Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » நாவினால்…!

நாவினால்…!

நாவு என்பது மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான உருப்பாக இருக்கிறது. நாவைக் கொண்டே மனிதனால் தெளிவுடன் பேச முடிகிறது. ஒருவனின் நாவை வைத்துத்தான் அவனை நல்லவனா கெட்டவனா என்று உலகம் தீர்மானிக்கின்றது.

நாவு என்பது இறைவனின் படைப்பில் ஆச்சரியமான ஒன்றாகும்! மனித உடம்பில் மிகச் சக்திவாய்ந்த தசை நாவுதான். அத்தனை சக்தி வாய்ந்த உறுதியான தசையாக நாவு இருந்தாலும், நாம் எளிதில் அதைக் கையாளும்படி இறைவன் படைத்துள்ளான்.

மனித நாவில் சுமார் மூவாயிரம் சுவையை உணர்த்தும் அணுக்கள் உள்ளதாக மருத்துவம் கூறுகின்றது. எத்தனையோ மிருகங்களின் நாவில் சுவையை உணரும் தன்மை கிடையாது.

மேலும் ஒவ்வொருமனிதனுக்கும் தனிப்பட்ட கை விரல் ரேகை அச்சு உள்ளதைப்போன்று, ஒவ்வொரு நாவுக்கும் தனிப்பட்ட அச்சு ரேகை உண்டு. மனிதனைத் தொற்றியுள்ள நோய்க் கிருமியின் தன்மைகளை நாவை பார்த்துத்தான் மருத்துவர் அறிந்து கொள்வார்.

நாவில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அது சீக்கிரமாகவே குணமாகுவதைக் கவனித்திருப்போம். மனித உடம்பில் அதி சீக்கிரமாகக் குணமாகும் தன்மை நாவிற்கே உள்ளது.

இத்தனை சிறப்புக்களை கொண்ட நாவு மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாக இருப்பதைப்போன்று மனிதன் மறுமையில் சுவனத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்வதற்கு நாவுக்கு முக்கிய பங்கு உண்டு!

சராசரியாக நாவு எவ்வாரெல்லாம் பயன்படுத்தப்படுகின்றது:

பேசக்கூடாத, தகாத வார்த்தைகளை மனிதன் பேசுவதற்கு நாவு பயன்படுத்தப்படுகின்றது.

அடுத்தவர்களைப்பற்றி புறம் பேசுவதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

உண்மையை மறுத்துப் பொய் பேசுவதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்வதற்கும் இந்த நாவு பயன்படுத்தப்படுகின்றது.

பிறரைப்பற்றிக் குறை கூறுவதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

கோள் சொல்லி தீ மூட்டுவதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

ஒற்றுமையைச் சீர்குலைத்துப் பிரிவினை ஏற்படுத்தவும் இந்த நாவு பயன்படுத்தப்படுகின்றது.

அசத்தியத்திற்கு அழைப்புவிடுத்து ஆள் சேர்க்கவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

சொல்லாதவற்றைச் சொன்னதாகச் சொல்வதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

இல்லாதவற்றை இருப்பதாகக் காட்டுவதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

பொய்ச் சாட்சி சொல்வதற்கும் இந்த நாவுதான் பயன்படுத்தப்படுகின்றது.

ஏமாற்றி, மோசடி செய்வதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

பிறர்மீது அநியாயமாகப் பழி சுமத்தவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

அநியாயமாகத் தீர்ப்பு வழங்கவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

இவ்வாறாக நாவின் தீய பயன்பாடுகள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

நாவின் நற்பயன்:

படைத்த இறைவனைத் துதிப்பதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

குர்ஆனை ஓதி நன்மையைப் பெறவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

உண்மை பேசுவதற்கு நாவு பயன்படுத்தப்படுகின்றது.

அழகிய வார்த்தைகள் சொல்வதற்கு நாவு பயன்படுத்தப்படுகின்றது.

தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

நல்லவற்றைக் கற்றுக்கொடுப்பதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

அன்பை வெளிப்படுத்தவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

சத்தியத்திற்குச் சான்று பகரவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

ஒற்றுமை ஏற்படுத்தவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

உடைந்த உள்ளங்களை ஒன்றிணைப்பதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

துன்பத்திற்கு ஆளானோருக்கு ஆறுதல் அளிப்பதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

சமாதானம் செய்துவைக்கவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

நியாயமாகத் தீர்ப்பு வழங்கவும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதற்கும் நாவு பயன்படுத்தப்படுகின்றது.

இவ்வாறாக நன்மைக்கும் தீமைக்கும் நாவை மனிதன் பயன்படுத்துகின்றான்.

நாவைக்குறித்து அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்ம ஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்குச் சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்).

“அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்” என்றார்கள். (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விஷயம் எது” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, “இதைத்தான் (பயப்படுகிறேன்)” எனக் கூறினர். (அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: திர்மிதி)

“அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”. (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

ஒரு முஸ்லிமுக்குச் சுவர்க்கமும் – நரகமும் அவன் நாவை பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே இருக்கிறது. நாவைக் கொண்டு பேசுபவனைவிட நாவு இருந்தும் பேச இயலாதவன் இதில் சிறந்தவனாகிவிடுகின்றான்.

—————-
S.A.Sulthan
19/05/2019
Jeddah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *