Featured Posts
Home » இஸ்லாம் » குடும்பம் » நம்ம குடும்பம் நல்ல குடும்பம்

நம்ம குடும்பம் நல்ல குடும்பம்

Articleநீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் எனும் ஒப்பந்தத்தின் மூலம் கணவன் மனைவியாக இல்வாழ்வை துவங்குகின்றனர். அனைவருமே மகிழ்ச்சியாக, நிம்மதியாக குதூகலமாகவே குடும்பம் நடத்த ஆசைபடுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் நல்ல குடும்பமாக மிளிர்ந்திட கணவன் மனைவியின் ஒத்துழைப்பு மிக மிக அத்தியாவசியம்.

ஒரு பெண் திருமணமானவுடன் தன் பெற்றோர் உற்றாரை விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கிறாள். அவளது எல்லா அபிலாசைகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது ஒரு நல்ல கணவனின் கடமை.

உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவிமார்களிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவிமார்களிடத்தில் நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: திர்மிதி

ஆண்களே! நீங்கள் உங்கள் மனைவிக்கு நல்ல கணவனாக விரும்பினால் இறையச்சம் உடையோராகி விடுங்கள். இந்த இறையச்சமே உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உள்ள உறவை வளப்படுத்தி மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அவரவர் பொருளாதாரத்தின் அடிப்படையில் செய்து கொடுத்து மனைவியரை உடலாலோ மனதாலோ நோவினை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் குடும்ப பராமரிப்பு, மார்க்க வழிகாட்டுதல், ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் முக்கியமாக பொருளீட்டுதல் இவையாவும் இன்றியமையாததாகும்.

கடினமான வீட்டு வேலைகளில் மட்டுமல்லாமல், பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு தயார் செய்வதிலும், அவர்களது கல்வியறிவு, நல்லொழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் பங்கேற்க வேண்டும். மனைவி ஏதாவது தவறு செய்தால் தனிமையிலன்றி பிறர் முன்னிலையில் கண்டிக்கக் கூடாது.

மனைவியை பொறுத்தமட்டில் கணவனது தேவைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த முயற்சியுடன் ஆர்வமாக செயல்படவேண்டும். வேலை முடிந்து திரும்பி வரும் கணவனை சுத்தமான உடை, அழகிய தோற்றம், மற்றும் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி மார்க்க விஷயங்கள், அதாவது தொழுகையை பள்ளிவாசலில் சென்றுதான் தொழவேண்டும், வீட்டில் தொழ அனுமதிக்க கூடாது. மார்க்கத்துக்கு முரணான செயல்களை ஆதரிக்கக் கூடாது. புகை, மது போன்ற கேடுதரும் பழக்க வழக்கங்களை அடியோடு நிறுத்தி விட முயற்சிக்க வேண்டும். கணவர் ஏதும் மன உளச்சலில் இருக்கும் போது ஆறுதலான வார்த்தைகளை கூறி உற்சாக மூட்ட வேண்டும். கணவனின் குடும்பத்தாரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?’ அண்ணலார்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்’.
ஆதாரம்: நஸயீ

பொதுவாக கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒருவரையொருவர் பிறரிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது. எந்த ஒரு விடயமாக இருந்தாலும் கணவன் மனைவி இருவருமே கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டும். கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ உடல் நலம் இல்லாத போது மிகுந்த கனிவுடன் உடனிருந்து கவனிக்க வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். வாய் வார்த்தைகள் சற்று தடிப்பதாக தெரிந்தவுடன் உஷாராகி சகஜ நிலைக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும்.

ஊடல் இல்லாத வாழ்க்கை ஏது! ஊடலுக்கு பின்பு தான் ஒருவரையொருவர் புரிந்துணர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டு உறவில் நெருக்கம் இன்னும் அதிகமாகும். தவறு செய்தது யார் என்கிற ஆராச்சியில் ஈடுபடாமல் தாமாகவே வலிய சென்று பேசி சமாதனமாகி விடவேண்டும். இருவருமே சமவுரிமை உள்ளவர்கள் என்கிற மனோபாவத்தை வளர்த்துக் கொண்டால் குடும்பத்தில் சந்தோஷம் தழைத்தோங்கி விடும்.

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் (அல்குர்ஆன் 2:187)

தம்பதிகள் சந்தோஷமாக வாழ்வது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல. அவ்விருவரின் குடும்பத்தார் பிள்ளைகள் அனைவருக்குமே சந்தோஷத்தை கொடுக்கும். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி சகிப்புத் தன்மையுடனும், பொறுமையுடனும் விட்டுக் கொடுத்து வாழ்வதை பார்க்கக் கூடிய பிள்ளைகள் இத்தகைய நற்பண்புகளை தங்கள் வாழ்விலும் கடைபிடித்து நன்மை அடைவார்கள். அமைதியான சூழ்நிலை நிலவக் கூடிய இல்லறத்தில் வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கி நம்ம குடும்பம் எப்போதுமே நல்ல குடும்பமாக பரிணமிக்கும்.

One comment

  1. YAHYA MOULAVI RAZEEDI

    JAZAKALLAHU HAIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *