Featured Posts
Home » இஸ்லாம் » அழைப்புப்பணி » தஃவா – அழைப்புப் பணியின் வரைவிலக்கணம்

தஃவா – அழைப்புப் பணியின் வரைவிலக்கணம்

Articleஅறிமுகம்

அரபுமொழியில் அழைப்புப்பணி என்பது: பரப்புதல், எத்திவைத்தல், திருப்திப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

நடைமுறையில் அழைப்புப்பணி என்பது: மனிதர்களுக்கு இஸ்லாத்தை எத்திவைப்பதும் அவர்களுக்கு அதை கற்றுக்கொடுப்பதும் வாழ்க்கையில் அதை நடைமுறைப்படுத்துவதுமாகும்.

தாஇஆ – அழைப்பாளரின் வரைவிலக்கணம்:
ஒரு கொள்கையின்பால் அல்லது குறிப்பிட்ட மார்க்கத்தின்பால் அழைக்கக்கூடிய ஒவ்வொருவரும் அழைப்பாளராகும்;. நபிகளார் (ஸல்) அவர்கள் முதல் அழைப்பாளராகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு நீங்கள் பதிலளியுங்கள். மேலும் அவரை விசுவாசியுங்கள். அவன் உங்களுடைய பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களை பாதுகாப்பான். (அல் அஹ்காப்:- 46 : 31)

மத்உவ்வுன் – அழைக்கப்படுபவரின் வரைவிலக்கணம்:
எவரின்பால் அழைப்பு விடுக்கப்படுகின்றதோ அம்மனிதரைக் குறிக்கும்.

இல்முத் தஃவா – தஃவா கலையின் வரைவிலக்கணம்:
தஃவா கலை: மார்க்கக் கல்விகளில் ஒன்றாகும். அதாவது தஃவாவின் வரலாறு அதன் அடிப்படைகள், அதனுடைய சட்டதிட்டங்;கள், போக்குகள், சாதனங்;கள் போன்றவைகளை அறிந்து கொள்ள முன்னுரிமை வழங்கும் கல்விக்கு (இல்முத்தஃவா) தஃவா சார்ந்த கலை எனப்படும்.

அழைப்புப்பணியின் ஆரம்பம்:

இஸ்லாமிய தஃவா பணி முதலில் அறிவு மற்றும் செயல் வடிவில் ஆரம்பமானது. நபிகளார் (ஸல்) அவர்கள் இப்பணியை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச்செல்லும் அழைப்பாளராக இருந்தார்கள். அவர்கள் அம்மக்களிடத்தில் அல்லாஹ்வின் வேத வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுத்தார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்: அவன்தான் எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி அவர்களை பரிசுத்தமாக்கி அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் தூதரை அவர்களிலிருந்தே அனுப்பிவைத்தான். அவர்கள் அதற்குமுன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர். (அல் ஜுமுஆ:- 62:2)

கண்ணியமிக்க அவர்களது தோழர்கள் அதை தொடர்ந்து செய்து அவ்வமானிதத்தை தங்கள்மீது சுமந்து கொண்டார்கள். அவர்களுக்குப்பின் அவர்களை பின்தொடர்ந்த நல்லவர்கள் அப்பணியை உரியமுறையில் மேற்கொண்டார்கள். அவர்களை தொடர்ந்து வந்த தலைமுறையினர் இம்மார்க்கத்தை பரப்பி அதிலுள்ள அனைத்து அம்சங்களையும் மக்களுக்கு எத்திவைத்தார்கள். எனினும் அவர்களுக்கு பின்னுள்ள முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இச்சிறப்பம்சங்களை அதிகம் வீணாக்கி இக்கடமையை நிறைவேற்றாமல் கவனமற்றிருந்தனர். எனவே அவர்களில் சிலர் செயலை விட்டும் அறிவை பிரித்தனர். மற்றும் சிலர் அறியாமல் அமல் செய்தனர். குறிப்பாக இஸ்;லாமிய கிலாபத்தின் வீழ்;ச்சிக்குப்பின் தஃவா பணி அதன் உயிரோட்டத்தையும், செயல்வடிவத்தையும் இழந்தது. பின்னர் முஸ்;லிம்களில் சிலர் கவனக்குறைவிலிருந்து விழிpப்புணர்ச்சி பெற்று தங்;களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனையை இனங்கண்டனர். அதனால் தனியான, கூட்டான பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது குர்ஆனையும், ஸுன்னாவையும் மற்றும் நேர்வழி பெற்ற நாற்பெரும் கலீபாக்களின் வழிமுறைகளையும் தழுவிய முஸ்லிம்களை தனது அடிப்படை கடமையின்பால் மீட்கக்கூடிய ”தஃவா கலை” என அறியப்பட்ட ஒரு துறையின் அவசியத்தேவை உணரப்பட்டது.

அல்லாஹ் கூறுகின்றான்:
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மையான காரியங்களை ஏவுகின்றீர்கள் தீமையைவிட்டும் விலக்குகின்றீர்கள். இன்னும் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள்.
(ஆலு இம்ரான்:- 3 : 110)

இதனால் அழைப்புப்பணிபற்றிய நூல்கள் எழுதப்பட்டன. தஃவாவின் பெயரால் பல நிறுவனங்களும், அமைப்புகளும் உருவாகின. அவற்றின் மூலம் கூட்டாகவும், தனியாகவும் அதனை அறிமுகம் செய்தனர்.

தஃவா களத்தின் விளக்கங்கள் சிலவற்றில் ஏற்படும் மயக்கமான நிலைகள், குறைபாடுகள், அதன் அடிப்படைகளிலுள்ள சில தடுமாற்றங்கள், அதன் போக்குகளிலுள்ள தவறுகள், அதனை அறிந்து கொள்வதற்கான சாதனங்களிலுள்ள பலவீனங்கள் போன்றவற்றை விட்டும் இப்பணியை சரியானமுறையில் மேற்கொள்வதற்கு அழைப்புப்பணி பற்றிய அறிவு தேவைப்பட்டது.

அழைப்புப்பணியின் சட்டம்:
அல்லாஹ்வின்பால் மக்களை அழைப்பது அவசியம் என்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். அது ஒவ்வொரு மனிதன்மீதும் கடமையா? அல்லது சிலர் இக்கடமையை நிறைவேற்றினால் மற்றவர்களின் மீதுள்ள இக்கடமை நீங்கிவிடுமா? என்பதில்தான் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவர் மீதும் இப்பணி கட்டாயம் என்று கூறக்கூடியவர்கள் பின்வரும் ஆதாரத்தை முன்வைக்கின்றனர்

1. அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும் (விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டம் மனிதர்களை நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களை விட்டும் விலக்குகின்றவர்களாகவும் இருந்துகொள்ளட்டும். அவர்கள்தான் வெற்றியாளர்கள். (ஆலு இம்ரான் : 3 : 104)

இவ்வசனத்தில் வரும் ”மின்” என்னும் சொல் தெளிவுபடுத்துதல் என்னும் கருத்தில் வந்துள்ளது. அதாவது அனைவர்மீதும் என்று தெளிவுபடுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. ”சில” என்னும் கருத்தில் வரவில்லை. அதாவது சிலர் மட்டும் செய்தால் போதும் என்ற கருத்தில் வரவில்லை. இதுவும் ஏனைய ஆதாரங்களும் முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் இப்பணி அவசியம் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

2. அல்லாஹ் கூறுகின்றான்:
(விசுவாசிகளே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள், (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள், தீமையை விலக்குகின்றீர்கள். மேலும் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (ஆலு இம்ரான் : 3 : 110)

இவ்வசனம் ”தஃவாவை” (அழைப்புப்பணியை) இஸ்லாமிய சமூகம் அனைத்திற்கும் பொதுவான அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக கையாண்டுள்ளது. எனவே அழைப்புப்பணி அனைவர் மீதும் அவசியமாகும் என வாதிடுகின்றனர்.

3. நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
உங்களில் எவர் ஒரு தீமையை காண்கின்றாரோ அவர் தனது கையால் தடுக்கவும். அதற்கு முடியாவிட்டால் நாவினால் தடுக்கவும். அதற்கும் முடியாவிட்டால் மனதால் வெறுக்கவும். இதுவே ஈமானின் இறுதி நிலையாகும்.
(ஆதாரம்:- முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா)

இந்நபிமொழியில் ”மன்” என்பது பொதுவான சொல்லாகும். எனவே அனைவரையும் குறிக்கும்.

4. நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
இங்கு சமுகமளித்திருப்பவர் சமுகமளிக்காதவர்களுக்கு எத்திவைக்கவும். நிச்சயமாக இங்கு வந்திருப்பவரைவிட வராதிருப்பவர் மனனம் செய்வதற்கு மிகவும் தகுதியுடையவராகும். (ஆதாரம் : புஹாரி)

இதிலுள்ள ”அல்” என்னும் சொல் பொதுவான கருத்தை குறிக்கின்றது. எனவே தஃவா அனைவருக்கும் பொதுவானதாகும்.
சிலர் நிறைவேற்றினால் மற்றவர்மீது கடமை நீங்கிவிடும் என்று கூறுவோர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள்

1. அல்லாஹ் கூறுகின்றான்:-
மேலும் (விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டம் மனிதர்களை நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களைவிட்டும் விலக்குகின்றவர்களாகவும் இருந்துகொள்ளட்டும். அவர்கள்தான் வெற்றியாளர்கள். (ஆலு இம்ரான் : 3 : 104)

இவ்வசனத்தில் ”மின்” என்னும் சொல் சிலது என்ற கருத்தை குறிக்கின்றது. இதற்கு பின்வரும் ஆதாரம் துணையாக உள்ளது.

2. அல்லாஹ் கூறுகின்றான்:-
விசுவாசிகள் ஒட்டுமொத்தமாக (ஊரைவிட்டு) புறப்பட்டு செல்லலாகாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் மார்க்கத்தை விளங்கிக்கொள்வதற்காகவும் (வெளியேறிச் சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பிவந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்படவேண்டாமா? இதைக்கொண்டே அவர்கள் தங்களை (தீமையிலிருந்தும்) பாதுகாத்துக்கொள்வார்கள். (அத்தவ்பா : 9 : 122)

3. நன்மையை ஏவி தீமையை தடுப்பதற்கு அறிவும், தெளிவான ஆதாரமும் தேவைப்படுகின்றது. இது முஸ்லிம்கள் எல்லோரிடத்திலும் காணமுடியாததாகும். இந்நிபந்தனைகள் எவரிடத்தில் காணப்படுகின்றதோ அவர்மீது அழைப்புப்பணி அவசியமாகும். மற்றவர்களைவிட்டும் இக்கடமை நீங்கிவிடுகின்றது.

சரியான கருத்து – முடிவு
அழைப்புப்பணி ஒவ்வொருவர்மீதும் அவரவர் சக்திக்கு ஏற்ப கட்டாயம் என்று கூறக்கூடியவர்களின் வாதங்களே மிகச்சரியான கருத்தாகும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

சிலர் செய்தால் இக்கடமை நீங்கிவிடும் என்று கூறுபவர்கள் முன்வைக்கும் ஆதாரத்திற்குரிய மறுப்பு

”’வல்தகுன் மின்கும் உம்மதுன்” என்னும் வசனத்தில் ”’மின்” என்னும் சொல் சிலர் என்ற கருத்தை குறிக்காது. அனைவரையும் என்று தெளிவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே விக்கிரக (வணக்கங்களிலுள்ள) அசுத்தங்களைவிட்டும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்; (அல்ஹஜ் : 22 : 30)
என அல்லாஹ் கூறுவதைப்போன்று நீங்கள் அனைவரும் என்பதே கருத்தாகும்.

இவ்வசனத்தின் விளக்கம்:
நீங்கள் அனைத்து சிலைகளை வணங்குவதைவிட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள் என்பதாகும். இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் ”’வல்தகுன் மின்கும் உம்மதுன்” என்ற வசனத்திற்கு தனது தப்ஸீரில் விளக்கம் கூறும்போது இச்சமுதாயத்தில் அழைப்புப்பணியை மேற்கொள்ளக்கூடிய சில பிரிவினர் இருக்கவேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். மேலும் சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவர்மீதும் அழைப்புப்பணி அவசியம் என்றிருந்தாலும் ”மன்ரஆ மின்கும் முன்கரன்” என்று ஹதீஸில் கூறப்பட்டது போதுமானதாகும்.

மேலும் முதல் கருத்தை கொண்டவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களினதும், இரவு, பகல் பாராது இஸ்லாத்தின்பக்கமும், அதன் கல்விக்கொள்கை, ஒழுக்க மேம்பாடுகளின் பக்கமும் அழைத்த நபித்தோழர்களினது செயலையும் ஆதாரமாக காட்டுகின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும். நான் (உங்களை) அல்லாஹ்வின்பால் அழைக்கின்றேன். நானும் என்னை பின்பற்றியவர்களும் தெளிவான ஆதாரத்தின்மீதே இருக்கின்றோம். (யூஸுப் : 12 : 108)

மக்காவாசிகள் அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கியபோது மதீனா நகரம் வாழ்வதற்கு சிறந்த இடமாக கண்டு தங்களின் அழைப்புப்பணியை எத்திவைப்பதற்காகவும், தங்களைப்போன்ற கொள்கை சகோதரர்களுடன் சேர்ந்துகொள்வதற்காகவும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்யுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டார்கள். எவர்கள் விசுவாசங்கொண்டு ஹிஜ்ரத் செய்யவில்லையோ அவர்களை அல் குர்ஆன் கண்டிக்கின்றது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்யாது மக்காவில் தங்கியவர்கள் பலவீனமானவர்களும், குரல் கொடுக்க முடியாத முதுகெலும்பற்ற சக்தியற்றவர்களுமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :
எவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்துகொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது (அவர்களிடம்) ”நீங்கள் எந்த நிலையில்” இருந்தீர்கள்? என்று கேட்பார்கள். (அதற்கு அவர்கள்) நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்கமுடியாது) பலவீனமாக்கப்பட்டவர்களாக இருந்தோம் என்று கூறுவார்கள். (அதற்கு மலக்குகள்) அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் (இருந்த) இடத்தைவிட்டு ஹிஜ்ரத் செய்திருக்க வேண்டாமா? என்று கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம்தான். செல்லுமிடத்தால் அது மிகக்கெட்டதாகும். (அன்னிஸா : 4 : 97)

மனிதர்களில் சிலர்மீது அழைப்புப்பணி அவசியம் என்றிருந்தால் நபிகளார் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தும், சிலமுஸ்லிம்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத்தும் அதற்கு போதுமானதாகும்.

அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கும், அறிவிற்கும் ஏற்ப அழைப்புப்பணியை மேற்கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு மனிதனும் தனது குடும்பம், பிள்ளைகள், மனைவி போன்றவர்களை இஸ்லாத்தையும், அதனுடைய கடமைகளையும், அதன் அறிவுரைகளையும் பற்றிப்பிடித்துக் கொள்வதற்காக அழைக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தான் வேலை செய்யும் இடங்கள், வியாபாரஸ்தலங்கள், தொழிற்பேட்டைகள் போன்றவற்றிலுள்ளவர்களையும் இஸ்லாத்தின்பால் அழைக்க வேண்டும்.

அழைப்புப்பணியின் அவசியம்

1. ஒரு மனிதனுக்கு உணவும் பானமும் எவ்வாறு அவசியமோ அதேபோன்று இப்பணியும் இன்றியமையாத ஒன்றாகும்.

மனிதன் உடலாலும், உயிராலும் உருவாக்கம் பெற்றுள்ளான். இவ்விரண்டும் உணவின்பால் தேவையுடையதாக இருக்கின்றது. உடலின் தேவையாக இருக்கின்ற இவ்வுணவை பூமியில் தேடி பெற்றுக்கொள்ளுமாறு அல்லாஹ் வழிகாட்டியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்:
அவன்தான் உங்களுக்கு பூமியை (வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான். எனவே அதன் பல பாகங்களில் சென்று அவன் (உங்களுக்கு அளித்திருக்கும்) உணவிலிருந்து உண்ணுங்கள். உயிர்பெற்றெழுதல் அவன் பக்கமே உள்ளது. (அல் முல்க் : 67 : 15)

உயிரின் ஊட்டச்சத்து நேர்வழியாகும். நிச்சயமாக அல்லாஹ் நமக்கு நேர்வழியை காட்டி தன்னிடமிருந்து அத்தாட்சி மற்றும் வஹியின் மூலம் அவனது தூதர்களை நம்மிடத்தில் அனுப்பினான்.

அல்லாஹ் கூறுகின்றான்:
வேதமுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்தில் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்கு தெளிவாக விளக்கிக்கூறுகின்றார். (வேதத்தைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள்) பலவற்றை மன்னித்து (வெளியிடாது) விட்டும் விடுகின்றார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள ஒரு வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. அல்லாஹ் இதன்மூலம் தனது பொருத்தத்தை பின்பற்றுகின்றவர்களை சமாதானத்திற்குரிய வழிகளில் செலுத்துகின்றான். அன்றியும் அவர்களை இருள்களிலிருந்து தனது நாட்டப்படி ஒளியின்பால் வெளிப்படுத்துகின்றான். மேலும் அவர்களை நேரான வழியின்பால் செலுத்துகின்றான்.
(அல் மாயிதா:- 5 : 15)

எனவே அழைப்புப்பணி மனிதனுக்கு அவசியமாகும். ஏனெனில் இரண்டாவது பகுதியாக இருக்கின்ற அவனது ஆத்மாவிற்கு அது புத்துணர்ச்சி அளித்து வாழ்வில் உறுதிப்பாட்டை வழங்குகின்றது.

2. மனிதன் சிந்தனையாலும், மனோஇச்சையாலும் இணைக்கப்பட்டுள்ளான். அவனது புத்தி அதிகமான உண்மைகளை அறியமுடியாது சுருங்கி மனோ இச்சை மேலோங்குகின்றது. பலசந்தர்ப்பங்களில் சத்தியத்தை மீறுவதற்கும் அது துணைபுரிகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் :
நான் என் மனதை பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் கூறவில்லை. ஏனெனில் என் இறைவன் அருள்புரிந்தால் அன்றி, மனோ இச்சை தீமையை தூண்டக்கூடியதாக இருக்கின்றது. (யூஸுப்:- 12 : 53)

வழிதவறாமலும், கெட்டவழியில் செல்லாமலும், இருக்கும்பொருட்டு (நேரான) பாதையில் செல்வதற்குரிய அடையாளமாகவும், புத்தியை சீர்படுத்துவதற்காகவும் நல்வழி நடத்துவதற்காகவும் ஹிதாயத் – நேர்வழி அவசியமாகும்.

3. நன்மை சுயமாக இயங்கக்கூடியதல்ல மாறாக மனிதன் புரிந்து அதை ஏற்று நடைமுறைப்படுத்தி மற்றவர்களையும் அதன்பால் அழைக்கக்கூடிய ஒன்றாக இருப்பதால் வழிகாட்டிகள், அழைப்பாளர்கள், தளபதிகள், கட்சிக்காரர்கள் அனைவரும் இந்நன்மையை தங்கள்மீது சுமப்பது அவசியமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :
அவர்கள்தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர். அறிந்துகொள்வீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தான் வெற்றிபெற்றவர்கள். (அல் முஜாதிலா:- 58 : 22)

அல்லாஹ் கூறுகின்றான் :
(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான வழியாகும்) நான் (உங்களை) அல்லாஹ்வின்பால் அழைக்கின்றேன். நானும் என்னை பின்பற்றியவர்களும் தெளிவான ஆதாரத்தின்மீதே இருக்கின்றோம். (யூஸுப்:- 12 : 108)

4. மனிதன் முற்படுத்தி வைத்த நல்லமல்கள் அல்லது அவன் செய்த தீயவைகளுக்கான எழுப்புதல், விசாரணை போன்றவை (மறுமையில் )உண்டு என்பதனால் வெற்றியின்பால் அழைத்துச் செல்லக்கூடிய பாதையை அறிந்துகொள்வது அவசியமாகும். தனி நபரை அல்லது சமூகத்தினரை அழைப்புப்பணி அடைந்தாலே அன்றி அவர்கள் விசாரிக்கப்படாமலிருப்பது அல்லாஹ்வின் நீதியையும் தயாளத்தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் :
நம் தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (பனீ இஸ்;ராயீல்:- 17 : 15)

இதனால்தான் அல்லாஹ் மனிதனை படைத்ததன் தத்துவம் வெளியாவதற்கும், வாழ்வு சீராக அமைவதற்கும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் அல்லாஹ்வின் நீதி நிலைநாட்டப்படுவதற்கும் அழைப்புப்பணி அவசியமாகும்.

5. நபித்துவத்திற்கு பின்வாழ்ந்த மக்கள் தாங்கள் அறியாதவற்றை தங்களுக்கு கற்றுக்கொடுக்கக்கூடியவர்கள் பக்கமும், தாங்கள் வழிதவறும்போது தங்களுக்கு நேர்வழிகாட்டக்கூடியவர்களின் பக்கமும், தேவையுடையவர்களாக இருந்தனர். மேலும் நாத்திகர்கள், பிடிவாதக்காரர்கள், வழிகெட்டவர்கள் போன்றோர் எக்காலத்திலும் இருந்து கொண்டேயிருந்ததன் காரணமாக அவர்களின் கோணல் வளைவை நிமிர்த்தவும், அவர்களின் தீங்கைவிட்டும் மக்களை தடுக்கவும், அவர்களுடைய தீய கொள்கைகளை மக்களுக்கு இனங்காட்டவும், சீர்திருத்தவாதிகளின்பால் தேவையுடையவர்களாக இருந்தார்கள். எனவே இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீய திட்டங்களையும், போர்களையும் தடுக்கக்கூடியவர்கள் என்றுமே அவசியமாகும். இதன்மூலம் சகல நிலைகளும் சீரடைந்து வாழ்வில் சுபீட்சம் உண்டாகும்.

அழைப்புப்பணியின் நோக்கம்

இதன்நோக்கம் இஸ்லாம் தலைநிமிர்ந்து வாழ்வதோடு நடைமுறை உலகின்பக்கம் அது சென்றடைந்து, பூமியில் நிலைபெற்று, மனித சமுதாயம் அதை பின்பற்றி, அதனையே தனது வாழ்க்கை திட்டமாக அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதாகும்.

வினாக்கள்:-

1. பின்வரும் சொற்களின் வரைவிலக்கணத்தை கூறுக!

அ) அத்தஃவா

ஆ) அத்தாயிஆ

இ) அல் மத்உவ்வு

ஈ) இல்முத்தஃவா

2. இல்முத்தஃவா – தஃவாபற்றிய அறிவு எவ்வாறு வளர்ந்தது? என்பதை சுருக்கமாக கூறுக!

3. அழைப்புப்பணி செய்வதன் சட்டத்திலுள்ள கருத்து வேறுபாடுகளை ஒவ்வொரு கருத்திற்கும் இரண்டு ஆதாரங்கள் கூறி சுருக்கமாக விளக்குவதோடு அக்கருத்துக்களில் மிகவும் சரியான கூற்றை விளக்குக!

4. மனித வாழ்வில் அழைப்புப்பணி அவசியமாகும். இப்பணியின் அவசியம் பற்றி மூன்றுகோணங்களில் விளக்குக!

5. அழைப்புப்பணிக்கு ஒரு நோக்கம் உண்டு. அழைப்பாளர்கள் தமது அழைப்பின் பின்னணியில் அது வெற்றிபெறவேண்டுமென்பதற்காக பிரதான இலக்கைக்கொண்டு அழைக்கின்றனர். அந்நோக்கம் என்ன?

அழைப்புப்பணியின் அடிப்படைகள் (அஸ்திவாரம்)

அழைப்புப்பணியின் மூலாதாரங்கள்:
அழைப்பாளராக இருப்பவர் தனது திட்டங்களையும், போக்குகளையும் பல்வேறுபட்ட மூலாதாரங்களிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

1. புனிதமிகு அல்குர்ஆன்:
இது எந்தப்பிழையுமற்ற சரியான வேதமென்றும், பொய் கலக்காத சத்திய வார்த்தை என்றும் ஓர் அழைப்பாளர் அறிந்திருப்பது அவசியமாகும். இயற்கைக்கு இசைவான கொள்கையையும், முன்மாதிரியான வாழ்க்கை திட்டத்தையும், அழைப்புப்பணியில் முன்சென்ற சமுதாய அனுபவங்களையும், நபிமார்கள், தூதர்கள் செய்த தியாகங்களையும் அவரிடம் பொக்கிஷமாக, தடுப்பு அரணாக, அவர் எந்த ஒரு நிலையிலும் கதிகலங்கி நிற்காமலிருக்க இவைகளை அதில் பெற்றுக்கொள்வார்.

2. நபிகளார் (ஸல்) அவர்களின் வழிமுறை:
ஓர் அழைப்பாளர் தனது அழைப்புப்பணியில் அவரது பொறுமை, சகிப்புத்தன்மை, ஞானம் போன்ற அனைத்து அம்சங்களிலும் நபிகளார் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி செல்லவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளார். ஏனெனில் நபிகளார் (ஸல்) அவர்கள்தான் செயல்வடிவமிக்க வாழ்க்கை திட்டமும், அல்லாஹ்வின்பால் அழைப்பதற்கும், அவனுடைய அறிவுரைகளை அறிந்துகொள்வதற்குமுரிய உயிரோட்டமுள்ள விரிவுரையுமாகும்.

3. முன்சென்ற நல்லோர்களின் வாழ்க்கை வரலாறு:
இவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களின் தோழர்களும், அவர்களை துயர்ந்த நல்லோர்களுமாகும். இவர்கள் கண்ணியமிக்க அல்லாஹ்விற்காக தங்களது உயிர்களையும், செல்வங்களையும் அர்ப்பணித்தார்கள். இவர்கள் தெளிவான ஆதாரத்துடனும், சிறந்த விளக்கத்துடனும், நன்மையை ஆதரவுவைத்தும் அல்லாஹ்வின்பால் அழைத்தார்கள்.

4. அறிஞர்கள், அழைப்பாளர்களின் நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட அனுபவங்கள்:
இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை சுமந்தோரும் ஸுன்னாவை பாதுகாத்தவர்களும், தங்களை இம்மார்க்கத்திற்காக சேவை செய்வதற்காகவும் சரியான வாழ்க்கை திட்டத்தை சுமந்துகொள்வதற்காகவும் அதற்கு ஏற்படக்கூடிய எதிர்ப்புக்களை தடுப்பதற்காகவும் தங்களை அர்ப்பணித்தவர்கள்.

அழைப்புப்பணியின் தூண்கள்

இவை அழைப்புப்பணியின் ஆக்கபூர்வமான நிலையினை பிரதிபலிக்கும் பகுதிகளாகும். இவையின்றி இப்பணியை மேற்கொள்ளமுடியாது. இவை மூன்றாகும்.

முதலாவது தூண்: அழைப்பாளர்

இதன் வரைவிலக்கணம்: அழைப்பாளர் என்பவர் தஃவா பணியை மேற்கொள்பவரும், இஸ்லாத்தையும், அதன் அறிவுரைகளையும் எத்திவைப்பவரும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிப்பவருமாவார்.

அல்லாஹ் கூறுகின்றான் :
நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு) சாட்சியாளராகவும், நன்மாராயங்கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம். இன்னும் அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) அவனது அனுமதிகொண்டு (மக்களை) அழைப்பவராகவும், பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை) நாம் அனுப்பியுள்ளோம். (அல் அஹ்ஸாப் :- 33 : 46 – 47)

அழைப்பாளரின் முக்கியத்துவம்

அ) எதன்பால் அழைக்கின்றாரோ அதுபற்றிய அம்சம்:
அழைப்பாளர் அல்லாஹ்வினதும், அவனது திருப்தியினதும், அவனது சுவர்க்கத்தின்பக்கமும் அழைப்பார்.

அல்லாஹ் கூறுகின்றான் :
எவர் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, (தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லீம்களில் உள்ளவன் என்றும் கூறுகின்றாரோ அவரைவிட சொல்லால் மிக்கஅழகானவர் யார்? (ஹாமீம் ஸஜ்தா:- 41 : 33)

ஆ) அவரது பணி:
நிச்சயமாக அவரது பணி, பணிகளுள் மிகவும் புனிதமானதாகும். ஏனெனில் அது நபிமார்களின் பணியாகும்.

இ) அவரது பணிக்கான கூலியும், நன்மையும்:
அல்லாஹ் தன்பக்கம் அழைப்பவர்களுக்கு மகத்தான கூலியும், நன்மையும் கொடுப்பதாக வாக்களித்துள்ளான்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவர் நேர்வழியின்பால் (மக்களை) அழைக்கின்றாரோ அவருக்கு அதனை பின்பற்றுபவர்களுடைய நற்கூலிகள் போன்றவை உண்டு. அவர்களின் நற்கூலிகளில் எதுவும் குறையாது. எவர் தீய வழியின்பால் அழைக்கின்றாரோ அவருக்கு அத்தீய வழியை பின்பற்றுபவர்களின் பாவங்கள் போன்றவை உண்டு. அதனால் அவர்களின் பாவங்களில் எதுவும் குறைவதில்லை. (ஆதாரம்:- முஸ்லிம்)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின்மீது ஆணையாக உன்மூலம் ஒரு மனிதன் நேர்வழியடைவது சிகப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட உமக்கு சிறந்ததாகும். (ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்)

அழைப்பாளரின் பண்புகள்:

அ) எதன்பால் அழைக்கின்றாரோ அதன்பால்; விசுவாசங் கொண்டவராகவும், அதில் உறுதியுடையவராகவும் இருத்தல்.

அல்லாஹ் கூறுகின்றான் :
(நாம் வாக்களித்தவாறு யஹ்யா பிறந்தபின் நாம் அவரிடம்) யஹ்யாவே! நீர் இவ்வேதத்தை பலமாக பற்றிப்பிடித்துக்கொள்வீராக! (எனக்கூறினோம்) அவர் குழந்தையாக இருந்தபோதே ஞானத்தையும் நாம் அளித்தோம். (மர்யம்:- 19 : 12)

தஃவா பணியில் நபிகளார் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள மனஉறுதி அனைத்து வகையான தடைகளையும், உள்ளத்தில் ஏற்படக்கூடிய தடுமாற்றங்களையும் ஊடறுத்துச்செல்கின்ற பலமிக்கதாக இருந்தது. அவர்களின் அழைப்புப்பணியை விட்டுவிடும்படி குறைஷிகள் வற்புறுத்தியபோது அவர்கள், ”நீங்கள் இந்த சூரியனை பார்க்கின்றீர்களா?” எனக்கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம் எனக்கூற நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இதிலிருந்து ஒரு தீப்பொறியைக்கூட உங்களால் தரமுடியாததைப்போன்று இப்பணியை நான் விட்டுவிடுவதும் முடியாத காரியமாகும் எனக்கூறினார்கள்.
(ஆதாரம்:- அல் ஹைதமி, அபூயஃலா)

ஆ) உதவியும், கருணையும் அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அவனுடன் உறுதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுதல்:

எனவே அழைப்பாளரின் அனைத்து கருமங்களையும் அல்லாஹ் பொறுப்பேற்கும்பொருட்டு அவனுக்காக என்ற தூய எண்ணத்துடன், அவனை அதிகம் வணங்கி ஞாபகப்படுத்துவதும், அவனை நெருங்கக் கூடிய முறைகளில் அவனை நெருங்குவதும், அவன் தடுத்தவைகளைவிட்டு தூரமாகி விலகிக்கொள்ளவும் வேண்டும்.

எனது அடியான் நான் அவனை நேசிக்கும்வரை சுன்னத்தான அமல்களின்மூலம் என்னிடம் நெருங்குவான். நான் அவனை நேசித்தால் அவன் கேட்கும் கேள்வியாக, அவன் பார்க்கும் பார்வையாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் அவனுக்கு கொடுப்பேன். அவன் என்னிடம் பாதுகாப்புத்தேடினால் நான் அவனுக்கு பாதுகாப்பளிப்பேன். (ஆதாரம்:- புஹாரி)

இ) எதன்பால் அழைக்கின்றாரோ அதுபற்றிய அறிவும், தெளிவும் இருக்கவேண்டும். இதுபற்றி உணரப்படாததனால் அழைப்புப்பணியில் அதிக தீய விளைவுகள் ஏற்படுகின்றன:

அல்லாஹ் கூறுகின்றான் :
(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும். நான் உங்களை அல்லாஹ்வின்பால் அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஆதாரத்தின்மீதே இருக்கின்றோம். (யூஸுப்:- 12 : 108)

ஒரு வணக்கசாலி அறியாமையினால் 99 கொலைகளை செய்துவிட்டு வந்த சம்பவத்தை சிந்தித்துப்பார்! (ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்)

ஈ) அறிவைக்கொண்டு செயல்படுதலும், ஒழுக்கத்தில் நிலைத்திருத்தலும்:

சொல்லுக்கு அமைவாக இல்லாத அழைப்பில் எந்த நன்மையுமில்லை. அழைப்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய மிகவும் ஆபத்தான விஷயம் அவர்களின் அமலைவிட்டும் அறிவு பிரிந்ததேயாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
விசுவாசிகளே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்? நீங்கள் செய்யாததை (பிறருக்கு) கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கின்றது. (அஸ்ஸஃப் :- 61 :2 – 3)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைநாளில் ஒரு மனிதனை கொண்டுவந்து அவனை நரகில் போடப்படும். அப்பொழுது அவனுடைய வயிற்றிலுள்ள குடல்கள் வெளியே வந்துவிடும். அந்தக்குடல்களுடன் அம்மனிதன் திருகையில் (செக்கில்) கழுதை சுற்றுவதுபோல் சுற்றுவான். நரகவாசிகள் ஒன்றுசேர்ந்து அவனிடம் நீ நன்மையை ஏவி, தீமையை தடுக்கவில்லையா? அதற்கு அம்மனிதன், ஆம் உங்களுக்கு நன்மையை ஏவி, தீமையை தடுத்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் அதை என் வாழ்வில் எடுத்து நடக்கவில்லை. மேலும் நான் உங்களுக்கு தீமையை தடுத்துக்கொண்டு அதை நான் செய்துகொண்டிருந்தேன் எனக்கூறுவான். (ஆதாரம்:- புஹாரி, முஸ்லீம்)

உ) தஃவாவை சூழ்ந்துள்ள விஷயங்களையும், காலத்திற்கு ஏற்றமுறையில் அதன் நிகழ்வுகள், தேவைகளையும், அழைக்கப்படுவோர்களின் நிலைகளையும் பூரணமாக அறிந்திருத்தல்:

இதன் அடிப்படையில் திட்டங்கள் தெளிவுபடுத்தப்பட்டும், முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியவை வறையறுக்கப்பட்டும், குறை நிறைகள் மதிப்பிடப்படும்.

ஊ) அழைப்புப்பணியின் போக்கில் நுட்பத்தை கடைப்பிடித்தல்:
அழைப்பாளர் எவர்களை அழைக்கின்றாரோ அவர்களுக்கு பொருத்தமான சிறந்த வழிமுறைகளை தெரிவுசெய்து ஒவ்வொரு வழிமுறைகளையும் அதற்குரிய இடத்தில் பயன்படுத்தவேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :
(நபியே) உம் இறைவனின்பக்கம் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக்கொண்டும் அழைப்பீராக! மேலும் அவர்களிடத்தில் மிக அழகானமுறையில் விவாதிப்பீரா! (அந்நஹ்ல்:- 16 : 125)

எ) நற்குணங்களை அணிகலனாக்குதல்:
நற்குணங்கள் அழைப்பாளரை மக்களுடன் இணைத்துவைக்கும் முக்கிய பண்பாகும். நபிகளார் (ஸல்) அவர்கள்பற்றி அல்லாஹ் வர்ணித்துக்கூறும்போது, (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணமுடையவராக இருக்கின்றீர். (அல் கலம்:- 68 : 4)

மேலும் அல்லாஹ் அழகிய நற்குணத்தின் முக்கியத்துவம்பற்றி அவர்களுக்கு தெளிவுபடுத்துகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாக நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்துகொள்கின்றீர். (சொல்லில்) கடுகடுப்பானவராக, இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் அவர்கள் உம்மைவிட்டும் பிரிந்து சென்றிருப்பார்கள். எனவே அவர்களின் பிழைகளை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! மேலும் சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! பின்னர் (அவைபற்றி) நீர் முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன்மீது பொறுப்புச் சாட்டுவோரை நேசிக்கின்றான். (ஆலு இம்ரான்:- 3 : 159)

எனவே அழைப்பாளர் தீய குணங்களைவிட்டும் நீங்கி, நற்பண்புகளை அணிகலனாக்கிக்கொள்ள முயற்சிப்பது அவசியமாகும். ஏனெனில் கல்வி கற்பதனால் அறிவு உண்டாகின்றது. அமைதி பெறுவதனால் சாந்தம் உண்டாகி நற்குணங்கள் அதிகரிக்கின்றது. எனவே இவைகளை அணிகலனாக்கிக் கொள்வதற்கு தனது உள்ளத்துடன் போராடவேண்டும்.

ஏ) சகல முஸ்லிம்களைபற்றியும் நல்லெண்ணம் கொள்ளுதல்:
வெளிப்படையான விஷயங்களில் அல்லாஹ்வின் சட்டங்களை அவர்களில் நிலைநாட்டி, மறைவான விஷயங்களில் அல்லாஹ்வின்மீது பொறுப்பை ஒப்படைத்தல்.

அல்லாஹ் கூறுகின்றான்:
விசுவாசிகளே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாகும். (அல் ஹுஜ்;ராத் :- 49 : 12)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சந்தேகங்கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் சந்தேகமானது பேச்சுக்களில் மிகவும் பொய்யானதாகும். (ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்;)

நல்லெண்ணம் கொள்வதின்பெயரில் இருப்பதுபோல், மனிதர்கள் செய்வதைப்பற்றி பாராமுகமாக இருப்பதும், அவர்களின் தவறுகளை கவனிக்காமல் மௌனமாக இருப்பதும் கூடாது. இந்நிலை எச்சரிக்கையாக இருப்பதுடன் நல்லெண்ணம் முரண்படாமல் இருப்பதுபோலாகும். அதாவது தீய எண்ணம்கொள்ளாது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
விசுவாசிகளே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், பிள்ளைகளிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர் எனவே, நீங்கள் அவர்களைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்! (அத்தகாபுன்: 64 : 14)

ஐ) மனிதர்களின் வடுக்களை – குறைகளை மறைத்தல்:

அல்லாஹ் கூறுகின்றான் :
எவர்கள் விசுவாசங்கொண்டோருக்கிடையில் (இத்தகைய) மானக்கேடான விஷயங்கள் பரவவேண்டுமென விரும்புகின்றார்களோ நிச்சயமாக அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு. (அந்நூர்: 24 : 19)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உலகில் எந்த அடியான் மற்ற அடியானின் குறைகளை மறைக்கின்றானோ அவனது குறைகளை மறுமைநாளில் அல்லாஹ் மறைப்பான். (ஆதாரம்:- முஸ்லிம்)

ஒரு வைத்தியன் தனது பணியில் இருப்பதுபோல் ஒரு அழைப்பாளன் தனது அழைப்புப்பணியில் இருக்கவேண்டும். வைத்தியர் சிகிச்சைக்காக வரும் நோயாளியிடமுள்ள குறைகளை கண்டு அவைகளை வெளிப்படுத்தாது சிகிச்சை செய்வதுபோல் ஒரு அழைப்பாளர் தான் அழைக்கக்கூடியவர்களிடம் காணப்படும் குறைகளை வெளிப்படுத்தாமல் அவைகளை மறைத்து திருத்த முயற்சிப்பது அவசியமாகும்.

ஒ) மக்களுடன் சேர்ந்திருப்பது சிறந்ததாக இருந்தால் அவர்களுடன் சேர்ந்திருப்பதும், பிரிந்திருப்பது சிறப்பாயின் பிரிந்திருப்பதும் அவசியமாகும்.

அழைப்பாளர்கள் நன்மையின்பால் மக்களை அழைப்பதற்கும், நன்மையை ஏவி, தீமையைவிட்டும் தடுப்பதற்கும் அவர்களுடன் சேர்ந்திருக்கவேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நம் வசனங்களைப்பற்றி வீண் விவாதம் செய்துகொண்டிருப்போரை நீர் கண்டால் அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும்வரை நீர் அவர்களை புறக்கணித்துவிடும். (அல் அன்ஆம்:- 6 : 68)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுடன் கலந்து அவர்களால் ஏற்படக்கூடிய துன்பங்களில் பொறுமைசெய்யும் ஒரு இறை விசுவாசி, மக்களுடன் கலக்காது அவர்கள்மூலம் ஏற்படும் துன்பங்களில் பொறுமை செய்யாத இறைவிசுவாசியைவிட சிறந்தவனாவான். (ஆதாரம்:- அஹ்மத், திர்மிதி)

பாவங்கள், தீமைகள் செய்துகொண்டிருந்தவர்களை தடுக்காமல் அவர்களுடன் சேர்ந்திருந்ததுதான் பனூ இஸ்ரவேலர்களிடத்தில் நிகழ்ந்த முதல் குறையும், தவறும் என நபிகளார் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (ஆதாரம்:- அபூதாவுத், திர்மிதி)

ஒரு வைத்தியர் நோயாளிக்கு சிகிச்சை செய்யும்போது அவரது நோய் பரவாமல் இருப்பதற்காக எவ்வாறு கவனம் செலுத்துகின்றாரோ அதேபோன்று ஒரு புத்திசாலி மக்கள் மத்தியில் இருந்துகொள்ளவேண்டும்.

ஓ) மனிதர்களை அவர்களின் தரத்தில் நடத்துவதும், கண்ணியத்திற்குரியோரின் சிறப்பை அறிந்துகொள்வதும் (இனங்காண்பதும்) :

மனிதர்களை அவர்களின் தரத்தில் நடத்துமாறு நபிகளார் (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள். (ஆதாரம்:- முஸ்லிம்)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வயதுமுதிர்ந்த ஒரு முஸ்லிமையும், குர்ஆனை சுமந்து அதற்கு முறைகேடாக நடக்காதவரையும், அதனைவிட்டு நீங்கிக்கொள்ளாதவரையும், நீதி தவறாத அரசனையும் கண்ணியப்படுத்துவது நிச்சயமாக அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதில் உள்ளதாகும். (ஆதாரம்:- அபூதாவுத்)

எனவே ஒரு அழைப்பாளர் மனிதர்களின் தரங்களை அறிவதும், அவர்களின் விளங்கும்தன்மை, அறிவின்தரம், அந்தஸ்த்து ஆகியவற்றிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை விளங்கி வைத்திருப்பது அவசியமாகும்.

ஒள) ஓர் அழைப்பாளர் ஏனைய அழைப்பாளர்களிடம் உதவிதேடுவதும், அவர்களுடன் கலந்தாலோசிப்பதும், அவர்களுடன் நல்லுபதேசங்களை பரிமாறிக்கொள்வதும்:

அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவேண்டாம். (அல் மாயிதா:- 5 : 2)

நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மார்க்கமென்பது உபதேசித்து நடப்பதாகும். எவரிடம் என வினவியபோது! அல்லாஹ், அவனது வேதம், அவனது தூதர், முஸ்லிம்களின் தலைவர், முஸ்லிம் பொதுமக்கள் ஆகியோருடனாகும் என நபிகளார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஆதாரம்:- முஸ்லிம்)

அழைப்புப்பணி சம்மந்தப்பட்ட இவ்வொழுக்கத்தின்மூலம் இப்பணியை மேற்கொள்வது அழைப்பாளர்களுக்கு மத்தியில் ஆழமான அன்பை ஏற்படுத்தி, அவர்களை விட்டும் தீமைகளை தடுத்து ஒவ்வொருவரது சிந்தனைகளையும் மதித்து வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

இரண்டாவது தூண்: அழைக்கப்படுபவர்

இதன் வரைவிலக்கணம்:
எவரின்பால் அழைப்பு விடுக்கப்படுகின்றதோ அவரைக்குறிக்கும். அவர் முஸ்லிமாக அல்லது காபிராக ஆணாக அல்லது பெண்ணாக இருக்கலாம். அழைக்கப்படுவதில் மனிதர்களில் மிகவும் நெருக்கமானவர்கள் நெருங்கிய உறவினராகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (அஷ்ஷுஅரா 26:214)

அழைப்பாளருக்கு நெருங்கிய உறவினர்களில் மிகவும் நெருக்கமானவர் தனது இரு பக்கங்களுக்கிடையில் இருக்கக்கூடிய அவனது ஆத்மாவாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
எவர் (ஆத்மாவாகிய) அதை பரிசுத்தமாக்கிக்கொண்டாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். எவர் அதை (அசிங்கப்படுத்திக் கொண்டாரோ) நிச்சயமாக அவர் நஷ்டமடைந்துவிட்டார். (அஷ்ஷம்ஸ் 92 : 9 – 10)

பின்னர் தனது குடும்பம் மற்றும் உறவினர்களை அழைக்கவேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
விசுவாசிகளே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பைவிட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமாகும். அதில் கடும் பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவியவற்றில் அவர்கள் மாறுசெய்யமாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்துவருவார்கள்.
(அத் தஹ்ரீம் : 66 : 6)

பின்னர் அனைத்து உறவினர்களையும், சொந்த, பந்தங்களையும், அண்டை அயலவர்களையும், ஏனைய மனிதர்களையும் அழைக்கவேண்டும். சில அழைப்பாளர்கள் தனது நெருங்கியவர்களை அழைப்பதைவிட தூரத்திலுள்ளவர்களை அழைப்பதில் ஆர்வங்காட்டுகின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான் :
நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவுகின்றீர்களா? நீங்கள் இதனை விளங்கிக்கொள்ளமாட்டீர்களா? (அல்பகரா : 2 : 44)

அழைக்கப்படுபவரின் உரிமைகள்:
அழைக்கப்படுபவர் மீது சில கடமைகள் இருப்பதுபோல் அவர்மீது சில உரிமைகளும் உள்ளன. அழைக்கப்படுபவர்களின் உரிமைகளுள் மிக முக்கியமானது அவர்களை நாடி, அழைப்பது அல்லது அவர்களிடம் ஒருவரை அனுப்பிவைப்பதாகும். சில நோக்கங்களுக்காக அல்லது முரண்படுவதற்காக அழைப்புப்பணி விடுப்பது கூடாது. ஒரு பக்கம் அல்லாஹ் மக்களின் உரிமைகளை அவர்களுக்கு கொடுப்பதற்காகவும் மற்றொருபக்கம் தனது அத்தாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் தனது தூதர்களை அனுப்பினான். எந்த ஒரு கூட்டத்தையும் அவர்கள்மீது அவர்களுக்குரிய ஆதாரத்தை முன்வைக்காமல் அல்லாஹ் அவர்களை வேதனைசெய்யமாட்டான்.

அல்லாஹ் கூறுகின்றான்:
நம் தூதரை அனுப்பாதவரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (பனூ இஸ்ராயீல் : 17 : 15)

நபிகளார் (ஸல்)அவர்கள் அவர்களது நெருங்கிய உறவினர்களை அழைத்தது, தூரத்திலுள்ளவர்களை அழைப்பதைவிட்டோ அல்லது பொது மக்களை அழைத்தது, அவர்களது தலைவர்களை அழைப்பதை விட்டோ திசைதிருப்பவில்லை. இதற்கு மாற்றமாக அவர்களிடமிருந்து ஒரு சிறிய அசைவு (பாராமுகம்) ஏற்பட்டபோது அல்லாஹ் அவர்களை கடுமையாக கண்டித்தான்.

அல்லாஹ் கூறுகின்றான் :
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தை) திருப்பிக்கொண்டார். அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது (நபியே உம்மிடம் வந்த அவர்) தூய்மையாகிவிடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவுபடுத்திக் கொள்வதன்முலம் (உம்முடைய உபதேசம்) அவருக்கு பலனளித்திருக்கலாம். (அபஸ : 80 : 1 – 4)

அல்லாஹ், நபிகளார் (ஸல்) அவர்களின் அழைப்புப்பணியின் போக்கை கண்டித்தபின் அவர்கள் எவரையும் துட்சமாக கருதவில்லை. நபிகளார் (ஸல்) அவர்கள் கஸ்ரஜ் கோத்திரத்தை சேர்ந்த ஆறுபேர்கள் தங்களது தலைமுடிகளை சிரைத்தநிலையில் அகபாவில் கண்டபோதும் அவர்களை இழிவாக கருதவில்லை. அவர்களிடம் வந்து அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆண்களிலும், கோத்திரத் தலைவர்களிலும் நபிகளார் (ஸல்) அவர்களின் அழைப்பை புறக்கணித்த நிலையில் அந்த ஆறுபேரும்தான் அகபாவில் நபிகளார் (ஸல்) அவர்களுக்கு பைஅத் செய்வதில் முதல் வித்தாக இருந்தனர்.

அழைக்கப்படுவோர் மீதுள்ள கடமைகள்:
அழைக்கப்படுபவர் மீதுள்ள கடமைகளுள் மிக முக்கியமானது, அவர் சத்திய அழைப்பிற்கு விடையளிப்பதற்கு தடை கற்பிக்காதவகையில் விடையளிப்பதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
விசுவாசிகளுக்கிடையில் ஏற்படும் (விவகாரங்களில்) தீர்ப்பு கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால் அவர்கள் சொல்வதெல்லாம் நாங்கள் செவியுற்றோம். (அதற்குக் கீழ்ப்படிந்தோம்) என்பதுதான். இவர்கள்தான் வெற்றியாளர்கள். (அந்நூர் 24 : 51)

அழைக்கப்படுபவர்களின் வகைகள்:
எவர் மார்க்க அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்த விரும்புகின்றாரோ அவர் அழைக்கப்படும் மக்களை இரு பிரிவினர்களாக பிரிக்கமுடியும்.

1.”உம்மதுல் இஸ்திஜாபா” அழைப்புப்பணியை ஏற்றுக்கொண்ட சமூகம் என்று அழைக்கப்படும் முஸ்லிம்கள், முஃமீன்கள்.
இவர்கள் தஃவா சென்றடைந்தவர்கள் அல்லது அழைப்பிற்கு விடைகொடுத்தவர்கள்.

இவர்களை இருவகைப்படுத்தலாம்:
அ) கொள்கையின் அடிப்படையில் நேர்வழிபெற்றவர்கள், வழிதவறியவர்கள்.
ஆ)மார்க்கத்தை பற்றிப்பிடித்தல், கடைப்பிடிப்பதிலுள்ள பலம், பலவீனத்தின் அடிப்படையில் பல பிரிவினராகும்.

1. நன்மைகள் செய்வதில் முந்திக்கொண்ட நல்லோர்கள்.
2. தங்களுக்கு அநியாயம் செய்துகொண்ட பாவிகள், தீயவர்கள்.
3. நடுநிலையானவர்கள்.
இவர்கள் மேற்கூறப்பட்ட இரு பிரிவினர்களுக்கிடையில் தடுமாறிக்கொண்டிருக்கும் பலவீனர்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:
பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களை தேர்ந்தெடுத்தோமோ அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம். ஆனால் அவர்களிலிருந்து தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டோர்களும் உண்டு. அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்துகொண்டோர்களும் உண்டு. அவர்களிலிருந்து அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக்கொண்டோர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும். (அல் பாதிர் : 35 : 32)

இவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறாவிட்டாலும் இப்பிரிவினர்களில் சிலரிடம் நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்களின் சில பண்புகளும், அவர்களின் நடவடிக்கைகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு பிரிவினர்களும் அவர்களின் நிலையை வைத்தே அழைக்கப்படுவர். நன்மைகள் செய்வதில் முந்திக்கொண்டோரை அதிகமதிகம் நன்மை செய்யும்படியும், அநியாயக்காரன் தனது தீய செயல்களைவிட்டும் ஒதுங்கி வாழும்படியும், தவறான கொள்கையிலிருக்கும் வழிகேடர்கள் தங்களது தீய கொள்கையை திருத்திக்கொள்ளுமாறும், அவர்களின் வழிகேட்டிலிருந்து விலகிவிடுமாறும் அழைப்பு விடுக்கப்படுவர்.

2.”உம்மதுத்தஃவா” அழைப்புப்பணி சேரவேண்டிய சமூகம் என்று அழைக்கப்படும் காபீர்கள் – இறைநிராகரிப்பாளர்கள்
இவர்கள் தஃவா சென்றடையாதவர்கள், தஃவா சென்றடைய வேண்டியவர்கள்.

இவர்களை பல்வேறு பிரிவினர்களாக பிரிக்கலாம்.
அ) இறைவன் உண்டு என்பதை மறுக்கும் நாஸ்திகர்கள்.
இவர்களின் நிலை காலத்தை நம்பி வாழ்வோர் போலாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :
(மறுமையை நம்பாத) அவர்கள் நமது இந்த உலக வாழ்க்கையை தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது என்றும் (இதில்தான்) நாம் இறக்கின்றோம், ஜீவிக்கின்றோம். காலத்தைத்தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். (அல் ஜாஸியா : 45 : 24)

மேலும் கடவுள் இல்லை, உலகம்தான் வாழ்க்கை என்று கூறும் இன்றைய கம்யூனிஸ்டுகளின் நிலையும் இதுவேயாகும்.

ஆ) கொள்கையில் அல்லது வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுடன் அவனல்லாதவைகளை இணையாக்கும், சிலைவணங்கிகளான முஷ்ரிகீன்கள். உதாரணமாக சிலைகளை வணங்கிய அறபுக்களையும், அவர்கள் அல்லாத சிலைவணங்கிகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்:
அவனையன்றி (மற்றவர்களை) பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை என்கின்றனர். அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாக, நிராகரித்துக்கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (அஸ்ஸுமர் : 39 : 3)

முன்னர் கூறப்பட்ட இரு பிரிவினரும் ஒன்றின் அடிப்படையில் இறைமறுப்பு, சிலை வணங்குதல் போன்றவற்றில் வளர்ந்த காபிர் அல்லது முஸ்லிமாக இருந்து பின்னர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய முர்தத் (மதம் மாறியவனாகும்).

இ) யூத கிறிஸ்தவர்களில் விசுவாசம்கொள்ளாத வேதக்காரர்கள்.
அவர்களின் முந்திய வேதங்களுடன் அவர்கள் இணைந்திருப்பதனால் வேதமுடையவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களில் அதிகமானோர் இணைவைப்பிலும், சிலை வணக்கத்திலும் மூழ்கியிருந்தும் அல்லாஹ் பல சட்டங்களை கொண்டு அவர்களை குறிப்பாக்கியது போன்று அடிப்படையை கவனத்தில்கொண்டு இந்த பண்பைபெற நேர்ந்தது.

ஈ) வெளித்தோற்றத்தில் இஸ்லாத்தையும் உள்தோற்றத்தில் நிராகரிப்பையும் கொண்ட நயவஞ்சகர்கள்.
இவர்கள் மனிதர்களுக்கு தடுமாற்றத்தையும், அவர்கள் அறியாதவண்ணம் அவர்களின் விவகாரங்களில் மோசடியையும் உண்டுபண்ணுவதில் இப்பிரிவினர் மிகவும் ஆபத்தானவர்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காணமாட்டீர். (அந்நிஸா 4 : 145)

முன் கூறப்பட்ட பிரிவினர்களுள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட சட்டங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் அல்லாஹ்வை மாத்திரம் விசுவாசம் கொள்ளவேண்டுமென்றும், அவனுக்கு எதனையும் இணையாக்காமலும், அவனை நிராகரிக்காமலும் இருக்கவேண்டுமென்று அழைக்கப்படுவார்கள்.

மூன்றாவது தூண்: அழைப்புப்பணியின் உள்ளடக்கம்

இதன் வரைவிலக்கணம்:
மனிதர்களின்பால் அழைக்கின்ற இஸ்லாம், அதன் அடிப்படை, அதன் சட்டங்கள்.

இது மூன்று அம்சங்களை கொண்டுள்ளது

1. கொள்கை சார்ந்தது: ஈமானையும் அதன் ஆறு கிளைகளையும் இது உள்ளடக்கியிருப்பதுபோல் இஸ்லாம் வழங்கியுள்ள கொள்கை சார்ந்த அனைத்து அம்சங்களும் இவ்வகையில் சேர்ந்திருக்கும்.

2. சட்டம் சார்ந்தது: இது தனிமனிதன் அல்லது குடும்பம் அல்லது அனைவர்மீதும் இஸ்லாம் கொண்டுவந்த இஸ்லாமிய சட்டங்களையும், இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைகளையும் பொதிந்துள்ளது.

3. நல்லறம் சார்ந்தது: இவை இஸ்லாம் தந்த நற்குணங்கள், அழகியபண்புகள், நேரான பாதைகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

வினாக்கள்:-

1. அழைப்பாளன் தனது அழைப்புப்பணியின் திட்டங்கள், அதன் போக்குகள் போன்றவற்றை பெறும் மூலாதாரங்களை கூறுக!

2. அழைப்புப்பணிக்கு மூன்று அடிப்படைகள் உள்ளன. அவற்றை எழுதுக!

3. அழைப்பாளனுக்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது. இக்கருத்தை ஒரு ஆதாரத்தின்மூலம் நிருபிக்கவும்!

4. அழைப்பாளரிடம் கட்டாயம் காணப்படவேண்டிய நான்கு பண்புகளையும் ஆதாரத்துடன் விளக்குக!

5. அழைப்புப்பணி செய்வதற்கு மனிதர்களில் மிகவும் தகுதியானவர் யார்? என்பதை ஆதாரத்துடன் விளக்குக!

6. அழைக்கப்படுபவருக்கு சில உரிமைகளும், அவர்மீது சில கடமைகளும் உள்ளன. அவைகளை கூறுக!

7. அழைக்கப்படுவோர் வகையினர்களில் ஒவ்வொரு பிரிவையும், அதன் உட்பிரிவுடன் கூறுக!

அழைப்புப்பணியின் உள்ளடக்கம் மூன்று அம்சங்களை சார்ந்துள்ளது. அவற்றையும் கூறுக!

அழைப்புப்பணியின் போக்குகள் – வழிமுறைகள்

இதன் வரைவிலக்கணம்:
அழைப்பாளர் தனது அழைப்புப்பணியில் செல்லக்கூடிய வழிமுறைகளாகும்.

இதன் வகைகள்:
அழைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சில தலைப்புக்களை நாம் இங்கே சுருக்கமாக குறிப்பிடுகின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தை கொண்டும் உமது நாயனின் வழியில் மக்களை அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ அதைக்கொண்டு நீர் அவர்களுடன் விவாதம் செய்வீராக! (அந்நஹ்ல்:- 16 : 125)

முதல் வழிமுறை: ஞானம் – விவேகம்

இதன் வரைவிலக்கணம்:
பொருட்களை அதற்குரிய இடங்களில் வைப்பதற்கு ”’ஹிக்மா” (ஞானம்) விவேகம்எனப்படும். அல்லது அறிவு, சிந்தனையைக்கொண்டு சத்தியத்தை அடைவதாகும்.

அதன் தோற்றம் அதாவது அதன் வெளிப்படையான நிலை:
ஞானத்தின் – விவேகத்தின் போக்குகள் வெளிப்படையான பல நிலைகளை கொண்டதாகும். ஏனெனில் ஞானம்- விவேகம் என்பது சொல்லிலும், செயலிலும் உயர்வானதாகும்.

ஞானத்தின் – விவேகத்தின் வெளித்தோற்றங்களை பின்வரும் அம்சங்களைக்கொண்டு அறிந்துகொள்ளலாம்

1. முதன்மையானவைகளை இனங்கண்டு, முக்கியத்துவம் வாய்ந்தவைகளைவிட அதிமுக்கியத்துவம் வாய்ந்தவைகளை முற்படுத்துதல்.

வணக்க வழிபாடுகள், நல்லறங்கள் போன்றவற்றைவிட நம்பிக்கை சார்ந்த விசயங்களை முற்படுத்துதல். சுன்னத்தானவைகளைவிட பர்ளானவைகளை முற்படுத்துதல். வெறுக்கப்பட்டவைகளைவிட தடுக்கப்பட்டவைகளை முற்படுத்துதல். சுயநலமும், பொதுநலமும் முரண்படும்போது பொது நலத்தை முற்படுத்துதல். நலவுகளை ஏற்படுத்துவதைவிட அதனால் ஏற்படும் தீமைகளை தடுப்பதை முற்படுத்துதல் போன்ற நிலைகளை கூறமுடியும்.

இவையனைத்தும் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் அழைப்புப்பணியின் செயல்வடிவமாக இருந்தது என்பதை காட்டுகின்றது. இப்பணி கொள்கையின் அடிப்படையில் ஆரம்பித்து பின்பு மார்க்க சட்டத்தின்பால் திரும்பியது.

நபிகளார் (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களுக்கு ஆரம்பத்தில் ஈமானைக்கொண்டும், பின்பு தொழுகையைக்கொண்டும், பின்பு ஸகாத்தைக்கொண்டும் இவ்வாறே ஏனையவைகளையும் கற்றுக்கொடுத்த ஹதீஸும் இதனையே அறிவிக்கின்றது. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்)

2. மனிதர்களின் பிரச்சினைகளையும், பொது விசயங்களையும் அவசியம் ஆராய்ந்து பரிகாரம் செய்வதில் முதன்மையானவைகளை அமுல்நடத்துவதில் படிப்படியாக மேற்கொள்ளுதல்.

கடமையான விசயங்களை கடமையாக்குவதிலும், தடுக்கப்பட்டவைகளை தடைசெய்வதிலும் குர்ஆன் படித்தரமாகவே இறங்கியது. கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரழி) அவர்கள் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் பொதுவான அம்சங்களை சீர்படுத்துவதில் படித்தரத்தை மேற்கொண்டதை முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

3. அழைப்புப்பணியின் திட்டம் சகல நிலைகளுக்கும், காலத்திற்கும், சூழலுக்கும் பொருந்தக்கூடியதாக இருத்தல்.

ஆண், பெண், சிறியவர், பெரியவர், அறிஞர், அறியாதவர், நண்பர், பகைவர் இவர்களுக்கிடையில் எவ்வாறு சமமான நிலை இல்லையோ இதேபோன்று பலம், பலவீனம், சமாதானம், யுத்தம், இன்பம், துன்பம் போன்றவை சமமாகாது. இவ்வாறுதான் கால சூழ்நிலைகளும் வித்தியாசங்களை கொண்டதாகும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயிஷாவே! உமது சமுதாயத்தினர் நிராகரிப்பிலிருந்து புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களாக இருந்திருக்காவிட்டால் நான் கஃபாவின் (வளைந்த) சுவரை இடித்துவிட்டு அதற்கு இரு வாயில்களை ஆக்கியிருப்பேன். மக்கள் நுழைவதற்கு ஒருவாயிலும், அவர்கள் வெளியேறுவதற்கு மற்றொருவாயிலும். (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்)

குறிப்பு:-
மேலும் விரிவான விளக்கத்திற்கு ஸஹீஹுல் புஹாரி, இரண்டாம் பாகம் 1584வது ஹதீஸையும், ஏழாம் பாகம் 7243வது ஹதீஸையும் பார்க்கவும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களை அவரவர்களின் தரத்திற்கு அமைவாக நடத்துங்கள். (ஆதாரம்:- முஸ்லிம்)

4. நன்மையை எதிர்பார்ப்பதில் படித்தரங்களை கடைப்பிடித்தல்.

அறிமுகம் செய்தல், பின் அறிவுரை கூறுதல், பின் கடுமையாக நடத்துதல், பின் கையால் தடுத்தல், பின் எச்சரித்தல், பின் அடித்து திருத்துதல் போன்ற நிலைகளை பின்வரும் குர்ஆனிய வசனத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அல்லாஹ் கூறுகின்றான் :
எந்தப் பெண்கள் தங்கள் கணவனுக்கு மாறு செய்வார்கள் என்று அஞ்சுவீர்களோ அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அவர்கள் (திருந்தாவிடின்) அவர்களை படுக்கையில் இருந்து விலக்கிவிடுங்கள். (அதற்கும் திருந்தாவிட்டால்) அவர்களை (காயம் ஏற்படாமல்) அடியுங்கள். அதனால் அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்துவிட்டால் அவர்கள்மீது (குற்றங்களை சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்வானவனாக, மிகப்பெரியவனாக இருக்கின்றான். (அந்நிஸா : 4 : 34)

மேற்கூறப்பட்ட படித்தரங்களை மீறுவது அழைப்புப்பணியிலும், நன்மையை எதிர்பார்ப்பதிலுமுள்ள (ஹிக்மாவை) ஞானத்தை விவேகத்தைவிட்டும் வெளியேறிவிட்டதாகவே கணிக்கப்படும்.

5. சிகிச்சைக்கான சிறந்த போக்கை தெரிவுசெய்வதற்கான காரணிகளையும், அதன் தடைக்கற்களையும் பற்றி ஆராய்தல்.

அறியாதவனுக்கு பரிகாரம் செய்யும் போக்கு பகைவனுக்கு பரிகாரம் செய்யும் போக்கிலிருந்தும், பொடுபோக்கான பலவீனமானவனுக்கு பரிகாரம் செய்யும் முறை பிடிவாதக்காரனுக்கு பரிகாரம் செய்யும் முறையிலிருந்தும் வேறுபட்டதாகும்.

6. தனியாகவும் கூட்டாகவும் செய்யும் அழைப்புப்பணி காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப வித்தியாசப்படும் என்பதை கவனித்தல்.

ஏனெனில் அழைப்புப்பணியின் போக்குகள் ஒருநிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு வித்தியாசப்படும். முஸ்லிம் நாடுகளில் செய்யும் தஃவா பணியின் போக்குகள், முஸ்லிமல்லாத நாடுகள் அல்லது யுத்தம் நடைபெறும் நாடுகளில் செய்யும் தஃவாபணியைவிட வித்தியாசமானதாகும். இஸ்லாமிய நாடுகளில் தஃவாபணி அங்குள்ள உத்தியோகப்பூர்வமான நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் முஸ்லிமல்லாத சில நாடுகளில் அல்லது யுத்தம் நடைபெறும் நாடுகளில் அங்குள்ள இரகசிய நிறுவனங்களின்மூலம் நடைபெறுகின்றது. ஒரு நாட்டிற்கு எதிராக இறை நிராகரிப்பு அல்லது இஸ்லாம் அல்லது அநீதி அல்லது தீமை என தீர்ப்பளிப்பது இஸ்லாமிய சமூகத்தின் ஒட்டுமொத்த பிரஜைகளையும் சார்ந்த ஒன்றேதவிர தனி மனிதர்களை சார்ந்தவையாக கொள்ளமுடியாது.

7. அழைப்பாளர் நற்குணங்களை அணிகலன்களாக ஆக்கிக்கொள்வதற்கு ஆர்வங்காட்டுவதும், அதற்காக உள்ளத்துடன் போராடுவதும், பொருத்தமான இடங்களில் பொருத்தமான குணஒழுங்குகளை தெரிவுசெய்வதும் ஞானத்திலுள்ளதாகும் – விவேகத்திலுள்ளதாகும். மேலும் மென்மை, இரக்கத்திலிருந்து கடுமையையும், கொடுரத்தையும் கடைப்பிடித்தல். மன்னித்தல் பெருந்தன்மை ஆகியவற்றிலிருந்து கடுமை, பலாத்காரம் ஆகியவற்றிற்கு மாறிச்செல்வதும் ஞானத்திலுள்ளதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :
நபிகளார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார். அவர்களுடன் இருப்பவர்கள் காபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையில் இரக்கமிக்கவர்கள். (அல் பத்ஹ் : 48 : 29)

எனவே மென்மையின் இடத்தில் கடுமையை பயன்படுத்துவதும், கடுமையான இடத்தில் மென்மையை பயன்படுத்துவதும் ஞானமல்ல – விவேகமல்ல.

8. அழைப்பாளர் தனது காலத்தில் அனுமதிக்கப்பட்ட, எளிதாக கிடைக்கக்கூடிய சகல சாதனங்களையும், அதனை இறக்குமதிசெய்வோர், தயாரிப்போர் எவராயினும் சரியே, அவற்றை பயன்படுத்தி தஃவாசெய்வது ஞானமாகும் – விவேகமாகும். அவரது அழைப்புப்பணியை மேற்கொள்வதற்கு இச்சாதனங்கள் கிடைத்ததற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டும்.

இரண்டாம் வழிமுறை: அழகிய அறிவுரைகள்

இதன் வரைவிலக்கணம்:
நல்லுபதேசத்திற்கு நேர்பாடானதாகும் – ஒத்ததாகும்.

இதன் வெளித்தோற்றம்:

இதற்கு பல வடிவங்கள் உள்ளன

1. மென்மையான, இரக்கமான, தெளிவான வார்த்தை.

அல்லாஹ்கூறுகின்றான் :
மனிதர்களுக்கு அழகானதை சொல்லுங்கள் (அல்பகறா 2 : 83 )

2. சமிக்கை, மறைவான வார்த்தைகளால் உணர்த்துதல்.

3. தாக்கத்தை ஏற்படுத்தும் உரையும், சம்பவமும்.

4. புகழ்தல், இகழ்தல்.

5. ஆர்வமூட்டுதல், அச்சமூட்டுதல்.

6. உதவி, ஏற்றுக்கொள்ளுதல், பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றைக்கொண்டு முடியுமானளவு வாக்களித்தல். மேலும் அழைக்கப்படுபவர்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை அழைப்புப்பணிக்கு அல்லது அழைப்புக்கு விடையளிப்பதற்கு இட்டுச்செல்லக்கூடிய அம்சங்களுமாகும்.

உதாரணமாக பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த கிராமவாசியின் சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைபிடித்ததும் அதற்கு நபிகளார்(ஸல்) அவர்கள்; அவர் சிறுநீர் கழித்துமுடியும்வரை அவரை விட்டுவிடுங்கள் எனக்கூறினார்கள். பின்னர் நபிகளார் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து கூறினார்கள். நிச்சயமாக பள்ளிவாசல்கள் சிறுநீர் கழிப்பதற்கும், அழுக்கடையச் செய்வதற்குமுரிய இடமில்லை. நிச்சயமாக இவை அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதற்கும், தொழுவதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும் உரியதாகும். (ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்)

மூன்றாவது வழிமுறை: அழகான முறையில் விவாதித்தல்

இதன் வரைவிலக்கணம்:
ஒரு மனிதன் ஆதாரத்தினால் அல்லது சந்தேகத்தை உண்டுபண்ணுவதால் தனது எதிரியை முறியடிப்பதாகும்.

இதன் வகைகள்:

சத்தியத்தில் அமையும் அல்லது அசத்தியத்தில் அமையும் அறிஞர்கள் விவாதத்தை அதன் முடிவு, போக்கு அது இட்டுச்செல்லும் அடிப்படையில் புகழுக்குரியது, இழிவானது என இரு பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

தர்க்கம்: சத்தியத்தையும் அதன் வெற்றியையும் நோக்கமாகக்கொண்டதாகும். சரியான போக்குகள் நன்மையின்பால் இட்டுச்செல்கின்றது இது புகழப்பட்ட தர்க்கமாகும். இவையல்லாதது இகழப்பட்ட தர்க்கமாகும். இதனால்தான் அழகிய முறையில் தர்க்கம் செய்யவேண்டுமென குர்ஆனில் குறிப்பிட்டு அவனது கட்டளை வந்துள்ளது.

தர்க்கத்தை எப்போது பயன்படுத்த வேண்டும்?
விமர்சனம் அல்லது விவாதம் அல்லது உரையாடல் போன்றவற்றின்மூலம் இதனை வெளிப்படுத்தமுடியும். எவருடன் தர்க்கம் செய்வது பயனுள்ளதோ அவருடனல்லாது இப்போக்கை பயன்படுத்த கூடாது. எவர் நல்லுபதேசத்திற்கு விடையளிக்கின்றாரோ அவருடன் தர்க்கம் செய்வது அவசியமில்லை. தர்க்கம் செய்வது மனிதர்களின் இயற்கையாகும். எனவே இது ஆண், பெண், நல்லவர், கெட்டவர், சிறியவர், பெரியவர் அனைவரிலிருந்தும் வெளியாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :
மனிதன் அதிகமாக தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான். (அல் கஹ்ப் : 18 : 54)
நபிமார்கள் தங்களது அழைப்புப்பணியின் போக்கில் தர்க்கத்தை பயன்படுத்தியுள்ளனர்.

அல்லாஹ் கூறுகின்றான்:
(அதற்கு) அவர்கள் நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு வாக்களிப்பதை எங்களிடம் கொண்டுவாரும் எனக்கூறினார்கள். (ஹூத் : 11 : 32)

நபித்தோழர்கள் காலம்முதல் இன்றுவரை அழைப்பாளர்கள் தர்க்கம்செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இழிவான விவாதம் இழிவான விவாதத்தை சேர்ந்ததாகும். அல்லது குர்ஆன், குர்ஆனிய வசனங்களில் விவாதிப்பது போலாகும்.

விவாதிப்பதன் ஒழுங்குமுறைகள் – ஒழுக்கங்கள்

அறிஞர்கள் கூறும் அனைத்து ஒழுக்கங்களும் மூன்று அம்சங்களை உறுதிப்படுத்துகின்றன.

1. தர்க்கம் செய்வதன் நோக்கத்தையும், இலக்கையும் சரிசெய்தல்.

2. அதன் போக்கையும், அமைப்பையும் சீராக்குதல்.

3. நல்ல தாக்கத்தையும், சிறந்த முடிவையும் ஏற்படுத்துதல்.

விவாதப்போக்குகளின் தனித்துவமிக்கவை

1. அறிவிலும், தெளிவிலும் உறுதிகொள்ளுதல் – அறிவின்றி விவாதம் செய்வது கூடாது.

அல்லாஹ் கூறுகின்றான்:
வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமை பற்றி (அவர் யூதரா? கிறிஸ்தவரா? என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றீர்கள்? அவருக்கு பின்னரேயன்றி தவ்ராத்தும், இஞ்ஜீலும் இறக்கப்படவில்லை. (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா? உங்களுக்கு எதில் அறிவு இருந்ததோ அதில் நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள். இப்போது எதில் உங்களுக்கு அறிவு இல்லையோ அதில் ஏன் தர்க்கம் செய்ய முற்படுகின்றீர்கள்? அல்லாஹ்தான் இவற்றை நன்கு அறிந்தவன். நீங்கள் அறியமாட்டீர்கள். (ஆலு இம்ரான் : 3 : 65 – 66)

2. விவாதத்திற்கான ஆதாரத்தை முன்வைப்பதும், அதைவிளங்க வைப்பதும். அசத்தியத்திற்காக கொண்டுவரும் ஆதாரத்தை அல்லது சந்தேகமான ஒன்றை ஆதாரமாக பற்றிப் பிடித்துக்கொள்வதற்கு விட்டுவிடக்கூடாது.

அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் தனக்கு ஆட்சியை கொடுத்ததற்காக (ஆணவம்கொண்டு) இப்ராஹிமிடத்தில் அவருடைய இறைவனைப்பற்றி தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? அதற்கு இப்ராஹீம் எவன் உயிர் கொடுக்கவும், மரணிக்கவும் செய்கின்றானோ அவன்தான் எனது இறைவன் என்று கூறினார். (அப்போது) அவன் ”’நானும்” உயிர்ப்பிக்கவும், மரணிக்கவும் செய்வேன் என்று கூறினான். (அதற்கு) இப்ராஹீம் அப்படியானால் நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்கில் உதிக்கச்செய்கின்றான். நீ அதை மேற்கில் உதிக்கச்செய்! என்று கூறினார். (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் திகைத்து வாயடைத்துப் போனான். மேலும் அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தார்களுக்கு நேர்வழிகாட்டமாட்டான். (அல் பகறா : 2 : 258)

3. வேறுபட்ட தூண்டுகோல்களும், அதற்காக இட்டுச்செல்லும் காரணிகளும்.

அ. உளரீதியான தூண்டுதல்கள்:

குறித்த சிந்தனைப்போக்கில் அதிகமாக திருப்திகாட்டுதல், அல்லது அவசரப்படுதல், அல்லது ஒரு காரியத்தில் ஆச்சரியப்படுதல்.

நபி ஆதம் (அலை) அவர்களின் படைப்பில் மலக்குகள் அல்லாஹ்வுடன் தர்க்கம் செய்ததும், அழைப்புப்பணியினால் ஓரிறைக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதையிட்டு முஷ்ரிகீன்கள் வியப்படைந்தது போன்றவைகளை உதாரணமாக கூறமுடியும். சிலவேளை மன உளச்சல், பெருமை, பொறாமை, பரிகசித்தல், சத்தியத்தையும், சத்தியவான்களையும் இழிவுபடுத்தல் போன்றவற்றின்மூலம் ஏற்படும். பத்ர் தினத்தன்று சில முஃமீன்களுக்கு ஏற்பட்டதுபோல் ஒன்றை வெறுப்பது அல்லது பயப்படுவது உளரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஆ) அறிவார்ந்த தூண்டுதல்கள்:

உதாரணமாக: பயனடைதல், அறியாதவைகளை கேட்டல் அல்லது ஆதாரங்களுடன் விமர்சனம் செய்து மிகச்சரியானதை தெரிவுசெய்தல், பல தலைப்புகளிலிருந்து ஒரு தலைப்பிலுள்ள சந்தேகங்களை நீக்குதல்.

இ. சமூக தூண்டுதல்கள்:

உதாரணமாக: சொல், அபிப்பிராயம், மத்ஹப் அல்லது பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் வழிமுறையை பின்பற்றுவதில் ஆக்ரோஷமாகவும், பிடிவாதமாகவும் இருத்தல் அல்லது வீரத்தை காட்டுதல். இதனால்தான் அழைப்பாளர் தனது தோழர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காக தர்க்கம் பற்றிய யுக்திகளை அறிந்திருப்பது அவசியமாகும். அவற்றை நாம் அழைப்புப்பணியின் போக்குகளில் ஞானத்தின் வெளிப்பாடு என்ற தலைப்பில் முன்னர் குறிப்பிட்டுள்ளோம். முஃமீன்களுக்கிடையிலும் அல்லது முஃமீன்களுக்கும் காபிர்களுக்கிடையிலும் தர்க்கம் செய்தல் பற்றிய அதிகமான உதாரணங்கள் குர்ஆன் ஸுன்னாவில் காணப்படுகின்றன. எனவே அழைப்பாளர் இதனடிப்படையில் இவைகளை கற்றுக்கொள்வதும், இவைகளின் மூலம் படிப்பினை பெறுவதும் கட்டாயமாகும்.

நான்காவது வழிமுறை – சிறந்த முன்மாதிரி

இதன் வரைவிலக்கணம்:
பிறர் எதனால் கவரப்பட்டு அதுபோன்று தனது வாழ்விலும் கடைப்பிடிக்கின்றாரோ அதற்கு முன்மாதிரி என்று கூறப்படும். இங்கு தீய முன்மாதிரியை நீக்குவதற்காக அழகிய முன்மாதிரி வரையறுக்கப்பட்டுள்ளது.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஒருவர் இஸ்லாத்தில் அழகிய வழிமுறையை செயல்படுத்தினால் அதற்கான கூலியும், அவருக்குப்பிறகு அச்செயலை செய்வோரின் கூலியும் அவருக்கு உண்டு. இதனால் செய்வோரின் எந்தக்கூலியும் குறைக்கப்படமாட்டாது. மேலும் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு தீய செயலை அறிமுகம் செய்தால் அதற்கான பாவமும், அதை செய்வோரின் பாவமும் அவர்களின் பாவம் ஏதும் குறைக்கப்படாத அளவிற்கு அவருக்கு உண்டு எனக்கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

அழகிய முன்மாதிரியின் வகைகள்

இது இருவகைப்படும்.
1) பொதுவான அழகிய முன்மாதிரி:
அதாவது வழிதவறுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இவர்கள் நபிமார்கள், தூதர்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
அல்லாஹ்வையும், இறுதிநாளையும் ஆதரவுவைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கின்றது. (அல் அஹ்ஸாப் : 33 : 21)

2. வரையறுக்கப்பட்ட அழகிய முன்மாதிரி
அதாவது பாவத்தைவிட்டும் பாதுகாக்கப்படாதவர்கள். உதாரணமாக நல்லோர்களின் நிலையாகும். இவர்களிலுள்ள சில அம்சங்களை விட்டுவிட்டு சிலதை பின்பற்றலாம். ஏனெனில் இவர்களில் தவறு நிகழ்வதற்கு இடம்பாடுள்ளது.

அழகிய முன்மாதிரிக்கான முக்கியத்துவம்
1) முன்மாதிரியின் தாக்கம் பாமரன் உட்பட பல்வேறு தகுதியின் அடிப்படையில் மக்கள் அனைவரிடத்திலும் பொதுவாக அமைந்திருக்கும் ஓர் அம்சமாகும். எனவே ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஒருவரை தெரியாவிட்டாலும் அவரது செயலை எடுத்துக்கூறி அவரை பின்பற்றுவதற்கு முடியும்.

2) மனிதர்களின் இயல்பும், இயற்கையும் வாசித்தல், கேட்டல் ஆகியவற்றைக் கொண்டு தாக்கம் பெறுவதைவிட முன்மாதிரியினால் தாக்கம் பெறுவது அதிகமாகும். அதிலும் அது செயல்சார்ந்த அம்சங்களில் அதிகம் காணப்படும்.

3) தூதர்களை அனுப்பியும், வேதங்களை இறக்கியும் போதுமாக்காமல் நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களையும், தூதர்களையும் செயல்வடிவமான வணக்கத்திற்கு முன்மாதிரியாகவும் ஆக்கினான்.

அல்லாஹ் கூறுகின்றான்:
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான். இதனால் இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக! (அல் அன்ஆம்:- 6 : 90)

சிறந்த முன்மாதிரிக்கான சிறப்பம்சங்கள்

1. எவரைக்கொண்டு பின்பற்றப்படுகின்றதோ அவரிலிருந்து, அவரை பின்பற்றுவோர் பக்கம் நன்மையை விரைவாக கொண்டு செல்லுதல்.

2. குறிப்பாக நுட்பமான செயல்சார்ந்த அம்சங்களை எடுத்து நடப்பதில் ஆரோக்கியமும், உறுதியில் உத்தரவாதமும்.

இதனால்தான் நபிகளார் (ஸல்) அவர்கள் தனது சமூகத்தாருக்கு இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களில் சிலதை கற்றுக் கொடுப்பதில் உறுதியாக இருந்தார்கள். உதாரணமாக : தொழுகை, ஹஜ் போன்ற கடமைகளில் அவர்களை பின்பற்றுவதாகும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னை நீங்கள் எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள். (ஆதாரம் : புஹாரி)

ஹஜ்ஜை பற்றிக்கூறும் போது உங்கள் வணக்கவழிபாடுகளை என்னிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். (ஆதாரம் :- புஹாரி, முஸ்லிம், நஸாயி)

3. மனித உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை உண்டாக்குவதும், செயல்வடிவமான கருமங்களுக்கு விரைவாக பதிலளிக்க தேடுவதும்.

மக்கள் தன்னை செயல் வடிவமாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக நபிகளார் (ஸல்) அவர்கள் முடியை சிரைத்து இஹ்ராத்திலிருந்து விடுபட விரைந்ததை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுகின்றார்கள். (ஆதாரம்:- புஹாரி)

மேலும் அவர்கள் மக்கா வெற்றியின்போது பால் அல்லது தண்ணீர் பாத்திரத்தை கொண்டு வரச்செய்து மக்கள்முன் அதனை அருந்தி நோன்பை திறந்தார்கள். எனவே மக்களும் அவர்களுடன் நோன்பை திறந்தார்கள். (ஆதாரம்:- புஹாரி)

வினாக்கள் :

1) பின்வரும் கலை சொற்களுக்கான வரைவிலக்கணத்தை எழுதுக!

அ) அழைப்புப்பணியின் வழிமுறைகள் – போக்குகள்.

ஆ) ஞானம் – விவேகம்

இ) நல்லுபதேசம்

ஈ) விவாதித்தல்

உ) அழகிய முன்மாதிரி

2 ஞானத்திற்கு விவேகத்திற்கு பல தோற்றங்கள் உள்ளன. அவற்றில் நான்கை ஆதாரத்துடன் எழுதுக!

3. அழகிய முன்மாதிரிக்கு பல தோற்றங்கள் உள்ளன அதில் மூன்றை கூறுக!

4. விவாதப்போக்குகளின் தனித்தன்மைகளை கூறுக!

5. அழகிய முன்மாதிரியின் பிரிவுகளைக் கூறி, எதற்காக அழகிய முன்மாதிரியின் போக்கு முக்கியத்துவம் பெறுகின்றது? என்பதை எழுதுக!

இப்பாடத்திட்டத்தினை அரபு மூலம் வழங்கிய மேன்மைக்குரிய அஷ்ஷைக் காலித்அல்உமைரி அவர்களுக்கும், தமிழாக்கத்தை மேலாய்வு செய்துதவிய கண்ணியத்திற்குரிய சகோதரர் மௌலவி எம். ஜே. எம். ரிஸ்வான் அவர்களுக்கும், கணினி வடிவமைத்த அன்புக்குரிய சகோதரர் எஸ். முஹம்மத் இக்பால் அவர்களுக்கும், இதனை கற்கும் நேசத்திற்குரிய மாணவர்களுக்கும், வாசித்து பயன்பெறும் சகோதர சகோதரிகளுக்கும் கனிவுடன் என் நன்றியை தெரிவிப்பதோடு, அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் ஈருலகிலும் பேரருள் புரிவாhனாக! என பிரார்த்திக்கும் உங்கள் சகோதரர் ”ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம்”.
01-05-1423 ஹிஜ்ரி ; 11-07-2002

அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப்புகழும் வல்ல அல்லாஹ்விற்கே !!!

2 comments

  1. Very very useful. Keep up the good work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *