Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » மீலாதும் மவ்லிதும் – ஓர் இஸ்லாமிய பார்வை [e-Book]

மீலாதும் மவ்லிதும் – ஓர் இஸ்லாமிய பார்வை [e-Book]

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.!

எல்லாப் புகழும் எத்துதியும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர், உத்தமத் தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!

இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். குர்ஆனும், சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள். இஸ்லாத்தின் பெயரில் எந்த வணக்க வழிபாட்டைச் செய்வதென்றாலும் அதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்தே ஆதாரத்தையும், வழிகாட்டலையும் பெற வேண்டும்.

குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டலில் இல்லாத, இஸ்லாத்தின் பெயரில் புகுத்தப்பட்ட அனைத்துப் புதிய கொள்கைகளும், வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்படாத பித்அத்துக்களாகும். பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் இறுதியானதும் உறுதியானதுமான முடிவாகும்.

நபியவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு மவ்லிது ஓதுவதும், விழாக்கள் கொண்டாடுவதும் மீலாது விழா எடுப்பதும் பித்அத்தான நடைமுறையாகும். நபி (ச) அவர்களுக்கு மட்டுமன்றி ஷாஹுல் ஹமீத் முகைதீன், அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) போன்ற மகான்களின் பெயரிலும் மவ்லிதுகள் ஓதப்பட்டு மீலாத் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவை அத்தனையும் வழிகேட்டை விளைவிக்கும் நூதன வழிபாடுகளாகும்.
இந்நூலில் மவ்லிதில் உள்ள வழிகேடுகள் சுருக்கமாக விபரிக்கப்பட்டுள்ளன.

இந்த நூல் பல வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும். 1995 காலப்பகுதியில் மருதமுனையில் ஒரு விவாதம் நடந்தது. அதில் இள வயதுடைய நானும் ஒருவனாகக் கலந்து கொண்டேன். இரண்டு நாட்கள் நான்கு தலைப்புக்களில் விவாதம் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. இருப்பினும் ஒரு தலைப்புக் கூட முழுமையாக விவாதிக்கப்படாமல் விவாதம் முடிவுற்றது.

அதுதான் நான் கலந்து கொண்ட முதலும் இறுதியுமான விவாதமாகும். அந்த விவாதத்தில் நான் எதுவும் பேசவில்லை. இருப்பினும் எனக்கு விவாதம்
சரிப்பட்டு வராது என்ற ஓர் உறுதியான முடிவை எடுக்கும் அளவுக்கு எனக்கது படிப்பினையாக அமைந்தது. அந்த விவாதத்திற்காக தயாரான தலைப்புக்களில் மவ்லிதும் ஒன்று. அதை ஒரு சிறு நூலாக வெளியிட வேண்டும் என்று தொகுத்தேன். பின்னர் அந்த கையெழுத்துப் பிரதி
காணாமல் போனது. மீண்டும் கிடைத்த போது அதை அப்படியே உண்மை உதயத்தில் வெளியிட்டேன். தற்போது அந்தக் கட்டுரையையும் மற்றுமொரு தனிக் கட்டுரையையும் இணைத்து சிறு நூலாக வெளியிட்டுள்ளேன்.

எனது பழைய கட்டுரையில் அப்போது நான் வாசித்து வந்த தமிழ் நூற்களின் வசன நடைச் செல்வாக்கு உள்ளது. அதில் பாரிய மாற்றம் எதுவும் செய்யாமல் வெளியிட்டுள்ளேன்.

இந்நூலை நடுநிலையாக வாசிக்கும் நண்பர்கள் மவ்லித், மீலாத் என்பன இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தான அம்சங்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

வழமை போன்று எனது இந்நூலையும் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா வெளியிடுகின்றது. அதன் அமீர் அஷ்ஷெய்க் N.P.M. அபூபக்கர் சித்தீக் மதனி மற்றும் கௌரவ செயலாளர் A.L கலீலுர் ரஹ்மான் MA அவர்களுக்கும், கணனி வடிவமைத்துத் தந்த சகோதரர் M.D.M. அஸ்லம் அவர்களுக்கும், மொழி வழுக்களைச் சீர்செய்து தந்த A. L.அப்துஸ்ஸலாம் ஆசிரியர் மற்றும் உண்மை உதயம் மாத இதழின் துணை ஆசிரியர் S. ஹுஸ்னி முஹம்மத் ஸலபி அவர்களுக்கும் இந்நூலைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நூல் மூலம் சத்திய இஸ்லாத்தை எமது சகோதரர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

இவன்,
SHM இஸ்மாயில் ஸலபி
ஆசிரியர், உண்மை உதயம்
இல. 88/2, பாடசாலை வீதி, பரகஹதெனிய

 

தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்…
மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *