Featured Posts
Home » இஸ்லாம் » மறுமை » மறுமை நாள் (அத்தியாயம்-8)

மறுமை நாள் (அத்தியாயம்-8)

மஹ்ஷர் வெளியும், அதன் நிகழ்வுகளும்

பிரபஞ்ச அழிவின் பிறகு மனிதன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு வெட்டவெளியில் திரட்டப்பட்டு அந்த விசாரணை நடைபெறும். அவ்வாறு மனிதர்கள் ஒன்று திரட்டப்படும் வெட்டவெளியை ‘மஹ்ஷர்’ என அல்குர்ஆனும் சுன்னாவும் அழைக்கின்றன.

இவ்வாறு மனிதர்கள் மீண்டும் எழுப்பப்பட ஒரு ஸூர் ஊதப்படும் என அல்குர்ஆன் கூறுகிறது. உலக அழிவு அந்த ஸூர் ஊதப்படுதலோடு தான் ஆரம்பமாகும் எனவும் குர்ஆன் கூறுகிறது.

“ஸூரில் ஊதப்படும். அப்போது வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் மடிந்து வீழ்வார்கள். அல்லாஹ் நாடியோரைத் தவிர! பின்னர் இன்னொரு முறை ஸூரில் ஊதப்படும். அப்போது அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.”
(ஸூரா ஜுமர் : 69)

ஸூர் என்ற அரபு மொழிச் சொல்லுக்கு பெரும் ஊதுகுழல் என்பது பொருள். இஸ்ராபீல் (அலை) அவர்களே இவ்வாறு ஊதுவதற்குப் பொறுப்பான மலக்கு எனவும் ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகிறது. அந்த ஸூரின் அமைப்போ, அது ஊதப்படும் ஒழுங்கு குறித்தோ எமக்கு ஆராய முடியாது. அது மறை உலக விஷயங்களில் ஒன்று. உலக அழிவின் போதும், மீண்டும் மனிதர்கள் எழுப்பப்படும் போதும் ஸூர் ஊதப்படும் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகிறது.

இவ்வாறு எழுப்பப்படும் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவது குறித்தும் வெட்டவெளி குறித்தும், அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது.

“அன்று நாம் மலைகளைப் பெயர்த்து விடுவோம். பூமியை நீர் மறைவின்றி தெளிவாகத் தெரியக்கூடியதாகக் காண்பீர். அவர்களை நாம் ஒன்று திரட்டியிருப்போம். அவர்களில் யாரையும் விட்டிருக்க மாட்டோம்.” (ஸூரா கஹ்ப் : 47)

அந்த வெட்டவெளி எத்தகைய மேடு, பள்ளமுமற்று பெரும் சமவெளிப்பூமியாகக் காணப்படும் எனவும் அல்குர்ஆன் கூறுகிறது:

“பூமியை அதில் யாதொரு மேடு பள்ளத்தையும் நீர் காணாத அளவுக்கு அவன் சமதளமாக்கி விடுவான்.” (ஸூரா தாஹா : 106, 107)

இவ்வாறு ஒன்று திரட்டப்படுவோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். அந்த விசாரணையும், அதற்கான கூலி வழங்கப்படலும் எவ்வளவு நுணுக்கமானது என்பதனை அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் படிக்கும் போது ஒரு வித்தியாசமான உண்மையைக் காண்கிறோம். அல்லாஹ் எவ்வளவு தூரம் ஆழ்ந்த நீதி வழங்குவான் என்பதனை அது எங்களுக்குக் காட்டுகிறது. அதாவது, அன்று மனிதர்கள், ஜின்கள், மாத்திரமன்றி பறவைகள், மிருகங்கள் கூட நீதி வழங்குவதற்காக ஒன்று திரட்டப்படும். அவைகளுக்கிடையேயும் நீதி வழங்கப்படும். இந்தக்கருத்தை கீழ்வரும் அல்குர்ஆன் வசனமும், ஹதீஸும் தருகின்றன.

“பூமியில் ஊர்ந்து செல்லும் பிராணியாயினும், தன்னிரு இறக்கைகளாலும் பறந்து செல்லும் பறவையாயினும், அனைத்துமே உங்களைப் போன்ற சமூகங்களே! பதிவேட்டில் நாம் எதனையும் தவறி விட்டு விடவில்லை. பின்னர் தமது இரட்சகனிடத்தில் அவர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்.” (ஸூரா அன்ஆம் : 38)

‘ஒரு கொம்பற்ற ஆட்டை ஒரு கொம்புள்ள ஆடு முட்டிக் குத்தியதற்காகப் பழிவாங்கப்படும் அளவிற்கு அமையும் மறுமை நாளில் உரிமைகளை நிச்சயமாக நாங்கள் அதற்குரியவர்களுக்குச் செலுத்த வேண்டிவரும்.’ (ஆதார நூற்கள் : ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)

அத்தோடு மனிதன் இத்தகைய மிருகங்கள், பறவைகளுக்குச் செய்த அநியாயங்களுக்கு நீதி வழங்கப்படலும், இவை மறுமையில் ஒன்று திரட்டப்பட இன்னொரு காரணமாகலாம். மனிதனின் செயல்களுக்கு சான்று சொல்பவையாகவும் மிருகங்களும், பறவைகளும் அமையலாம். எவ்வாறாயினும் அந்த நாளின் இறைத்தீர்ப்பு மிகுந்த நுணுக்கமாக நீதிமிக்கதாக அமையும்.

மஹ்ஷரின் நிலைமையை கீழ்வரும் இரு ஹதீஸ்களும் மேலும் விளக்குகின்றன :

மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்வதை நான் கேட்டேன்.’சூரியன் மறுமை நாளில் ஒரு மைல் இருக்குமளவுக்கு படைப்பினங்களுக்கு அருகாமையில் கொண்டு வரப்படும். அப்போது மக்கள் தமது செயல்களுக்கு ஏற்ப வியர்வையில் மூழ்கியிருப்பர். சிலரது வியர்வை அவரது கிரண்டைக் காலளவுக்கு வரும். இன்னும் சிலரது வியர்வை அவர்களது முழங்காலளவுக்கு வரும். வேறு சிலரது வியர்வை அவர்களது அரையளவுக்கு வந்திருக்கும். இன்னும் சிலரது வியர்வையோ அவரது வாயளவுக்கு வந்திருக்கும்.’ இங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது கையினால் வாயைச் சுட்டிக் காட்டினார்கள்.
(ஆதார நூஊற்கள் : ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் திர்மிதி)

மனிதர்கள் எவ்வாறான நிலையில் எழுப்பப்பட்டிருப்பார்கள் என்பதனை கீழ்வரும் ஹதீஸ் விளக்குகிறது :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘நீங்கள் வெறுங்காலுடனும், நிர்வாணத்துடனும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் ஒன்று திரட்டப்பட்டிருப்பீர்கள்.’ பின்னர் “நாம் ஆரம்பத்தில் படைத்தது போன்றே மீண்டும் படைக்கிறோம். இது எமது பொறுப்பிலுள்ள வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை நிறைவேற்றுவோம்.” என்ற இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து சொன்னார்கள் : ‘மறுமை நாளில் முதலில் உடை உடுத்தப்படுவது இப்றாஹீம் (அலை) அவர்களாவர். எனது தோழர்களில் சிலர் இடதுபுறமாகப் பிடிக்கப்படுவார்கள்.’

அப்போது நான் எனது அருமைத்தோழர்களே! அருமைத்தோழர்களே! என்பேன். அப்போது அல்லாஹ், நீர் அவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து தொடர்ந்து அவர்கள் தமது பழைய நிராகரிப்பு வாழ்வுக்கே திரும்பி நின்றனர் என்பான். அப்போது நான் அந்த நல்லடியார் சொன்னதாக அல்குர்ஆன் கூறும் கீழ்வரும் வசனத்தைச் சொல்வேன் : ‘நான் அவர்களோடு இருந்தபோது அவர்களை நான் அவதானித்துக் கொண்டு வந்தேன். ஆனால் என்னை நீ மரணிக்கச் செய்தபோது நீயே அவர்களை அவதானிப்பவனாக இருந்தாய். நீயே அனைத்தையும் அவதானிப்பவனாவாய். நீ அவர்களை தண்டித்து வேதனை செய்தால் அவர்கள் உனது அடியார்கள். அவர்களை நீ மன்னித்து விட்டால் நிச்சயமாக நீயே அனைவரையும் மிகைத்த பலமுள்ளவனும், ஞானமுள்ளவனுமாவாய்.’ (ஆதார நூற்கள் : ஸஹீஹ் புகாரி, முஸ்லிம்)

மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *