Featured Posts

படிப்பினை

ஊரில் பிரதான பாதை விஸ்தரிப்பு வேலைகள் துரிதமாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் அதற்குத் தடையாக அமைந்திருந்த வேலிகள், கட்டிடங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருந்தன. இவ்வேளையில், நீண்டகாலமாக பாதையோரமாய் நின்றிருந்த பருத்த மரமொன்றினையும் பாதை விஸ்தரிப்பிற்காக அகற்ற வேண்டியதாயிற்று. எனவே, ஒப்பந்தகாரர்கள் அதை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.

ஆனால், அதனை நட்டு பராமரித்து அதன் பக்கத்திலேயே வசித்து வந்த ஒரு பொதுமகன், அந்த மரம் வெட்டப்படுவதைத் தடுக்க மிகுந்த பிரயத்தனம் எடுத்து நின்றதால், சட்டம் அவரை நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றதாகக் கேள்வியுற்றேன்.

அது மட்டுமல்லாது, அவர் அரச அபிவிருத்தி வேலைக்கு தடையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அபராதத் தொகை விதிக்கப்பட்டதோடு, மரமும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

ஒப்பந்தகாரர்களின் முன்னெடுப்பு மற்றும் அரச தரப்பின் தீர்ப்பு என்பன முற்று முழுதாய் பொதுநலன் கொண்டவை என்பதில் உடன்படுகிறேன். இருந்தாலும், அந்தப் பொதுமகன் சார்பாக மனதில் இலேசான வேதனையும் படர்ந்தது.

நான் தினமும் காரியாலயத்திற்குச் செல்லும்போது அந்த மரத்திற்கும் அவருக்கும் இடையில் இருந்த அன்னியோன்ய உறவை நன்கு அறிவேன். அவரது குரலையே கேட்டு வளர்ந்த மரம் அது. அதன் நிழலை அவருக்கும் ஏனையோருக்கும் வழங்கி அவர்களது வாழ்வியலில் கலந்துவிட்ட மரம். அதன் இழப்பு அவரைப் பாதிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.

“ஒரு அற்பமான மரத்திற்காக இவ்வளவு பணத்தை இழந்து என்ன இலாபம் கண்டீர்?…”

“போயும் போயும் ஒரு மரத்திற்காகவா நீதிமன்றம் போய்வந்தீர்?…”

“பல மரங்கள் அகற்றப்பட்டன… யாரும் கண்டுகொள்ளவில்லை… உனக்கு மட்டும் என்ன அக்கறை…”

என அவரை ஏளனமாகப் பார்த்தவர்கள் இருக்கலாம்.

ஆனால், ஈமானிய உணர்வுதான் அவ்வளவு தூரம்வரை அவரை இழுத்துச் சென்றுள்ளதாக உணர்கிறேன்.

உலக முடிவு நாள் நெருங்கும்போது,
ஒரு மரக்கன்று கையிலிருந்து அதை மண்ணில் நாட்டுவதற்கு ஒருவருக்கு அவகாசம் இருப்பின் அவர் உடனே அதை செய்து கொள்ளட்டும் என்பதாக நபியவர்கள் போதித்தார்கள்

உலக முடிவு என்றால் அதற்கடுத்து பூமியே இருக்காது. மறுமைதான் தொடரும் எனக்கூறி நிற்கும் மார்க்கம், அதே உலக முடிவை எதிர்கொள்ளும்போது, மரம் நடுவது பற்றிப் பேசுகின்றதெனில், இயற்கை மீது மனிதனுக்குள்ள பொறுப்பின் பரப்பினை அறிவுக் கண்களைவிட ஈமானியக் கண்களாலேயே முழுமையாக உணர முடியும்

தன்கையால் வைத்து தான் பார்த்து வளர்ந்த மரம் தற்போது அவரைப் பிரிந்தாலும், மறுமையில் நன்மைக்கு சாட்சியாக வந்து நிற்கும்போது, அதன் உயிர்ப்புக்காக அவர் இங்கே அனுபவித்த துயர்கள் யாவும் அங்கே அர்த்தம் பெற்றிருக்கும், என்ற உணர்வோடும் அதேவேளை, எதிலும் அரச சட்டதிட்டங்களைப் பேணி அதன்படி செயற்படுவது, வீண் பிரச்சினைகளையும் மன உழைச்சல்களையும் தவிர்க்கும். என்ற படிப்பினையும் பெற்றவளாய் அந்தப் பாதையைக் கடக்கின்றேன்.

– பர்சானா றியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *