Featured Posts
Home » வரலாறு » ஷிஆக்கள் » கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் முதல் புரட்சி | தொடர்-01

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் முதல் புரட்சி | தொடர்-01

நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் நல்லாட்சி செய்த உத்தம கலீபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலில் நபித்துவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்தரர்கள் மக்களுக்கு நீதத்தை வழங்கினார்கள். நியாயமாக நடந்தார்கள். மக்களின் பிரார்த்தனைக்கும் ஆளானார்கள்.

இஸ்லாம் அரபு தீபகற்பைத்தையும் கடந்து ரோம் பாரசீகம் மற்றும் ஷாம் பகுதிகளையும் வெற்றிக் கொண்டு மக்களுக்கு அமைதியை கொடுத்தது. பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்திற்குள் ஏகஇறைகொள்கையும் ஷரீஅத் கோட்பாடுகளும் அப்பழுக்கற்றதாக ஆட்சி செய்தது. மக்கள் அமைதி கண்டனர். நேசத்தை பரிமாறினர். ஒன்றுப்பட்டு வாழ்ந்தார்கள்.

தென்றல் காற்றில் தெம்புடன் வாழ்ந்த மக்களுக்கு திடீரென புயல் காற்று வீசத் தொடங்கியது. எதிர்பாராத புயலால் மக்கள் நிம்மதியை இழந்தனர்;. அமைதியை தொலைத்தனர் ஆம்! உஸ்மான்(ரலி) அவர்களின் காலத்தில் யமனில்; சன்ஆ எனும் பகுதியில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறி –நயவஞ்சகத்தனமாக நடமாடி – முஸ்லிமாக தன்னை காட்டிக் கொண்டு ஊடுருவினான்.

நபிகளாருக்குப் பின் அவரது மருமகன் அலி (ரலி) தான் ஆட்சிக்கு தகுதியானவர். முன் சென்ற கலீபாக்களும் உஸ்மானும் அப்பதவியை தட்டிப்பறித்தனர். எனவே உஸ்மானை பதவியிலிருந்து அகற்ற வேண்டும். அலிக்கு ஆட்சியை கொடுக்க வேண்டும் எனக்கூறி தன்னுடைய ஆதரவாளர்களை மக்கா மதீனாவை தவிர்ந்த கூபா பஸரா மிஸ்ரு ஈராக் போன்ற ஏனைய பகுதிகளுக்கு அனுப்பி கிளர்ச்சிக்கு தூபமிட்டான்.

மார்க்கத்தின் அடிப்படைகளை நன்கு அறியாத சரிவர புரியாத மக்கள் இவனது வேஷத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் சூழ்ச்சிகளை அறியாது பலியானார்கள். ஆட்டு மந்தைக்குள் ஓனாய் புகுந்த கதை மாதிரி ஒற்றுமையாகவும் ஓரணியாகவும் நின்று வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகத்திற்குள் குழப்பத்தை தோற்றுவித்து பிளவுக்கு வழிவகுத்தான்.

இப்னு ஸபா தன் யூதக் கொள்கையை மறைத்து இஸ்லாமிய கொள்கையை மாசுப்படுத்த முனைந்த பரிசுத்தமான ஒரு நயவஞ்சகன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்கள் தங்களை முஸ்லிம்களாக காட்டிக் கொண்டு இஸ்லாமை அழிக்கவும் முஸ்லிம்களை பழிதீர்க்கவும் முனைந்த போது அல்லாஹ் தனது நபிக்கு வஹி அறிவித்துக் கொடுத்து நயவஞ்சகர்களின் முகத்திரையை கிழித்துக் காட்டினான். இன்று வஹி வராது என்ற நம்பிக்கையிலும் அவ்வளவு சுலபமாக மக்கள் தன்னை அடையாளம் காண மாட்டார்கள் என்ற விசுவாசத்திலும் இப்னு ஸபா செயற்பட துவங்கினான். ஆனால் வஹியை சுமந்தவர்கள் வஹியின் நிழலில் வாழ்ந்தவர்கள் இந்த உம்மத்தின் சாட்சியாளர்களான சஹாபாக்கள் வாழ்கிறார்கள் என்பதை இப்னு ஸபாவும் அவனது கூட்டமும் மறந்துவிட்டது.

இப்னு ஸபா பற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறும் போது: அப்துல்லாஹ் இப்னு ஸபா நயவஞ்சகனாகவும் சிந்தீக்காகவும் (இறை நிராகரிப்பை மறைத்து ஈமானுள்ளவன்போல் தன்னை காட்டிக்கொள்பவனாகவும்) இருந்து மார்க்கத்தை நாசப்படுத்த முனைந்தவன். பவ்ல் என்பவர் யூதராக இருந்து கிறிஸ்தவராக தன்னைக் மாற்றிக் கொண்டு கிறிஸ்தவ மார்க்கத்தை நாசப்படுத்தியது போல் இப்னு ஸபாவும் செயற்பட்டு முஃ.மின்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினான்

1. இப்னு ஸபா ஒரு யூதன் என்று பின்வரும் இமாம்களும் குறிப்பிடுகிறார்கள்

  • இமாம் இப்னு தபரி(ரஹ்) – (நூல்: தாரிக் தபரி 4 / 340)
  • இமாம் இப்னு அஸாகிர் (நூல்: தாரிக் திமிஷ்க் 29 / 10)
  • இமாம் இப்னுல் அஸீர்(ரஹ்) -(நூல்: அல்காமில் 3 / 77)
  • இமாம் பக்தாதி (ரஹ்) – நூல்:அல்பர்க் பைனல் பிரக் 235
  • இமாம் இப்னுல் கல்தூன் (ரஹ்) (நூல்: தாரிக் இப்னு கல்தூன் 2 / 587)
  • இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) (நூல்: மஜ்மஉ பதாவா)
  • இமாம் ஷஹ்பி(ரஹ்) (நூல்: அல் பர்க் பைனல் பிரக் 1 / 225

மேலும் ஷீஆக்களின் தலைவர்களான நவ்பஹ்தி, கிஷ்ஷி , அல்கும்மீய் ஆகியோரும் அவர்களுடைய நூலில் குறிப்பிடுகிறார்கள்.

2. நபி(ஸல்) அவர்களின் குடும்பத்திற்கு (அஹ்லுல் பைத்களுக்கு) மக்கள் மத்தியிலுள்ள மதிப்பையும் மரியாதையும் முதன்மைப்படுத்தி தனது பிரச்சாரத்தை முடக்கிவிட்டான் இப்னு ஸபா.

நபி(ஸல்) அவர்களுக்குப் பின் அலி (ரலி) அவர்களுக்கு (விலாயத்) ஆட்சியினை கொடுக்காது அத்தலைமைத்துவத்தை அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகிய மூன்று கலீபாக்களும் ஏனைய சஹாபாக்களும் அநீதமிழைத்துள்ளனர். அலி (ரலி) சிறந்தவர், ஆட்சிக்கு தகுதி வாய்ந்தவர் நபி(ஸல்) அவர்களால் வஸீயத்து செய்யப்பட்டவர். (இப்போது) உஸ்மான் ஆட்சியை உரிமை இன்றி எடுத்துக் கொண்டுள்ளார். எனவே நீங்கள் எழுந்து விடுங்கள். அவரை பதவி நீக்கம் செய்து விடுங்கள் மேலும் ஈஸா நபி மீண்டும் பூமிக்கு வருவார் என நம்புகிறார்கள். இது ஆச்சரியமாகும்.  ஈஸா நபியை விட முஹம்மத் நபி தான் பூமிக்கு திரும்பவருதற்கு தகுதியானவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீண்டும் உலகிற்கு திரும்பி வருவார் என்றான்.

3. கூபா மக்களிடம் இப்னு ஸபா பேசும்; போது ஒவ்வொரு நபிக்கும் வஸீயத் செய்யப்பட்டவர் உள்ளார். அலி (ரலி) முஹம்மத் நபியினால் வஸீயத் செய்யப்பட்டவர் முஹம்மத் நபி நபிமார்களில் சிறந்தவர் போல் அலியும் வஸீயத் செய்யப்பட்டவர்களில் சிறந்தவராவார். இதனை நான் தவ்ராத்தில் கண்டுள்ளேன் என்றான்.

4. அறிஞர் இஹ்ஸான் இலாஹி (ரஹ்) அவர்கள், இப்னு ஸபாவின் வருகைப்பற்றியும் அவனது போதனைப்பற்றியும் ஷீஆக்களின் இமாம்களான அல் கிஷ்ஷீ, மாம்கானீ மற்றும் நவ்பஹீ ஆகியோர் எழுதிவைத்துள்ள நூல்களை மேற்கோள் காட்டி பின்வருமாறு விளங்கப்படுத்துகிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஸபா யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவியவன். இவன் அலி (ரழி) அவர்கள் தலைவராக வேண்டும் என்று கூறினான். இவர் யூதராக இருக்கும் போதே நபி மூஸா (அலை) அவர்களுக்குப் பின் வாரிசாக வரவேண்டியவர் யூஷஉதான் என்று வாதாடி வந்தான். அவன் முஸ்லிமான பிறகு முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பிறகு அலி (ரழி) அவர்களே வாரிசாக வேண்டும் என்றும் வாதிட்டான்.

அலி (ரழி) அவர்களை முதலாவது இமாம் என்று ஏற்பது கடமை என்று முதன் முதல் பகிரங்கமாகக் கூறியவரும் இவரே. அலி (ரழி) அவர்களின் எதிர் கட்சியினரோடு (சஹாபாக்களோடு) தமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லையென்று கூறி அவர்கள் காபிர்கள் என்று கூறியதும் ஷீஆக் கொள்கையும் ராபிளீக் கொள்கையும் யூதரின் கொள்கையிலிருந்து வந்தன என்று கூறப்படவும் இதுவே காரணமாகும்….

கலீபா உஸ்மான் (ரழி) அவர்களை எதிர்ப்போர் எகிப்தில் உள்ளனர் என்பதை அறிந்ததும், அப்துல்லாஹ் இப்னு ஸபா அங்குசென்று, பேரறிஞராகவும் இறைபக்தராகவும் நடித்தான். மக்கள் இவனுடைய வேஷத்தில் மயங்கினர். தன்னுடைய நிலைமை அங்கே ஸ்திரமானதும், தன் கொள்கையை அம்மக்களிடையே (பின்வருமாறு) முன்வைத்தான்..

ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு வாரிசும் பிரதிநிதியும் உண்டு. முஹம்மத் (ஸல்) அவர்களின் வாரிசும் பிரதிநிதியும் அலி (ரழி) அவர்களேயன்றி வேறு எவருமில்லை. அவர்களே அறிவில் சிறந்தவர். தீர்ப்பு வழங்க வல்லவர். வீரத்திலும் கொடையிலும் அழகுமிக்கவர். இறை பக்தியிலும் நம்பிக்கையிலும் பெயர் பெற்றவர்.

மேலும் இச்சமூகம் அலி (ரழி) அவர்களுக்கு அநீதி இழைத்தது. கிலாபத்திலும் விலாயத்திலும் அவர்களுக்கிருந்த உரிமையைப் பறித்துக் கொண்டது. ஆகவே இப்பொழுது அவர்களுக்கு உதவி செய்து, உஸ்மானைப் பதவி நீக்கம் செய்து, அவர்களுக்கு கலீபா பதவியைக் கொடுத்தல் சகல மக்கள் மீதும் கடமையாகும் எனப்பிரசாரம் செய்யலானான்.

5. அபூபக்கரும் உமரும் அலிக்கு கிலாபத் பொறுப்பை கொடுக்காமல் தட்டிப் பறித்து அநீதி இழைத்து விட்டு அலியிடம் மன்னிப்புக் கோராமலே மரணித்து விட்டனர்.அவ்விருவர் மீதும் அல்லாஹ்வினதும் மக்களினதும் சாபம் உண்டாகட்டும் என்றனர்.

6. பொதுவாக, ஒரு கூட்டம் ஒருவிடயத்தில் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் பின்பற்றுவதையே அரபு மொழியில் ஷீஆ எனப்படும். இதனடிப்படையிலேயே இப்னு சபாவின் இப்பிரச்சார்திற்கு பின்னால் சென்று ஆதரவு தெரிவித்த கூட்டத்தையே ஷீஆக்கள் என அழைக்கப்பட்டனர்.

7. இமாம் இப்னு ஹஜர்( ரஹ்) அவர்கள் கூறும் போது அலி (ரலி) அவர்கள் மீது நேசம் காட்டி சஹாபாக்களைவிட அலியை முதன்மைபடுத்திய கூட்டத்திற்கே ஷீஆ எனப்படும். மேலும் அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரை விட அலி (ரலி) அவர்களை முதன்மைப் படுத்துபவன் ஷீஆவில் எல்லைமீறியவன் இவனை ராபிழி என்றும் இல்லா விட்டால் ஷீஈ என்றும் அழைக்கப்படும். மேலும் சஹாபாக்களை திட்டுதல் அல்லது கோபித்தல் ராபிழி கொள்கையில் எல்லை மீறியவனாவான். மரணத்திற்குப்பின் மீண்டும் உலகிற்கு திரும்பி வருதல் என்பதும் மிகப் பெரிய எல்லைமீறலாகும்.

8. இப்னுஸபாவும் அவனது செல்லப்பிள்ளைகளான ஷீஆ கூட்டமும் தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷமத்தனமான ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஷீஆக்களின் பிரச்சாரத்திற்கும் அலி (ரலி) அவர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை. இவர்களது பிரச்சாரத்தில் உண்மையிருந்தால் அதனை ஒட்டுமொத்த சஹாபாக்கள் அல்லது அலி (ரலி) அவர்களது குடும்பத்தார் பேசியிருப்பர். உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மருமகன் என்பது போல் அலி (ரலி) அவர்களும் மருமகனாவார். நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களினதும் உமர்(ரலி) அவர்களினதும் மருமகனாவார். உமர்(ரலி) அவர்கள் அலி (ரலி)அவர்களின் மருமகனாவர். அவர்களுக்கிடையே போட்டி பொறாமை வஞ்சகம் குழிபறிப்பு எதுவும் இருக்கவில்லை.

இந்த அஹ்லுல் பைத் குடும்பத்தின் மத்தியில் காணப்பட்ட ஒற்றுமையை சிதைத்து பிரிவினையை ஏற்படுத்தவே ஷீஆக்கள் விழைந்தனர். இதன் முடிவு உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு கொலை செய்து விட்டார்கள். உஸ்மான்(ரலி) அவர்களுடைய கொலையுடன் துவங்கி ஹூசைன்(ரலி) அவர்களுடைய கொலை வரை முடிந்தது. இப்னு ஸபாவின் கூட்டம் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழிவாங்கினார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களை பாதுகாக்க சஹாபாக்கள் களத்தில் குதித்தப் போதும் மதீனாவில் இரத்தம் சிந்தப்படக்கூடாது தனக்காக மக்களின் இரத்தம் வடியக் கூடாது என்பதில் கலீபா உஸ்மான் (ரலி) அவர்கள் உறுதியாக இருந்தது மட்டுமன்றி ஆயுதங்கள் தரித்த சஹாபாக்களையும் ஆயுதங்களை கீழேவைத்துவிடுமாறு உறுதியக கூறினார்கள். (இது தொடர்ப்பான மேலதிக விபரங்களை இத்தொடரில் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம் – இன்ஷா அல்லாஹ்)

அலி(ரலி) அவர்கள் தான் முதன்மை ஆட்சியாளராகவும் அவரது பரம்பரையினர் (ஷீஆ12 இமாம்கள்) தொடர் ஆட்சியாளராகவும் வரவேண்டும் என்று இப்னு ஸபாவும் ஷீஆக்களும் தப்பாக தவறாக போலியாக தயாரித்த சில செய்திகள் உண்டு. அவைகள் எந்த அடிப்டைகளுமின்றி உருவாக்கப்பட்டவை. அது பற்றிய விபரத்தை இறுதியில் காண்போம். (இன்ஷா அல்லாஹ்)

ஷீஆக்கள் அன்று முதல் இன்று வரை இஸ்லாமிய உம்மத்தை கீறி கிழித்து இஸ்லாமிய கிலாபத்தை மற்றும் ஆட்சியை அகற்றிவிடுவதில் பாரிய பங்கினை செலுத்தி வருகின்றனர். இதற்கான நிதர்சனங்களை இன்று மத்திய கிழக்கிலும் காண முடியும். சுன்னி அரபு நாடுகளின் ஆட்சிகளை அகற்றுவதற்கு இன்று தொடுக்கப்படும் பிரச்சாரத்தின் யதாரத்தத்தை படித்தால் இந்த உண்மையை இன்னும் புரிந்து கொள்ளலாம். ஆட்சியாளர்கள் எல்லோரும் எப்போதும் நீதி நியாயமிக்கவர்களாக இருக்கமாட்டார்கள். அநீதி இழைக்கக்கூடியவர்களாகவும் உரிமைகளை பறிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அப்போது மக்கள் ஆட்சியாளர்களுக்குரிய உரிமைகளை கொடுத்து தங்களது உரிமைகளை அல்லாஹ்விடம் கேட்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அரபு ஆட்சியாளர்களின் அநியாங்களை எடுத்துக் கூறி மக்களை ஆட்சிக்கெதிராக கிளப்புவதற்கு நிறைய பிரச்சாரங்கள் ஷீஆக்களாலும் ஷீஆவுக்கு ஆதாரவான இயக்கங்களாலும் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகையவர்கள் ஷிஆவின் பின்னணி பற்றி அறியாததனால் இப்பிரச்சாரத்தை முடியுமான வரை முன்னெடுக்கிறார்கள். மக்களை புரட்சியாளர்களாக அல்லது கிளர்ச்சியாளர்களாக உருவாக்குகிறார்கள்.

சவுதியை நாசப்படுத்தி மக்கா மதீனாவை கைப்பற்றுவது என்ற ஷீஆவின் நீண்ட நாள் திட்டத்தின் விளைவாக ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் கோஷம் தீவிரம் அடைந்துவருகிறது. சவுதியையோ அல்லது ஏதேனும் ஒரு நாட்டை தூக்கிப் பிடிப்பது எமது நோக்கமல்ல. ஆனால் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்படும் ஆட்சி உம்மத்திற்கு எந்த நன்மையையும் கொண்டு வராது என்பதற்கு உஸ்மான்(ரலி) ஆட்சி முதல் இன்றைய சில அரபு நாடுகளே உதாரணங்களாகும். இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அகன்ற பாரசீகத்தை ஏற்படுத்துவதற்காக ஈரான் அனைத்து விதமான அநியாங்களை இன்று கட்டவிழத்து விட்டிருக்கிறது. ஏற்கனவே ஈராக்கை வெற்றிக் கொண்டிருக்கும் ஈரான் இப்போது சிரியா யமன் இன்று சுடுகாடுகளாக மாறிவருகிறது.

இப்போராட்டத்தில் ஈரான் வெற்றியடைந்தால் மத்தியக்கிழக்கு போர் மேகங்களால் சூழ்ந்து கொள்ளும். ஷீஆவின் 12வது இமாம் வந்தால் மக்கா மதீனாவை கைப்பற்றி அரபு கோத்திரங்களை வெட்டி வீழ்த்துவார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கான வழிகளை சமைக்கவே அரபு நாடுகள் குறிப்பாக சவுதி வீழ்த்தப்படவேண்டும் என்பது இவர்களின் கனவாகும்.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

உசாத் துணைகள்:
(1) (நூல்: அல்பதாவா அல்குப்ரா லிஇப்னி தைமிய்யா பாகம் 01. பக்கம் 70 மஜ்மஉல் பதாவா பாகம் 35 பக்கம் 184)
(2) (நூல்:தவ்ழீஉன் நபஹ் அன்முஅஸ்ஸிஷ் ஷீஆ பக்கம் 49)
(3) (நூல்: தாரிக் தபரி 4 / 340 , உசூலுத்தியானதில் யஊதிய்யா வ புரூஇய்யா வ தவ்ரிஆ பி தக்வீனி அகாஇதிர் ராபிழா. 34)
(4) (நூல்:அல்பிரகு பைனல் பிரக்.235)
(5) (நூல்: ஷீஆ வஸ்ஸூன்னா)
(6) (நூல்.அல்காபி: 8 / 245)
(7) (அல்மிஸ்பாஉல் முனீர் 1 / 329)
(8) (நூல்: மஸ்அலதுத் தக்ரீப் பைன அஹ்லிஸ் சுன்னதி வஷ்ஷீஅதி 1/344)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *