Home » இஸ்லாம் » அறிவுரைகள் » நஸாராக்களுடைய நத்தார் தினமும் நமது முஸ்லிம் சமூகமும்

நஸாராக்களுடைய நத்தார் தினமும் நமது முஸ்லிம் சமூகமும்

-முஹம்மது நியாஸ்-

உலகிலுள்ள அனைத்து சமயத்தவர்களும் அவரவர்களுடைய சமய நம்பிக்கை, கோட்பாடுகளைப் பிரதிபலிகின்ற வகையில் அமையப்பெற்ற பெருநாள்களை, விசேட தினங்களை கொண்டாடிவருவது உலகியல் மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் 25ம் திகதி உலகிலுள்ள பெரும்பான்மையான கிறிஸ்த்தவ மக்கள் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்று சொல்லக்கூடிய நத்தார் (“நத்தார்” என்பது தமிழ் வார்த்தையல்ல) தினத்தை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.

இஸ்லாமியர்கள் இறைத்தூதராக மதிக்கக்கூடிய ஈஸா (அலை) என்னும் ஒரு மாமனிதரை கிறிஸ்த்தவ மக்கள் கடவுள் என்ற அந்தஸ்த்தில் வைத்து மதித்து, வழிபட்டு அம்மனிதர் இவ்வுலகில் பிறந்தநாள் என கருதப்படுகின்ற, அவர்களால் நம்பப்படுகின்ற தினமாகிய டிசம்பர் 25ம் திகதியைத்தான் தங்களுடைய நத்தார் பண்டிகைக்குரிய நாளாக பிரகடனப்படுத்தி கொண்டாடிவருகின்றார்கள்.

இஸ்லாமிய இறைநம்பிக்கை கோட்பாட்டின் பிரகாரம் இறைவனால் இவ்வுலகிற்கு அனுப்பட்ட பல இலட்சக்கணக்கான தீர்க்க தரிசிகளில் நபி ஈஸா (அலை)அவர்களும் ஒருவராவார். இறைவன் தன்னுடைய அதியுயர் அறிவாற்றலின் பிரகாரம் சில, பல காரணங்களை கருத்திற்கொண்டு நபி ஈஸா (அலை) அவர்களை ஒரு ஆணின் துணையின்றி அன்னை மர்யம் (அலை) அவர்களது கருவறையில் சூல் கொள்ளவைத்தான். நபி ஆதம் (அலை) அவர்களை எவ்வாறு தாய் தந்தை யாருமின்றி இறைவன் படைத்தானோ அதேபோன்று தந்தையின் துணையின்றி நபி ஈஸா (அலை) அவர்களை படைத்ததும் இறைவனுடைய அத்தாட்சிகளில், ஆற்றல்களில் ஒன்றாகும்.

ஈஸா நபியுடைய பிறப்பு பற்றி அல் குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் மனிதர் ஆகிவிட்டார். (03:59)

நபி ஈஸா (அலை) அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமுமே ஒரு மனிதப்புனிதராக, தன்னுடைய சமுதாயத்தை வழிகேடுகளில் இருந்தும் மீட்பதற்காக இவ்வுலகில் அவதரித்த தனிச்சிறப்புகள் பலவும் பொருந்திய ஒரு இறைத்தூதராக மதிக்கிறது. அவரை கௌரவப்படுத்துகிறது. அவ்விறைத்தூதருடைய வாழ்க்கையினை படிப்பினையாக ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. ஆனால் அதற்காக அவர் ஒருபோதும் இறைவனின் அந்தஸ்த்தை அடையவும் முடியாது. இறைவனுக்கு மாத்திரம் செலுத்தவேண்டிய வணக்க வழிபாடுகளை நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இஸ்லாமியர்களாகிய நாங்கள் செலுத்தவும் முடியாது. இதுதான் நபி ஈஸா (அலை) அவர்கள் பற்றிய இஸ்லாமிய மார்க்கத்தினுடைய சுருக்கமான நிலைப்பாடாகும்.

ஆனால் இதற்கு மாற்றமாக இஸ்லாமிய அடிப்படை இறையியல் கோட்பாட்டின் பிரகாரம் இறைவனால் தீர்க்க தரிசியாக, சமுதாய சீர்திருத்தவாதியாக, வழிகாட்டியாக அனுப்பட்ட ஒரு இறைத்தூதரை அவர்களது பிறப்பில் இடம்பெற்ற ஓர் அதிசயத்தையும் இன்னும் அம்மனிதருடைய வாழ்வில் நிகழ்ந்த பல அற்புதங்களையும் காரணமாகக்கொண்டு அவர் கடவுளுடைய குமாரர் என்று நம்பிக்கை கொண்டு, செயற்பட்டு இறைவனுக்கு மாத்திரம் செலுத்தவேண்டிய வணக்க வழிபாடுகளை ஈஸா (அலை) என்றொரு மனிதருக்கு சமர்ப்பித்ததன் மூலம் அகீதா ரீதியாக வழிகெட்டுப்போனவர்களே நாசராக்கள் என்று அல் குர்ஆன் கூறுகின்ற கிறிஸ்த்தவ சமுதாய மக்களாவார்கள்.

அல்லாஹுத்தஆலா இவர்களைப்பற்றி அல் குர்ஆனில் கூறுகின்றபோது,

யூதர்கள் (நபி) உஸைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! (09:30)

இது போன்று இன்னும் பல வசனங்கள் நபி ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் அதற்கு மாற்றமாக நம்பிக்கை கொள்பவர்கள் இறைவனின் சாபத்துக்குரிய அநியாயக்காரர்கள் என்று மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

இவ்வாறு அல்லாஹ்வுடைய மிகப்பெரும் சாபத்துக்குரிய சமுதாயத்தினருடைய பெருநாள் தினத்தைத்தான் நமது இஸ்லாமிய மக்கள் தங்களுடைய பெருநாள் தினத்திற்கு ஒப்பாக பரிசுப்பொருட்கள் வழங்கி, வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டாடுவதை நாம் காண்கிறோம்.

ஒரு புறத்தே இஸ்லாமிய ஓரிறைக்கொள்கையினை மனதில் இருத்திக்கொண்டு மறுபுறத்தால் அந்நம்பிக்கைக்கு முரண்பட்ட முக்கடவுள் (Trinity- பிதா, சுதன், பரிசுத்த ஆவி ) என்ற இணைவைப்புக்கோட்பாட்டினை ஒட்டிய ஒரு பெருநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பது மத நல்லிணக்கம் என்னும் பெயரால் நமவர்கள் மேற்கொள்ளுகின்ற ஒரு நயவஞ்சகத்தனமேயன்றி வேறில்லை.

இஸ்லாமிய மார்க்கமானது எந்தவொரு இடத்திலும் தனித்துவமாக வாழ்வதையே வலியுறுத்துகிறது. மாறாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமை என்ற போர்வைக்குள் இஸ்லாமிய எல்லைக்கோட்டை விட்டும் தாண்டி முஸ்லிம் என்ற தனித்துவத்தை கரைத்து, காணமல் போவதை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் சமகாலத்தில் முஸ்லிம் சமுதாயம் அந்நிய சமுதாயத்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளுக்கு முகம் கொடுப்பதை விடவும் மிகப்பாரியளவிலான வன்கொடுமைகளுக்கு நபிகளார் (ஸல்) அவர்களும் ஸஹாபா சமூகமும் முகம்கொடுத்திருந்தார்கள்.

யூதர்கள் மற்றும் நெருப்பு வணங்கிகளால் ஓரிறைக்கொள்கையினை போதனை செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக பல ஊர்விலக்கல்கள், இனச்சுத்திகரிப்புக்கள், திட்டமிட்ட படுகொலைகள், ஆக்கிரமிப்புக்கள் என பற்பல சொல்லொண்ணாத்துன்ப, துயரங்களையும் தம்முடைய வாழ்க்கையில அனுபவித்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அன்றைய கால நபித்தோழர்க்களுமாவார்கள். ஆயினும் எந்தவொரு அழுத்தமான, இக்கட்டான சந்தர்ப்பத்திலும் நபிகளார் (ஸல்) அவர்கள் மத நல்லிணக்கம் என்ற பெயரால் மாற்றுமத மக்களுடைய விழாக்களிலோ அல்லது அவர்களுடைய விசேட வைபவங்களிலோ பங்கெடுத்ததும் கிடையாது, அவற்றை ஊக்குவிக்கின்ற, அங்கீகரிக்கின்ற விதமாக செயற்பட்டதும் கிடையாது. தன்னுடைய தோழர்களுக்கு, சமுதாயத்திற்கு அவற்றை அறிமுகப்படுத்துகிற ஒரு இறைத்தூதர்காக அவர்கள் வாழ்ந்துகாட்டிய வரலாறுகளும் கிடையவே கிடையாது.

மாற்றமாக இவ்வாறான மாற்றுமத மக்களுடைய சமய நம்பிக்கை சார்ந்த செயற்பாடுகளின் விடயத்தில் அவற்றுக்கு சாவுமணிடியடிக்கின்ற விதத்தில்தான் நபிகளாருடைய சொல்லும் செயலும் ஒருங்கிணைந்திருந்தது.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே”. (அபூதாவுத்).

அந்தவகையில் இஸ்லாமியன் என்ற வட்டத்திற்குள் மிகவும் கெட்டியாக இருந்துகொண்டேதான் இஸ்லாமிய மார்க்கத்தை போதித்தார்கள், வாழ்ந்துகாட்டினார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை பற்றிய நல்லெண்ணம் மாற்றுமத மக்கள் மத்தியில் ஏற்படுவதும் ஏற்படாமல் போவதும் அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் உள்ளது, ஆனால் அதற்காக ஒரு முஸ்லிம் இஸ்லாமியன் என்ற தனித்துவத்தை இழந்துதான் அந்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற விதிமுறை கிடையாது.

மேலும் நபியவர்கள் கூறினார்கள்.
“நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சாணுக்கு சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குள் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா அவ்வாறு குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”.(ஸஹீஹுல் புஹாரி)

ஆனால் மத நல்லிணக்கம் என்றால் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று இவர்கள் மேற்கொள்கின்ற அத்தனை மார்க்க விரோத செயற்பாடுகளையும் நியாயப்படுத்தி இறைத்தூதரான நபிகளாருக்கே பாடம் நடாத்துகின்ற அதி பிரசங்கிகளாக நம்மவர்கள் இருந்து வருகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்று கூறினார்கள். (அபூதாவுத்).

இந்த அறிவிப்பிலிருந்து எதனை நாம் பாடமாகக்கொள்கிறோம்?
அறியாமைக்காலத்தில் அந்த மக்கள் அவ்விடத்தில் ஒரு இணை வைப்புக்குரிய செயலையோ அல்லது தங்களது பெருநாளையோ கொண்டாடி இருந்தாலும் கூட முஸ்லிம்களாகிய நாங்கள் அவ்விடத்தில் நமது வழிபாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்பதை இந்த நபிமொழி உணர்த்துகிறதல்லவா?

அப்படியிருக்கின்றபோது சமகாலத்தில் மாற்றுமத மக்கள் கொண்டாடுகின்ற இஸ்லாத்திற்கு முரண்பட்ட கொள்கையுடைய பெருநாள் தினத்தை எவ்வாறு இஸ்லாமியர்களான நாங்கள் அங்கீகரிப்பது, அதற்கு வாழ்த்துக்கூறி உற்சாகப்படுத்துவது?

மேலும் கிறிஸ்மஸ் தினமாகட்டும் மற்றும் அதனையடுத்து வருகின்ற புதுவருட நிகழ்வுகளாகட்டும் அவையெதுவுமே இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது கிடையாது. மாத்திரமன்றி இஸ்லாத்தின் ஓரிறைக்கோட்பாட்டினை தகர்க்கின்ற ஏனைய மாற்றுமத மக்களுடைய கடவுள் நம்பிக்கையை பிரதிபலிப்பவைகளாகவே அவை இருக்கின்றன.

எனவே மாற்றுமத மக்களுடைய இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டிற்கு முரண்பட்ட எந்தவொரு நடவடிக்கையாகட்டும், சம்பிரதாயமாகட்டும் அது ஒரு இஸ்லாமியனை பொறுத்தவரைக்கும் இணைவைப்புக்குரிய செயற்பாடேயன்றி வேறில்லை. இணைவைப்பின் சாயல் ஒரு கீறல் அளவு இருந்தால் கூட நாளை மறுமையில் சுவர்க்கம் நம்மை விட்டும் தூரமாக்கப்படும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். மதநல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கத்தை புறக்கணித்து மாற்றுமதத்தவர்களை திருப்திப்படுத்தவதை அல்லாஹ் ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக இஸ்லாமியன் என்ற தனித்துவத்துடன் இஸ்லாமிய மார்க்கத்தினுடைய ஏவல் விலக்கல்களை எடுத்து நடப்பவனே உண்மையான முஸ்லிமாவான்.

இறுதியாக
அவர்கள் உண்மையாகவே முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான். (09: 62).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *