Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-12)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-12)

– M.T.M.ஹிஷாம் மதனீ

أهل السنة والجماعة. وهو الإيمان بالله وملائكته وكتبه

விளக்கம்:

(الجماعة)

இப்பதத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு மனித கூட்டம் நாடப்படுகின்றது. அக்கூட்டமானது, அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், உண்மையில் ஒன்றிணைந்ததாகவும் காணப்படும். அவர்கள் ஸஹாபாக்களாகவும், அவர்களை கியாமத் நாள் வரை நல்லமுறையில் பின்பற்றி வருபவர்களாகவும் இருப்பர். மேலும், அத்தகையவர்கள் சொற்ப தொகையினராக இருந்தாலும் சரியே! இதனைப் பின்வரும் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் கூற்று தெளிவுபடுத்துகின்றது. ‘ஜமாஆத்தானது, எப்போதும் உண்மைக்கு உடன்பட்டதாக இருக்கும். அவ்வாறு உண்மைக்கு உடன்பட்டவர்களில் நீ மட்டும் இருந்தாலும், (அப்போது) நீயும் ஒரு ஜமாஅத்தாகவே கருதப்படுவாய்’.

(هو)

இப்பிரதிச் சொலின் மூலம் ‘வெற்றி பெறக்கூடிய கூட்டத்தின் அகீதா’ நாடப்படுகின்றது.

(الإيمان)

‘ஈமான்’ என்ற வார்த்தைக்கு அறபு மொழிக்கருத்தின் அடிப்படையில் ‘உண்மைப்படுத்தல்’ என்று பொருள் கொள்ளப்படும். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது.
‘நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் நீங்கள் எம்மை நம்புவோராக இல்லை’ (யூஸூப்:17) மேலும், மார்க்க அடிப்படையில் ‘ஈமான்’ என்பது, ‘(குறித்த ஓரு விடயத்தை) நாவால் மொழிவதும், மனதால் உறுதிப்படுத்துவதும், உருப்புக்களால் செயலுருப்படுத்துவதுமாகும்’.

(الإيمان بالله)

அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் பின்வரும் அம்சங்கள் உள்ளடங்குகின்றன.

  • அவனே அனைத்து வஸ்த்துக்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் என நம்புதல்.
  • அவனுக்கு பூரண பண்புகள் உள்ளன என நம்புதல்.
  • அவன் அனைத்து விதமான குற்றம் குறைகளுக்கும் அப்பாற்பட்டவன் என நம்புதல்.
  • அவன் மாத்திரமே வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் என நம்புதல்.

மேற்கூறப்பட்ட அடிப்படைகளை முறையாக அறிந்திருப்பதும், செயலுருப்படுத்துவதும் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையைப் பூரணப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

(وملائكته)

மலக்குகளைக் கொண்டு ஈமான் கொள்வதாகிறது, பின்வரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

  • மலக்குகள் என்ற ஒரு படைப்பு இருப்பதாக எற்றுக் கொள்ள வேண்டும்.
  • அல்லாஹூத்தஆலா, அல்குர்ஆனில் வர்ணித்துக் கூறியுள்ள பிரகாரம் அவர்களுக்கென்று தனியான பல பண்புகள் உள்ளன என நம்ப வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கவனிக்க.. ‘(அவர்கள் அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள், சொல்லைக் கொண்டு அவனை அவர்கள் முந்தமாட்டார்கள், அவர்களோ அவனின் கட்டளையைக் கொண்டு செயல்படுவார்கள்.’ (அல் அன்பியா: 26,27)
  • அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மலக்குகளின் பிரிவினர் தொடர்பாகவும் அவர்களின் பண்புகள் தொடர்பாகவும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகள் தொடர்பாகவும் சிலாகித்துப் பேசியுள்ளன. அவை அனைத்தையும் உள்ளபடி ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.

(وكتبه)

வேதங்களைக் கொண்டு ஈமான் கொள்வதாகிறது பின்வரக்கூடிய விடயங்களைப் பொதிந்ததாக இருக்கும்.

  • அல்லாஹ் தன் தூதர்களுக்கு இறக்கிவைத்த வேதங்களை உண்மைப்படுத்தல்.
  • அவ்வேதங்கள் அனைத்தும் அவனது பேச்சி என்று நம்புதல்.
  • அவ்வேதங்களில் இடம்பெற்றுள்ள அனைத்தும் உண்மையானதும், ஒளிமயமானதும், நேர்வழி காட்டக்கூடியதுமாக இருக்கும் என நம்புதல்.
  • அல்லாஹூத்தஆலா பெயர் குறிப்பிட்ட வேதங்களான தவ்ராத், இன்ஜீல், ஸபூர், குர்ஆன் ஆகியவற்றையும் பெயர் குறிப்பிடாத வேதங்களையும் நம்புதல்.

One comment

  1. Masha Allaah. Simple, easy to understand writings. I especially like the bullet points.

    Jazaakallaahu Khairan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *