Featured Posts
Home » பொதுவானவை » எச்சரிக்கை » உயிருள்ளவற்றின் உருவங்களை வரைதல்

உயிருள்ளவற்றின் உருவங்களை வரைதல்

ஆடைகள், சுவர்கள், காகிதங்கள் போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவங்களைத் தீட்டுவது ஹராமாகும். ‘மறுமையில் அல்லாஹ்விடத்தில் கடுமையான வேதனைக்குரியவர்கள் உருவங்களைத் தீட்டுபவர்களே’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி.

‘நான் படைப்பதைப் போன்று படைக்க முற்படுபவனை விட அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? ஒரு வித்தையேனும் அல்லது ஒரு சிறு எறும்பையேனும் அவர்கள் படைக்கட்டுமே! (முடியுமா?)’ என அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

‘உருவங்கள் வரையக் கூடியவர்கள் அனைவரும் நரகம் செல்வர். அல்லாஹ் அவன் வரைந்த ஒவ்வொரு உருவத்துக்கும் உயிரைக் கொடுப்பான். பிறகு அது அவனை நரகில் வேதனை செய்யும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நீ வரைந்து தான் ஆக வேண்டுமென்றால் மரங்களையும், உயிரற்றவைகளையும் வரைவீராக!’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

இந்த நபிமொழிகள் யாவும் உயிருள்ள மனிதர்கள் மற்றும் ஏனைய உயிரினங்களின் – அவற்றுக்கு நிழல் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி – உருவங்களை வரைவது ஹராம் என அறிவிக்கின்றன. அவ்வுருவங்கள் அச்சிடப்பட்டாலும் சரி, வரையப்பட்டாலும் சரி, குடைந்தெடுக்கப்பட்டாலும் சரி, பொறிக்கப்பட்டாலும் சரி, செதுக்கப்பட்டாலும் சரி, அல்லது அச்சில் வார்த்தெடுக்கப்பட்டாலும் சரி ஹராம் தான். இவ்வனைத்தையும் உள்ளடக்கும் வகையில் ஹதீஸ்கள் பொதுவாக வந்துள்ளன.

முஸ்லிமைப் பொறுத்தவரையில் மார்க்க ஆதாரத்துக்கு அவன் கீழ்ப்படிய வேண்டும். உருவங்கள் வரைவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். அதை நான் வணங்கவா போகிறேன்? அதற்கு நான் சிரம் பணியவா போகிறேன்? என்று குதர்க்கம் பேசக் கூடாது. நம்முடைய இந்தக் காலத்தில் உருவப்படங்கள் பல்கிப் பெருகியிருப்பதன் விளைவால் ஏற்பட்ட ஒரே ஒரு தீமையை மட்டும் ஒரு புத்திசாலி தெளிந்த நோக்குடன் சிந்தித்துப் பார்த்தால் இதை ஏன் ஷரீஅத் தடை செய்திருக்கின்றது என்பதன் தத்துவம் தெரியவரும். அது இதுதான், அதனால் பெரும் தீமைகள் விளைகின்றன. உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன, இச்சைகள் கிளரப்படுகின்றன. உண்மையைச் சொல்வதானால் சில உருவப்படங்களின் காரணமாக மானக்கேடான காரியங்களில் வீழ்ந்திட நேரிடுகின்றது. (ஏன் ஏக இறைவனை விடுத்து உருவங்களை வழிபடுவதன் பால் இந்த உருவ(பட)ங்களே இழுத்துச் செல்கின்றன என்றால் அது மிகையாகாது.)

எனவே ஒரு முஸ்லிம் உயிருள்ளவற்றின் உருவப்படங்களை தன் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள கூடாது. அவற்றை அகற்றி விடுவது அவசியமாகும். காரணம் அவனுடைய வீட்டில் மலக்குகள் நுழைவதற்கு அது தடையாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நாய் மற்றும் உருவப்படங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.

சில வீடுகளில் உருவச் சிலைகளைக் காணலாம். அவற்றுள் சில, காஃபிர்கள் வணங்கக் கூடிய தெய்வங்களாக உள்ளன. இவை அன்பளிப்பாகக் கடைத்துள்ளன, அலங்காரத்திற்காக வைத்துள்ளோம் என்று கூறுகின்றனர். மற்றவைகளை விட இவை கடுமையான ஹராமாகும். அதுபோல சுவரில் மாட்டப்படாத உருவப்படங்களை விட சுவரில் மாட்டப்பட்ட உருவப்படங்கள் கடுமையான ஹராமாகும். ஏனெனில் எத்தனையோ உருவப்படங்கள் மதிப்பு, மரியாதைக்கு இட்டுச் செல்வதைப் பார்க்கிறோம். எத்தனையோ உருவப்படங்கள் மறந்து போன துக்கத்தையும், துயரத்தையும்
மீண்டும் ஞாபகப்படுத்துகின்றன. எத்தனையோ உருவப்படங்கள் முன்னோர்கள் குறித்து பெருமையடிப்பதன் பால் இட்டுச் செல்கின்றன. மேலும் உருவப்படங்களை ஞாபகார்த்தமாக வைத்திருக்கிறோம் என்றும் கூற முடியாது. ஏனெனில் உண்மையில் முஸ்லிமான நண்பர், உறவினர் தொடர்பான உள்ளத்தின் உண்மையான நினைவு கூறல் என்பது அவருக்காக மன்னிப்பையும் அருளையும் வேண்டிப் பிரார்த்திப்பதாகும்.

ஆகவே ஒரு முஸ்லிம் இத்தகைய உருவங்களை அகற்றுவதோ அல்லது அழிப்பதோ அவசியமாகும். ஆனால் அப்படி அகற்றுவது முடியாத காரியமாக இருந்தாலேத் தவிர! அதில் அளவு கடந்த சிரமம் இருந்தாலே தவிர! உதாரணமாக சரக்குகள் உள்ள பாக்கெட்டுகள், கேன்கள், டின்கள், பயனுள்ள புத்தகங்கள், அகராதிகள் போன்ற பல்வேறு பொருட்களில் உருவங்களைப் போடுவது இன்று உலகெங்கும் பரவியுள்ள தீமையாகி விட்டது! என்றாலும் அவற்றை நீக்குவதற்கு முடிந்த அளவு முயற்சிக்க வேண்டும். சில பொருட்களிலுள்ள தவறான படங்களையும் தவிர்க்க வேண்டும். அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சில அவசியத் தேவைகளுக்காக உருவப்படங்களைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதில் தவறில்லை. உதாரணமாக பாஸ்போர்ட், அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்களில் உள்ள உருவங்களைப் போல. சில அறிஞர்கள், மதிப்பளிக்கப்படாமல் கால்களால் மிதிபடக்கூடிய உருவங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அல்லாஹ் கூறுகிறான்: “உங்களால் முடிந்த வரை அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” (64:16).

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *