Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-53)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-53)

53. எதிரிகளைக் களத்தில் சந்திக்க ஆசைப்படாதீர்கள்

ஹதீஸ் 53. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்தித்த (யுத்த) நாட்களில் ஒருநாளன்று சூரியன் மேற்கில் சாயும் வரையில் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு எழுந்து கூறினார்கள்: ‘ஓ, மனிதர்களே! எதிரிகளை(க் களத்தில்) சந்திப்பதற்கு ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் சுக வாழ்வைக் கேளுங்கள். ஆனால் எதிரிகளைச் சந்திக்கும்படியானால் பொறுமையை மேற்கொள்ளுங்கள். மேலும் நிச்சயமாக வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் உள்ளதென்பதை அறிந்து கொள்ளுங்கள்! பிறகு இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்: யா அல்லாஹ்! வேதங்களை இறக்கியருளியவனே! மேகங்களை ஓட்டுபவனே! அடர்ந்துவந்த எதிரணியினரைத் தோல்வி அடையச் செய்தவனே! எதிரிகளைத் தோல்வி அடையச் செய்வாயாக! அவர்கள் மீது எங்களுக்கு வெற்றியைத் தருவாயாக! (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

நபி(ஸல்) அவர்கள் மாலை நேரத்தை எதிர்பார்த்ததற்குக் காரணம், பகலின் வெப்பம் சற்றுத் தணிந்து நிழல்கள் வளர்ந்து குளுமை கிடைக்க வேண்டும் என்பதுதான்! அப்பொழுதுதான் மக்களுக்கு உற்சாகம் பிறக்கும். முழு ஈடுபாட்டுடன் போரில் அவர்கள் இறங்குவதற்கு வசதியாக இருக்கும்!

போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு மக்களிடையே சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். நபிகளார்(ஸல்) அவர்கள்! ஜும்ஆ நாளின் நிரந்தரமான சொற்பொழிவுகளுக்கிடையே – இந்த நபிமொழியில் குறிப்பிடப்பட்டது போன்று தற்காலிக உரைகளையும் அவர்கள் நிகழ்த்தியதுண்டு! இத்தகைய தற்காலிக உரைகளும் நபித்தொகுப்புகளில் எராளம் பதிவாகியுள்ளன!

‘எதிரிகளை(க் களத்தில்) சந்திப்பதற்கு ஆசைப்படாதீர்கள்’

அதாவது, எதிரிகளுடன் மோதவும் போர்ச்சூழ்நிலை உருவாகி இரத்தக் களறியை ஏற்படுத்தவும் ஆசைப்படுவது யாருக்கும் அழகல்ல. யா அல்லாஹ்! எதிரிகளுடன் எங்களை மோதச் செய்வாயாக என்று பிரார்த்தனை செய்வது ஏற்புடையதல்ல! யா அல்லாஹ்! அச்சமற்ற- அமைதி வாழ்வைக் கொடு என்றுதான் பிரார்த்தனை செய்ய வேண்டும்!

‘ஆனால் எதிரிகளைச் சந்திக்கும்படியானால் பொறுமையை மேற்கொள்ளுங்கள்’

பொறுமையின் இந்த அறிவுரைக்காகத்தான் இந்த நபிமொழியை இந்தப் பாடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள், இமாம் நவவி (ரஹ்) அவர்கள்!

கருத்து இதுதான்:
எதிரிகளைச் சந்தித்தாக வேண்டிய – போர் புரிந்தாக வேண்டிய சூழ்நிலை வந்தால் பொறுமையைக் கைவிட்டு விடக்கூடாது. இப்புவியில் இறைமார்க்கத்தை மேலோங்கச் செய்யும் உயர் இலட்சியத்தை மனத்தில் ஏந்தி, பொறுமையுடனும் உறுதியுடனும் போர் புரியத்தான் வேண்டும். பொறுமையாளர்களுக்கு உதவியும் வெற்றியும் நல்குவதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளான்!

‘நிச்சயமாக வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் உள்ளதென்பதை அறிந்துகொள்ளுங்கள்!’

அதாவது, இறைவழிப் போராளி ஏந்திச் செல்லும் வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் உள்ளது. இதோ! இறைமார்க்கத்தின் வெற்றிக்காகக் களமிறங்கும் அவர் அதிலேயே மரணத்தைச் சந்திக்க நேரிட்டு விட்டால் இன்ப வாழ்வும் அருட்பேறுகளும் நிறைந்த சுவனபதி செல்லக்கூடிய மேன்மக்களில் ஒருவராக அழைத்துக் கொள்ளப்படுகிறார்!

அல்லாஹ் கூறுகிறான்:‘இறைவழியில் கொல்லப்படுகிறவர்களை இறந்தவர்களாக ஒருபோதும் கருதாதீர்கள். உண்மையில் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். தங்கள் இறைவனிடம் இருந்து தங்களுக்குரிய வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தன்னருளில் இருந்து தங்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்! தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்துவருகிற – இன்னும் தங்களுடன் வந்து சேராதிருக்கும் இறைநம்பிக்கையாளர்கள் குறித்து-அவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மன நிறைவு பெறுகிறார்கள். அல்லாஹ் அளித்த கொடையினாலும் அருளினாலும் அவர்கள் அக மகிழ்வுடன் இருக்கிறார்கள். மேலும் திண்ணமாக அல்லாஹ் விசுவாசிகளின் கூலியை வீணாக்க மாட்டான் என்பதாலும்! (3 : 169 -171)

ஆம்!அல்லாஹ்வின் வழியில் கொலை செய்யப்படுகிற தியாகியின் உடலில் எவ்வளவு வெட்டுகள் -குத்துகள் விழுந்தாலும் எத்தகைய பயங்கரமான குண்டுகள் பாய்ந்தாலும் அது குறித்து எந்த வேதனையும் கஷ்டமும் அவர் உணர்வதில்லை! அவரது உயிர் நீடித்த- நிலையான சுவனபதியை நோக்கிச் செல்கிறது! இதனால்தான் நபிகளார்(ஸல்) அவர்கள் அருளினார்கள்: சுவனம் வாட்களின் நிழலின் கீழ் உள்ளது என்று!

உஹுத் போர்க் களத்தில் ஷஹீதாக்கப்பட்ட ஸஹாபி அனஸ் பின் நள்ர்(ரலி) அவர்கள் ஒரு கட்டத்தில் கூறினார்கள்: ‘திண்ணமாக நான் உஹுத் மலையின் திக்கிலிருந்து சுவனத்தின் நறுமணத்தை உணர்கிறேன்!’

ஆகா! எந்த அளவுக்கு அந்த ஸஹாபியின் நுகர்ப்புலன்களை அல்லாஹ் திறந்து வைத்து நுட்பமான ஆற்றலை வழங்கியுள்ளான் என்பதைப் பாருங்கள்! சுவனபதியின் சுகந்தத்தை நுகர்வதாகக் கூறுகிறார். உஹுத் மலையின் திக்கில் இருந்து அது கமழ்ந்து வருவதாகப் பேரானந்தப் படுகிறார்! இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாட்களின் நிழலின் கீழ் சுவனபதி உள்ளது என்று!

பிறகு நபியவர்கள் அல்லாஹ்விடம் உதவி கேட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். இறைவழிப் போர்வீரர்கள், களத்தில் எதிரிகளைச் சந்திக்கும் முன்னர் இதுபோல் பிரார்த்தனை செய்திட வேண்டும்.

இந்தப் பிரார்த்தனையில் அல்லாஹ்வின் ஆற்றலை நிரூபிக்கும் சான்றுகளைச் சுட்டிக்காட்டி உதவி கேட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள். அவை இரு வகைகள்.

ஒன்று ஷரீஅத் ரீதியிலானவை. அதாவது, வேதங்கள்! இவற்றில் குர்ஆன் உள்ளிட்ட – முற்காலத்தில் இறைவன் இறக்கியருளிய எல்லா வேதங்களும் அடங்கும். அத்தகைய வேதங்களை இறக்கியருளி சத்திய மார்க்கத்தை வழங்கிய உண்மையான இறைவனை அழைத்து உதவி கேட்டுள்ளார்கள், நபிகளார் அவர்கள்!

மற்றொன்று இப்பேரண்டத்தில் காணப்படும் பிரமாண்டமான படைப்புகள்! மேகங்களையும் அவற்றின் அதிசயிக்கத்தக்க செயல்பாடுகளையும் அவற்றுள் பிரத்தியேமாகக் குறிப்பிட்டுள்ளார்கள் நபி(ஸல்) அவர்கள்!

அதோ! வானத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மேகக்கூட்டங்கள் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனின் ஆணைக்கு மட்டுமே கட்டுப்பட்டவை. உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஒன்று சேர்ந்து அனைத்து விதமான உபாயங்களையும் பிரயோகித்து எப்பேர்ப்பட்ட பிரமாண்டமான முயற்சிகள் செய்தாலும் அவர்களால் மேகத்தை வசப்படுத்தித் தங்கள் விருப்பப்படி மழை பொழிவிக்க முடியுமா? ஒருபோதும் முடியாது! அதற்கான பேராற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம்! அத்தகைய மகத்தான பேராற்றல் படைத்த இறைவனை அழைத்துப் பிரார்த்தனை செய்தார்கள் நபியவர்கள்!

‘எதிரணிகளைத் தோல்வி அடையச் செய்பவனே!’

அதாவது, அணிதிரண்டு வந்த பல்வேறு எதிரிக் கூட்டத்தினரைத் தோல்வி அடையச் செய்தவன் அல்லாஹ் ஒருவனே. அத்தகைய பேருதவியை இங்கும் கேட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள் நபிகளார்(ஸல்) அவர்கள்!

– இது அகழ் யுத்தத்தில் நடந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டும் வாசகம்! அல் அஹ்ஸாப் (எதிரிகளின் பல்வேறு கூட்டத்தினருடன் நடந்த) யுத்தம் என்றொரு பெயரும் அதற்குண்டு. அப்பொழுது இஸ்லாத்தை எதிர்த்துக் கொண்டிருந்த பல்வேறு கூட்டத்தினர் சுமார் பத்தாயிரம் வீரர்களைத் திரட்டிக்கொண்டு மதீனா நோக்கி வந்தார்கள். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேரோடு வீழ்த்திட வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்! ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நபியவர்களும் தோழர்களும் பெரிய அளவில் அகழ் ஒன்றைத் தோண்டியிருந்தார்கள்! அதனால் எதிரிகளால் மதீனாவினுள்ளே பிரவேசிக்க முடியவில்லை. அந்த அகழுக்கு அப்பால் தங்கியிருந்து மதீனாவை பல நாட்களாக முற்றுகையிட்டிருந்தார்கள்!

அல்லாஹ்வின் பேராற்றலைப் பாருங்கள்! சுழன்றடித்த பெரும் புயற் காற்றை ஏவினான்! அது எதிரிகளைச் சின்னாப் பின்னமாக்கி சிதறி ஓடச் செய்தது! அவர்களின் கூடாரங்களைத் தாறுமாறாகப் பிய்த்து வீசியது! அடுப்புகளைப் புரட்டிப்போட்டு அவர்களை அலைக்களித்தது! தாக்குப் பிடிக்க முடியாமல் முற்றுகையை விலக்கிக்கொண்டு எல்லோரும் ஓட்டம் பிடித்தார்கள்! அதனைத்தான் குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘அல்லாஹ் நிராகரிப்பாளர்களைத் திருப்பி அனுப்பினான். அவர்கள் எந்தப் பயனும் அடையாமலேயே தம் மன எரிச்சலுடன் அப்படியே திரும்பி விட்டனர். விசுவாசிகளின் சார்பில் போரிடுவதற்கு அல்லாஹ்வே போதுமாகி விட்டான்!’ (33 : 25)

ஆம்! அல்லாஹ்தான் வெற்றியைத் தருபவன். ஆனால் மனிதர்கள் திரட்டி வைத்திருக்கும் ஆற்றல்கள் அனைத்தும் பயனளிக்கவும் செய்யலாம். பயனளிக்காமலும் போகலாம். ஆயுதங்களைத் திரட்டி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதன் பொருளல்ல! போர் புரிவதற்கான அனைத்து விதமான ஆயுதங்களையும் ஆகுமான காரணிகளையும் நாம் கையாளத்தான் வேண்டும். ஆனால் எதிரிகளைத் தோல்வி அடையச் செய்யும் ஆற்றல் உண்மையில் அல்லாஹ்வின் ஆற்றல் மட்டுமே! இவ்வுண்மையைச் சுட்டிக்காட்டி அதில் உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்துவதே நோக்கம்!

இந்த நபிமொழியில் பல படிப்பினைகள் உள்ளன!

படைவீரர்களை மென்மையுடன் நடத்துவது படைத்தளபதியின் கடமை. பொருத்தமான நேரத்தில்தான் போரைத் தொடங்க வேண்டும். என்ன பருவகாலம்? கடுமையான கோடையா? குளிரா? என்பதைக் கவனித்துத்தான் வீரர்களைக் களமிறக்கிட வேண்டும்! கோடையும் குளிரும் கடுமையாக இருந்தால் போர்புரிவது கடும் சிரமம்! இலையுதிர் காலமெனில் போருக்கு அது மிகவும் பொருத்தமானது!

எந்த மனிதனும் எதிரியைக் களத்தில் சந்திக்கவும் போர் புரியவும் ஆசைப்படுவது கூடாது! ஆனல் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் (ஷஹாதத் எனும்) பாக்கியம் பெறுவதில் ஆசைப்பட வேண்டுமென நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது! இரண்டுக்கும் நுட்பமான வித்தியாசம் உள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

சுக வாழ்வையும் அமைதியையும்தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். ஏனெனில் அமைதி வாழ்வுக்கு நிகரான பாக்கியம் உலகில் வேறெதுவும் இல்லை. எனவே யுத்தத்தை – போரை ஆசைப்படாதீர்கள். அமைதியைக் கேட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்கு உதவி புரியுமாறும் அல்லாஹ்விடம் கேளுங்கள்! ஆனால் களத்தில் எதிரியைச் சந்திக்க வேண்டியது வந்தால் பொறுமையுடன் களமிறங்குங்கள். அல்லாஹ்வின் உதவி பொறுமையாளர்களுக்கு உண்டு!

அறிவிப்பாளர் அறிமுகம் – அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா(ரலி) அவர்கள்

இவர்களுடைய இயற்பெயர் அப்துல்லாஹ். குறிப்புப் பெயர் அபூ இப்ராஹீம். இவருடைய தந்தை அபூ அவ்ஃபா(ரலி) அவர்களும் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள். அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் பைஅதுர் ரிள்வான் எனும் போர் உறுதிப் பிரமாணத்தில் பங்கேற்றார்கள். கைபர் யுத்தத்திலும் அதன் பிறகு நடைபெற்ற அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டார்கள்! ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு கூஃபா நகருக்குப் பயணமான அன்னார் அங்கேயே மரணம் அடைந்தார்கள்! கூஃபா நகரில் மரணம் அடைந்த நபித்தோழர்களில் இறுதியானவர் இவர்கள்தாம்! அன்னாரிடம் இருந்து சுமார் 95 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

கேள்விகள்

1) நபி(ஸல்) அவர்கள் போரைத் தொடங்குவதற்கு மாலை நேரத்தை எதிர் பார்த்திருந்ததற்குக் காரணம் என்ன?

2) எதிரிகளுடன் சண்டை போட வேண்டுமென ஆசைப்படுவதற்கும் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்ய வேண்டுமென ஆசைப்படுவதற்கும் என்ன வித்தியாசம்?

3) வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் உள்ளதென்பதன் விளக்கம் என்ன?

4) இந்நபிமொழி தரும் படிப்பினைகள் சிலவற்றைக் குறிப்பிடவும்.

5) அறிவிப்பாளர் குறித்து அறிமுகம் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *