Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5)

பாடம்-5 இறைக் கண்காணிப்பு

அல்லாஹ் கூறுகிறான்: – ‘அவன் எத்தகையவன் எனில் (நபியே) நீர் எழுகிறபோதும் அவன் உம்மைப் பார்க்கிறான். மேலும் சிரம் பணிந்து வணங்குவோரிடையே உமது அசைவையும் பார்க்கிறான்’ (26 :218-219)

மற்றோர் இடத்தில், ‘நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கிறான்’ (57:4)

இன்னோர் இடத்தில், ‘நிச்சயமாக பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று’ (3 :5)

பிறிதோர் இடத்தில், ‘திண்ணமாக உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறான்;’ (89:14)

வேறோர் இடத்தில், ‘கண்களின் கள்ளத்தனங்களையும் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் அறிகிறான்;(40 :19)

இந்தப் பாடத்தில் எல்லோருக்கும் தெரிந்த இன்னும் அனேக குர்ஆன் வசனங்கள் உள்ளன.

தெளிவுரை

எண்ண ஓட்டங்களையும் இறைவன் அறிவான்!

அல் முறாக்கபா எனும் அரபிச் சொல்லுக்கு கண்காணித்தல் என்று பொருள். அதாவது, அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்றும், சொல், செயல்களையும் உள்ளத்தில் நிழலாடும் எண்ணங்களையும் அறிகிறான் என்றும் உறுதி கொள்வதற்கே முறாக்கபா எனப்படும்.

இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் அகத்தையும் புறத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று ஒரு மனிதன் உறுதியாகவும் தெளிவாகவும் சதாவும் அறிந்து உணர்ந்த கொண்டிருக்கும் நிலைக்கே முறாக்கபா என்று சொல்லப்படும்.

இறைக் கண்காணிப்புக்கு ஆதாரமாக குர்ஆனில் பல வசனங்களை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அவற்றின் சுருக்கமான விளக்கத்தைப் பார்ப்போம்.

முதல் வசனம்: ‘மேலும் (நபியே) நீர், வல்லமை மிக்கவனும் பெரும் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருப்பீராக! அவன் எத்தகையவன் எனில் நீர் எழுகிற பொழுதும் உம்மை அவன் பார்க்கிறான். சிரம் பணிந்து வணங்குவோரிடையே உமது அசைவையும் பார்க்கிறான். திண்ணமாக அவன் யாவற்றையும் செவியுறுபவன். நன்கறிபவன்.’ (26:218 -219)

நீர் எழுகிறபொழுதும்: அதாவது, நபியே, இரவில் யாரும் இல்லாத தனி இடத்தில் நீர் தொழுகைக்காக எழுந்து நிற்கும்போதும் அல்லாஹ் உம்மை அறிகிறான். அது எவ்வளவு மறைவான – இருள் சூழ்ந்த இடமாக இருந்தாலும் சரியே!

மேலும் சிரம்பணிந்து வணங்குவோரிடையே உமது அசைவையும் பார்க்கிறான்: அதாவது நீர் தொழுகைக்காக நிற்கும்போதும் தரையில் சிரம்வைத்து வணங்கும்போதும் அல்லாஹ் உம்மைப் பார்க்கிறான்.

– நிலையில் நிற்பது, ஸுஜூது செய்வது பற்றி மட்டும் இந்த வசனத்தில் கூறியிருப்பதன் காரணம், தொழுகையில் இவ்விரு நிலைகளுக்கும் தனிச்சிறப்பு உண்டென்பதே!

குர்ஆன் ஓதுவது நிற்கும் நிலையில் என்பதால் அது, ஸுஜூதை விடச் சிறந்தது. தரையில் சிரம் வைத்துப் வணங்கும் அம்சத்தைக் கவனித்தால் நிற்கும் நிலையை விட ஸுஜூது சிறந்தது! ஏனெனில் ஸுஜூது செய்பவன் இறைவனின் திருமுன் மிக நெருக்கமாக ஆகிறான்.

நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: ஓர் அடியான் தன் இரட்சகனிடம் மிக நெருக்கமாக இருக்கும் நிலை அவன் சுஜூது செய்து கொண்டிருக்கும் நிலையாகும் (நூல்: முஸ்லிம்)

– இதனால்தான் ஸுஜூதில் அதிகமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவை இறைவனின் அங்கீகாரம் பெற நெருக்கமாக உள்ளதென நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

மனிதனின் ஒவ்வொரு செயலையும் அசைவையும் அல்லாஹ் பார்ப்பதுபோன்று அவன் மொழியக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் அல்லாஹ் கேட்கிறான். குர்ஆன் கூறுகிறது:

இவர்களின் இரகசியங்களையும் கிசுகிசுப்புகளையும் நாம் கேட்பதில்லை என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்களா, என்ன? நாம் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம் மலக்குகள் அவர்களின் அருகில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்’ (43 :80)

மற்றோர் இடத்தில், எந்தச் சொல்லையும் அவன் (மனிதன்) மொழிவதில்லை அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இருந்தே தவிர!’ (50: 18)

எனவே தனிமையின் செயல்களையும் யாருக்கும் தெரியாமல் பேசும் இரகசியப் பேச்சுளையும் ஏன், உள்ளத்தில் நிழலாடும் எண்ணங்களையும்கூட அல்லாஹ் அறிகிறான். கண்காணித்துக் கொண்டிருக்கிறான். இத்தகைய உறுதியான எண்ணம் தான் சதாவும் நம் உள்ளத்தில் பசுமையாகக் பதிந்திருக்க வேண்டும். இதுதான் அல் முறாக்கபா ஆகும்.

அந்நிய பூமியில் கடமையைக் கைவிட்டால்!

தனிமையிலும் இறைக் கண்காணிப்பு நம் மீது உள்ளது எனும் உறுதி வேண்டும் எனும்பொழுது யாருமில்லாத நிலையும் தனிமைதான். தன்னைத் தெரிந்தவர்களில்லாத சூழ்நிலையும் தனிமைதான். இங்கு இருப்பவர்கள் எல்லாம் அந்நியர்கள். நம்மை அறிந்தவர்கள் யாருமில்லை என்று கருதிக் கொண்டு கடமை தவறுவது முறாக்கபாவுக்கு எதிரான போக்காகும்.

எடுத்துக்காட்டாக, ஒருவர், சொந்த ஊரில் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். நன்மை புரியுமாறு ஏவுவதிலும் தீமையை விட்டுத் தடுப்பதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்! பிறகு தூரமான ஊரில் அவருக்குப் பணி மாற்றமாகி சென்றார். அங்கு அவருடைய நண்பர்களோ அவரைத் தெரிந்தவர்களோ யாரும் இல்லை. வேறு பலர் அங்கிருந்தாலும் அவரைப் பொறுத்து அது தனிமைதான்!

இப்பொழுது அவர் அழைப்புப் பணி செய்வதில்லை எனில் – நன்மை புரியுமாறு ஏவுதல் – தீமையை விட்டும் தடுத்தல் என்கிற கடமையை நிறைவேற்றுவதில்லை. சோம்பலாகி விடுகிறார் எனில்- அல்லது தொழுகையை நிறைவேற்றுவதில் கவனக்குறைவாக இருக்கிறார். சொந்த ஊரில் இருந்தபோது ஜமாஅத்துடன் தொழுதது போன்று இப்பொழுது ஜமாஅத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனில் இறைக்கண்காணிப்பின் மீதான உறுதிப்பாட்டில் அவர் பலவீனமாகி விட்டார் என்றே கருதப்படும்.

அவர், அந்த அந்நியச் சூழ்நிலையில் ஹராமான- தீய செயல் செய்தால்தான் இறைவன் பார்க்கிறான் என்கிற முறாக்கபாவைக் கைவிட்டவர் என்பதில்லை. கடமையில் குறைபாடு செய்தாலும் அவர் அந்த உறுதிப்பாட்டை இழந்தவர்தான்!

எனவே எங்கு சென்றாலும் யார் உடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்பொழுதும் அல்லாஹ் நம்மைப் பாhத்துக் கொண்டிருக்கிறான். நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்கிற உறுதியான நம்பிக்கைதான் எப்பொழுதும் ஒரு முஸ்லிமை பாதுகாக்கும் கேடயம் ஆகும்.

இதனால்தான் நம் பிள்ளைகளுக்குக் கல்வியும் நல்லொழுக்கமும் அளிக்கும்போது முறாக்கபா எனும் இறைக்கண்காணிப்பை அவர்களின் உள்ளங்களில் பதியச் செய்வதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

‘மகனே இதோ! பார்! உனது சொல்லையும் செயலையும் ஏன், உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். உன் தந்தை அல்லது ஆசிரியரின் பார்வையை விட்டும் நீ தப்பிடலாம். ஆனால் அல்லாஹ்வின் பார்வையை விட்டும் நீ எங்கும் சென்றிட முடியாது. எனவே நீ எங்குச் சென்றாலும் தொழுகையை விட்டு விடக்கூடாது. தொழுகையை நீ புறக்கணித்தால் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது” என்று பயிற்சி அளித்திட வேண்டும்.

நம் பிள்ளைகள் நமது முன்னிலையில் தொழலாம். நம்முடன் பள்ளிவாசலுக்கு வரலாம். ஆனால் இந்நிலையை மட்டும் பார்த்து நாம் ஏமாந்து விடக்கூடாது. எப்பொழுதும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற (முறாக்கபா) இறைக் கண்காணிப்பின் அடிப்படையில் தொழுகையை நிறைவேற்றுகிறார்களா என்பதுதான் முக்கியம். அப்போதுதான் பெற்றோரும் ஆசிரியரும் இல்லாத இடத்திலும்கூட நம் பிள்ளைகள் தொழுகையை நிறைவேற்றத் தவறமாட்டார்கள்!

முறாக்கபா – இறைக் கண்காணிப்பில் உறுதி கொண்டு எப்பொழுதும் நம் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். ஷிர்க் எனும் இணைவைப்பு, முகஸ்துதி மற்றும் பாவமான எண்ணம், பிற முஸ்லிம்கள் மீதான பொறாமை, குரோதம், வெறுப்பு, இதேபோல் இறைநிராகரிப்பாளர்கள் மீது நேசம் போன்ற -அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முரணான நிலைகள் உள்ளத்தில் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லா விவகாரங்களையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவன் கூறுகிறான்:

திண்ணமாக நாமே மனிதனைப் படைத்தோம். அவனது மனத்தில் நிழலாடும் எண்ணங்களைக்கூட நாம் அறிகிறோம்’
(50:16) -அதாவது அவற்றை வார்த்தையால் வெளிப்படுத்துவதற்கு முன்பே அல்லாஹ் அறிகிறான்!

ஆக, மனிதனுடைய செயல், சொல், எண்ணம் இம் மூன்றுமே அல்லாஹ்வின் கண்காணிப்பில் உள்ளன! இதனால் தான் இஹ்ஸான் என்றால் என்ன என்று நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்ட பொழுது அல்லாஹ்வை – நீ பார்ப்பதுபோல் வணங்கிட வேண்டும். நீ அவனைப் பார்க்கவில்லையானாலும் அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று பதில் சொன்னார்கள்! (புகாரி, முஸ்லிம்)

வணக்க வழிபாட்டில் இஹ்ஸான் எனும் அழகுமிக்க நிலையின் முதல் அம்சம், அல்லாஹ்வை கண்ணெதிரில் பார்ப்பதாகக் கருதி வணங்குவதே. இது ஆவலுடனான வழிபாடாகும்.

இரண்டாவது அம்சம், அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற நிலையில் வணங்குவது. இது அச்சத்துடனான வழிபாடாகும்.

ஐந்து இருள்களுக்கு அடியிலுள்ளதையும்…!

இமாம் நவவி (ரஹ்)அவர்கள். முறாக்கபா – இறைக் கண்காணிப்புக்கு ஆதாரமாகக் கொடுத்துள்ள இரண்டாவது வசனம் வருமாறு:

திண்ணமாக வானத்திலும் பூமியிலும் எந்த ஒரு பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்தன்று’ (3:5)

அல்அன்ஆம் அத்தியாயத்தில் ஓரிடத்தில் இதனை இன்னும் விவரமாகக் கூறுகிறான்:

‘மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. கடலிலும் திடலிலும் இருப்பவை அனைத்தையும் அவன் அறிகிறான். மரத்தில் இருந்து எந்த இலையும் அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களினுள் மறைந்திருக்கும் எந்த விதையும் அவன் அறியாமல் இல்லை. பசுமை யான மற்றும் உலர்ந்த அனைத்துமே தெளிவான ஓர் ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை! (6:59)

கீழே விழும் இலைகளை அறியும் அளவுக்கு அல்லாஹ்வின் அறிவுஞானம் விசாலமானது. அப்படியெனில் வளர்ந்து வரும் இலைகளை அவன் அறிவது பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

பூமியின் இருள்களினுள் மறைந்திருக்கும் விதைகளை அறிகிறான்.

அதாவது, ஆழ்கடலின் அடி ஆழத்தில் மொத்தம் ஐந்து இருட்கள் உள்ளன. (1) கடல் சகதியின் இருள் (2) கடல் நீரின் இருள் (3) இரவின் இருள் (4) அடர்த்தியான மேகங்களின் இருள் (5) பொழிந்து கொண்டிருக்கும் மழையின் இருள். இத்தனை இருள்களுக்குக் கீழே உள்ள வித்துக்களைக்கூட அறியும் ஆற்றல் நிறைந்தவன் அல்லாஹ்.

எனவே இந்த அளவு விசாலமான அறிவு ஞானமும் ஆற்றலும் நிறைந்த அந்த அல்லாஹ்வை – வெளிரங்கத்தில் அஞ்சி வாழ்வது போன்று அந்தரங்கத்திலும் அஞ்சி வாழ்வது நமது கடமை. சரியாகச் சொல்வதானால், அந்தரங்கத்தில் அல்லாஹ்வை அஞ்சுவதுதான் வாய்மையில் உறுதியானது. ஏனெனில், யாரும் நம்முடன் இல்லாத நிலையாகும் அது. வெளிரங்கத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதில்கூட சில வேளை நம் உள்ளத்தில் முகஸ்துதி – பிறருக்குக் காண்பிக்கும் எண்ணமும் பிறர் புகழவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு விடலாம்!

வளையம் போன்ற வானமும் பூமியும்

மற்றொரு வசனம் ‘நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கிறான்’ (57 – 4)

இங்கு ஹுவ (அவன்) எனும் பிரதிப் பெயர்ச்சொல் அல்லாஹ்வைக் குறிப்பதாகும். அதாவது அல்லாஹ் மனிதர்களாகிய தன் அடியார்களுடன் இருக்கிறான். அவர்கள் எங்கு இருந்தாலும் சரியே! கடலில், திடலில், வான் வெளியில், இருளில் அல்லது ஒளியில் எங்கிருந்தாலும் எந்நிலையானாலும் அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான்! அறிவு ஞானத்தால் ஆற்றலால் அதிகாரத்தால் மனிதர்களை அவன் முழுமையாக சூழ்ந்திருக்கிறான்.

இந்த வசனத்தின் – இதுபோன்ற பிற வசனங்களின் கருத்து, மனிதன் எந்த இடத்தில் இருக்கிறானோ அந்த இடத்திலேயே அவனுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதல்ல. அல்லாஹ் இருப்பது அனைவருக்கும் மேலே அர்ஷில்தான். குர்ஆன் ஓரிடத்தில்,

கருணைமிக்க இறைவன் அர்ஷில் அமர்ந்துள்ளான்’
(20:5) என்கிறது. இன்னும் பல வசனங்கள் இந்தக் கருத்துக்கு ஆதாரமாக உள்ளன. ஆனால் ஒன்று, அல்லாஹ் தன்னுடைய தன்மைகளிலும் குணாம்சங்களிலும் ஒப்புமை இல்லாதவன் என்பதை மறந்து விடக் கூடாது. நெருக்கமாக இருப்பதுடன் மிக உயர்வானவன். உயர்வாக இருப்பதுடன் அருகில் இருப்பவன்! இதைத் தெளிவுபடுத்துகிறது இந்த வசனமும்.

என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அருகிலேயே இருக்கிறோன். அழைப்பவர் என்னை அழைக்கும்போது அவரது அழைப்புக்கு பதிலளிக்கிறேன்’ (2:186). அதாவது அல்லாஹ்வின் ஆற்றல், அதிகாரம், கண்காணிப்பு மனிதனின் அருகில் இருக்கிறது!

அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ்வின் கண்காணிப்புக்கு எதிரில் இந்த ஏழு வானங்கள் -பூமியின் நிலைமை என்ன என்பதை ஒரு நபிமொழி இவ்வாறு எடுத்துரைக்கிறது: ‘நிச்சயமாக இந்த ஏழு வானங்களும் ஏழு பூமிகளும் அல்லாஹ்வின் குர்ஸிக்கு எதிரில் பரந்து விரிந்ததொரு திடலில் போடப்பட்ட ஓர் இரும்பு வளையத்தைப் போன்றதாகும்’

இன்னோர் உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் தன்னைக் குறித்து நான் உங்களுடன் இருக்கிறேன் எனும் வாசகத்தில் உள்ள உடனிருத்தல் என்பது வசனம் இடம் பெற்றுள்ள இடத்தைப் பொறுத்துப் பல கருத்துகளில் வருகிறது.

1) அல்லாஹ் தனது அறிவுஞானம், ஆற்றல், அதிகாரம், நிர்வாகம் ஆகியவற்றால் மனிதர்களைச் சூழ்ந்திருப்பது.

மேலே சொன்ன 57:4 வசனத்தின் கருத்தும் இதுதான். அல் முஜாதலா அத்தியாயத்தில் உள்ள இந்த வசனத்தின் கருத்தும் இதுதான்:

‘மூன்று மனிதர்களிடையே ரகசியப் பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறுவதில்லை. அவர்களிடையே நான்காவதாக அல்லாஹ்வும் இருந்தே தவிர! அல்லது ஐந்து மனிதர்களிடையே எந்த இரகசியப் பேச்சு வார்த்தையும் நடை பெறுவதில்லை. அவர்களிடையே ஆறாவதாக அல்லாஹ் இருந்தே தவிர! இரகசியப் பேச்சுகள் பேசுவோர் இதனைவிடக் குறைவாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் – எங்கு இருந்தாலும் அவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்’ (58 :7)

2) எச்சரிக்கை செய்வது. ஓரிடத்தில் குர்ஆன் கூறுகிறது:

‘அவர்கள் தம் இழிச்செயல்களை மக்களுக்குத் தெரியாமல் மறைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. அவனோ – அவனது விருப்பத்திற்கு மாறாக அவர்கள் சதியா லோசனை செய்து கொண்டிருக்கும்போதுகூட அவர்களுடன் இருக்கிறான்.மேலும் அல்லாஹ் அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் சூழ்ந்து அறியக் கூடியவனாக இருக்கிறான்’ ( 4:108)

– அல்லாஹ்வுக்குத் தெரியாது என்று கருதிக்கொண்டு சதியாலோசனை செய்வது குறித்து எச்சரிக்கை செய்வதே இங்கு கருத்து.

3) உதவி செய்வது, ஊக்கம் அளிப்பது.

‘எனவே நீங்கள் தைரியம் இழந்து விடாதீர்கள். மேலும் சமாதானத்தைக் கோராதீர்கள். நீங்கள்தாம் வெற்றி பெறக் கூடியவர்கள். அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். மேலும் உங்கள் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்க மாட்டான்’ (47: 35)

இந்த உடனிருத்தலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று: மேலான குணவொழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். உதவியும் ஒத்துழைப்பும் அளித்துக் கொண்டிருக்கிறான் என்பது. குர்ஆன் கூறுகிறது:

‘எவர்கள் இறையச்சத்துடன் வாழ்கிறார்களோ மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களுடன் திண்ணமாக அல்லாஹ் இருக்கிறான்’ (16:128)

இரண்டு : குறிப்பிட்ட அடியார்களுடன் சேர்த்துச் சொல்வதாகும்.

நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன?) நிராகரிப்பாளர்கள் அவரை வெளியேற்றியபொழுது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபொழுது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் – தன் தோழரை நோக்கி, கவலை கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று கூறினார் ‘ (9:40)

– ஹிஜ்ரத்தின் பொழுது குகையில் நபி(ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் தங்கியிருந்தபோது அல்லாஹ் அவர்களுடன் இருந்து உதவியும் ஒத்துழைப்பும் நல்கியது பற்றி கூறுகிறது இந்த வசனம். அப்பொழுது அபூபக்ர் (ரலி) அவர்கள் கவலையும் கலக்கமும் அடைந்த நிலையில் நபியவர்களிடம் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இதோ! எதிரிகள் நம்மை நெருங்கி விட்டார்களே! அந்தப் பாதகர்கள் தங்கள் பாதங்களின் பக்கம் நோக்கினாலே நம்மைப் பார்த்து விடுவார்கள் போலுள்ளதே! என்ன செய்வது?

– ஏனெனில் குறைஷிகள் எப்படியாவது நபியவர்களைப் பிடித்திட வேண்டும் என்று தேடி அலைந்தார்கள். இதற்காக அவர்கள் ஏறாத மலைகள் இல்லை. இறங்காத ஓடைகள் இல்லை. எல்லா இடங்களிலும் சல்லடை போட்டு அரித்தார்கள். நபியவர்களையும் அவர்களின் அன்புத் தோழர் அபூபக்ர் அவர்களையும் பிடித்துக் கொண்டு வருபவருக்கு 200 ஒட்டகங்கள் பரிசு என்று அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தலைக்கு 100 ஒட்டகங்கள். அபூபக்ர் தலைக்கு 100 ஒட்டகங்கள்!

பரிசுக்கு ஆசைப்பட்டவர்கள் அனைவரும் நாலா திசைகள் நோக்கிப் பறந்தார்கள். ஆனால் அவர்களால் நபியவர்களையோ அபூபக்ர் அவர்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவ்விருவருடனும் அல்லாஹ் இருந்தான்! அவனது பாதுகாப்பு இருந்தது! ஒவ்வொரு இடமாகத் தேடிக்கொண்டு வந்த எதிரிகள் ஒரு கட்டத்தில் அந்தக் குகையின் வாசலை நெருங்கினார்கள்! அப்போது அபூபக்ர் (ரலி)அவர்கள் நபியவர்களிடம், இதோ! எதிரிகளில் ஒருவன் தன் பாதங்களின் பக்கம் பார்த்து விட்டாலே நம்மைக் கண்டு கொள்வானே என்று கூறினார்கள்.

அதற்கு நபியவர்கள், ‘கவலை கொள்ளாதீர். திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். நாம் இருவர் மட்டுமல்ல, மூன்றாவதாக அல்லாஹ் இருக்கிறான்’ என்று கூறினார்கள்.

அவ்விருவரையும் யாரும் பிடித்துவிடக்கூடாது என்பது தானே நம் அனைவரின் எதிர்பார்ப்பு! அதுபோன்றுதான் நடந்தது. எந்த ஒரு பாதுகாப்பும் தடையும் இல்லாத நிலையில் குகையிலிருந்த அவ்விருவரையும் எதிரிகளில் எவனும் பார்க்கவில்லை.

சிலபேர் சொல்வது போன்று அங்கு எந்தச் சிலந்திப் பூச்சியும் வலை பின்னவில்லை. எந்தப் புறாவும் கூடு கட்டவில்லை! குகையின் வாசலில் திடீரென எந்த மரமும் முளைத்து விடவில்லை! சில வரலாற்றேடுகளில் சொல்லப்படுகிற இந்தக் கருத்துகளுக்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ்வின் பாதுகாப்பைத் தவிர வேறெதுவும் அங்கில்லை என்பதே உண்மை!

திடீரென தாக்கும் இறைத் தண்டனை!

நான்காவது வசனம்: ‘திண்ணமாக உம் இறைவன் குறி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறான்;’ (89:14)

குறிவைத்து மறைந்திருந்து காத்திருக்கும் இடத்திற்கு அரபியில் மிர்ஸாத் என்பர். இது நரகமாகவும் இருக்கலாம். இவ்வுலகில் இறைவன் வழங்கும் தண்டனையாகவும் இருக்கலாம். அக்கிரமக்காரர்கள் இவ்வுலகில் இறைவனை நிராகரித்து விட்டு, இறைத்தூதர்களின் அறிவுரைகளையும் அலட்சியப்படுத்தி விட்டு பெரும் குழப்பத்தையும் அக்கிரமத்தையும் விளைவிக்கின்றனர்! தாங்கள் செய்யும் தீய செயல்களை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே, தண்டிப்பானே எனும் உணர்வோ அச்சமோ இன்றி இறுமாந்து கிடக்கின்றனர்.

முடிந்தவரை நாள்தோறும் பல்வேறு அநீதிகளைத் துணிந்து செய்கின்றனர்! இனியும் அவர்களை விட்டு வைக்கவோ மேலே செல்லவிடவோ இறைவன் நாடாத நிலைவந்தவுடன் இறைத்தண்டனையின் சாட்டைகள் திடீரென அவர்கள் மீது பாய்கின்றன! – அது பற்றியே இந்த வசனம் எச்சரிக்கை செய்கிறது!

இந்த வசனம், ஆது – ஸமூத் கூட்டத்தார்கள் அடைந்த தண்டனை பற்றி பேசுகிற வசனத் தொடரின் கடைசியில் இடம் பெற்றதாகும். அந்தத் தொடர் வருமாறு:

‘உயரமான தூண்களையுடைய இரம் என்ற ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவர்களைப் போன்று எந்தச் சமுதாயமும் உலக நாடுகளில் படைக்கப்படவில்லை. மேலும் பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?) அந்த மக்களோ உலக நாடுகளில் பெரும் குழப்பத்தை விளைவித்திருந்தார்கள். இறுதியில் அவர்கள் மீது உம் இறைவன் தண்டனையின் சாட்டைகளைப் பொழிந்தான். உண்மையில் உம் இறைவன் குறிவைத்துக் காத்திருக்கிறான்’ (89:6- 14)

ஆத் இனத்தினர், பெரிய பெரிய, வலுவான தூண்களின் மீது எழுப்பப்பட்டிருந்த பிரமாண்டமான வீடுகளில் வசித்து வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அதிகமான வலிமையைக் கொடுத்திருந்தான். அதனால் அவர்கள் பூமியில் அக்கிரமம் புரிந்தார்கள். ஹூத் நபி விடுத்த எச்சரிக்கையை அலட்சியமாகப் புறக்கணித்தார்கள். எங்களை விடவும் அதிக வலிமை உடையவர்கள் யார்? என்று ஆணவமாகப் பேசினார்கள். அதற்கு அல்லாஹ் பதில் அளித்தான்:

‘அவர்களைப் படைத்தானே அந்த அல்லாஹ் அவர்களை விட வலிமைமிக்கவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள்’ (4 :15)

அவர்களை விட அதிக வலிமை அல்லாஹ்விடம் உள்ளது என அல்லாஹ் பதில் அளித்தான். அதற்கு அறிவுப்பூர்வமான ஓர் ஆதாரத்தையும் சமர்ப்பித்தான். அதுதான், அல்லாஹ் அவர்களைப் படைத்தான் என்பது! ஏனெனில், படைத்த இறைவன், படைப்புகளை விடவும் ஆற்றல் மிக்கவன் என்பது மிகத் தெளிவான – வெளிப்படையான உண்மையாகும்.

சத்தியத்தை அலட்சியப்படுத்தி விட்டு பாவங்களில் மூழ்கிக் கிடந்த ஆது இனத்தார் மீது இறைத்தண்டனை பாய்ந்தது எப்படி?

ஒருநாள் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மழை பொழியாததால் பயிர்கள் எல்லாம் அழிந்து நாசம் அடைந்தன! எங்கும் வறட்சி! பசி, பட்டிணி! என்ன செய்வது? எங்கு செல்வது? அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று உணர்ந்த அந்த மக்கள் மழை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். மழை வரும் என்று பெரிதும் எதிர்பார்த்தார்கள்.

ஒருநாள் அதிகாலையில் கடுமையான புயற்காற்றை அல்லாஹ் அனுப்பினான். புழுதி மண்ணோடு சுழற்றிச் சுழற்றி மிகப் பயங்கரமாக அடித்த அந்தக்காற்று பெரியதொரு மேகக் கூட்டம் போன்று தோற்றம் அளித்தது.

மழைபொழியும் மேகம் தங்களின் நீர் நிலைகளை நோக்கி வருகிறது. இதோ, பெரும் மழை கொட்டப் போகிறதெனக் கருதிய ஆத் இனத்தார்கள் ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் எதிர் நோக்கினர்.

அல்லாஹ்வின் செயல் திறனைப் பாருங்கள்! அவன், ஆது மக்களை அழிப்பதற்கான புயற்காற்றைக்கூட எவ்வாறு அனுப்பினான் எனில், முதலில் மழை பொழியும் மேகம்போல் அது வந்தது. அதன் பிறகு தான் அவர்களைத் தண்டித்தான்! – சோதனைக்குப் பின் வேதனை எனும் நிலையாகும் இது! நீங்கள் ஒரு மனிதனுக்கு சிறிது பணம் தருவதாக ஆசை காட்டி பிறகு அதனைப் பறித்தீர்கள் எனில் அது எவ்வளவு கடுமையான நடவடிக்கையோ அது போன்றதே இதுவும்!

ஆது இனத்தினர் ஹூத் நபியிடம் ஒருவிதமான வரட்டுத் தைரியத்துடன் சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள்: உம்மிடம் ஏதேனும் தண்டனை இருந்தால் அதனைக் கொண்டு வாரும், பார்க்கலாம் என்று! நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்த தண்டனை இதோ! வந்துவிட்டது. அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று தான் அத்தகைய புயற்காற்றை அனுப்பினான் அல்லாஹ்!

அந்தப் புயற்காற்று ஏழு இரவுகள் எட்டு பகல்கள் சுழற்றி சுழற்றி வீசிக் கொண்டிருந்தது! முதல் நாள் காலையில் ஆரம்பித்து எட்டாவது நாள் மாலையில் நிறைவடைந்தது! தொடர்ந்து வீசியது! ஆது இனத்தார் அனைவரையும் அடியோடு ஒழித்தது! அந்த அகோரக்காற்று ஒவ்வொரு ஆது மகனையும் மேலே பெரும் உயரத்திற்குத் தூக்கிக்கொண்டு சென்று கீழே வீசி எறிந்தது. இறுதியில் இற்றுப்போன ஈச்ச மரத்தண்டுகள் சாய்ந்தது போல் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தார்கள்! ஸுஜூதில் கிடந்தது போன்று!

பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்து இல்லங்கள் அமைத்து வசித்து வந்த ஸமூத் இனத்தாரின் கதை என்ன? அவர்களும் அக்கிரமத்திலும் வரம்பு மீறலிலும்தான் மூழ்கிக் கிடந்தனர்! தங்களிடம் அனுப்பப்பட்ட ஸாலிஹ் நபியிடம் இவ்வாறு சவால் விடுத்தனர்:

‘அவர்கள் கூறினார்கள்: ஸாலிஹே! இதற்கு முன்போ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உரியவராக எங்கள் மத்தியில் நீர் இருந்தீர்’ (11:62)

அதாவது, உம்மால் பல்வேறு நலன்கள் கிடைக்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். உம்மைச் சிறந்த அறிவாளி என்றும் நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போதோ நீர் பெரிய அறிவிலியாய் ஆகிவிட்டீரே என்று மரியாதைக் குறைவாகப் பேசினர்.

ஸமூத் கூட்டத்தாருக்கு அல்லாஹ் மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்தான். குர்ஆன் கூறுகிறது:

‘(அப்பொழுது ஸாலிஹ் அந்த மக்களுக்கு) கூறினார்: மூன்று நாட்கள் உங்கள் வீடுகளில் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். இந்தக் காலத் தவணை பொய்யானதல்ல(11: 65)

மூன்று நாட்கள் நிறைவானபொழுது பெரும் பூகம்பம் ஏற்பட்டு ஸமூத்களின் வசிப்பிடங்கள் எல்லாம் இடிந்து தரைமட்டமாகி அழிந்து நாசமாயின! அத்துடன் பேரிடி ஒன்றும் அவர்களைத் தாக்கியது! உடனே – தொழுவத்தில் மிதித்து நசுக்கப்பட்ட வைக்கோல் போன்று ஆகிவிட்டனர்! அதாவது வெயிலிலும் காற்றிலும் கிடந்து காய்ந்து இத்துப்போன ஈச்ச மரச்சருகுகள் போன்று வீழ்ந்து கிடந்தனர்! எல்லோரும் அழிந்தொழிந்தனர்!

உள்ளம் ஏற்கிறது. நா மறுக்கிறது!

ஃபிர்அவ்ன் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவன்தான் கொடுமைகள் பல புரிந்த சர்வாதிகாரி! பூமியில் பெரிய அளவில் அக்கிரமும் அராஜகமும் செய்த ஆணவக்காரன்! ஏக இறைவனாகிய அல்லாஹ்வை ஏற்க மறுத்துவிட்டு நானே இறைவன் என்று வரம்பு மீறிப் பேசியவன்!

மூஸா நபியிடம் – அகிலத்தாரின் இரட்சகன் என்றால் யார்? என்று ஏளனமாகக் கேட்டான். மேலும் தன்னுடைய சமூகத்தாரை நோக்கி – உங்களுக்கு என்னை விடுத்து வேறு இறைவன் இல்லை என்று கூறினான்! தன்னுடைய அமைச்சர் ஹாமானிடம் சொன்னான்:

‘நீ எனக்கு ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பு. ஏனெனில், நான் வழிகளைச் சென்றடைவதற்காக – வானத்தின் வழிகளை! (அங்கு சென்று) மூஸாவின் இறைவனை எட்டிப்பார்க்க வேண்டும்! நிச்சயமாக நான் மூஸாவை பொய்யர் என்று கருதுகிறேன்’ (40: 37)

மூஸா உண்மை இறைத்தூதரே என்பதை அறிந்திருந்தும் அதை மறைத்துப் பொய்யைப் பரப்பினான் ஃபிர்அவ்ன். மூஸாவுடன் அவன் புரிந்த தர்க்கவாதத்திலிருந்து அது தெரிய வருகிறது! அது பற்றி குர்ஆன் குறிப்பிடுவதைப் பாருங்கள்:

‘அதற்கு மூஸா கூறினார்: அகத் தெளிவை ஏற்படுத்தக்கூடிய இந்தச் சான்றுகளை, வானம் – பூமியின் இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறக்கி வைக்கவில்லை என்பதை நீ நன்கு அறிவாய். ஃபிர்அவ்னே! திண்ணமாக உன்னை நாசத்திற்குள்ளாகும் மனிதனாகவே நான் கருதுகிறேன்’ (17:102)

– இவ்வாறு ஃபிர்அவ்னை நோக்கி மூஸா கூறியபோது அதனை அவன் மறுக்கவில்லை. மௌனமாக இருந்தான். மிகப் பெரிய அளவில் தர்க்கவாதம் நடந்து கொண்டிருந்த, ஒருவருக்கொருவர் சவால் விடுத்துக் கொண்டிருந்த பெரும் கூட்டம் ஒன்றில் இவ்வாறு ஃபிர்அவ்ன் மௌனம் சாதித்தது எதைக் காட்டுகிறது? அதற்கு அவனிடம் பதில் இல்லை. அதனை அவன் ஏற்றுக்கொண்டான் என்பதைத்தானே காட்டுகிறது!

ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தினரும் வேண்டுமென்றே இறைவனை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள் என்று வேறோர் இடத்தில் குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

‘அவர்கள் முற்றிலும் அநியாயமான முறையிலும் ஆணவத்தினாலும்தான் அந்தச் சான்றுகளை மறுத்தார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களோ அவற்றை ஏற்றுக் கொண்டிருந்தன’ (27:14)

இவ்வாறு இறைத்தூதரின் அறிவுரைகளை ஆணவமாக மறுத்த ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தினரும் அடைந்த கதி என்ன? மிகப் பெரிய இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளானார்கள்! பல தோல்விகளைச் சந்தித்தனர்! மூஸாவுக்கும் சூனியக்காரர்களுக்கும் நடந்த போட்டியில் அவர்கள் சந்தித்தது பெரும் தோல்வி.

நாட்டிலிருந்த எல்லா சூனியக்காரர்களையும் ஃபிர்அவ்ன் ஒன்று திரட்டியிருந்தான். போட்டியை எந்த நாளில் வைத்துக் கொள்வது எனும் பிரச்னை வந்தபொழுது பண்டிகை நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று மூஸா நபி கூறிய கருத்துதான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏனெனில் அவர்கள் ஃபிர்அவ்னின் பார்வையில் பலவீனமானவராக இருந்தாலும் அல்லாஹ்வின் உதவியும் ஒத்துழைப்பும் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது!

சிறிய,பெரிய சூனியக்காரர்கள் அனைவரும் ஒருபுறத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். மறு புறத்தில் மூஸா மட்டும் நின்று கொண்டிருந்தார்கள்! எல்லாச் சூனியக்காரர்களும் தங்களுடைய கைத்தடிகளையும் கயிறுகளையும் பூமியில் எறிந்தனர். அவை அந்தப் பூமி முழுவதும் பாம்புகளாய்ப் பரவின! அந்தக் காட்சி எல்லோரையும் திடுக்கிடச் செய்தது! மூஸா நபியும்கூட அஞ்சி நடுங்கினார்கள்! ஆனால் அவர்களுக்கு அல்லாஹ் தைரியம் ஊட்டினான்.

‘நாம் கூறினோம்: அஞ்சாதீர். நீர்தான் வெற்றியாளர். உமது கையில் உள்ளதை எறியும்’ (20: 69)

மூஸா நபியவர்கள் தமது கைத்தடியை எறிந்தார்கள். என்னே ஆச்சரியம்! மூஸா நபி போட்ட அந்தக் கைத்தடி அங்கு இருந்த மந்திரமாயச் சாதனங்கள் அனைத்தையும் அதாவது, ஏனைய மந்திரவாதிகள் போட்ட கயிறுகள், கைத்தடிகள் அனைத்தையும் விழுங்கியது! மந்திரக் கயிறுகளும் மாயப் பிரம்புகளும் எங்கே காணோம்? மூஸா நபியின் கைத்தடி இவ்வுலகையே விழுங்கும் அளவுக்கு அப்படி ஒன்றும் பெரியதல்லவே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்!

ஆனால் அல்லாஹ்வின் ஆற்றல் மகத்தானது! எல்லாவற்றினும் பெரியது! அந்த ஆற்றல்தான் இந்த அதிசயத்தை நிகழ்த்தியது! மூஸாவின் கையிலிருந்த சிறிய கைத்தடியால் சூனியக்காரர்களின் எல்லாக் கண்கட்டி வித்தைகளையும் மாயமாய் மறையச் செய்தது! வந்திருந்த மந்திரவாதிகள் அனைவரும் சூனியக்கலையில் மிகவும் கைதேர்ந்தவர்கள். மூஸா காண்பித்தது சூனியம் அல்ல. அது அல்லாஹ்வின் ஆற்றல்! அவனது வல்லமைக்கான சான்றுகளுள் பெரும் சான்று என்பதை அப்பொழுது அவர்கள் உறுதியாகத் தெரிந்து கொண்டனர்! பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்?

‘சூனியக்காரர்கள் அனைவரும் தம்மையும் அறியாமல் ஸஜ்தாவில் விழுந்தனர். பிறகு அவர்கள் உரக்கக் கூறினார்கள்: நம்பிக்கை கொண்டோம், அகிலங்களின் இறைவனை, மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை!’ (26:47 – 48)

இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘உல்கிய’ எனும் வார்த்தை கவனத்திற்குரியது. மூஸா நபியின் வாய்மையும் உண்மையும் அந்த மந்திரவாதிகளுக்குத் தெளிவாகப் புலப்பட்டபொழுது அதுதான் அவர்களின் உள்ளங்களைப் பிடித்து உலுக்கியது! தம்மையும் அறியாமலே ஸஜ்தாவில் விழுந்தனர். பின்னாலிருந்து யாரோ பிடித்துத் தள்ளியது போன்றிருந்தது அவர்களின் நிலை! உடனே அகிலத்தின் அதிபதியாகிய ஏக இறைவன் மீது நம்பிக்கை கொண்டதாகப் பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தார்கள்.

புதிய முஸ்லிம்களின் மன உறுதி!

மந்திரவாதிகள் அனைவரும் இறைநம்பிக்கை கொண்டபோது ஃபிர்அவ்ன் திடுக்கிட்டான். அவர்களைக் கடுமையாக எச்சரிக்கை செய்தான். அவனே அழைத்து வந்திருந்த மந்திரவாதிககள் மீது – நீங்கள் எல்லாம் மூஸாவின் கைக்கூலிகள் என்று அவதூறு சுமத்தினான்.

உண்மையை உணர்ந்த சூனியக்காரர்களோ- மூஸா இறைத்தூதர் என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறினார்கள்! ஆனால் ஃபிர்அவ்ன் – மூஸாவே! இப்படி இப்படி நடிக்க வேண்டும் என்று முன்பே இவர்களிடம் சொல்லி வைத்து நீர்தான் இவர்களை அழைத்து வந்தீரோ என்று கூறினான்!

என்னே! ஆச்சரியம், வீண் பிடிவாதம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் பேசச் செய்கிறது என்பதைப் பாருங்கள்!

பிறகு சூனியக்காரர்களை நோக்கி- உங்களின் மாறு கை, மாறு கால்களை வெட்டிவிடுவேன். பேரீச்ச மரக் கம்பங்களில் அறைந்து உங்களைக் கொன்றுவிடுவேன் என்று ஃபிர்அவன் மிரட்டினான். எனது அனுமதி இன்றி ஏன் மூஸா மீது நம்பிக்கை கொண்டீர்கள்? என்று அதட்டினான்.

அதற்கு சூனியக்காரர்கள் கூறினார்கள்: ‘எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரில் காட்சி தந்த பின்னரும் நாங்கள் சத்தியத்தை விட உனக்கு ஒருபோதும் முன்னுரிமை தர மாட்டோம். எனவே நீ என்ன செய்ய விரும்புகிறாயோ செய்துகொள்’

இதுதான் இறைநம்பிக்கையின் மகா வலிமை! பேராற்றல்! சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பிறகு உனது கொள்கையை நாங்கள் ஏற்பதற்கு என்ன இருக்கிறது! நீ எங்களுக்கு இரட்சகன் அல்ல. நீ சொல்லும் வாதம் பொய்யனே தவிர வேறில்லை! மூஸா நபியின் இறைவன் தான் எங்களுக்கும் இறைவன் என்று துணிந்து முழங்கினார்கள் அந்தப் புதிய முஸ்லிம்கள்!

இறைநம்பிக்கை உள்ளத்தில் புகுந்துவிட்டால் – அதன் உறுதிப்பாடு இதயத்தில் இடம் பிடித்துவிட்டால் பிறகு யாராலும் அதனை மாற்ற முடியாது! இதோ! பாருங்கள்! இந்த மந்திரவாதிகள், அன்று காலைப்பொழுதில் ஃபிர்அவ்னின் கைக்கூலிகள். மாலை நேரத்தில் உண்மையான நம்பிக்கையாளர்கள்! இறைநம்பிக்கை ஏற்படுத்திய இந்தத் திடீர் மாற்றம் ஒரு மகத்தான புரட்சியே தவிர வேறில்லை!

ஃபிர்அவ்ன் படுமோசமான தோல்வியை எதிர்கொண்டான்! அதனால் ஏற்பட்ட அவமானத்தை அவனால் தாங்க முடியவில்லை. பழி தீர்ப்பதற்குத் துடித்தான். படைகளைத் திரட்டிக் கொண்டு எப்படியும் மூஸாவை ஒழித்துக் கட்டியே தீர வேண்டும் என்று போர்முரசு கொட்டினான்.

மூஸா நபியோ தம் ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு தப்பி ஓடினார்கள். அல்லாஹ்வின் ஆணைப்படி செங்கடலை நோக்கி அதாவது கிழக்கு நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்களுக்குக் கிழக்கே செங்கடலும் மேற்கே எகிப்தும் இருந்தன!

கடற்கரையைச் சென்றடைந்தபொழுது பின்னால் ஃபிர்அவ்னும் அவனுடைய படைவீரர்களும் துறத்திக் கொண்டு வருவதைக் கண்டனர். எதிரில் கடல். பின்னால் ஃபிர்அவ்ன்!

மூஸாவுடன் வந்த மக்கள் கதி கலங்கினார்கள்! இதோ! நாம் வம்பில் மாட்டிக் கொண்டோம். எதிரில் கடல். பின்னால் ஃபிர்அவ்னும் அவனுடைய படையினரும்! செல்லும் வழி எங்கே? தப்பிப்பது எப்படி என்று கதறினார்கள்!

அதற்கு மூஸா அமைதியாகக் கூறினார்கள்: ‘அவ்வாறல்ல, உங்களை எதிரிகள் பிடித்துவிட முடியாது! என்னுடன் என் இறைவன் இருக்கிறான்! ‘

– இதுதான் ரஸூல்மார்களின் மனோதிடம்! இறைவன் மீது அவர்களுக்கிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை! கடுமையான, நெருக்கடியான காலகட்டங்களில் அவர்களின் இதயம் ஏற்றிருந்த இத்தகைய உறுதிப்பாடுதான் கஷ்டங்களைக் கண்டு கதிகலங்காதிருக்கச் செய்தது! மலைபோன்ற துன்பங்களுக்கு எதிரிலும் அவர்களைத் துணிந்து நின்று இறைப்பணிகள் ஆற்றிடச் செய்தது!

அப்பொழுது அல்லாஹ் மூஸா நபிக்கு வஹி அனுப்பி. உமது கைத்தடியால் கடலை அடிக்கும்படி கூறினான். மூஸா நபி அவ்வாறு செய்யவே கடல் பிளந்தது. சேரும் சகதியுமில்லாத காய்ந்த தரையாகவும் மாறியது! மக்கள் எல்லோரும் அதில் இறங்கிக் அக்கரை சேர்ந்தனர்!

அதனைக் கண்ட ஃபிர்அவ்னும் அவனுடைய படையினரும் அதே பாதைகளில் புகுந்தனர். அவர்கள் முழுவதும் கடலினுள் இறங்கியதும் கடல் மூடிக்கொண்டது. ஃபிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் மூழ்கடித்து அழித்தது.

ஃபிர்அவ்ன் எப்படி அழிந்தான் என்பதுகூட ஒரு படிப்பினையே! தனது நாட்டில் ஓடிக்கொண்டிருந்த நதிகளையும் கடல்களையும் கண்டு திமிர் கொண்டு பெருமை பேசியே தான் சத்தியத்தை அவன் நிராகரித்தான் இல்லையா? அவனது அத்தகைய ஆணவமான பேச்சை குர்ஆன் குறிப்பிடுவதைப் பாருங்கள்:

எகிப்தின் அரசாட்சி என்னுடையதல்லவா! இந்த ஆறுகள் எனக்குக் கீழே அல்லவா ஓடிக் கொண்டிருக்கின்றன! என்ன உங்களுக்குப் புலப்படவில்லையா? நான் சிறந்தவனா? அல்லது கேவலமானவரும் தனது கருத்தைத் தெளிவாக எடுத்துரைக்க இயலாதவருமாகிய இந்த மனிதன் சிறந்தவரா? ஏன், இவருக்குத் தங்கக் காப்புகள் அணிவிக்கப்படவில்லை? அல்லது வானவர்களின் ஒரு குழு ஏன் இவருடன் வரவில்லை?’ (43:51 – 53)

என்னே ஆச்சரியம், பாருங்கள்! இறுதியில் அதே நீரில் மூழ்கடிக்கப்பட்டே ஃபிர்அவ்னும் அவனுடைய படையினரும் அழிக்கப்பட்டனர்!

இதேபோல் ஆத் இனத்தார்கள், எங்களைவிட அதிக வலிமை கொண்டவர் யார்? என்று எக்காளமடித்தனர். பாருங்கள்! மிக மிக மென்மையான-இலகுவான பொருளாகிய காற்றின் மூலமே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்! இறைவனின் வல்லமையை பறைசாற்றும் தெளிவான சான்றுகள் அல்லவா இவை?

பார்வையும் கண்காணிக்கப்படுகிறது!

ஐந்தாவது வசனம்:’ கண்களின் கள்ளத்தனங்களையும் நெஞ்சங்கள் மறைக்கக் கூடியவற்றையும் அவன் அறிகிறான்.’

ஒருவன் ஒரு பொருளைத் தவறான முறையில் பார்க்கிறான் என்றால் அவனது அந்தத் தவறான பார்வையை உங்களால் அறிய முடியாது. ஆனால் அல்லாஹ் அறிகிறான்.

இதேபோல் ஒரு மனிதனை வெறுப்புடன் பார்க்கிறான். அது உவப்பான பார்வை என்றே அந்த மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான். ஆனால் வெறுப்பான பார்வையா? உவப்பான பார்வையா? என்பது அல்லாஹ்வுக்கு தெரியும்.

கண்களின் கள்ளத்தனத்தையும் உள்ளத்து இரகசியங்களையும் அறியும் ஆற்றல்மிக்க அல்லாஹ்வுக்குத்தானே நாம் அகமும் புறமும் அஞ்சி வாழ்ந்திட வேண்டும். அதுவே நமது கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *