Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » உணவளிப்பவன் (பகுதி: 02)

உணவளிப்பவன் (பகுதி: 02)

மனிதனின் முதல் தேவை உணவுதான் என்பதையும், அந்த உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வழியை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கின்றான் என்பதையும் சென்ற தொடரில் பார்த்தோம்.

எந்த உயிரினமும் தம் உணவைத் தாமே சுமந்துகொண்டு திரிவதில்லை! மாறாக மனிதர்களுக்கும் இன்னும் பிற உயிரினங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கின்றான் என்பதாக அல்குர்ஆன்:-29:60 வசனம் கூறுகின்றது.

இதன் விளக்கத்தை அறிவதற்கு முன் இதற்கு முன்னுள்ள நான்கு வசனங்களின் விளக்கத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். அதாவது அல்குர்ஆன் 29:56,57,58,59,60. ஆகிய ஐந்து வசனங்களுக்கும் பின்னணியில் முக்கியமான சில விசயங்களை இமாம் இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

يٰعِبَادِىَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ اَرْضِىْ وَاسِعَةٌ فَاِيَّاىَ فَاعْبُدُوْنِ

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ

وَالَّذِيْنَ اٰمَنُوا وَعَمِلُوْا الصّٰلِحٰتِ لَـنُبَـوِّئَنَّهُمْ مِّنَ الْجَـنَّةِ غُرَفًا تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ‌ؕ نِعْمَ اَجْرُ الْعٰمِلِيْ

الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

இறைநம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக எனது பூமி விசாலமானதாகும். (அதில் எங்குச் சென்றாலும்) என்னையே நீங்கள் வழிபடுங்கள்.

ஒவ்வொரு உயிரும் இறப்பை சுவைக்கக்கூடியதே. பின்னர் நீங்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவீர்கள்.

யார் இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தார்களோ அவர்களை சொர்கத்தின் மாளிகைகளில் நிச்சயமாக நாம் குடியமர்த்துவோம். அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் நற்செயல் புரிந்தோரின் பிரதிபலன் நல்லதாகும்.

அவர்கள் பொறுமையை மேற்கொண்டு, தம் இறைவனையே முழுமையாக சார்ந்திருப்பார்கள்.

எத்தனையோ உயிரினங்கள் தம் உணவைச் சுமந்துகொண்டு திரிவதில்லை! அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹுவே உணவளிக்கின்றான். அவன் நன்கு செவியுறுவோனும் நன்கு அறிந்தோனுமாவான். (அல்குர்ஆன்:29:56,57,58,59,60)

இங்கு உயர்ந்தோன் அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கின்றான். எந்த ஊரில் இருந்தால் அவர்களால் இறைவனின் மார்க்கத்தைச் செயல்படுத்த இயலாதோ அந்த ஊரைவிட்டு வெளியேறிவிட வேண்டும், அல்லாஹுவின் விசாலமான இந்த பூமியில் எங்கு அவர்களால் இம்மார்க்கத்தை செயல்படுத்த முடியுமோ அங்குப் புலம் பெயர்ந்து செல்லவேண்டும் அங்கு ஓரிறைக் கொள்கையில் நின்று அவன் கட்டளைப்படி அவனை மட்டுமே வழிபாடு செய்யவேண்டும் என  அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.

இஸ்லாத்தின் தொடக்கத்தில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களுக்கு மக்காவில் இருப்பதே கேள்விக்குறியானது. அப்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறி அபிசீனிய நாட்டிற்குப் புலம்பெயர்ந்தார்கள். அங்கு தங்கள் மார்க்கத்தைப் பாதுகாப்போடு கடைப்பிடிக்கலாம் என்பதற்காகவே அவ்வாறு சென்றார்கள்.

அங்கு அபிசீனிய மன்னர் நஜாஷியைச் சிறந்த உபசரிப்பாளராகக் கண்டார்கள். நஜாஷி எல்லா வகையிலும் சஹாபாக்களுக்கு அபயமளித்து துணை நின்றார். அதன் பிறகு ரசூல் (ஸல்) அவர்களும் எஞ்சியிருந்த நபித்தோழர்களும் தூய்மையான நகரமான மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார்கள்.

இப்படியான மிகப்பெரிய தியாகத்திற்கு அந்த மக்களைத் திடப்படுத்தி தயார்ப் படுத்துவதற்காகத்தான் அல்லாஹுடைய பூமி விசாலமானது, நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை வந்தடையும், இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தவர்களுக்குச் சுவர்க்கத்தை வழங்குவோம், இந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு குடிபெயர்ந்து செல்வதால் நீங்கள் எந்தக் கவலையும் அடையாதீர்கள்,  சுவர்க்கத்தில் மாளிகைகளில் உங்களை குடியேற்றுவோம் என்று அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் கூறி, பொறுமையோடும் இறைவனைச் சார்ந்தும் இருக்கவேண்டும் என்பதையும் நினைவூட்டுகின்றான்.

நிச்சயமாக அறிமுகமில்லாத ஊருக்குப் போவதால் அங்குத் தங்குவதுகூட ஏதாவது ஒரு மரத்தடியில் தங்கிக்கொள்ளலாம் ஆனால் உணவுக்கு அங்கு என்ன செய்வது? தன் சொந்த ஊரிலேயே உணவுக்குத் தட்டுப்பாடாக இருக்கும்போது அங்குப்போய் என்ன செய்வது என்ற கேள்விக்குத்தான் அல்லாஹ் எத்தனையோ உயிரினங்கள் தம் உணவைச் சுமந்துகொண்டு திரிவதில்லை! அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹுவே உணவளிக்கின்றான் என்ற பேருண்மையை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.

ஆனால் இன்று சமூகப் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சுழலும் காலசக்கரத்தால் அல்லாஹ் மாற்றி அமைக்கும்போது மனிதன்  விழிபிதுங்கித் திகைத்துப்போய் நிற்கின்றான்.

அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத முழு நம்பிக்கை வைத்து அவர்கள் தங்கள் மார்க்கத்திற்காக நாடு துறந்து அபிசீனியாவிற்கும், மதீனாவிற்கும் சென்ற பிறகு அவர்களின் வாழ்வாதாரத்தை அல்லாஹ் எவ்வாறு விசாலப்படுத்தினான் என்பதை இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

***

S.A. Sulthan

14/09/1441H

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *