Featured Posts

90. தந்திரங்கள்

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6953

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களே! எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். தாம் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்திற்காக, அல்லது தாம் மணக்க விரும்பும் பெண்ணுக்காக ஹிஜ்ரத் செய்கிறவருடைய ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும். இதை உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் சொற்பொழிவாற்றும் போது அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6954

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாத வரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6955

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அல்லாஹ்வின் ஆணைப்படி) கடமையாக்கிய ஸகாத்தைப் பற்றி எனக்கு அபூ பக்ர்(ரலி) அவர்கள் (கடிதம்) எழுதியபோது, ‘ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதும் ஒன்று சேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது’ என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6956

தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார். (நஜ்துப் பகுதியைச் சேர்ந்த) கிராமவாசி ஒருவர் தலைவிரி கோலத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(நாளொன்றுக்கு) ஐவேளை தொழுகைகள் (உன் மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் தொழுது கொண்டால் தவிர’ என்றார்கள். அவர், ‘அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள நோன்பு பற்றிக் கூறுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘ரமளான் மாதம் முழுவதும் நீ நோன்பு நோற்பது உன் மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் நோன்பு நோற்றால் தவிர’ என்றார்கள். தொடர்ந்து அவர், அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள ஸகாத் பற்றிக் கூறுங்கள்’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஸகாத் உள்பட) இஸ்லாமிய சன்மார்க்க நெறிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர், ‘உங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீது சத்தியமாக! நான் (இவற்றில்) எதனையும் கூடுதலாகச் செய்யமாட்டேன். அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ளவற்றில் எதனையும் நான் குறைக்கவுமாட்டேன்’ என்று கூறிவிட்டுத் திரும்பி(ச் செல்லலா)னார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இவர் (தாம் கூறியபடி) உண்மையாக நடந்தால் ‘வெற்றியடைவார்’ அல்லது இவர் (கூறியபடி) உண்மையாக நடந்தால் சொர்க்கத்தில் நுழைவார்’ என்று கூறினார்கள்.

அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள்: நூற்று இருபது ஒட்டகங்கள் இருந்தால் மூன்று வயதுடைய இரண்டு ஒட்டகங்கள் ஸகாத்தாக வழங்க வேண்டும். இந்நிலையில் ஒருவர் ஸகாத் கொடுக்காமல் தப்பிப்பதற்காக அந்த (120) ஒட்டகங்களையும் (ஓராண்டு பூர்த்தியாவதற்கு ஓரிரு நாள்கள் இருக்கையில்) வேண்டுமென்றே அறுத்து விட்டாலோ, அன்பளிப்பாக வழங்கிவிட்டாலோ, வேறு தந்திரங்களைக் கையாண்டாலோ அவரின் மீது (ஸகாத்) கடமையாகாது.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6957

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸகாத் கொடுக்காமல் பூட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்ட) உங்கள் கருவூலம் மறுமை நாளில் கொடிய விஷமுள்ள பாம்பாக மாறும். அதனைக் கண்டு அதன் உரிமையாளரான நீங்கள் வெருண்டோடுவீர்கள். ஆனால், அது உங்களைத் துரத்திக்கொண்டே வந்து ‘நான்தான் உன்னுடைய கருவூலம்’ என்று சொல்லும். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உங்கள் கையை விரித்து அதன் வாய்க்குள் நுழைக்கும்வரை அது உங்களைத் துரத்திக் கொண்டே வரும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6958

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்கான கடமையை (ஸகாத்தை) நிறைவேற்றவில்லையானால் மறுமை நாளில் அவை அவரின் மீது ஏவிவிடப்படும். அவை தம் கால் குளம்புகளால் அவரின் முகத்தில் மிதிக்கும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

சிலர் கூறுகிறார்கள்: ஒருவரிடம் ஒட்டகங்கள் இருந்தன. அவற்றுக்குத் தாம் ஸகாத் கொடுக்க வேண்டிவந்துவிடும் என்று அஞ்சிய அவர், (ஓராண்டு பூர்த்தியாவதற்கு) ஒருநாள் முன்பாக அந்த ஒட்டகங்களை அதே அளவு ஒட்டகங்களுக்கு, அல்லது ஆடுகளுக்கு, அல்லது மாடுகளுக்கு, அல்லது திர்ஹங்களுக்கு பதிலாக விற்றுவிட்டார். தந்திரமாக ஸகாத்திலிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு அவர் செய்தால் அவரின் மீது (ஸகாத்) எதுவும் கடமையாகாது. (ஏனெனில், பழையதை விற்றுப் புதிதாக வாங்கப்பட்ட பொருள் கைக்கு வந்து ஓராண்டு கழிந்த பின்பே அதற்கு ஸகாத் கடமையாகும்.) இவ்வாறு கூறும் இவர்கள் ‘ஓராண்டு பூர்த்தியாவதற்கு ஒரு நாள் அல்லது ஓராண்டிற்கு முன்பே தம் ஒட்டகங்களுக்கான ஸகாத்தை அவர் கொடுத்தால் அது செல்லும்’ என்றும் கூறுகிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6959

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஅத்பின் உபாதா அல்அன்சாரி(ரலி) அவர்கள், நேர்ந்து கொண்டுவிட்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்து போய்விட்ட தம் தாயாரின் நேர்த்திக்கடன் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அவருக்காக நீங்கள் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்’ என்றார்கள். ‘(ஒருவருக்குரிய) ஒட்டகங்களின் எண்ணிக்கை இருபதாகிவிட்டால் அதற்காக நான்கு ஆடுகள் (அவர் ஸகாத்) கொடுக்க வேண்டும். ஆனால், அவர் ஸகாத்தை இல்லாமல் செய்வதற்காகத் தந்திரமாகத் தப்பித்துக்கொள்ளும் வகையில் ஓராண்டு முழுமையடைவதற்கு முன்பே அந்த ஒட்டகங்களை அன்பளிப்பாக வழங்கிவிட்டாலோ, விற்றுவிட்டாலோ அவரின் மீது (ஸகாத்) ஏதும் கடமையாகாது. அவ்வாறே அவற்றை(ச் செலவு) அழித்துவிட்டு அவர் இறந்தாலும் அவரின் (இந்தச்) சொத்தில் (ஸகாத்) ஏதும் கடமையாகாது’ என்று சிலர் கூறுகிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6960

உபைதுல்லாஹ் அல்உமரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாஃபிஉ(ரஹ்) அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் என்று என்னிடம் தெரிவித்தார்கள். உடனே நான் நாஃபிஉ அவர்களிடம், ‘ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்து (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் சகோதரியை மணமுடித்து வைப்பதாகும்’ என்று பதிலளித்தார்கள்.

சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் தந்திரம் செய்து ‘ஷிஃகார்’ முறைப்படித் திருமணம் செய்துகொண்டால் அத்திருமணம் செல்லும்; ஆனால், (அதில் விதிக்கப்பட்ட) முன் நிபந்தனை செல்லாது. அதே நேரத்தில், தவணை முறைத் திருமணம் (அல்முத்ஆ) செல்லாது; (அதில் விதிக்கப்படும்) முன் நிபந்தனையும் செல்லாது. வேறு சிலரோ, ‘தவணை முறைத் திருமணமும் ‘ஷிஃகார்’ முறைத் திருமணமும் செல்லும்; ஆனால், (அவற்றில் விதிக்கப்படும்) முன் நிபந்தனை செல்லாது’ என்று கூறுகின்றனர்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6961

முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். தவணை முறைத் திருமணம் (நிகாஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ(ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது தவணை முறைத் திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கும் தடைவிதித்தார்கள்’ என்று கூறினார்கள்.

‘ஒருவர் தந்திரமாகத் தவணை முறைத்திருமணம் செய்தால் அத்திருமணம் செல்லாது’ என்று சிலர் கூறினர். வேறு சிலரோ, ‘அந்தத் திருமணம் செல்லும்; ஆனால் (அதில் விதிக்கப்பட்ட) முன் நிபந்தனை செல்லாது’ என்று கூறினர்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6962

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புற்பூண்டுகளை (மேயவிடாமல் கால்நடைகளை)த் தடுத்தாகி விடும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6963

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்தி விடுவதற்காக ஏலம் மற்றும் பிற பேரங்களின் போது) விலையை அதிகமாகக் கேட்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6964

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரங்களில் ஏமாற்றப்படுவதாகக் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ வியாபாரத்தின்போது ‘ஏமாற்றுதல் கூடாது’ என்று கூறிவிடு’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6965

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நீதியோடு நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான (வேறு) பெண்களை மணந்து கொள்ளுங்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அநாதைப் பெண் ஒருத்தி தன் காப்பாளரின் பாதுகாப்பில் இருந்து வருவாள். அவர் அப்பெண்ணின் செல்வத்தையும் அழகையும் கண்டு ஆசைப்பட்டு அவளைப் போன்ற பெண்களுக்கு வழங்கப்பட்டுவரும் மணக் கொடையைவிட மிகக் குறைந்த அளவு மணக்கொடை (மஹ்ர்) கொடுத்து அவளை மணந்துகொள்ள விரும்புவார். அப்போதுதான், முழுமையான மணக்கொடை (மஹ்ர்) கொடுத்து அப்பெண்களுக்கு நீங்கள் நீதி செலுத்தாதவரை அவர்களை நீங்கள் மணமுடிக்கக் கூடாது என அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னரும் மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இது குறித்துத் தீர்ப்புக் கேட்டனர். அப்போதுதான் ‘(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி தீர்ப்பு வழங்கும்படி கேட்கிறார்கள்’ என்று தொடங்களும் (திருக்குர்ஆன் 04:127 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். தொடர்ந்து அறிவிப்பாளர் இந்த ஹதீஸின் முழுத் தொடரையும் கூறினார்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6966

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று உண்டு. அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6967

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ஒரு மனிதனே! என்னிடம் நீங்கள் உங்கள் வழக்குகளைக் கொண்டு வருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விடத் தன்னுடைய ஆதாரத்தை எடுத்து வைப்பதில் வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக்கூடும். மேலும், நான் (அந்தச் சாதுர்யமானவரிடமிருந்து) செவியேற்பதற்கேற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறேன். எனவே, (எவருடைய சொல்லை வைத்து) அவரின் சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று (உண்மை நிலை அறியாமல்) தீர்ப்பளித்து விடுகிறேனோ அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் பெயர்த்துக் கொடுக்கிறேன் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6968

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னி கழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாதவரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது’ என்று கூறினார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவள் சம்மதிக்கிறாள் என்பதற்கு அடையாளமாகும்)’ என்றார்கள்.

ஆனால், சிலர் கூறுகின்றனர்: ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுமதியும் கோராமல், (முறைப்படி) அவள் திருமணமும் செய்து கொள்ளப்படாமல் இருக்கும்போது, ஒருவர் தந்திரமாக இரண்டு பொய்சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தி அவளை அவளுடைய இசைவுடன் தாம் மணந்ததாக வாதிட்டார் நீதிபதியும் (அதை உண்மை என்று நம்பி) அவளுடைய திருமணத்தை உறுதிப்படுத்தினார். இந்தச் சாட்சியம் பொய் என்று அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இந்நிலையில் அவளுடன் அவன் தாம்பத்திய உறவு கொள்வதில் தவறில்லை. இது செல்லத் தகுந்த திருமணமே.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6969

காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஜஅஃபர்(ரஹ்) அவர்களின் மக்களில் ஒரு பெண்மணி, தன்னைத் தன் காப்பாளர் தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைக்கப்போகிறார் என அஞ்சினார். எனவே, அப்பெண்மணி ஜாரியா என்பவரின் (யஸீதுடைய) புதல்வர்களான அப்துர் ரஹ்மான்(ரஹ்), முஜம்மிஉ(ரஹ்) ஆகிய இரண்டு அன்சாரிப் பெரியவர்களிடம் ஆளனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும், ‘(பெண்களே!) அஞ்சாதீர்கள். ஏனெனில், கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவரின் தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைத்தார். (இது குறித்து அப்பெண்மணி முறையிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் அத்திருமணத்தை ரத்துச் செய்தார்கள்’ என்று கூறியனுப்பினார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரஹ்) அவர்கள் தம் தந்தை காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர்(ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்ததை நான் செவியேற்றேன்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6970

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கன்னி கழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது’ என்று கூறினார்கள். மக்கள், ‘எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் மெளனமாயிருப்பதே (அதற்கு அடையாளமாகும்)’ என்றார்கள்.

ஆனால், சிலர் கூறுகின்றனர்: இரண்டு பொய் சாட்சிகளை வைத்துக் கொண்டு ஒருவர், கன்னி கழிந்த பெண்ணின் உத்தரவுப்படி அவளைத் தாம் மணமுடித்துக் கொண்டதாகக் கூறி தந்திரம் செய்தார். (இவ்வழக்கை விசாரித்த நீதிபதியும்) அவளை அவர் மணமுடித்துக் கொண்டதாக உறுதி செய்தார். ஆனால், அவளைத் தான் ஒருபோதும் மண முடிக்கவில்லையென்று அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இப்போது இத்திருமணம் அவனுக்கு செல்லும். அவளுடன் அவன் தங்கியிருப்பதில் குற்றமில்லை.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6971

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரவேண்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘கன்னிப் பெண் (வெளிப்படையாகத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுடைய மெளனமே அவளுடைய அனுமதி’ என்றார்கள்.

சிலர் கூறுகின்றனர்: ஒருவர் ஓர் அனாதைச் சிறுமியை, அல்லது கன்னிப் பெண்ணை மணமுடிக்க விரும்பினார். ஆனால், அவள் மறுத்து விட்டாள். இந்நிலையில், அவர் தந்திரமாக இரண்டு பொய்சாட்சிகளை அழைத்து வந்து, தாம் அவளை மணமுடித்துக் கொண்டதாகத் தெரிவித்தார். பின்னர் அந்த அநாதைச் சிறுமி பருவம் எய்தினாள்; (அந்தத் திருமணத்தை) ஏற்றும் கொண்டாள். நீதிபதியோ பொய் சாட்சியத்தை ஏற்றார். ஆனால், அது பொய் என்று அந்தக் கணவனுக்கு (நன்றாகவே) தெரியும். இந்நிலையில் (அவளுடன்) தாம்பத்திய உறவு கொள்ள அவனுக்கு அனுமதி உண்டு.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6972

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்பமானவையாக இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவ்வாறு (ஒரு நாள்) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல்பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்’ என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா(ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, ‘நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, இறைத்தூதர் அவர்களே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்) வாடை வீசுவதைக் கடுமையாகக் கருதுவார்கள். எனவே, ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (எனவேதான் வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன்.

நபி(ஸல்) அவர்கள் சவ்தா(ரலி) அவர்களிடம் சென்றபோது (நான் சொன்னபடி செய்துவிட்டு) சவ்தா(என்னிடம்)கூறினார்கள்: இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனுமில்லையோ அத்தகைய (இறை)வன் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் இருந்தபோது உங்களுக்கு பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னை) நெருங்கியதும் அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். ‘அப்படியானால், (இது என்ன வாடை?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்’ என்றார்கள். நான், ‘அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம் (எனவேதான் தேனில் வாடை ஏற்பட்டு விட்டது போலும்)’ என்று சொன்னேன்.

(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது அதைப் போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி(ஸல்) அவர்கள் சென்றபோது அவரும் அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம் சென்றபோது நபியவர்களிடம் அவர், ‘இறைத்தூதர் அவர்களே! அருந்துவதற்கு தங்களுக்குச் சிறிது தேன் தரட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அது எனக்குத் தேவையில்லை’ என்று கூறினார்கள். (இது குறித்து) சவ்தா(ரலி) அவர்கள், ‘அல்லாஹ் தூயவன்! நபி(ஸல்) அவர்களை அதை அருந்தவிடாமல் நாம் தடுத்து விட்டோமே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், ‘சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது)’ என்று சொல்வேன்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6973

அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி ரபீஆ(ரலி) அறிவித்தார். உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (நாட்டு மக்களின் நிலவரம் அறிய) ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அப்போது அவர்களிடம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், ‘ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் (வலியப்) போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது கொள்ளைநோய் பரவிவிட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரை விட்டு) வெளியேறாதீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள். எனவே, உமர்(ரலி) அவர்கள் சர்ஃகிலிருந்து (மதீனாவிற்குத்) திரும்பி விட்டார்கள்.

சாலிம் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உமர்(ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸைச் செவியுற்றதால்தான் சர்ஃக்கிலிருந்து திரும்பி விட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6974

ஆமிர் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உசாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொள்ளைநோய் பற்றிக் குறிப்பிட்டபோது, ‘அது (இறைவன் வழங்கும்) வேதனையாகும். அதன் மூலம் (அட்டூழியங்கள் புரிந்த) சில சமுதாயத்தார் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பிறகு அதில் சிறிதளவு (இன்றளவும்) எஞ்சியுள்ளது. எனவே, அது அவ்வப்போது வந்துபோகும். ஒரு பகுதியில் அது இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். அது பரவியிருக்கும் பகுதியில் நீங்கள் இருந்தால் அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6975

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன் அன்பளிப்புப் பொருளை திரும்பப் பெற்றுக் கொள்பவன் தான் வாந்தி எடுத்ததைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இதைப் போன்ற) இழிகுணம் நமக்கு முறையன்று  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6976

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். பிரிக்கப்படாத ஒவ்வொரு (அசையாச்) சொத்தில் தான், பங்காளிக்கே விற்கவேண்டும் என்ற விலைகோள் உரிமையை (ஷுஃப்ஆ) நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு பாதைகள் குறிக்கப்பட்டால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற (கட்டாய) நிலையில்லை.  சிலர், ‘(பங்காளிக்கு இருப்பதைப் போன்றே அண்டை வீட்டாருக்கும் விலைகோள் (ஷுஃப்ஆ) உரிமை உண்டு’ என்று கூறுகின்றனர். பிறகு இவ்விதியை உறுதிப்படுத்த விரும்பிய அவர்கள், (முன்னுக்குப் பின் முரணாக ஒரு கட்டத்தில்) இதே விதியைச் செல்லாததாக்கி விடுகிறார்கள். (அதன் விவரமாவது:) ஒருவர் ஒரு வீட்டை (முழுவதும்) வாங்க விரும்பினார். ஆனால், அண்டை வீட்டான் விலைகோள் (ஷுஃப்ஆ) உரிமை கோரக்கூடும் என அஞ்சினார். எனவே, (அந்த வீட்டின்) நூறு பங்குகளில் (பிரிக்கப்படாத) ஒரு பங்கை (மட்டும் முதலில்) விலைக்கு வாங்கினார். (இதையடுத்து அவர் வீட்டு உரிமையாளருக்குப் பங்காளியாகி விடுகிறார்.) பிறகு மீதிப் பங்குகளையும் விலைக்கு வாங்கினார். (இப்போது அண்டை வீட்டானுக்கு விலைகோள் உரிமை இல்லாமல் போய்விடும். ஏனெனில், அவர் வாங்கிய) முதலாவது பங்கில் மட்டும்தான் அண்டை வீட்டானுக்கு விலைகோள் உரிமை இருந்தது. (அதை அவன் பயன்படுத்தத் தவறிவிட்டான்.) வீட்டின் மீதியுள்ள பங்குகளில் அவனுக்கு அந்த உரிமை கிடையாது. (பங்காளிக்கே அந்த உரிமை உண்டு.) இவ்வாறு அவர் தந்திரம் செய்ய அவருக்கு உரிமை உண்டு என்று கூறுகிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6977

அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்கள் வந்து என் தோள்மீது தம் கையை வைத்து, (என் மாமா) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் (அழைக்க,) நானும் அன்னாருடன் சென்றேன். அப்போது (நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமையான) அபூ ராஃபிஉ(ரலி) அவர்கள் மிஸ்வர்(ரலி) அவர்களிடம், ‘என் வீட்டிலுள்ள ஓர் அறையை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு ஸஅத் அவர்களுக்கு நீங்கள் யோசனை கூற மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத்(ரலி) அவர்கள், ‘நான் (வாங்குவதாக இருந்தால்) அவருக்கு (பொற்காசுகளில்) நானு றைவிட அதிகமாகத் தரமாட்டேன்; அதையும் பல தவணைகளில் தான் தர முடியும்’ என்று கூறினார்கள். அபூ ராஃபிஉ(ரலி) அவர்கள், ‘(இந்த வீட்டை விலைக்குக் கேட்டு) எனக்கு ரொக்கமாக ஐநூறு (வெள்ளி அல்லது பொற்காசுகள்) தரப்பட்டது. ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ‘அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமைபடைத்தவராவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை மட்டும் நான் கேட்டிராவிட்டால், இந்த வீட்டை உங்களுக்கு நான் ‘விற்க’ அல்லது ‘கொடுக்க’ முன்வந்திருக்கமாட்டேன்’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ இப்னு அல்மதீனீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) (எனக்கு இதை அறிவித்த) சுஃப்யான்(ரஹ்) அவர்களிடம் நான் ‘மஅமர்(ரஹ்) அவர்கள் இவ்வாறு (இந்த அறிவிப்பாளர் தொடரில்) கூறவில்லையே?’ என்று கேட்டேன். சுஃப்யான் அவர்கள், ‘ஆனால், மஅமர்(ரஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறே கூறினார்கள்’ என்றார்கள்.

சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் (அண்டை வீட்டாருக்குரிய) விலைகோள் உரிமையை மறுக்க எண்ணினால், தந்திரம் செய்து, அதை இல்லாமல் ஆக்கிவிடலாம். அதாவது விற்பவர் வாங்கும் எண்ணத்தில் உள்ளவருக்கு அந்த வீட்டை அன்பளிப்பாக வழங்கிட வேண்டும். அத்துடன் அதற்கு எல்லைகளை வகுத்து அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும். வாங்கியவர் (முன்பே பேரம் பேசாமல்) அதற்கு பதிலாக ஆயிரம் வெள்ளிக் காசுகளை வழங்கிடவேண்டும். இவ்வாறு செய்தால் (அன்பளிப்பு என்பது வாரிசுரிமை என்பதால்) விலைகோள் உரிமை கோர அதில் எவருக்கும் அதிகாரம் கிடையாது.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6978

அபூ ராஃபிஉ(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் என்னிடம் (என்னுடைய) வீட்டை நானுறு பொற் காசுகளுக்குப் பகரமாக விலை பேசினார்கள். அப்போது நான் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அண்மையில் இருப்பதால் அண்டைவீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார்’ என்று கூறியதை நான் செவியேற்றிராவிட்டால் (இந்த வீட்டை) உங்களுக்கு நான் வழங்கியிருக்கமாட்டேன்’ என்று சொன்னேன்.

‘வீட்டின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கிய ஒருவர் (அதன் மீதுள்ள) விலை கோள் உரிமையைத் தடுக்க விரும்பினால் பருவமடையாத தம் மகனுக்கு அன்பளிப்பாக வழங்கிடலாம். (அன்பளிப்பாகத்தான் அது வழங்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காகச்) சத்தியம் செய்ய வேண்டிய பொறுப்பு (சிறுவனான) அவனுக்குக் கிடையாது’ என்று சிலர் கூறுகிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6979

அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸதாக்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், ‘இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்’ என்று கூறினார்கள். பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் தம் தகப்பன் வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தம் தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தம் தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்’ என்று கூறினார்கள்.

பிறகு, தம் அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?’ என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6980

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார் என அபூ ராஃபிஉ(ரலி) அறிவித்தார். சிலர் கூறுகின்றனர். ஒருவர் ஒரு வீட்டை இருபதாயிரம் வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்க விரும்பினார். அவர் (அண்டை வீட்டாருக்குரிய விலைகோள் உரிமையைச் செயலிழக்கச் செய்யப் பின்வருமாறு) தந்திரம் செய்வதில் தவறில்லை. அதாவது இருபதாயிரம் வெள்ளிக் காசுகள் விலைபேசி வீட்டை அவர் வாங்கிக் கொள்வார். ஆனால், விற்றவரிடம் 9,999 வெள்ளிக் காசுகளையும், இருபதாயிரத்தில் மீதியுள்ள (10,001) வெள்ளிக் காசுகளுக்கு பதிலாக ஒரு பொற் காசையும் அவர் ரொக்கமாகச் செலுத்துவார். இந்நிலையில், விலைகோள் உரிமை கோருபவர் தம் உரிமையைக் கோரினால், (பேசப்பட்டுவிட்ட) இருபதாயிரம் வெள்ளிக் காசுகளைக் கொடுத்து வீட்டை எடுத்துக் கொள்ளலாம். இல்லையேல், அந்த வீட்டின் மீது அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும், இந்த நிலையில், அது வேறொருவருக்குச் சொந்தமான வீடு என்று தெரியவந்தால், விலைக்கு வாங்கியவர் விற்றவரிடம் செலுத்திய தொகையை மட்டுமே திரும்பப் பெறுவார். அது 9,999 வெள்ளிக் காசுகளும் ஒரு பொற் காசுமாகும். ஏனெனில், விற்கப்பட்ட பொருள் வேறொருவருக்குச் சொந்தமானது என்று தெரியவரும்போது, ஏற்கெனவே விற்றவரும் வாங்கியவரும் செய்த (10,001 வெள்ளிக் காசுகளுக்கு பதிலாக) ஒரு பொற்காசு என்ற நாணயமாற்று ஒப்பந்தம் முறிந்துவிடும்.

அதே நேரத்தில், விலைக்கு வாங்கியவர் அந்த வீட்டில் குறைபாடு உள்ளதைக் கண்டார்; ஆனால், வீடு மற்றவருக்குச் சொந்தமானது என உரிமை கோரப்படவில்லை. அப்போது, இருபதாயிரம் வெள்ளிக் காசுகளைப் பெற்றதை உரியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார். (இது முன்னுக்குப் பின் முரணாகும். ஏனெனில், இவர் செலுத்தியதோ 9,999 வெள்ளிக்காசுகளும் ஒரேயொரு பொற்காசும் தாம். திரும்பப் பெறுவதோ இருபதாயிரம் வெள்ளிக்காசுகள்.)

அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்: இவ்வாறு கூறும் இவர்கள் முஸ்லிம்களிடையே மோசடி நடைபெறுவதை அனுமதிக்கின்றனர். ஆனால், நபி(ஸல்) அவர்களோ, ‘முஸ்லிமின் வியாபாரத்தில் எந்தக் குறையோ, தீங்கோ, மோசடியோ இராது’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6981

அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அபூ ராஃபிஉ(ரலி) அவர்களிடம் ஸஅத் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் ஒரு வீட்டை நானுறு பொற்காசுகளுக்கு விலை பேசினார்கள். (வீட்டின் உரிமையாளர்) அபூ ராஃபிஉ(ரலி) அவர்கள் ‘அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றிரா விட்டால் உங்களுக்கு நான் (இந்த வீட்டை) வழங்கியிருக்க மாட்டேன் என்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *