Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » அநாதைகள் மூலம் சுவனம்

அநாதைகள் மூலம் சுவனம்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்-
ஒரு குடும்பம் சிறந்த முறையில் முன்னேறுவதற்கு கணவனுடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைகிறது. அதே நேரம் கணவன் இறந்து விட்டால், அந்த குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது?

ஒரு கணவன் இறந்த பிறகு அந்த குடும்பத்திற்கு இரண்டு பெயர்கள் வந்து விடும் ஒன்று மனைவியை விதவை என்றும், பிள்ளைகளை அநாதைகள், என்றும் அழைப்பார்கள். இது விரும்பியோ, விரும்பாமலோ,உலகில் நடந்து வருகின்றது.

கணவன் இருக்கும் வரையில் உறுதியாக இருந்தவள் கணவனை இழந்த பின் தானாக மனபாதிப்புக்கு ஆழாகி விடுகிறாள். அப்போது கணவனின் நுாறு வீதமான பங்களிப்பின் உண்மையை உணர்கிறாள். என் பிள்ளைகளை நான் எப்படி வளர்க்கப் போகிறேன், எனக்கு பாதுகாப்பு யார் ? போன்ற சிந்தனைகளால் மனஉளைச்சல்களுக்கு ஆளாகின்றாள்.

நாட்கள் செல்லச் செல்ல அந்த பிள்ளைகள் மட்டுமல்ல அந்த குடும்பமே அநாதையாகி விடும் அவல நிலையை காண்கிறோம். அந்த தாயின் சிரமத்தையும், பிள்ளைகளின் ஏக்கத்தையும் போக்கும் வண்ணமாக அந்த குடும்பத்திற்கு உதவிக் கரம் நீட்டுங்கள், அந்த அநாதைப் பிள்ளைகளுக்கு தாராளமாக வாரி வழங்குங்கள், உங்களது பிள்ளைகளைப் போல அன்பாக அணைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அவர்களுக்கு செய்கின்ற உதவிகளுக்கு பகரமாக அல்லாஹ் இந்த உலகத்தில் உங்களை கண்ணியப் படுத்துவதோடு,மறுமையில் சுவனத்தை தருவதற்கு தயாராக உள்ளதாக இஸ்லாம் நமக்கு ஆர்வமூட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் அநாதையாக வளர்ந்து வரும் போது,அவர்களை வளர்த்தவர்களுக்கு அல்லாஹ் செய்த அருள் வளங்களை முதலில் பார்த்து விட்டு, பொதுவாக அநாதைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி தெடர்ந்து பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னரே தந்தை அப்துல்லாஹ் மரணித்து விட்டார்கள். நபியவர்கள் பிறந்து சிறிது காலத்தில் தாய் ஆமினாவும் மரணித்து விட்டார்கள்.

அன்றைய காலத்தில் பிற குழந்தைகளுக்கு வாடகைக்காக பால் ஊட்டுவது வழக்கம். அந்த அடிப்படையில் நபியவர்களுக்கு அபூ லஹபின் அடிமையான ”ஸூவைபிய்யா என்ற தாயிடம் நபியவர்கள் பால் குடித்தார்கள். மேலும் ஹலீமா அவர்களிடமும் பால் குடித்தார்கள். ஹலீமா அவர்கள் ஆரம்பத்தில் நபியவர்களை பால் ஊட்ட எடுப்பதற்கு பின் வங்கினார்கள். ஏன் என்றால் தந்தை இருந்தால் தான் அதற்கான ஊழியம் கிடைக்கும். ஆனால் நபியவர்களுக்கோ தந்தை இல்லை எனவே பால் கொடுத்தால் ஊழியம் யாரிடம் பெறுவது என்ற பிரச்சினையால் ஆரம்பத்தில் நபியவர்களுக்கு பால் கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. என்றாலும் வேறு குழந்தைகள் கிடைக்காததினால் இறுதியில் நபியவர்களையே ஹலீமா அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நபியவர்களின் சிறப்பால் ஹலீமா அவர்களது ஒட்டகம் தாராளமாக பால் கொடுக்க ஆரம்பித்தது. அவர்கள் பயணம் செய்யும் கழுதை வேகமாக பயணிக்க ஆரம்பித்தது. ஹலீமா அவர்களது மார்பில் தாராளமாக பால் சுரக்க ஆரம்பித்தது. அவர்களது குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் வளம் வர ஆரம்பித்து. ஹலீமாவே! நீ அதிகமான பரகத்துள்ள குழந்தையை பெற்றுள்ளாய் என்று ஹலீமாவின் கணவர் கூறினார்.

இது அநாதைக் குழந்தையின் மூலம் அக்குடும்பத்திற்கு அல்லாஹ்வால் கொடுக்கப் படு்ம் எதிர் பாராத அருள் வளமாகும்.

அநாதைகளை பராமறிப்பதன் சிறப்புகள்
”அல்லாஹ்வின் மீது அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், கைதிகளுக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். மேலும் நாம் உங்களுக்கு உணவளிப்பது எல்லாம் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தவிர, உங்களிடமிருந்து எந்த பிரதி பலனையோ, அல்லது நன்றியையோ,எதிர்ப் பார்த்து அல்ல (76- 08)

எதை செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்விற்காக மட்டும் தான் செய்ய வேண்டும். பிறர் என்னை பாராட்ட வேண்டும், புகழ வேணடும், என்னை பெருமையாக நினைக்க வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் வந்து விடக்கூடாது.

மேலும் ” நீங்கள் அநாதைகளை கண்ணியப் படுத்துவதும் கிடையாது” (89- 17)

அநாதைகளை நாம் கண்ணியப் படுத்த வேண்டும் என்பதை மேற்ச் சென்ற வசனம் நமக்கு ஆர்வமூட்டுகிறது. எனவே அநாதைகள் விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் ” நபியே ! நீர் கவனித்தீரா ? நியாயத் தீர்ப்பு நாளை பொய்ப்பிப்பவன் தான் அநாதைகளை விரட்டுவான். (107 -01 )

அநாதைகளை புறக்கணிக்கக் கூடாது, அப்படி புறக்கணிப்பவன் தான் பொய்யன் என்பதை மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது்

மேலும் …”அநாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள், அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது நலவாகும். என்று நபியே ! கூறிவிடுங்கள் மேலும் அவர்களுடன் நீங்கள் கலந்து இருந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்களாவர்…(2- 220)

இந்த வசனம் இரண்டு முக்கியமான விசயங்களை எடுத்துக் காட்டுகிறது. முதலாவது அநாதைகளுடன் எந்த பாகுபாடின்றி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். என்பதாகவும், இரண்டாவது அவர்கள் யாரும் அற்ற அநாதைகள் என்று ஒதுக்கி விடாமல் நமது சகோதரர்களைப் போல இரண்டரக் கலந்து இருக்க வேண்டும், என்பதையும் மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் நமக்கு நினைவு படுத்துகிறது.

அநாதைகளுக்கு அநியாயம் செய்யாதீர்கள்

எவர் அநாதைகளுக்கு ஆதரவு கொடுக்காமல், அநியாயம் செய்கிறாரோ அவர் இந்த உலகில் இழிவு படுத்தப்படுவதோடு, மறுமை நாளில் கடுமையான முறையில் வேதனைப் படுத்தப்படுவார்.

” எவர் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுகிறாரோ அவர் வயிறுகளில் நெருப்பைத்தான் சாப்பிடுகிறார். மேலும் அவர் நரகத்தில் நுழைவிக்கப் படுவார். (4- 10)

மேலும் ” நீங்கள் அநாதைகளின் சொத்துக்களை ( பருவ வயதை அடைந்த பின் குறைவின்றி ) கொடுத்து விடுங்கள், ( அதிலுள்ள ) நல்லவற்றிக்கு பகரமாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். ( 04 -02 )

அநாதை பிள்ளைகளை வளர்த்து வரும் போது அவர்களுக்கு சொத்துகள் இருந்தால், அவர்கள் விபரமான பருவத்தை அடைந்த பின் அந்த சொத்துக்களை சரியாக கொடுத்து விட வேண்டும். தட்டிக் கேட்க யாருமில்லை என்பதற்காக அவர்களுடைய பொருட்களை அநியாயமாக எடுத்து விடக் கூடாது.

மேலும் அநாதைகளை பராமறிப்போர் ஏழைகளாக இருந்தால் நியாயமான முறையில் தேவையான அளவு எடுத்துக் கொள்ள அல்லாஹ் அனுமதிக்கிறான். அதை பின் வரும் வசனம் தெளிவுப் படுத்துகின்றன.

… ”அநாதையை பராமறிப்பவர் செல்வந்தராக இருந்தால் ( அநாதையின் சொத்துகளை சாப்பிடும் விடயத்தில் ) தவிர்த்துக் கொள்ளுங்கள், ஏழைகளாக இருந்தால் நியாயமான அளவு புசிக்கலாம். அநாதைகளின் பொருட்கள் அவர்களிடம் ஒப்படைக்கும் போது அதற்கான சாட்சிகளை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவன். ( 04 – 06 )

மேலும் ”அநாதைகளின் சொத்துக்களை அழகிய முறையிலே தவிர நீங்கள் நெருங்காதீர்கள். ( 17 – 34 )

மேலும் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி)

இப்படி பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும், கடுமையாக எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

அநாதை இல்லங்கள்

அநாதைகளை ஓரிடத்தில் வைத்து பராமறிப்பதற்காக உலக மட்டத்தில் காப்பகங்கள் நிறுவப்பட்டு பிள்ளைகளை பாதுகாத்து வருகிறார்கள். இந்த அநாதை பிள்ளைகளுக்காக உலக மட்டத்தில் தாராள மனம் படைத்த செல்வந்தர்கள் தனது செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். வரவேற்கக் கூடிய விடயம் தான். அவர்கள் நல்ல நோக்கத்திற்காக அள்ளி கொடுக்கிறார்கள். இருந்தாலும் ஓரிரு இடங்களில் அநாதைகளின் சொத்துக்கள் சூரையாடப் படுகிறன்றன. அநாதைகளின் அவல நிலைகளை படம் எடுத்துக் காட்டி பல இலட்சங்கள் மோசடி செய்யப் படுகின்றன. இவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

பதவியையும், அதிகாரத்தையும் பயன் படுத்தி யாரையும் இந்த உலகில் ஏமாற்றலாம். ஆனால் படைத்த ரப்பை யாரும் ஏமாற்ற முடியாது. மறுமை நாளில் சம்பந்தப் பட்டவர்கள் ஏமாந்து போவார்கள்.

எனவே உங்கள் தொழில்களில் அபிவிருத்தியை காண வேண்டுமா ? உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் வளம் தேவையா ? அதற்கான சிறந்த ஒரே வழி அநாதைகளுக்கு தாராளமாக அள்ளிக் கொடுப்பதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *