட்டி (அல்லாஹ்விற்காக) செய்த தர்மங்களும்.

அதைத் தவிர அவன் பாதுகாக்கும் மற்றவைகள் அனைத்தும் ஏனையவர்களுக்கு விட்டுச் செல்பவைகளே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

இறுதி வரை தொடரும் ஒரே உறவு! :

மையித்தை மூன்று விடயங்கள் பின்தொடர்கின்றன. அவைகளில் இரண்டு மீண்டு விடுகின்றன. ஒன்று அவரோடு தங்கி விடுகின்றது. திரும்பி விடும் இரண்டு:

  • 1- அவரது குடும்பம்,
  • 2- அவரது சொத்து செல்வம்,

அவருடன் தங்கி விடுவது:

  • 3- அவர் செய்த நற்கிரியைகள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புஹாரி).

மண்ணறை வாழ்விலும் தொடரும் நன்மைகள்!:

ஒரு மனிதன் மரணித்துவிடும் போது அவனது அனைத்து செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. மூன்று காரியங்களைத் தவிர அவைகள்:

  1. அவன் செய்த நிலையான தர்மம்,
  2. அவனது கல்வியின் மூலம் பிறர் பயனடைந்தது,
  3. அவனது ஸாலிஹான குழந்தை அவனுக்காக கேட்கும் பிரார்த்தனை.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)இ ஆதாரம்: முஸ்லிம்).

எண்ணங்களை தூய்மையாக்குவோம்!

  1. மக்களின் புகழை விரும்பி அல்லாஹ்வின் பாதையில் போர் செய்து உயிர் நீத்த ஷஹீத்.
  2. மக்களின் புகழை விரும்பி அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்கிய கொடைவள்ளல்.
  3. மக்களின் புகழை விரும்பி பிறருக்கு மார்கத்தைப் போதித்த ஆலிம்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் எனது முழங்காலின் மீது அடித்தவர்களாக அபூஹுரைராவே! இந்த மூவரைக்கொண்டு தான் நரகம் எறிக்கப்பட ஆரம்பிக்கும் எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி).

அன்பின் சிகரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்:

அல்லாஹ் உங்களை மூன்று விடயங்களை விட்டும் பாதுகாத்து இருக்கின்றான். அவைகள்:

  1. நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவதற்கு உங்கள் நபி உங்களுக்கெதிராக பிரார்த்திப்பதை விட்டும்,
  2. சத்தியவாதிகளை அசத்தியவாதிகள் (முழு வடிவில்) மேலோங்குவதை விட்டும்,
  3. நீங்கள் அனைவரும் வழிகேட்டில் ஒன்றுபடுவதை விட்டும்

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்ரிய் (ரலி), ஆதாரம்: அபூதாவுத்).

எவர் மூன்று விடயங்களை விட்டு நீங்கியவராக மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். அவைகள்:

  1. பெறுமை (ஆணவம்),
  2. திருட்டு (மோசடி),
  3. கடன்

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிபிட்டார்கள் (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ஆதாரம்: திர்மிதி).

உறுதி மொழி வாங்கிய மூன்று காரியங்கள்!:

  1. தொழுகையை நிலை நாட்டுவதாகவும்,
  2. ஸகாத்தை கொடுத்து வருவதாகவும்,
  3. பிற முஸ்லிம்களுக்கு நன்மையை நாடுவதாகவும்

நான் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதி மொழி செய்து கொடுத்தேன்”
(அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

அல்லாஹ் உங்களிடமிருந்து விரும்பும் மூன்று விடயங்கள்:

  1. அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காது அவனை மாத்திரிம் வணங்குவது.
  2. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிற்றை (அவனது மார்கத்தை) பலமாக பற்றிப்பிடித்துக்கொள்வது.
  3. உங்களுக்கு மத்தியில் பிழவு படாமல் இருப்பது.

அல்லாஹ் உங்களிடமிருந்து வெறுக்கும் மூன்று விடயங்கள்:

  1. அவர் சொன்னார், இப்படி சொல்லப்பட்டது என்று எந்த உறுதியுமில்லாமல் பேசுவது.
  2. அதிகம் கேள்வி கேட்பது.
  3. பணத்தை வீண் விரயம் செய்வது.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

உயரிய மூன்று உபதேசங்கள்!
அபூதர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் செய்த மூன்று உபதேசங்கள்:

  1. நீங்கள் எங்கிருந்த போதும் அல்லாஹ்வை பயந்து கொள்கொள்வீராக.
  2. நீர் ஒரு தவறை செய்துவிட்டால் உடனே ஒரு நன்மையை செய்துவிடுவீராக. அது அந்த பாவத்தை அழித்து விடும்.
  3. மக்களுடன் உயரிய பண்புடையவராக நடந்துகொள்வீராக

(அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம்: திர்மிதி).

உயரிய மூன்று உபதேசங்கள்!
அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் செய்த மூன்று உபதேசங்கள்:

  1. ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்று வாருங்கள்.
  2. இரண்டு ரக்அத் லுஹாவைத் தொழுது வருவீராக.
  3. இரவில் தூங்க செல்ல முன் வித்ரைத் தொழுது கொள்வீராக.

நான் மரணிக்கின்ற வரை ஊரில் இருக்கும் போதும், பிரயாணத்தில் இருக்கின்ற போதும் இந்த மூன்று விடயங்களை விடவே இல்லை.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

ஈடேற்றத்துடன் சுவர்க்கத்தில் நுழையும் காரியங்கள்!:
அல்லாஹ்வின் தூதர் வரலாற்று சிறப்பு மிக்க ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டு மதீனா வந்தவுடன் மக்களை பார்த்து முதலில் செய்த மூன்று உபதேசங்கள்:

  1. உங்களுக்கு மத்தியில் அதிகம் ஸலாம் சொல்லுங்கள்.
  2. ஏழைகளுக்கு உணவளியுங்கள்.
  3. மக்கள் இரவில் உறக்கத்தில் இருக்கின்ற போது நீங்கள் எழுந்து அல்லாஹ்வைத் தொழுங்கள்.

நீங்கள் ஈடேற்றம் பெற்றவர்களாக சுவர்க்கம் நுழைவீர்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), ஆதாரம்: திர்மிதி).

உறுதி மிக்க காரியங்கள்!:
ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் தனது தொழர்களிடம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற (நாளை மறுமையில்) உங்கள் பதவிகள் உயர்த்தப்படுகின்ற விடயங்களை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக்கேட்ட போது, அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்றனர்.

  1. குளிரான காலங்களில் வுழூவை நிறைவாக செய்வது.
  2. மஸ்ஜிதுக்கு அதிக எட்டுக்கள் எடுத்து வைத்து நடப்பது.
  3. ஒரு தொழுகையை நிறைவு செய்து மற்றொரு தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பது.

இவைகள் உங்களை உறுதிப்படுத்துகின்ற காரியங்களாகும் என கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

இந்த சிறப்புகளை நழுவவிடுவதா?

  1. கூட்டுத் தொழுகைக்கு நேர காலத்துடன் சமூகளிப்பதின் சிறப்பை மக்கள் அறிந்து கொள்வார்களானால் அதற்கு போட்டி போட்டு கலந்து கொள்வார்கள்.
  2. பஃஜ்ர் மற்றும் இஷா தொழுகையின் சிறப்பை அறிந்துகொள்வார்களானால் அத்தொழுகைகளில் தவழ்ந்த நிலையிலாவது கலந்துகொள்வார்கள்.
  3. முன் வரிசையின் சிறப்பை அறிந்து கொள்வார்களானால் சீட்டுக் குலுக்கியே தவிர அந்த சந்தர்பத்தை பிறருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

நாளை மறுமையில் இழிவடையும் மூவர்:

அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை தூய்மைப் படுத்த மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான், அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு:

  1. முதிய வயதில் விபச்சராத்தில் ஈடுபட்டவர்.
  2. (நீதி செலுத்தாத) பொய்யான ஆட்சியாளன்.
  3. கர்வத்தோடு செயல்படும் ஏழை.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்:

  1. ஒருவர் (தம்) விற்பனைப் பொருளுக்கு (அதைக் கொள்முதல் செய்தபோது உண்மையில்) தாம் கொடுத்த விலையை விட அதிக விலை கொடுத்ததாகப் பொய்ச் சத்தியம் செய்கிறார்.
  2. ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் ஒன்று கூடும் நேரத்தில்) பொய்ச் சத்தியம் செய்கிறார்.
  3. தம் தேவைக்குப் போக மிஞ்சிய தண்ணீரை (வழிப்போக்கருக்குத் தராமல்) தடுக்கிறார். (அவரிடம்) அல்லாஹ் மறுமைநாளில் “நீ தேடிச் சம்பாதிக்காத பெருளை (-நீரை) நீ தர மறுத்ததைப் போன்று இன்று என் அருளை உனக்கு வழங்க மறுக்கிறேன்” என்று கூறுவான்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேருடன் அல்லாஹ் நாளை மறுமையில் பேச மாட்டான், அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு:

  1. மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.
  2. தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன்.
  3. அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, “எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.

இதைக் கூறிவிட்டு, “அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்…” என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேருடன் அல்லாஹ் நாளை மறுமையில் பேச மாட்டான், அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் மூன்று முறை குறிப்பிட்ட போது, உறுதியாகவே அவர்கள் நஷ்டத்தையும், தோல்வியையும் அடைந்துவிட்டனர் என்று கூறிய அபூதர் (ரலி) அவர்கள், யார் அவர்கள்? அல்லாஹ்வின் தூதரே! என வினவினார்கள்.

  1. கரண்டைக்குக் கீழ் தனது ஆடையை தொங்கவிடுபவர்
  2. வழங்கிய தர்மத்தை சொல்லிக்காட்டுபவர்.
  3. பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்றவர்

என நபிகள்ய நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

நயவஞ்சகனின் அடையாளங்கள்:

“நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று:

  1. பேசினால் பொய்யே பேசுவான்,
  2. வாக்களித்தால் மீறுவான்,
  3. நம்பினால் துரோகம் செய்வான்.

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

ஷைத்தான் போடும் மூன்று முடிச்சுகள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான்.

  1. அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது.
  2. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது.
  3. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது.

அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

கொல்லப்படவேண்டிய மூவர்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்” என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
(அவை:)

  1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது.
  2. திருமணமானவன் விபச்சாரம் செய்வது.
  3. “ஜமாஅத்” எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

பெரும் பாவங்கள்!:

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்: (ஒரு முறை) “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், “ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)” என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள்

  1. “அல்லாஹ்வுக்கு இணைவைப்பது,
  2. பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)” என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்துக் கொள்ளுங்கள்;
  3. பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்” என்று கூறினார்கள். “நிறுத்திக் கொள்ளக் கூடாதா” என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

நாளை மறுமையில் மூவருக்கெதிராக வழக்குத்தொடரப்படும்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்” என்று அல்லாஹ் கூறினான்.

  1. என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்,
  2. சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்,
  3. ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!”

(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் .  ஆதாரம்: புஹாரி)

12 comments

  1. Assalamu alaikum ithu romba ellarukum payanullathaha insha Allah irukkum ungalukku allah athihamana kirubai purivanaha

  2. அல்ஹம்துலில்லாஹ்! அருமையான தொகுப்பு!! அல்லாஹ் தொகுத்தளித்த உங்களிக்கும் வாசித்து அதை பின்பற்ற முயலும் எங்களுக்கும் அருள் புரிவானாக!!

  3. Assalamu alaikum brothers

    Really very useful information.pls forward to your family and friends

  4. Assalamu alaikkum

    useful information

  5. assalamu alaikkum…சிறப்பான தொகுப்பு….இது போன்ற தொகுப்புகளை பதியும் பொது இதனுடன் ஹதீஸ் எங்களையும் பதிந்தால் இன்னும் நல்லது.அருள் புரிய வல்ல அல்லாஹ் போதுமானவன்.

  6. Assalamu alaikkum
    Alhamdhulillah, it is really good collective information. Please keep writing informative subjects like this, which is easy to read and follow. Insha Allah, Allah will provide all his blessings to you and other Islamic brothers and sisters.

    Regards,
    Shaik Abdullah

  7. A.H.M.Hafran maruthamunai assalamu alaikum warahmathullhi…. Mihavum payantharum withamaha 3 widaynkalaha thohuthirupathu enaku mihawum pidithiruku. Ippadi siriya widayamaha thohupathu waasipathuku ilahu. Allah anaywarukum arul puriwanaha

  8. அல்ஹம்துலில்லாஹ்! அருமையான தொகுப்பு!! அல்லாஹ் தொகுத்தளித்த உங்களிக்கும் வாசித்து அதை பின்பற்ற முயலும் எங்களுக்கும் அருள் புரிவானாக!!

    kadayanallur abdul aarif

  9. ما شاء الله تبارك الله

  10. very nice and
    1000 sukran
    allah barakath saivanaha

  11. Naanum oru muslim than aanal an parambarai muslim azanal naanum mslimaha irunden islathay patri thelivha ippozu than purinthu vittazu allam valla iraiven ungalukum enakum anaivarukum nervali kaati arulpurivanha aamen.

  12. Assalamu alaikkum athanin hadees engal வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *