Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » என் தோழர்களை ஏசாதீர்கள்!

என் தோழர்களை ஏசாதீர்கள்!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்-
நபி (ஸல்) அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நபித் தோழர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். இந்த உலகிலே மிக சிறந்த மக்கள். அவர்களை குறைகாணவோ, அல்லது ஏசவோ இந்த உலகத்தில் எவருக்கும் அதிகாரமில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வாலும், நபியவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்கள். அல்லாஹ்வை அந்த ஸஹாபாக்களும் பொருந்திக் கொண்டார்கள், அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டதாக குர்ஆன் மூலம் அல்லாஹ் நமக்கு உறுதியளிக்கிறான்.

அன்சாரித்தோழர்களையோ, அல்லது முஹாஜிரீன்களையோ, அல்லது வேறு எந்த நபித் தோழர்களையும் தரக்குறைவாக பேசுவதோ, அல்லது குத்திக் காடடி குறையாக எடுத்தக் காட்டுவதோ கூடாது. அப்படி யார் செய்கிறார்களோ அவர்கள் மார்க்க அறிவு இல்லாதவர்கள் என்பதை ஹதீஸ்களை வைத்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

சமுதாயத்தால் சிறந்தவர்கள்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று கூறிவிட்டு, மூன்றாவது தடவையில் அல்லது நான்காவது தடவையில் “அவர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 4958)

மேலும் “(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதோம். பிறகு நாங்கள், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழும்வரை (இங்கேயே) அமர்ந்திருந்தால் நன்றாயிருக்கும்” என்று கூறிக் கொண்டு (அங்கேயே) அமர்ந்திருந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு “தங்களுடன் இஷாத் தொழுகையையும் தொழும்வரை அமர்ந்திருப்போம்” என்று கூறினோம்” என்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் செய்தது “நன்று” அல்லது “சரி” என்று சொல்லி விட்டு, வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். -(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தக்கூடியவராக இருந்தார்கள்.-
பிறகு, “நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்” என்று கூறினார்கள். ( முஸ்லிம் 4953)

உலகம் அழிகின்ற வரை அந்த ஸஹாபாக்களுக்கு நிகராக இந்த உலகில் எவரும் வர முடியாது என்ற அழகிய தத்துவத்தை தான் நபி (ஸல்) அவர்கள் மேற்ச் சென்ற ஹதீஸ்கள் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள். சமுதாயத்தால் சிறந்தவர்கள் என்னோடு வாழக் கூடியவர்கள் என்றால், அவர்கள் யார்! உயிரோடு வாழக்கூடிய நேரத்திலே சுவர்க்கவாதிகள் என்று சொல்லப்பட்ட அந்த தோழர்களா! அல்லது ஸஹாபாக்களை அடிக்கடி குறை பேசி குற்றம் பிடித்து அலையும் இவர்களா! இப்படிப்பட்டவர்கள் தஃவா செய்வதற்கு தகுதியானவர்களா? சற்று சிந்தியுங்கள்!

என் தோழர்களை ஏசாதீர்கள்!
“ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை ஏசாதீர்கள். என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது. ( முஸ்லிம் 4967 )

நபியவர்களை பின் பற்றுபவர்கள் நபியவர்கள் சொல்வதற்கு கட்டப்பட வேண்டும். என் தோழர்களை ஏசாதீர்கள் என்றால், நாங்கள் குறை காண்போம், ஏசுவோம் என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள் என்றால் ஹதீஸைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் ! அல்லது இப்படியான ஹதீஸ்களையும் மறுக்குகிறார்களா! நபியவர்களின் பெயரை பயன் படுத்தியே ஸஹாபாக்களை ஏசுகிறார்கள்! இவர்கள் தஃவா செய்வதற்கு தகுதியானவர்களா! மக்களே இப்படியான ஹதீஸை வைத்து சிந்தியுங்கள்!

மேலும் “ சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் (அலீ (ரலி) அவர்களை விமர்சிக்குமாறு) எனக்கு உத்தரவிட்டார்கள். “நீர் அபுத்துராப் (அலீ) அவர்களை ஏச மறுப்பதற்கு என்ன காரணம்?” என்று முஆவியா (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பார்த்துச் சொன்ன மூன்று விஷயங்களை நான் (இன்றும்) நினைத்துப்பார்க்கிறேன். எனவே, அலீ (ரலி) அவர்களை நான் ஒருபோதும் ஏசமாட்டேன். அந்த மூன்றில் ஒன்று என்னிடம் இருப்பதுகூட, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகம் எனக்குக் கிடைப்பதைவிட மிகவும் உவப்பானதாகும். (அந்த மூன்று விஷயங்கள் வருமாறு:)
1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் எனும்) ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்ற போது, (மதீனாவில்) அலீ (ரலி) அவர்களைத் தம் பிரதிநிதியாக விட்டுச்சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! பெண்களையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைத்தூதர்) மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்,) எனக்குப்பின் நபித்துவம் இல்லை” என்று கூறினார்கள்.

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், “நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்” என்று கூறினார்கள். (அந்த மனிதர் நாமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில்) நாங்கள் எங்கள் தலையை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால்) உயர்த்திக்காட்டினோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அலீ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அப்போது அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. அவர்களது கண்ணில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்து (கண்வலியைக் குணப்படுத்திவிட்டு), கொடியை அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்களுக்கு அந்தப் போரில் அல்லாஹ் வெற்றியளித்தான்.

3. “வாருங்கள். எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் அழைப்போம்…” (3:61) எனும் இந்த வசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, “இறைவா! இவர்கள்தான் என் குடும்பத்தார்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 4778 )

மேலும் “ சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் ஹகம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்து அலீ (ரலி) அவர்களை ஏசுமாறு உத்தரவிட்டார். ஆனால், நான் மறுத்து விட்டேன். அவர் என்னிடம், “நீர் (இதற்கு உடன்படாமல்) மறுப்பதாயிருந்தால், “அல்லாஹ் அபுத் துராபை சபிக்கட்டும்! என்று கூறுவீராக” என்று சொன்னார்… ( முஸ்லிம் 4784 )

பிறரை ஏசக் கூடாது என்று ஸஹாபாக்களுக்கு தெரிந்த இந்த செய்திகள் கூட இவர்களுக்கு புரிய வில்லை! இவர்கள் ஸஹாபாக்களுக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார்கள்! அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்!

அன்சாரிகளை மன்னித்து விடுங்கள்!
“ ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். ( முஸ்லிம் 4918 )

மேலும் “அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திருமண விருந்தொன்றுக்குச் சென்று விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த (அன்சாரிப்) பெண்களையும் சிறுவர்களையும் நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று அவர்களுக்கு நேராக நின்று, “இறைவா! (நீயே சாட்சி)” என்று கூறிவிட்டு, “மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். இறைவா! (நீயே சாட்சி) மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று அன்சாரிகளைப் பற்றிக் கூறினார்கள். ( முஸ்லிம் 4920 )

மேலும் “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள். (அன்சாரிகள்) குறைந்துவிடுவார்கள். ஆகவே, அன்சாரிகளில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4922 )

மக்களிலேயே அதி சிறந்தவர்கள் ஸஹாபாக்கள், அதிலும் குறிப்பாக நபியவர்களுக்கு விருப்பமானவர்கள் அன்சாரிகள். அவர்களிடமிருந்து வரும் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் வந்து விட்டாலும் கூட அதையும் மன்னித்து விட்டு விடுங்கள் என்று நபியவர்கள் கூறுகிறார்கள். ஒரு சின்னப் பிள்ளைக்கு சொல்வது போல சொல்லியுள்ள செய்தி அண்ணனுக்கு புரிய வில்லையா! அன்சாரிகளை மிக மோசமாக சித்தரிக்கும் அண்ணனின் நோக்கம் என்ன!

ஷீஆக்கள் ஸஹாபாக்களை மோசமாக எடுத்துக்காட்டினால் அது வழி கேடு என்று சொல்பவர்களே! சற்று சிந்தியுங்கள் ஷீஆக்களுக்கு மட்டும் தான் அந்த பத்வாவா! ஏன் அண்ணன் ஸஹாபாக்களை தரக்குறைவாக பேசிவருகிறார்! அப்படியே அன்சாரிகள் தவறுகள் செய்திருந்தாலும் கூட அதை பொருட்படுத்த வேண்டாம், மன்னித்து விடுங்கள் என்ற ஹதீஸ் தெரியாமலா தஃவா செய்கிறீர்கள்! பொதுவாக மரணித்து முன் சென்றவர்களைப்பற்றி தவறாக பேசக்கூடாது என்ற ஹதீஸ் கூட தெரியாமலா அமைப்பில் இருக்கிறீர்கள்! மக்களே சற்று நிதானமாக சிந்தியுங்கள்! அண்ணன் ஸஹாபாக்களை ஏளனமாக பேசுகிறார்,! அதே பாணியில் சில அவர்களின் தாயிகளும் பேசி வருகிறார்கள்! அண்ணன் தான் தன்னை ஸஹாபாக்களை விட உயர்ந்தவர் என்று காட்டுவதற்காக இப்படி தவறாக பேசுகிறார் என்றால் நீங்களுமா! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! தனிப்பட்ட ஒருவருக்காக நபியவர்களின் ஹதீஸை விளங்காமல் ஸஹாபாக்களை ஏளனப் படுத்துகிறீர்கள்! புண்படுத்துகிறீர்கள்! என்றால் நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை சற்று நிதானமாக சிந்தியுங்கள்!

பொதுவாக இந்த உலகில் வந்த எல்லா வழிக் கெட்ட பிரிவுகளும் ஸஹாபாக்களை குறை கண்டு, அவர்களை குத்திக்காட்டி, அவர்கள் தகுதியில்லாதவர்கள், மோசமானவர்களாக எடுத்துக்காட்டி தான் உயரந்தவன் என்று சில தத்துவங்களை கூறி தனக்கு என ஒரு கூட்டத்தை வளர்த்து வழிக்கெட்டு போனதை வரலாற்றில் காண்கிறோம். அந்த வழிக் கெட்ட தலைவர்கள் இருக்கும் வரை அந்த பிரிவு நின்று பிடிக்கும், அந்த வழிக்கெட்ட தலைவர்கள் மரணித்து விட்டால் அந்த பிரிவுகள் சின்னா பின்னாமாகி சீரழிந்து போவதை வரலாற்றில் கண்டு வருகிறோம்.

இப்படி ஒரு கூட்டம் வந்தார்கள் இப்படி, இப்படி பேசினார்கள் என்று பின் வரும் மக்கள் சபிக்கும் நிலை தான் உருவாகும்!

பின் வரும் குர்ஆன் வசனத்தை கவனியுங்கள்”
“நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் – நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான். ( 9 – 117 )

இந்த வசனத்தின் மூலம் அன்சாரிகளையும், முஹாஜிரீன்களையும் அல்லாஹ் மன்னித்து விட்டதாகவும், அவர்களுடன் மிகவும் இரக்கமாக அல்லாஹ் உள்ளான் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும் போது இந்த வசனம் அண்ணனுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் தெரியவில்லையா! அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டவர்களை அற்பமாக பேசமுடியுமா! அல்லாஹ் அவர்களுடன் இரக்கம் என்று சொல்கிறான். நீங்கள் ஏன் ஸஹாபாக்களை குறையாக பேசி பிறரை சிரிக்க வைக்கிறீர்கள்!

பத்ரு போரில் கலந்து கொண்டவர்கள் மன்னிக்கப்பட்டு விட்டார்கள், ( முஸ்லிம் 4907) மேலும் மரத்தடியில்( பைஅத்துல் ரில்வான் ) பைஅத் செய்த தோழர்கள் மன்னிக்கப்பட்டு விட்டார்கள், ( முஸ்லிம் 4909 ) அல் குர்ஆன் ( 48 -18 ) குறைஷிகள் மன்னிக்கப் பட்டு விட்டார்கள், ( முஸ்லிம் 4948 ) பூமியில் நடமாடும் போதே பல நுாறு ஸஹாபாக்கள் சுவர்க்கவாதிகள் என்று நன்மாராயம் சொல்லப்பட்டு விட்டார்கள். தனிப்பட்ட பல கோத்திரங்கள் இந்த உலகிலேயே நன்மாராயம் சொல்லப்பட்டு விட்டார்கள். இது போதாதா அவர்கள் மீது நல்லெண்ணம் வைப்பதற்கு சற்று சிந்தியுங்கள்!

ஆயிஷா (ரலி ) அவர்கள் மீது அவதுாறு சொன்னவர்களில் ஹஸ்ஸான் பின் ஸாபித் ( ரலி) மற்றும் மிஸ்தஹ் பின் உஸாஸா (ரலி) இவர்களை உம்மு மிஸ்தஹ் தவறாக பேசிய போது கூட அவர்களை தவறாக பேசாதீர்கள் அவர்கள் பத்ரில் கலந்து கொண்டவர்கள் என்று பெருந்தன்மையோடு பாதிக்கப்பட்ட ஆயிஷா ( ரலி ) கூறியதை ( புகாரி 7454, முஸ்லிம் 5349 ) முன்மாதிரியாக எடுக்க கூடாதா! மிஸ்தஹ்விற்கு நான் இனி மேல் சிறிதளவு கூட உதவி செய்ய மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) சொன்ன போது உங்களுக்கு அல்லாஹ்வின் அருள் வேண்டாமா! (24 -22) என்ற வசனத்தின் மூலம் அல்லாஹ் அவரை மன்னிக்கும்படி சொல்கிறானே இது இவர்களுக்கு போதாதா! இது போல பல சம்பவங்கள் அந்த ஸஹாபாக்களை தவறாக பேசக் கூடாது என்பதற்கு போதுமானதாகும்.

தங்களது அமைப்பைப் பற்றியோ, தனி மனிதரைப் பற்றியோ யாராவது தவறாக பேசினால் அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை துாற்றுகிறீர்களே! பேசக்கூடாத ஹஸாபாக்களை தவறாக பேசுவதற்கு உங்களுக்கு எப்படி மனம் வருகிறது!

நபியவர்கள் காலத்திலே ஸஹாபாக்களுக்கு மத்தியில் பிரச்சினையை ஏற்ப்படுத்த சில முனாபிக்குள் முயற்ச்சி செய்தார்கள். அது நபியவர்களால் முறியடிக்கப்பட்டு விட்டது. நபியவர்களின் மரணித்திற்கு பின் முனாபிக்குகளும், சூழ்ச்சிகாரா்களும் செய்த சூழ்ச்சியில் மாட்டி கொண்ட ஸஹாபாக்களை நீங்கள் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள். அந்த சம்பவங்கள் உங்கள் அறிவுக்கு முரண்படவில்லையா ! பல குர்ஆன் வசனங்களுக்கு நீங்கள் குற்றம் சுமத்தும் சம்பவங்கள் முரணாக தெரிய வில்லையா! ஸஹீஹான பல ஹதீஸ்களை லேசாக தட்டிவிடும் நீங்கள் இப்படியான சம்வங்களை மட்டும் துாக்கி பிடிப்பதன் நோக்கம் என்ன! அப்படியே அந்த சம்பவங்களை சொல்ல வந்தாலும் ஏன் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசுகிறீர்கள்! அணுகுமுறையை ஏன் அழகுப் படுத்தக் கூடாது! இவ்வளவு எடுத்துக் காட்டியும் எவர் சொன்னாலு்ம் கேட்க மாட்டோம் அண்ணன் வழி தான் எங்கள் வழி என்றால் மறுமையின் தண்டனையை பயந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *