Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » திருமண குத்பாவும் பலவீனமான ஹதீஸும் [ஹதீஸ் ஆய்வு]

திருமண குத்பாவும் பலவீனமான ஹதீஸும் [ஹதீஸ் ஆய்வு]

இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மார்க்கத்திலும் திருமணத்தைப் பற்றி ஆர்வமூட்டிக் கூறப்படவில்லை என்பது எங்களில் யாவரும் அறிந்த விடயமாகும்.

அந்த அடிப்படையில் பாமரர்கள் தொட்டு உலமாக்கள் வரை திருமணத்தைப் பற்றி ஆர்வமூட்டுபவர்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஹதீஸ்களில் ஒன்றாக

“யார் திருமணம் செய்கின்றாரோ நிச்சயமாக அவர் ஈமானின் பாதியை பூரணப்படுத்தியராவார். எனவே அவர் (ஈமானின்) எஞ்சிய பாதியில் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.” என்ற ஹதீஸ் காணப்படுகின்றது.

இந்த ஹதீஸை பொருத்தமட்டில் அது பலவீனமான ஹதீஸாகும்.
ஏனெனில் இதில் வரக்கூடிய அறிவிப்பாளர்களில் குறைபாடு காணப்படுகின்றது.

மேற்கூறப்பட்ட ஹதீஸ் இமாம் ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக் , இமாம் அபூ யஹ்லா அவர்களின் முஸ்னத், இமாம் பைஹகீ அவர்களின் ஷுஅபுல் ஈமான் , இமாம் தபரானீ அவர்களின் முஃஜமுல் அவ்ஸத் எனும் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

—–

இமாம் ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக் கிரந்தத்தில் வரக்கூடிய மேற்கூறப்பட்ட ஹதீஸ்; முஹம்மத் பின் யஃகூப் – அஹ்மத் பின் ஈஸா – அம்ர் பின் அபீ ஸலமா – சுஹைர் பின் முஹம்மத் – அப்துர் ரஹ்மான் பின் ஸைத் – அனஸ் பின் மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற …….
அஹ்மத் பின் ஈஸா : இவர் உறுதியற்றவர் என்று இமாம் இப்னு ஹஜர், மற்றும் இவரை பொய்யர் என்று யஹ்யா இப்னு மயீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சத்தியம் செய்யக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

அம்ர் பின் அபீஸலமா : இவர் உண்மையாளர் என்றாலும் இவர் மாயை (வஹ்ம்) உடையவர் என இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

சுஹைர் பின் முஹம்மத் : இவர் நைஸாபூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஷாம் பகுதியில் குடிகொண்ட பிறகு இவரைத் தொட்டும் ஷாம் வாசிகள்; நிராகரிக்கக்கூடிய ஹதீஸ்களை அறிவித்தார்கள். இந்த ஹதீஸில் இவரைத் தொட்டும் அம்ர் பின் அபீ ஸலமா என்பவர் அறிவிக்கின்றார். இவர் ஷாம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

எனவே இமாம் ஹாகிம் அவர்கள் தனது முஸ்தத்ரக் கிரந்தத்தில் பதிந்துள்ள இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

—–

இமாம் அபூ யஹ்லா அவர்களின் முஸ்னத் கிரந்தத்தில் வரக்கூடிய மேற்கூறப்பட்ட ஹதீஸ் ;
முஹம்மத் பின் இஸ்மாஈல் அல்பஹ்தரீ – யஸீத் பின் ஹாரூன் – அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அல் உம்மிய்யு – ஸைத் பின் அல்ஹவாரிய்யு – அனஸ் பின் மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற….

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அல்உம்மிய்யு : இவர் ஹதீஸில் விடுபடக்கூடியவர் என இமாம் இப்னு ஹஜ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

ஸைத் பின் அல்ஹவாரிய்யு : பலவீனமானவர் என இமாம் இப்னு ஹஜ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

எனவே இமாம் அபூ யஹ்லா அவர்கள் தனது முஸ்னத் கிரந்தத்தில் பதிந்துள்ள இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

—–

இமாம் தபரானீ அவர்களின் முஃஜமுல் அவ்ஸத் கிரந்தத்தில் வரக்கூடிய மேற்கூறப்பட்ட ஹதீஸ் ; முஹம்மத் பின் மூஸா – முஹம்மத் பின் ஸஹ்ல் – இஸ்மத் பின் அல்முதவக்கில் – ஸாபிர் பின் சுலைமான் – இஸ்ராஈல் பின் துஸனுஸ் – ஜாபிர் பின் யஸீத் – யஸீத் பின் அபான் – அனஸ் பின் மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற…..

முஹம்மத் பின் மூஸா : இவர் அறியப்படாத அறிஞர், இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என இமாம் அத்தகபீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

முஹம்மத் பின் ஸஹ்ல் : இவர் மஜுஹூலுல் ஹால் அதாவது இவரைத் தொட்டும் இரண்டு நபர் அதற்கு மேற்பட்டவர்கள் அறிவித்திருந்தாலும் , அவரை எவரும் உறுதிப்படுத்தவில்லை.

இஸ்மத் பின் அல்முதவக்கில்: இவர் அதிக மாயையும் , குறைவான உறுதித்தன்மையும் உடையவர் என இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

ஸாபிர் பின் சுலைமான் : இவர் உண்மையானவர் என்றாலும் அதிகமான மாயையை உடையவர் என இமாம் இப்னு ஹஜ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

ஜாபிர் பின் யஸீத் : இவர் பலவீனமானவர் இன்னும் இவர் ராபிழியாவார் (அதாவது அபஜுபக்கர் , உமர் றழியல்லாஹு அன்ஹும் அவர்களை விடவும் அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களை முற்படுத்துதல்.) என இமாம் இப்னு ஹஜ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்

யஸீத் பின் அபான் : இவர் பலவீனமானவர் மேலும் (ஒரு zஸாஹித்) உலக பற்றற்றவர் என இமாம் இப்னு ஹஜ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

எனவே இமாம் தபரானீ அவர்கள் தனது முஃஜமுல் அவ்ஸத் கிரந்தத்தில் பதிந்துள்ள இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.

—–

இமாம் பைஹகீ அவர்களின் ஷுஅபுல் ஈமான் கிரந்தத்தில் வரக்கூடிய மேற்கூறப்பட்ட ஹதீஸ் – ஹாகிம் – முஹம்மத் பின் யஃகூப் – யஹ்யா பின் ஜஹ்பர் – யஃகூப் பின் இஸ்ஹாக் – அல்ஹலீல் பின் முர்ராஹ் – அனஸ் பின் மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற……

யஹ்யா பின் ஜஹ்பர்: இவர் குறைவாக உண்மையானவர் என அபூ ஹாதம் அர்ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

யஃகூப் பின் இஸ்ஹாக்: இவர் உண்மையானவர் என இமாம் இப்னு ஹஜ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

அல்ஹலீல் பின் முர்ராஹ்: இவர் பலவீனமானவர் என இமாம் இப்னு ஹஜ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

யஸீத் பின் அபான்: இவர் பலவீனமானவர் மேலும் (ஒரு zஸாஹித்) உலக பற்றற்றவர் என இமாம் இப்னு ஹஜ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

எனவே இமாம் பைஹகீ அவர்கள் தனது ஷுஅபுல் ஈமான் கிரந்தத்தில் பதிந்துள்ள இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.

இந்த ஹதீஸ் சம்பந்தமாக வரக்கூடிய அறிவிப்பாளர்களைப் பற்றி ஆய்வு செய்யும்போது அனைத்து ஹதீஸ்களிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் வருவதால் இந்த ஹதீஸ் பலவீதமானதாகும்.

எனவே, நாம் மக்கள் மத்தியில் பலவீனமான ஹதீஸ்களை கூறுவதை விட்டுவிட்டு ஆதாரபூர்வமான எத்தனையோ ஹதீஸ்கள் இருக்கின்றன, அவைகளை எடுத்துக்கூற வேண்டும். [[உதாரணமாக : நபியவர்கள் கூறினார்கள் : ‘இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று கூறினார்கள். (புஹாரி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள். (புஹாரி)]]

இறுதியாக ஒரு கேள்வி:
இலட்சக் கணக்காக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில், மார்க்கத்தை எடுத்துக்கூறுவதற்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு ஏன் பஞ்சம் நிலவுகின்றன????

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.

(குறிப்பு : இந்த ஹதீஸ் சம்பந்தமாக வரக்கூடிய அறிவிப்பாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சில கிரந்தங்கள், அறிவிப்பாளர்கள் பற்றிய இமாம்களின் கருத்துக்கள் போன்றவை சம்பந்தமான அட்டவணையை படத்தில் காணலாம்.)

(04/02/2017)
தொகுப்பு :
றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *