Featured Posts

இறைவனை நாட…

சில மதங்களில் இறைவனை நாடுவதற்கும், அவனிடம் தேவைகளை கேட்டுப் பெறுவதற்கும் குட்டி தெய்வங்களை வைத்துக் கொண்டுள்ளார்கள்; இறந்தவர்களின் அடக்கஸ்தலங்களை நாடுகிறார்கள்; சிலைகளுக்கு பலவகையான நைவேத்தியங்களை வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறுவதெல்லாம், ‘நாம் வல்லமை பொருந்திய இறைவனை நேராக நாட முடியாது; எனவே, அவனுக்கு நெருக்கமானவர்கள் ஊடாகவே நாடுவதுதான் அதிக பயன்களைப் பெற சிறந்த வழி’ என்பதாகும்.

இஸ்லாம் இக்கருத்தை ஏற்பதில்லை. காரணம் இஸ்லாத்தில் குருத்துவ அமைப்பு இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது அடியானுக்கும் இடையில் ஒரு தரகர் முறையை ஏற்படுத்தி வைக்கவில்லை. மாண்டவர்களின் அடக்கஸ்தலங்களில் போய் முறையிடுவதையோ, அவர்களுக்கு நைவேத்தியங்கள் வைத்து அவர்கள் ஊடாக அல்லாஹ்வை நாடுவதையோ அங்கீகரிக்கவில்லை.

அல்லாஹ், தன்னிடம் இப்படிப் பிரார்த்தனை புரியும்படி நமக்குக் கற்றுத் தருகிறான்: “(யாஅல்லாஹ்) உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.” (அல்குர்ஆன்: 1:4)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

“நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக் கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பை விடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாக இருக்கின்றோம்.” (அல்குர்ஆன்: 50:16)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

‘உங்கள் செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம் கேளுங்கள்’ (ஆதாரம்: புகாரி)

இவற்றிலிருந்து எதையும் நேரடியாக அல்லாஹ்விடம் கேட்க வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதைப் பார்க்கின்றோம். இது ஒரு வகையில் மனிதனுக்குத் தரப்பட்ட கௌரவம் என்று நாம் கருத வேண்டும்.

மனிதன் எல்லாக் காலங்களிலும், மற்றொரு மனிதனுக்கோ, இயற்கை சக்திகளுக்கோ, அல்லது பணம், பொருள், அற்புதங்கள் என்பனவற்றுக்கோ அடிமைப்பட்டு வாழ்ந்து வந்திருக்கின்றான். அதன் விளைவாக, அவன் அவற்றிடம் நேரடியாகவே தன் பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்தான். அல்லது அவற்றின் ஊடாக இறைவனிடம் பிரார்த்தனை புரியும் வழிமுறையைக் கைக்கொண்டான்.

இஸ்லாம் இந்த வழிமுறைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு அனைவரும் தம் தேவைகளுக்காக அல்லாஹ்வை நேரடியாக பிரார்த்திக்கும்படி செய்து விட்டது. இதன் மூலம் மனிதன் தன்னைப் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அடிமை என்ற உணர்வை ஏற்படுத்தி வைத்ததுடன் அவனுக்கு சுய கௌரவத்தையும் வழங்கியது.

இதுவரை எடுத்து வைத்த கருத்துகளிலிருந்து….

அல்லாஹ் ஒருவன்.

அவனுக்கு இணை இல்லை.

அவனே வணக்கத்திற்கு உரியவன்.

அவனன்றி வேறு யாருக்கும் நைவேத்தியங்கள் வைக்கக் கூடாது.

அவனிடமின்றி வேறு எவரிடமும் கையேந்திப் பிரார்த்தனைப் புரியக்கூடாது.

ஒட்டு மொத்தமாக மனிதனின் முழுமையான அடிபணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே என்றிருக்க வேண்டும்.

என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

அல்லாஹ்வின் மீது இந்த வகையான அடிமைத்தனமும், கீழ்ப்படிதலும், கட்டுப்பட்டு செயலாற்றும் தன்மையும் வராதவரையில் ஒருவன் தன்னை முஸ்லிம் எனக் கூறிக் கொள்ள முடியாது.

குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *