Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-55)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-55)

55. உண்மையே உள்ளத்தின் அமைதி!

ஹஸன் பின் அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் மனப்பாடம் செய்துள்ளேன்: ‘உன்னைச் சந்தேகத்தில் ஆழ்த்தக் கூடியதை விட்டுவிட்டு சந்தேகமில்லாததைச் செய்திடு! ஏனெனில் உண்மையே உள்ளத்தின் அமைதியாகும். பொய்தான் சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடியது!’ ( திர்மிதி)

உன்னைச் சஞ்சலத்தில் ஆழ்த்தக்கூடியது என்பதன் பொருள் : இது ஹலால் (ஆகுமானது)தானா என்று நீ சந்தேகப்படுவதை விட்டுவிட்டு அப்படிச் சந்தேமில்லாததன் பக்கம் சென்றிடு!

தெளிவுரை

இமாம் நவவி (ரஹ்) அவர்களின் நாற்பது நபிமொழிகள் எனும் நபிமொழித் தொகுப்பிலும் இது இடம்பெற்றுள்ளது.

இரத்தினச் சுருக்கமான வார்த்தைகளைத் தாங்கியுள்ள இந்நபிமொழியில் ஆழிய கருத்துகள் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்! அது வழங்கும் மிக முக்கியமான வழிகாட்டல் நமது ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்! பேணுதலான நடைமுறை என்பது தான் அந்த வழிகாட்டல்! ஓருசெயல் ஹராமா, ஹலாலா (அதாவது இது தடை செய்யப்பட்டதா, அனுமதிக்கப்பட்டதா?) என்று ஐயம் வந்துவிட்டால் அதை விட்டுவிட வேண்டும். அதிலிருந்து விலகிட வேண்டும். அதுவே பேணுதலான முறை! தூய்மைக்கான வழிகாட்டல்! மேலும் ஹராம் தவிர்த்த சாதாரணமான விஷயங்களிலும் மிகத் தெளிவான நிலைப்பாட்டைக் கொடுக்கக் கூடியதும் இதுவே!

கல்வியாளர்களில் சிலர் ஃபிக்ஹு சட்டப் பிரச்னைகளை அலசும்போது பேணுதல் நிலை என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்! மேலும் அதனை ஒரு பொதுவான அடிப்படையாக வைத்து அதன் கீழ் பல்வேறு விஷயங்களைக் கொண்டு வருகிறார்கள்! அவற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம்:

» ஆடையில் அசுத்தம் பட்டுவிடுகிறது. அவ்வாறு அசுத்தமான பகுதி ஆடையின் மேல் பகுதியா? கீழ்ப்பகுதியா? என்பதுதான் சந்தேகம்! மேல் பகுதியைக் கழுகிச் சுத்தம் செய்தால்- கீழ்ப்பகுதி அசுத்தமாக இருக்குமோ என்று சந்தேகம் நீடிக்கிறது! கீழ்ப்பகுதியை சுத்தம் செய்தால் மேல்பகுதி அசுத்தமாக இருந்து விட்டால் என்ன செய்வது என்று மனம் குழம்புகிறது!

இதற்கான தீர்வைத்தான் இந்நபிமொழி வழங்குகிறது! அதுதான் பேணுதலான முறையைக் கடைப்பிடித்தல் என்பது! மேலே சொன்ன விஷயத்தில் பேணுதலான முறை என்னவெனில், அந்த ஆடையின் மேல் பகுதியையும் கீழ்ப் பகுதியையும் – முழுவதுமாகக் கழுகிச் சுத்தம் செய்வது தான் பேணுதல்! அப்படிச் சுத்தம் செய்கிறபொழுது சந்தேகம் முழுமையாக நீங்கிவிடுகிறது!

» ஒருவனுக்குத் தொழுகையில் சந்தேகம். தொழுது முடித்தது, இரண்டு ரக்அத்தா? மூன்றா? என்று! எந்த முடிவுக்கும் அவனால் வர முடிவதில்லை. இப்பொழுது என்ன செய்வது? சந்தேகம் நீங்கி மனம் அமைதி பெறுவதெப்படி? அதற்குத்தான் அந்தப் பேணுதலான முறை அழகிய தீர்வைத் தருகிறது!

ஆம்! குறைவான எண்ணிக்கையை – அதாவது, இரண்டு ரக்அத் என்பதைக் கணக்கில்கொண்டு செயல்பட்டால் சந்தேகம் நீங்கிவிடும்! இரண்டு ரக்அத் தொழுதது உறுதியானது. உறுதியான நிலையை அடைந்து விட்டால் சந்தேகத்திற்கு அங்கு இடமேது? இதேபோல் மூன்று ரத்அத்தா? நான்கா? என்று சந்தேகம் வந்தால், தொழுதது மூன்று ரக்அத் என்று முடிவு செய்துகொண்டு மீதி ஒரு ரக்அத்தை நிறைவேற்றினால் சந்தேகம் நீடிக்கவா செய்யும்?

ஐயத்திற்கும் சஞ்சலத்திற்கும் உரியதை விட்டுவிட்டு ஐயமில்லாததை எடுத்துக் கொள்! என்பது எவ்வளவு தெளிவான வழிகாட்டல்! மனத்தைக் குழப்பக்கூடிய சட்டப்பிரச்னைகள் அனைத்திற்கும் ஓர் இலகுவான தீர்வைக் கொடுக்கும் எவ்வளவு எளிமையான அடிப்படை!

இதன் சிறப்பை இன்னொரு கோணத்திலும் நாம் ஆராய்ந்திட வேணடும்! அதாவது, இதில் மனோதத்துவ ரீதியான பயிற்சியும் உள்ளது. எவ்வாறெனில் மனக்கலக்கத்தை விட்டுவிட்டு அமைதிக்கும் நிம்மதிக்கும் திரும்புவது தான் மனிதனின் மனநலத்திற்கும் கூட நல்லது! இதோ! மக்களில் சிலர் இதுபோன்ற சந்தேகத்திற்குப் பலியாகி அதிலிருந்து விடுபட முடியாமல் உழன்று கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. எவ்வித முடிவுக்கும் வரமுடிவதில்லை. உள்ளத்தில் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது என்று புலம்புவதை நீங்கள் கேட்கலாம்! அத்தகைய தடுமாற்றத்தை- உறுத்தலை – கலக்கத்தை நீக்கி நிம்மதி பிறக்க வழிவகுக்கும் ஓர் எளிய பயிற்சியைத்தான் இந்நபிமொழி தருகிறது!

‘உண்மையே உள்ளத்தின் அமைதியாகும்’

இந்நபிமொழியை இங்கு இடம்பெறச் செய்ததன் ஆதாரம் இதுதான். உண்மையே உள்ளத்திற்கு அமைதி தரவல்லது! உண்மை பேசுபவன் என்றைக்கும் மனம் வருந்த வேண்டியதில்லை. அடடா! இப்படி பேசி விட்டோமே! எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தோமில்லையே! என்று துயரப்பட வேண்டிய நிலையே அவனுக்கு வராது!

ஏனெனில் உண்மை பேசியவர்களுக்கு, உண்மை பேசியதன் காரணத்தால் ஈடேற்றம் அளித்திட அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான்! அதனால் தான் உண்மையாளன் எது குறித்தும் கலக்கப்படாமல் – கவலைப்படாமல் நிம்மதியாக இருப்பதை நீங்கள் காணலாம்! நடந்து முடிந்தது பற்றியோ எதிர் காலத்தில் நடக்க இருப்பது பற்றியோ எந்தக் கவலையும் அவனுக்கு இருப்பதில்லை! ஏனெனில் அவன் உண்மை உரைத்திருக்கிறான், உண்மை பேசியவனுக்கு என்றைக்கும் ஈடேற்றமே!

‘பொய்தான் சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடியது!’

இதுதான் பொய்யின் நிலை! இதனால்தான் பொய் பேசியது குறித்து – அனைவருக்கும் முதலில் பொய் பேசியவனின் மனமே பதற்றத்திற்குள்ளாகிறது! நாம் பொய் சொல்லியது நாலு பேருக்குத் தெரிந்து விட்டதோ என்னவோ தெரியவில்லையே! அப்படித் தெரிந்து விட்டால் நாம் சொல்வதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? என்று அவனது மனம் உறுத்திக் கொண்டே இருக்கும்!

இதனால்தான் பொய்யன் ஏதேனும் செய்தி அறிவித்தால் மூச்சுக்கு முந்நூறு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்று சத்தியங்களை அள்ளி வீசுவதை நீங்கள் காணலாம்! இதோ! நயவஞ்சகர்களைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்:

‘நிராகரிப்புக் கொள்கையை அவர்கள் கூறியிருந்தும் நாங்கள் அவ்வாறு கூறவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டார்கள் என்பது உண்மையே!’ (9: 74)

இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்வதற்குக் காரணம், மனக்கலக்கமும் கடும் சஞ்சலமும் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது என்பதே!

அறிவிப்பாளர் அறிமுகம் – ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள்

இவர்கள்அலீ (ரலி)அவர்களின் புதல்வரும் நபிகளார் (ஸல்) அவர்களின் பேரரும் ஆவார்! ஹிஜ்ரி 3 ம் ஆண்டு ரமளான் மாதத்தின் நடுப் பிறையில் பிறந்தார்கள். அவர்களது மனைவியின் மூலம் நஞ்சு கொடுக்கப்பட்டு ஹிஜ்ரி 54 ம் ஆண்டு மரணம் அடைந்தார்கள். ஸஅத் பின் ஆஸ் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மதீனாவின் பகீஉ மண்ணறையில் அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது! ஹஸன் (ரலி) அவர்கள் பக்தி, பேணுதல், கொடைத்தன்மை ஆகிய பண்பாட்டில் பிரபலமான மேன்மக்களில் குறிப்பிடத் தக்கவர்கள்! அன்னாரின் சிறப்புகளும் உயர் அந்தஸ்துகளும் ஏராளம்! இவர்களிடம் இருந்து 13 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

கேள்விகள்

1) இந்நபிமொழியின் கருத்தைச் சுருக்கமாக விவரிக்கவும்!
2) பேணுதலான நடைமுறைக்குச் சில உதாரணங்கள் தரவும்.
3) உண்மை பேசினால் ஏற்படும் பயன்கள், பொய் பேசியதால் ஏற்படும் தீங்குகள் சிலவற்றை எழுதவும்.
4) நயவஞ்சகர்கள் பொய்யினால் சஞ்சலத்திற்குள்ளாவதை விளக்கவும்.
5) பொய் குறித்து இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கொணர்ந்த குர்ஆன் வசனம் ஒன்றை எழுதி அதற்கு விளக்கம் தரவும்!
6) அறிவிப்பாளர் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *