Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-3)

மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-3)

Article ஓரு மாணவன்! அவனுக்குப் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் குடித்துவிட்டு ரோட்டில் புரளுவதைப் பார்க்கிறான்! இப்போது அவன் மனநிலை எவ்வாறிருக்கும்? இந்த ஆசிரியரிடமிருந்து அவன் பாடம் கற்கும் போது ஆசிரியரைப் பற்றி ஏதாவது நல்லெண்ணம் அவனுக்கு இருக்குமா? ஒழுக்கம் பயிலவேண்டும் என்று விரும்பும் எந்தப் பெற்றோராவது இத்தகைய ஆசிரியரிடம் பாடம் பயில தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்களா?

ஒரு சமூகத்துக்குத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் குடித்து விட்டு ரோட்டில் புரளுகின்றார் என்றால் அவரைப் பற்றிய மக்களின் மதிப்பீடு எவ்வாறிருக்கும்?

இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று சமூகத்தை தார்மீக அடிப்படையில் வழிநடத்த வேண்டியவர்கள் தீர்க்கதரிசிகள் அல்லது இறை தூதர்கள். இவர்களின் வாழ்க்கை வரலாறு எல்லாக் கால மக்களுக்கும் நல்ல பாடம் கற்பிப்பதாக, சமுதாயத்துக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும். அல்லவா? இத்தகைய தீர்க்க தரிசிகள் மது அருந்தி அதனால் போதை தலைக்கேறி தன் ஆடை விலகியதைக் கூட அறியாமல் அவர் பெற்ற பிள்ளைகளே வந்து அவரது நிர்வாணத்தை மறைத்ததாக ஒரு தீர்க்கதரிசியின் வரலாற்றை பைபிள் சித்தரிக்கிறது. இன்னொருவரோ தான் பெற்ற பெண் பிள்ளைகளின் கையாலே மது அருந்தி அந்த போதையில் அவர்களுடனே தகாத உறவு கொண்டாராம்! இதற்கு நியாயம் கற்பிக்க மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தவறு செய்வது இயல்பு என்ற ரீதியில் மழுப்பியுள்ளது கிறித்தவ சபை.

தீர்க்கதரிசிகளும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடம் சிறு பிழைகள் ஏற்படலாம். ஆனால் சாதாரண மனிதனே செய்ய வெட்கப்படும் மானக் கேடானதையும் மிகப் பெரிய பாவங்களையும் அவர்கள் செய்வார்கள் என்பது ஏற்புடையது தானா? இறைதூதர்களின் இயல்புக்குப் பொருத்தமானதுதானா?

ஒழுக்கக் கேடான ஆசிரியர்களை மாணவனின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத போது, சீர் கெட்ட தலைவரை சமூகம் ஏற்றுக் கொள்ளாத போது இத்தகைய காரியங்களை செய்யத் துணியும் தீர்க்கதரிசிகள் சமூகத்தை எங்ஙனம் நல்வழியில் நடத்த முடியும்? ஆன்மீகத்தின் பெயரால் மானக் கேடான ஆபாசச் செயல்களில் இடுபட்ட பிரேமானந்தா வகையறாக்களின் செயல்களையும் கிறித்தவ சபையின் கூற்றுப்படி நியாயப் படுத்த இயலுமே?

இயேசுவும் மதுபானமும்

எந்தத் திராட்சை ரசத்தை (மது பானத்தை) அருந்தியதால் நோவா மயக்கம் ஏற்பட்டு வஸ்திரம் விலகிப் படுத்திருந்தார் என பைபிள் குறிப்பிடுகிறதோ, எந்த மதுபானத்தை அருந்தியதால் லோத்து போதை ஏற்பட்டு தம் புதல்வியருடன் சயனித்ததாக பைபிள் கூறுகிறதோ, அதே திராட்சை ரசத்தை (மது பானத்தை) இயேசு கானாவில் விளம்பியதாகத் தான் பைபிளின் வரிகளிலிருந்து விளங்க முடிகிறது.

பைபிளின் கூற்றுப்படி திராட்சை ரசம் என்பது உண்மையடியான் வகையறாக்கள் விளக்கம் அளித்தது போல் போதையற்றது அல்ல. அது அவர்களின் மழுப்பல் ஆகும். இதோ இதனைப் பற்றிய பைபிளின் குறிப்புகளைக் காண்போம்.

நோவா குடித்த திராட்சை ரசம்
நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். (ஆதி 9: 20, 21)

ஆங்கில பைபிள்
And Noah began to be a farmer, and he planted vineyard. Then he drank of the wine and was drunk, and became uncovered in his tent. (Genesis 9: 20,21)

லோத்து குடித்த மது பானம்
அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் (ஆதி 19: 33)

ஆங்கில பைபிள்
So they made their father drink wine that night. And the firstborn went in and lay with her father, and he did not know when she lay down or when she arose. (Genesis 19: 33)

இயேசு விளம்பிய மதுபானம்
அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால் அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது மணவாளனை அழைத்து, எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான்; நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். (யோவான் 2: 9,10)

ஆங்கில பைபிள்
When the master of the feast had tasted the water that was made wine, and did not know where it came from, the master of the feast called the bride-groom, and he said to him, Every man at the beginning sets out the good wine, and when the guests have well drunk, then the inferior. You have kept the good wine untill now. (John 2: 9, 10)

மேற்கண்ட வரிகளில் மதுபானத்தைக் குறிக்கும் அத்தனை இடங்களிலும் ஆங்கில பைபிள் ஒயின் என்றே குறிப்பிடுகிறது. இன்று கூட மதுபானக் கடைகளில் தமிழில் ஒயின் ஷாப் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். உண்மையடியான் வகையறாக்கள் கூறியது போன்று அது போதையற்றது என்பதற்கு பைபிளில் ஆதாரம் இல்லை. மாறாக போதை உடையது என்பதற்கே ஆதாரம் உள்ளது. திருமணம் என்ற முக்கியமான சடங்கு நடக்கும் இடத்தில் ஏராளமான வைபவங்களுக்கிடையே திராட்சைப் பழச்சாற்றிற்கு என்ன இடமிருக்கிறது? தண்ணீரை திராட்சை ஜூஸ் ஆக்கி இயேசு விளம்பியிருந்தால் அதனை மக்கள் புகழமாட்டார்கள். காரணம் மக்கள் புகழக் கூடிய அளவுக்கு திராட்சை ஜூஸ் ஒரு முக்கிய பானம் அன்று. மாறாக அன்று திருமண வீடுகளில் மது விளம்புவது வழக்கத்தில் இருந்தது என்பதை இவர்களின் கூற்றுப்படி பத்தாம் வகுப்பு மாணவனும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

“எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு ருசி குறைந்ததைக் கொடுப்பான்; நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே” என்ற குறிப்பும் இதற்கு ஆதாரம் ஆகும். வெறும் திராட்சை ஜூஸைக் குறித்து எவரேனும் இவ்வாறு புகழ்வார்களா? ஒரு குடிகாரனைப் பொறுத்த வரை எது நல்ல போதை அளிக்கிறதோ அதைத் தான் நல்ல மது பானம் என்பான். இதன் காரணமாகவே “தண்ணீரை மதுபானமாக்கி மக்களுக்குக் கொடுத்து அவர்களை போதையூட்டியவராக இயேசுவை பைபிள் அறிமுகப் படுத்துகிறது” என்று மேற்கோள் காட்டப்பட்டது.

சூடாக இருத்தல் நெருப்பின் இயல்பு! தாகத்தைத் தணிப்பது தண்ணீரின் இயல்பு! அது போன்றே மதுவின் இயல்பு போதையே! போதைக்காகத் தான் மது அருந்தப்படுகிறது. இத்தகைய மதுவைத் தான் இயேசு விளம்பியதாக பைபிள் கூறுகிறது. சாதாரணமாகத் தங்களுக்கு வழங்கப்படும் மதுவைக் காட்டிலும் தரத்தில் உயர்ந்ததை இயேசு வழங்கியதாகவே பைபிளின் கூற்றிலிருந்து விளங்க முடிகிறது. அதாவது இயேசு அளித்தது உயர் தர மதுவாம். ஆம் சாதாரண மதுவைக் காட்டிலும் அதிக போதை தரவல்லது!

இஸ்ரவேலரின் வழக்கத்திற்கொப்ப கதைகளைப் புனைந்ததால் தான் இயேசு மீது இத்தகைய ஒரு கற்பனையை பைபிள் புரோகிதர்கள் புனைந்துள்ளனர். இஸ்லாம் இயேசுவின் அற்புதங்களைக் கூறும் இடங்களில் அவர் மது விளம்பியதாக ஒரிடத்திலும் கூறவில்லை. மாறாக அவரைப் பற்றிக் குர்ஆனில் கூறப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தும் அவரது கண்ணியத்தையும் தரத்தையும் உயர்த்துவதாகவே உள்ளன. காரணம் அது அகிலங்களின் இறைவனால் அருளப்பட்ட உண்மையான இறைநூலாக இருப்பதால்தான்.

தீர்க்கதரிசிகளின் வரலாற்றை பைபிள் விவரித்துக் கூறியதில் ஒழுக்கக் கேடுகள் தவிர எந்த தார்மீக வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை என்பதே உண்மை. மதுவின் தீமையை மேலோட்டமாகக் கூறும் சில வரிகள் காணப்பட்டாலும் செயலளவில் அதற்கு எதிர் மறையான கிறித்தவர்களின் நடைமுறையும் இதனையே நமக்கு விளக்கிக் காட்டுகிறது.

இறுதியாக, அக்பர் அவர்களுக்கு சவால் விடுபவர்கள் ஒளிந்து கொண்டு கூக்குரலிடாமல் அவரோடு நேரடியாக தொடர்பு கொண்டு கேளுங்கள். உங்களோடு விவாதிக்க அவர் தயாராகவே உள்ளார். உங்களைப் போன்று ஒளிந்து கொண்டு சவால் விடுபவரல்ல அவர். பல மேடைகளில் கிறித்தவ மிஷனரிகளுடன் பகிரங்கமாக விவாதம் நடத்தியுள்ளார் அவர். எனவே ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையடியான் வகையறாக்ககள் தன் உண்மை முகத்துடன் வெளியே வரட்டும்.

இறைவன் நாடினால் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *