Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » நவயுகத்தின் அரைகூவலும் இஸ்லாமிய இளைஞர்களும்

நவயுகத்தின் அரைகூவலும் இஸ்லாமிய இளைஞர்களும்

மனித வாழ்க்கையில் இளமைப்பருவமே (Child Hood) முக்கியமான காலகட்டமாகும். இப்பருவம் ஒரு கத்திமுனையைப் போன்றது. அதனை ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்தலாம். இதே போன்றே இப்பருவமும் ஆக்கத்திற்கோ அல்லது அழிவிற்கோ பயன்படுத்தமுடியுமான பருவமாகும். இளமைப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும், முழு வளர்ச்சிப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் கொண்ட பருவமாகும். வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்திறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தை பயன்படுத்திக் கொள்ளாதவன் வளமான வாழ்விற்கு உரித்துடையவனாவது சாத்தியமானதன்று. இதனாலேயே முதுமை வரும் முன்னர் இளமையை பயன்படுத்திக்கொள்ளுமாறு நபிமொழி ஒன்று கூறுகின்றது.

‘உன்னிடம் ஐந்து விடயங்கள் வருவதற்கு முன் ஐந்து விடயங்களை பயன்படுத்திக்கொள்.
01. மரணம் வருமுன் வாழ்க்கையையும்
02. நோய் வருமுன் ஆரோக்கியத்தையும்
03. வேலைப்பளு வருமுன் ஓய்வு நேரத்தையும்
04. முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்
05. வறுமை வருமுன் செல்வ நிலையையும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயி)

முன்மாதிரியான இளைஞனுக்கு உதாரணமாக அல்-குர்ஆன் நபி யூசுப் (அலை) அவர்களைக் குறிப்பிடுகின்றது. அவரின் ஆளுமைப் பண்புகளை அவர் பெற்றிருந்த நிர்வாக திறன்களைப் பற்றி விபரிக்கின்றது. அடையாளப்புருஷர்களாக கொள்ளத்தக்க ஓர் இளைஞர் குழுவைப்பற்றி அல்-குர்ஆனில் கஃப் அத்தியாயம் பேசுகிறது.

‘நிச்சயமாக அவர்கள் சில இளைஞர்கள் அவர்கள் தங்கள் இரட்சகனை விசுவாசித்தார்கள். மேலும் நேர்வழியை நாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். மேலும் (அக்கால அரசன் முன்னிலையில்) அவர்கள் எழுந்துநின்று வானங்களுக்கும் பூமிக்கும் இரட்சகன் தான் எங்கள் இரட்சகன் அவனையன்றி வணக்கத்துக்குறிய வேறு நாயனை நாம் அழைக்கமாட்டோம். (அவ்வாறு அழைத்தால்) அப்போது உண்மையில் நாம் வரம்புமீறிய வார்த்தையைக் கூறிவிட்டோம். என்று அவர்கள் உறுதியாக கூறிய போது அவர்களுடைய உள்ளங்களை (நேரான வழியில்) நாம் உறுதிப்படுத்திவிட்டோம். (18:13,14)

ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் இளைஞர் பரம்பரையை சரியாக பயிற்றுவித்து முறையாக நெறிப்படுத்தி வழிப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. அத்தகையதொரு சமூகமே எழுச்சி பெற முடியும் என்பதற்கு வரலாறு சாட்சி பகர்கின்றது. நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை எடுத்து நோக்கினால் இஸ்லாத்தின் வெற்றிக்கு துணை நின்றவர்களாக இளைஞர்களே காணப்பட்டனர். ‘சமூகப் பெரியார்கள் அனைவரும் என்னைக் கைவிட்டபோது இளைஞர்களே எனக்கு பக்க பலமாக இருந்தனர்.’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று இதற்கு சான்றாகும்.

இஸ்லாத்தின் ஆரம்பகால வெற்றிகளுக்கு இளம் சஹாபாக்கள் அடித்தளமாக இருந்ததைப் போல அதைத் தொடர்ந்து வந்த காலங்களிலும் முஹம்மத் அல் பாதிஹ், தாரிக் பின் ஸியாத், முஹம்மத் காஸிம் போன்ற இளைஞர்களே இஸ்லாத்தின் வெற்றிக்கான பெரும் கோட்டைகளாகத் திகழ்ந்தனர்.

உலகில் வாழும் மனித சமூகம் பல்வேறு வளங்களைப் பெற்றிருக்கின்றன. இயற்கை வளம், எண்ணெய் வளம், கனிவளம், நீர் வளம் இவ்வாறு பல்வேறு வளங்களை ஒரு நாடு, ஒரு சமூகம் பெற்றிருக்கின்றது. இந்த வளங்கள் அனைத்தையும் விட அது பெற்றிருக்கின்ற மனித வளம் (Human Resource) மகத்தானது. அந்தவகையில் ஒரு சமூகம் பெற்றிருக்கின்ற சிறந்த வளமாக இளைஞர் சமூகம் உள்ளது.

இஸ்லாமிய சமூகத்தைப் பொருத்தமட்டில் இன்றைய நிலையில் இளைஞர்களின் சக்தியை சரிவரப் பயன்படுத்த தவறியிருக்கின்றது. அவர்களின் வளத்தை ஆக்க சக்தியாக அதிகளவில் பயன்படுத்த முனையவில்லை. அதனால் அவர்கள் போதைப் பொருளுக்கும் (Drugs) புகைப் பழக்கத்திற்கும் (Smoking) நிரந்தர அடிமையாகி அழிவு சக்தியாக செயற்பட முனைந்துள்ளார்கள்.

இன்று குக்கிராமம் முதல் பெரும் நகரம் வரை உலகளாவியரீதியில் பேரலையாக ஆர்த்தெலுந்து வரும் இளைஞர்களின் முறைதவறிய, உணர்ச்சிரீதியிலான போராட்டங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்புச் சம்பவங்கள் என்பன இன்றைய இளைஞர்களைப் பண்படுத்த தவறியமையை பட்டவர்த்தனமாக பிரதிபலிக்கின்றன. இளைஞர்களை கணக்கில் கொள்ளாது விட்டதனால் ‘மாபியா கும்பல்கள்’ அவர்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திவருகின்றன. இஸ்லாமிய சமூகத்தின் ஆக்கசக்தியாக திகழவேண்டிய இளைஞர்கள் அதன் அழிவு சக்தியாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

எமது சமூகத்திலுள்ள அதிகமான இளைஞர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி தெளிவில்லை. அதனால் அவர்கள் மிக இலகுவாக ஆன்மிக வறுமைக்குட்பட்டு மோசமான நடத்தைக்கு ஆளாகிவிடுகின்றனர். கணிசமான ஒரு தொகையினருக்கு தொழுகை, நோன்பு போன்ற கடமைகள் பற்றிய மேலோட்டமான அறிவு மாத்திரமே இருக்கிறது. இஸ்லாத்தில் ஆழமான நம்பிக்கையும், அறிவும் உள்ளவர்கள் எம்மில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாவது உள்ளனரா? என்பது கேள்விக்குறியே!

நாங்கள் வாழ்கின்ற இக்காலம் மதச்சார்பின்மை ( secularism ) மற்றும் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஜாஹிலிய்யத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. நவ யுகம் என்ற பெயரில் எங்கள் மீது தொடுக்கிவிடப்படுகின்ற அநாகரிகங்கள் எமது தனித்துவத்தை தகர்த்து எரியக்கூடிய அபாயகரமானவை. இன்று தகவல் தொழில் நுட்பத்தின் (information technology) அபரிதமான வளர்ச்சி காரணமாக நாம் அதன் நன்மைகளை விட தீமைகளுக்கு ஆளாகின்ற ஒரு சூழலிலே வாழ்கின்றோம்.

நவீன (அ)நாகரிகம் ஏற்படுத்தி தந்திருக்கும் ஆடம்பரச் சாதனங்களின் மூலமாகவே பல அநாச்சசாரங்களும், அசிங்கங்களும் அரங்கேறி வருகின்றன. இன்றைய சமூகத்தின் மத்தியில் புரையோடிப்போயுள்ள சினிமாப் பைத்தியம் எமது இஸ்லாமிய இளைஞர்களை கடுமையாக பாதித்துள்ளது. சமூகத்தில் கோலோச்சியுள்ள அநீதி, அக்கிரமம், இலஞ்சம் (Bribe) ஊழல்(corruption) சீதனம் (Dowry) போன்ற சமூக வன்கொடுமைகளுக்கெதிராக போராட வேண்டிய எமது இஸ்லாமிய இளைஞர்கள் சினிமா கொட்டகைகளின் வாயிலில் அதிகாலையிலேயே ‘கியூவில்’ சினிமா டிக்கெட் பெறுவதற்காக நின்று நேரத்தை வீணாக்குகின்றனரே…! இந்நிலையைப் பார்த்து இரத்தக் கண்ணீர்தான் வடிக்கவேண்டும்.

இன்று சினிமாவில் வருகிற காட்சிகளிலும், வசனங்களிலும் இருக்கின்ற ஆபாசம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சினிமாவில் வருகின்ற காட்சியோ, வசனமோ ஒளிபரப்பு திரையோடு முடிந்துவிடுகிறது. ஆனால் பாடல்கள் வீட்டுக்கு வந்த பிறகு வானொலிப் பெட்டிகளிலும் வாகனங்களில் பயணிக்கும் போது தொலைபேசிகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஒளி-ஒலி வடிவில் கேட்கும் பார்க்கும் விஷயமாக மாறிவிட்டது. Head Sets களோடு தெருக்களில் உலாவும் இளைஞர்கள் இதற்கு சாட்சியாகவும் உள்ளனர்.

இளைஞர்களின் ஆளுமையை வளர்த்து அவர்களின் பண்புகளைப் பக்குவமடையச் செய்வதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இன்று பாடசாலைகள் முதல் பல்கலைக்ழகங்கள் வரை வழங்கப்படும் நவீன கல்வி முறை வெறும் தகவல்களை மாத்திரம் வழங்கி அவர்களை வேலைச் சந்தைக்கு (Job Market) மாத்திரம் தயாரபடுத்துகின்றது. உண்மையில் கல்வி

ஒரு இளைஞனை யதார்த்தபூர்வமான வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும். கல்வியின் நோக்கம் வேலை வாய்ப்பு மட்டுமல்ல வேலைவாய்ப்பு என்பது ஓர் அம்சமாக இருக்கலாம். ஆனால் நவீன கல்விக்கொள்கை இளைஞர்களை வேலை வாய்ப்பு ஒன்றே என்ற இலக்கை நோக்கி பயணிக்கவைத்துவிட்டது.

நமது நாட்டின் கல்வித்திட்டங்கள் அரச பதவிகளுக்கும் பரீட்சைகளுக்குமென தயாரிக்கப்பட்டது. கல்வி நிலையங்களும் வெறுமனே உத்தியோகத்தர்களை உற்பத்திசெய்யும் ஆலைகளாக இயங்கி வருகின்றன. கல்வி கற்கும் மாணவர்களிடம் ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் நாம் காணமுடியாதுள்ளது. இது இஸ்லாத்தை மறந்த கல்வித்திட்டத்தினால் வந்த வினையென்றால் அது மிகையாகாது.

முஸ்லிம் நாடுகள் சமூகங்கள் மீது தொடுக்கப்பட்ட அந்நிய படையெடுப்புகளை முஸ்லிம் இளைஞர்களும் அறிஞர்களும் மிக துணிச்சலுடன் எதிர்கொண்டு முறியடித்தமையைக் கண்ட காலணித்துவவாதிகள் சிந்தனாரீதியிலான யுத்தத்தை (Intellectual invasion) மேற்கொண்டு எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வெற்றிபெற்றுள்ளனர். இஸ்லாத்தின் எதிரிகள் குறிப்பிட்ட சில படித்தவர்க்கத்திற்கு புலமைப்பரிசில்களை வழங்கி தமது பல்கலைக்கழகங்களில் வைத்து மிக இலகுவாக மூளைச் சலவை செய்து அவர்களை அனுப்பிவைக்கின்றனர். படித்த சமூகத்தின் நிகழ்கால இஸ்லாமிய விரோத நிலையை கூர்ந்து அவதானித்தால் இதை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

எனவே இன்றைய சமூக புனர்நிர்மாண சீர்திருத்த பணியிலும், பிரசாரப் பணியிலும் இளைஞர் விவகாரம் முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெற வேண்டியது அவசியமாகும். அதிலும் இளைஞர்களின் தனிப்பட்ட பண்பாட்டு வாழ்வை ஒழுங்குபடுத்துவது பிரதான இடத்தைப் பெறல் வேண்டும்.

இன்றைய இளஞர்களின் இருப்பை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சினை ஒழுக்க சீர்கேடுகளே என்பதை அறியாதோர் இருக்க முடியாது. ஆயினும் நடைமுறையில் முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்களின் பிரச்சினைகள் உரிய இ;டத்தை பெறாமை கவலைக்குறியதாகும்.

உலமாக்கள், தாயிகள் உட்பட இஸ்லாமிய அமைப்புகள் தமது நிகழ்ச்சி நிரல்களில் இளைஞர் உருவாக்கத்திற்கு இடமளிப்பது காலத்தின் இன்றியமையாத தேவையாகும். பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை இந்தப்பணியை முன்னெடுப்பது வலியுறுத்தத்தக்கது. அண்மைக்காலமாக இஸ்லாமிய அமைப்புகள் இவ்விடயத்தில் கூடிய கரிசனை காட்டுவது ஆரோக்கியமானதாகும்.

One comment

  1. Mohamed Shakeel

    மாஷா அல்லாஹ், அருமையான பதிவு, மேலும் சில விஷயங்களை இங்கு நான் உங்களுக்கு சுட்டி கட்ட கடமை பட்டுள்ளேன், இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் நவீன காலத்தின் தாக்கத்தால் நான்கு வகையாக வகைப்படுத்தலாம். 1)முதல் பிரிவு இவர்கள் நீங்கள் மேலே குறிப்பிட்டது போல் போதை
    பழக்கங்களுக்கு ஆளாக்க பட்டு இருக்கிறார்கள், 2) இரண்டாம் வகையினர் செல்போன் போன்ற வலைத்தளங்களில் காணப்படும் porn site – சேனல்களில் கட்டுண்டு வீணாகின்றனர். 3) மூன்றாம் வகையினர் படித்து முடித்துவிட்டு எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் பொழுதுபோக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கட்டுக் கதைகளை பேசிக்கொண்டும் நண்பர்கள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள், 4) நான்காம் ஆகையினர் எப்படின்னு சொன்னா இவங்க வந்து கல்வி இருக்கிறது மார்க்க கல்வியும் இருக்கிறது சிந்தனைகளும் இருக்கின்றது சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தீவிரவாதிகள் போன்று ஒரு முத்திரை குத்தப்பட்டு சிறைச்சாலைகளில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *