Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-43)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-43)

43. சோதனையின் ரகசியம்!

ஹதீஸ் 43. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘அல்லாஹ் தன்னுடைய ஓர் அடியாருக்கு நலன் நாடினால் அவனுக்கு (அவனுடைய பாவங்களின்) தண்டனையை இவ்வுலகிலேயே விரைவாகக் கொடுத்து விடுகிறான். மேலும் அல்லாஹ் தன்னுடைய அடியானுக்குத் தீங்கை நாடினால் அவனது பாவத்திற்குரிய தண்டனையை (உலகில்) அவனை விட்டும் தடுத்துக் கொள்கிறான். அந்தப் பாவத்தைச் சுமந்துகொண்டே மறுமை நாளினை திடுமென அவனை சந்திப்பதற்காக வேண்டி!

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூலியை அதிகப்படுத்துவது சோதனையின் அதிகரிப்புடன் உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தினரை நேசிக்கிறான் எனில் அவர்களைச் சோதனைக்கு உள்ளாக்குகிறான். எவர் அதில் மனதிருப்தி கொள்கிறாரோ அவருக்கு (இறைவனின்) திருப்பொருத்தம் உண்டு. எவர் அதிருப்தி அடைகிறாரோ அவருக்கு (இறைவனின்) அதிருப்தியே உண்டு. (நூல்: திர்மிதி, இது ஹஸன் தரத்திலானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)

தெளிவுரை

அனைத்து விவகாரங்களும் அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ளன. அவனது நாட்டப்படியே எல்லாம் நடைபெறுகின்றன. இது குறித்து அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

‘நிச்சயமாக உம் இறைவன் தான் நாடுவதைச் செய்பவனாக இருக்கிறான்’ (11 : 107) – மற்றோரிடத்தில்,

‘திண்ணமாக அல்லாஹ் தான் நாடுவதைச் செய்யக் கூடியவனாக இருக்கிறான்!’ (22 : 18)

எந்த மனிதனானாலும் சரியே! ஏதேனும் தவறுகள், பாவங்கள் இல்லாமல் இருக்காது. கடமையில் குறைபாடு என்பதாவது அவனிடம் இருக்கத்தான் செய்யும்!

அல்லாஹ் ஓர் அடியானுக்கு நலன் நாடினால் அந்த அடியானின் தவறுகளுக்கு இவ்வுலகத்திலேயே சீக்கிரம் தண்டனை கொடுத்து விடுகிறான். அவனது சொத்தில் நஷ்டம், அவனுடைய குடும்பத்தில் கஷ்டம் என்கிற வடிவத்தில்! இப்படி அவனுக்கே நேரும். அல்லது அவனுடன் தொடர்புடையவர்களுக்கு நேரும்!

இவ்வாறாக அந்த அடியானுக்கு இவ்வுலகத்திலேயே தண்டனை கொடுப்பது அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது. பிறகு மறுமை நாளில் அல்லாஹ்வை அவன் சந்திக்கும்பொழுது தூய்மையான அதாவது பாவங்களில்லாத – பரிசுத்தமான நிலையில் சந்திக்கிறான்! – இதுதான் அல்லாஹ் அந்த அடியானை நேசிக்கிறான். அவனது விஷயத்தில் நலன் நாடியுள்ளான் என்பதன் தாத்பரியமாகும்!

இது எந்த அளவுக்கு அமைகிறதெனில், அந்த அடியானுக்கு மரணம் நெருங்கும்பொழுது அதன் வேதனைகூட கடுமையாக்கப்படலாம்! அதன் நோக்கம் என்ன? அவனிடத்தில் மன்னிக்கப்படாமல் எஞ்சியுள்ள ஓரிரு தீமைகளும் பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்! இவ்வாறு எல்லாப் பாவங்களும் மன்னிக்கபட்டுத் தூய்மையின் பரிபூரண நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் அளவுக்கு அவன் விஷயத்தில் அல்லாஹ் நலன் நாடுகிறான்!

ஆனால் இதற்குப் பொறுமை காக்க வேண்டும் என்பது பிரதான நிபந்தனை! மனிதன் பதறிப் பரிதவிக்காமல், இறைவன் நிர்ணயித்த விதியைக் குறித்து மனம் நொந்து புலம்பாமல், இறைவிசுவாசத்தில் பலவீனம் அடையாமல், இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணிவாழ்வதில் பின்தங்கி விடாமல்- மனம் வெறுப்படையாமல் இருக்க வேண்டும். அதனை விட்டும் பொறுமை அவனைப் பாதுகாக்க வேண்டும்! அப்பொழுதுதான் பொறுமைக்கான இத்தகைய முழுப்பலனை அவன் அடைந்திட முடியும்!

அடியான் செய்த பாவங்களுக்குரிய தண்டனை மறுமை நாளில் கொடுக்கப்படாமல் இவ்வுலகிலேயே ஒருசில கஷ்டங்களின் மூலம் அவற்றிற்குப் பரிகாரம் காணப்பட்டதெனில் அது அல்லாஹ்வின் அருட்கொடையே அன்றி வேறென்ன! ஏனெனில் மறுமையின் தண்டனையே மிகக் கொடியது. நீடித்ததும்கூட! அதற்கு எதிரில் இவ்வுலகின் தண்டனை என்பது எதுவுமில்லை. வெறும் தூசு போன்றதுதான்! விரைவில் விலகி விடுவதுதான்!

ஆனால் அல்லாஹ் ஓர் அடியானுக்குத் தீங்கை நாடினால் அவனுக்கு அவகாசம் கொடுக்கிறான். உலகின் அருள் வளங்களையும் அதிக அளவு அள்ளிக் கொடுக்கிறான். அவனுக்குத் துன்பங்களும் தருவதில்லை! இவ்வாறு அந்த அடியான் இன்ப வாழ்வை அனுபவிக்கிறான். ஆணவம் கொள்கிறான். அதிகஅளவு -அதாவது எல்லோராலும் இகழப்படும் அளவில் பூரித்துப் போகிறான்.

இந்நிலையில் திடுமென மரணம் வந்து அவனை வாரிக்கொண்டு செல்கிறது. பாவங்களும் தீமைகளும் நிறைந்திருக்கும் நிலையில் அல்லாஹ்வை சந்திக்கும் துர்பாக்கிய நிலை அவனுக்கு! அந்தப் பாவங்களுக்குரிய தண்டனை மறுமையில் நிறைவாகக் கொடுக்கப்படுகிறது!

நீங்கள் ஒரு மனிதனைக் காண்கிறீர்கள். சத்தியத்தை நிராகரிக்கிறான். இறைகட்டளைகளை உதாசீனப்படுத்துவதுடன் அவற்றிற்கு எதிரான கிளர்ச்சியை மேற்கொண்டு இறைவனுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறான்! இந்நிலையில் உலகத்தில் அவனுக்கு எந்தச் சேதனைகளும் வராமல் அல்லாஹ்வும் அவனைப் பாதுகாக்கிறான் எனில், நிச்சயமாக அல்லாஹ் அந்த மனிதனுக்கு தீங்கையே நாடியுள்ளான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் அவன் செய்யும் அட்டூழியங்களுக்குரிய தண்டனையை அல்லாஹ் பிற்படுத்தி வைத்துள்ளான். அனைத்தையும் மரணத்தின் பிறகு – மறுவுலகத்தில் அந்த மனிதன் அனுபவிப்பான் என்பதே உண்மை!

‘கூலியை அதிகப்படுத்துவது சோதனையின் அதிகரிப்புடன் உள்ளது’

அதாவது, சோதனை கடுமையாகும்பொழுது கூலியும் அதற்கேற்ப மதிப்பு மிக்கதாக அதிகரித்து கொண்டே செல்லும்! லேசான சோதனை எனில் கூலியும் அதற்கேற்பவே -சிறிய அளவிலேயே இருக்கும். ஏனெனில் அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் புரிபவனாகவே இருக்கிறான். கடுமையான துன்பங்களைக் கொடுத்து அடியார்களை அவன் சோதனைக்கு உள்ளாக்கினால் அதற்கேற்ப அதிகக் கூலிகளைக் கொடுப்பதென்பது அவனது அருட்கொடையே!

‘நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தினரை நேசிக்கிறான் எனில் அவர்களைச் சோதனைக்குள்ளாக்குகிறான் . . . . ‘

இது இறைவிசுவாசிகளுக்கு ஓர் நற்செய்தியாகும். அல்லாஹ் விசுவாசியைச் சோதனைக்குள்ளாக்கினால், ஐயோ! அல்லாஹ் என்னைச் சோதித்து விட்டானே என்று மனம் நொந்து போக வேண்டாம்! மாறாக அல்லாஹ் அந்த அடியானை நேசிப்பதற்காகவே அவ்வாறு செய்யலாம்! அதனால்தான் சில துன்பங்களைக் கொடுத்து சோதிக்கிறான். எனவே அல்லாஹ் நிர்ணயித்த விதியை – விதி விளைவிக்கும் துன்பங்களை அடியான் பொருந்திக் கொள்ள வேண்டும். பொறுமை காக்க வேண்டும். அப்பொழுது தான் இறைவனின் திருப்பொருத்தத்தை அவன் பெறமுடியும்!

கேள்விகள்

1) உலகில் நல்லடியார்களுக்கு வரும் சோதனைகள் அல்லாஹ்வின் அன்புக்கு அடையாளம் என்பதை விளக்கவும்.

2) அல்லாஹ் ஓர் அடியானுக்குத் தீங்கை நாடினால் அவனுடன் எத்தகைய போக்கை மேற்கொள்கிறான்?

3) மகத்தான கூலி என்பது கடுமையான சோதனையுடன் உள்ளது என்பதை விளக்கவும்.

4) உலகில் நிகழும் எல்லாமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன என்பதற்கு குர்ஆன் – ஹதீஸின் ஆதாரங்கள் எழுதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *