Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5-60)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5-60)

60. மனித வடிவில் வந்த ஜிப்ரீல்!

ஒரு நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது திடீரென ஒருவர் எங்கள் முன் வந்தார். அவருடைய ஆடை அதிக வெண்மையாகவும் தலைமுடி அதிகக் கருமையாகவும் இருந்தது அவரைப் பார்த்தால் பயணத்திலிருந்து வந்தவர் போன்றும் தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னர் எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவுமில்லை. அவர் நபியவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார். தன்னுடைய முழங்கால்களை அவர்களின் முழங்கால்களுடன் இணைத்து வைத்தார். பிறகு தன் கைகளை அவர்களின் தொடைகள் மீது வைத்தார். முஹம்மதே! எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறும் எனக் கேட்டார்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் என்றும் நீ சாட்சியம் அளிக்க வேண்டும். இன்னும் தொழுகையை நீ நிலைநாட்ட வேண்டும். மேலும் ஜகாத் வழங்க வேண்டும். ரமளானில் நோன்பு நோற்க வேண்டும். வசதி இருந்தால் கஃபா ஆலயத்திற்குச் சென்று நீ ஹஜ் செய்ய வேண்டும். இந்தச் செயல்களே இஸ்லாம் ஆகும்.

அதற்கு அந்த மனிதர், நீர் உண்மையே உரைத்தீர் என்றார். அவர் கேள்வியும் கேட்கிறார். நபியவர்களின் கூற்றை மெய்யானது என்று உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியந்தோம்.

பிறகு அவர், ஈமான் – நம்பிக்கை பற்றி எனக்கு அறிவித்துத் தாரும் எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: ‘இறைவன் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் மறுமை நாள் மீதும் நல்லது கெட்டது விதியில் எழுதப்பட்டு விட்டன என்றும் நீர் நம்பிக்கை கொள்வதாகும் ஈமான் என்பது’.

அதற்கு அந்த மனிதர் நீங்கள் உண்மையே உரைத்தீர் என்றார்.

பிறகு அவர், இஹ்ஸான் பற்றி எனக்குக் கூறும் என்றார்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: இஹ்ஸான் என்றால், நீர் அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வோடு அவனை வணங்குவதாகும். அவ்வாறு நீர் அவனைப் பார்ப்பது போல் வணங்க முடியாவிட்டால், அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் (எனும் உறுதியான உணர்வோடு அவனை வணங்க வேண்டும்)

வந்தவர் மீண்டும் – எனக்கு மறுமை நாளைப் பற்றிக் கூறும் என வினவினார்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவரல்லர்.

பிறகு அவர் மறுமை நாளின் அடையாளங்கள் பற்றிச் சொல்லும் என்றார்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் அறிகுறிகள் இவையே: அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகள் அணியாத, (அரை) நிர்வாணமாகத் திரியக் கூடிய, ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் தரித்திரர்கள் பெரிய பெரிய மாளிகைகளில் இருந்து பெருமை அடித்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்.

பிறகு அந்த மனிதர் சென்றுவிட்டார். நான் வெகு நேரம் அப்படியே இருந்தேன். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, உமரே! இப்பொழுது வந்து சென்றவர் யார் என்பதை நீர் அறிவீரா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இறைவனும் அவன் தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள் எனக் கூறினேன்,

அதற்கு நபிவர்கள் கூறினார்கள்: அவர்தான் ஜிப்ரீல். உங்களுக்கு உங்கள் தீனை- இறைமார்க்கத்தைப் போதிக்கவே உங்களிடம் அவர் வந்திருந்தார். (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

காலத்தின் அருமை!

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபொழுது திடீரென ஒருவர் எங்கள் முன் வந்தார்.

– நபித் தோழர்கள் அநேக நேரங்களில் நபிகளாருடன் அமர்ந்து உரையாடுவது வழக்கம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஒன்று, வீட்டில் அன்பு மனைவி – மக்களுடன் இருப்பார்கள் அல்லது அருமைத் தோழர்களுடன் இருப்பார்கள்.

வீட்டில் இருந்தாலும் நபியவர்கள் வெறுமனே உட்கார்ந்து நேரத்தை வீணாகக் கழிப்பதில்லை. ஆடு – ஒட்டகங்களில் பால் கறப்பது, கிழிந்த ஆடைகளைத் தைப்பது, பிய்ந்த செருப்புகளைச் செப்பனிடுவது போன்ற ஏதேனும் ஒரு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

அன்புத் தோழர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தால் இறைமார்க்கப் போதனைகளைத்தான் எடுத்துரைத்துக் கொண்டி ருப்பார்கள். வெளியில் சென்றால் உறவினரைச் சந்திக்கச் செல்வார்கள். அல்லது நோயாளியைப் பார்த்து நலம் விசாரிப்பார்கள். அல்லது ஏதேனும் மக்கள் சேவையில் ஈடுபட்டிருப்பார்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் காலம்நேரம் என்பது வீணாகியதே கிடையாது. வேறு வார்த்தையில் சொல்வதானால் நபியவர்கள் தம் வாழ்நாள் முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில் -அறபணியில்தான் அற்பணித்திருந்தார்கள்.

இன்று நமது நிலை என்ன? நேரத்தை வீணாக்குது நமது அன்றாடப் பழக்கமாகி விட்டது! ஆச்சரியம் என்னவெனில்; காலம் பொன்னைவிடவும் மதிப்புமிக்கதென்று சொல்லிக் கொண்டே அதை அலட்சியமாகக் கருதி வீணாக்கிக் கொண்டி ருக்கிறோம்! இதனை விடவும் பெரிய இழப்பு வேறென்ன இருக்க முடியும்! இதோ! குர்ஆன் கூறுகிறது:

‘இறுதியில் அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமாயின் இறைவா! நான் விட்டு வந்துள்ள உலகத்திற்கு என்னை மீண்டும் அனுப்பு. அப்படி அனுப்பினால் அங்கு நான் நற்செயல் செய்வேனே என்று கூறத் தொடங்குவான்!’ (23: 99-100)

அதாவது மீண்டும் உலகிற்கு வந்தால் நற்செயல் செய்வேன். காலத்தை நல்ல-பயனுள்ள வகையில் ஈடுபடுத்து வேன். அதை வீணாக்க மாட்டேன் என்பானாம். சொத்து சுகத்தை அனுபவிப்பேன். மனைவியுடன் இன்பமாக வாழ் வேன். சொகுசான வாகனங்களில் உல்லாசமாகச் சுற்றித் திரிவேன். மாடமாளிகையில் இன்பம் துய்ப்பேன் என்றெல்லாம் சொல்லமாட்டான். காலத்தை உலகில் வீணாகக் கழித்தது குறித்து மனம் நொந்து பேசுவான்.

இதனை விடவும் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், நம்மில் பலர் காலத்தை நேர்முரணாகத் தீய செயல்களில் பயன்படுத்துகிறார்கள். ஓரிரு நபர்களை மட்டும் சொல்லவில்லை. ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நிலையே இதுதான்! வேடிக்கைகளிலும் கேளிக்கைகளிலும்தான் அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். தீன்-இறைமார்க்கத்திற்காக உழைக்கும் கடமையைப் புறக்கணித்து விட்டனர். மறுமையில் பயனளிக்கும் நன்மையான காரியங்களை மறந்து திசை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். வணக்க வழிபாடுகளில்கூட யாரும் வினையத்துடன் ஈடுபடுவதில்லை. இவ்வாறு காலம் நேரத்தைப் பொறுத்து முஸ்லிம்கள் பெரிய அலட்சியத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர் முஸ்லிம்கள் என்பதுதான் மிக வேதனையான உண்மை! (அல்லாஹ் பாதுகாப்பானாக)

அந்நியரல்லாத அந்நியர்!

சரி, நபியவர்களின் அவைக்கு வந்தவரின் விஷயம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

அவருடைய ஆடை அதிக வெண்மையாகவும் தலைமுடி அதிகக் கருமையாகவும் இருந்தது.அவரைப் பார்த்தால் பயணத்தில் இருந்து வந்தவர் போன்றும் தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னர் எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவும் இல்லை.

அதாவது அவர் இளைஞராக இருந்தார். ஆடைகள் பளிச்சென்று வெள்ளவெளேரென இருந்தன. பயணக் களைப்போ அறிகுறியோ அவரிடம் இல்லை. வெளியூரிலிருந்து வந்தாரெனில் அப்படி இருக்க முடியாது. ஏனெனில் அந்தக் காலத்தில் நடை பயணம் அல்லது ஒட்டகம் போன்ற வாகனப் பயணம்தான். பாதை கரடு முரடாகவும் புழுதிக் காடாகவும் இருக்கும். அப்படி ஒரு பயணித்திலிருந்து வந்தாரெனில் இவ்வளவு நீட்டாக அவர் இருக்கமுடியாது! சுரி, அவர் உள் ளுர்வாசியா என்றால் அதுவும் இல்லை. அந்நியரல்லாத அந்நியர் என்றுதான் அவரைச் சொல்ல வேண்டும்! அதனால்தான் நபித் தோழர்களுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம்!

நபி(ஸல்)அவர்களுக்கு அருகே நெருக்கமாக வந்து உட்கார்ந்து உரையாடிய அந்த மனிதர் யார்?

வேறு யார்? ஜிப்ரீல்தான்! அதிகக் கண்ணியம் வாய்ந்த மலக்குமார்களில் முக்கியமானவர். ஏன், அவர்தான் மலக்குமார்களிலேயே மேன்மைக்கும் சிறப்புக்குமுரியவர். அத்தகைய சிறப்புக்குக் காரணம் அவர் ஏற்றிருந்த பணிதான். வல்ல இறைவனாகிய அல்லாஹ்விடம் இருந்து வஹியைப் பெற்று வந்து நபிமார்களிடம் ஒப்படைக்கும் உன்னதப் பணியல்லவா அவரது பணி!

நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை அவரது அசல் தோற்றத்தில் இரண்டு முறை பார்த்தார்கள். ஒன்று: ஹிரா குகையில் தங்கியிருந்து முதல் வஹியை பெற்றபொழுது! இரண்டு: மிஃராஜ் எனும் வானுலகப் பயணத்தின்போது!

அந்த ஜிப்ரீல்தான் இப்பொழுது மனித வடிவத்தில் நபியவர்களிடம் வருகை தந்தார். எந்நோக்கத்திற்காக?

அவர் நபியவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார். தம் முழங்கால்களை அவர்களின் முழங்கால்களுடன் இணைத்து வைத்தார். பிறகு தன் கைகளை அவர்களின் தொடைகள் மீது வைத்தார்.

அறிஞர்கள் கூறுகின்றனர்: தமது முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களுடன் இணைத்து உட்கார்ந்த ஜிப்ரீல் தம் கைகளை, நபியவர்களின் தொடைகள் மீது அல்ல, தமது தொடை மீதுதான் வைத்து உட்கார்ந்தார். இதுதானே முறை! ஆசிரியருக்கு எதிரில் அமர்ந்து அங்கு சொல்லப்படும் கருத்துகளைக் கவனமாகக் கேட்கும் சரியான ஒழுங்கு முறை இதுதானே.

இவ்வாறு அமர்ந்த ஜிப்ரீல், யா முஹம்மதே! எனக்கு இஸ்லாத்தைக் குறித்துக் கூறும் எனக்கேட்டார். யா ரஸூலல்லாஹ்! என்று சொல்லாமல் யா முஹம்மத் என்று அழைப்பது நாட்டுப்புறத்து அரபிகளின் வழக்காகும். அவர்கள் தான் அண்ணல் நபியவர்களின் சமூகத்திற்கு வந்தால் ‘யா முஹம்மத்’ என்று சாதாரணமாக அழைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம், கல்வி நாகரிகத்தை விட்டும் அவர்கள் தூரமாக இருந்ததே. ஆனால் அல்லாஹ் கற்றுக் கொடுத்த நல்லொழுக்கத்தைச் செவியேற்றவர்களோ ‘யா ரஸூலல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதரே) என்று அதிகக் கண் ணியத்துடனும் மரியாதையுடனும்தான் அழைத்தார்கள்.ஆனால் இங்கு நபியவர்களிடம் ஒரு நாட்டுப்புற அரபி வந்து கேள்விகள் கேட்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே ஜிப்ரீல் இவ்வாறு செய்தார்.

கல்லும் மண்ணும் கடவுளாகுமா?

இஸ்லாம் என்றால் என்ன என்று விளக்கித்தாரும் என்று ஜிப்ரீல் கேட்டதற்கு நபியவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் என்றும் நீ சாட்சியம் அளிக்க வேண்டும்.

இதுதான் இஸ்லாத்தின் முதல் அடிப்படை. இந்தக் கலிமாவை நாவால் மொழிவதுடன் உள்ளத்தால் உறுதி கொண்டிட வேண்டும்! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று சாட்சியம் அளித்திட வேண்டும்.

வணக்கத்திற்குரியவன் எனும் தன்மை ருபூபிய்யத் எனும் இரட்சகத்தன்மையின் தேட்டமாகும். ஏனெனில் அல்லாஹ்வை இரட் சகன் என்று ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில்தான் அவனை வணங்குவது அவசியமாகிறது. எனவே வணங்கப்படுபவன் இரட்சிக்கும் ஆற்றல்களையும் பிற நிறைவான தன்மைகளையும் பெற்றவனாக இருப்பது அவசியம். குர்ஆன் கூறுகிறது: ‘மிகவும் அழகிய திருநாமங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். எனவே அவற்றைக் கொண்டே நீங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்’ (7:180)

ஆக, லா இலாஹ இல்லல்லாஹு என்பதன் தெளிவான கருத்து யாதெனில் படைப்பினங்களில் எதுவும் எவரும் வணக்கத்திற்கு உரியவர் அல்ல. மலக்கோ நபியோ சூரியனோ சந்திரனோ மரமோ செடியோ கல்லோ மண்ணோ கடலோ திடலோ வலி – இறைநோசரோ உயிர்த் தியாகியோ யாரும் வணக்கத்திற்குரியவர் அல்லர்! வணக்கதிற்கு உரியவன் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை! இந்த ஏகத்துவக் கொள்கையில் உறுதி கொண்டு அதுவே உண்மை என்று சாட்சியமும் அளித்திட வேண்டும்.

எல்லாத் தூதர்களையும் இந்த ஏகத்துவக் கலிமாவுடனேயே அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ் கூறுகிறான்:

‘உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரிடத்திலும்- நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்றே வஹியின் மூலம் நாம் அறிவித்தோம்’ (21:25)

இந்த கலிமாவை ஒருவன் உள்ளத்தால் உறுதி கொண்டு மொழிந்தால், அதன் தேட்டப்படி வாழ்ந்தால், தூய வழிபாடுகளையும் மனித நேயப் பண்பாடுகளையும் வாய்மையுடன் கடைப்பிடித்தால் அவன் இறையருளால் சுவனபதி செல்வான் என்பது திண்ணம்.

‘இவ்வுலகில் எவரது கடைசி வார்த்தை லா இலாஹ இல்லல்லாஹ் என்பதாக இருக்குமோ அவர் நிச்சயம் சுவனம் செல்வார்’ (நூல்: அபூ தாவூத், அஹ்மத், ஹாகிம்)

ஏனைய மதங்களுக்கு இறை அங்கீகாரம் இல்லை!

திண்ணமாக முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் அதாவது அரபு நாட்டில் குறைஷி குலத்தில் தோன்றிய, ஹாஷிமி கிளையைச் சேர்ந்த, அப்துல்லாஹ்வின் புதல்வரான முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சியம் அளித்திட வேண்டும். இந்த சாட்சியத்தில் ஏனைய ரஸூல்மார்கள் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் முந்தைய தீன்- மார்க்கங்கள் அனைத்தையும் முஹம்மத் நபியவர்கள் மாற்றி அமைத்து விட்டார்கள்.

அதாவது, முஹம்மத் நபியவர்களே இறுதித் தூதர். அவர்களின் வருகைக்குப் பிறகு ஏனைய மதங்கள் அனைத்தும் காலாவதியாகி விட்டன. யூத, கிறிஸ்தவ மதங்களும் அசல் இழந்து போய்விட்டன. மதங்களின் போதனைகளிலும் அவற்றின் வேதங்களிலும் மனிதர்களின் தவறான கருத்துகள் புகுத்தப்பட்டு ஓரிறைக்கொள்கை உருக்குலைக்கப்பட்டு விட் டன. ஷிர்க் எனும் பல தெய்வக்கொள்கையால் எல்லாம் மாசுபட்டுவிட்டது. அதனால் ஏனைய மதங்களுக்கு இறை அங்கீகாரம் இல்லை எனப்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

யாரேனும் இஸ்லாத்தை விடுத்து வேறொரு மதத்தை விரும்பினால் அவனிடம் இருந்து அது ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது. மறுஉலகத்தில் அவன் நஷ்டம் அடைந்தோரில் ஒருவனாகவே இருப்பான்’
(3:80)

இறுதி நபித்துவம்!

திண்ணமாக முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்…! யாருக்காக அனுப்பப்பட்ட தூதர்? உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்ட தூதர்.

அதாவது, இந்தச் சாட்சியம் நபி(ஸல்)அவர்களின் வருகையுடன் நபித்துவம் முற்றுப்பெற்று விட்டது எனும் கருத்தையும் உள்ளடக்கியதாகும். இனி மனிதகுலம் முழுவதற்கும் அவர்கள்தான் இறைத்தூதர். எதிர்காலத்தில் எவரும் நபியாக வரப் போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் வழங்கிய தீனும் ஷரீஅத்தும் இறைவேதம் குர்ஆனும் இறுதி நாள்வரை நிலைத்திருக்கக் கூடியவையாகும்.

பெரும் பாக்கியம் நிறைந்தவனாக இருக்கிறான், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டும் இதனை (இந்தக் குர்ஆனை) தன் அடியார் மீது இறக்கிவைத்த (இறை) வன், அகிலத்தார் அனைவருக்கும் அவர் எச்சரிக்கை செய்யக் கூடியவராய்த் திகழ வேண்டும் என்பதற்காக!(25 :1) அதாவது இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை செய்யும் உலகத் தூதரே முஹம்மத்(ஸல்) அவர்கள்!

(முஹம்மதே!) நீர்கூறும்: மனிதர்களே! திண்ணாக வானங்கள், பூமியின் அதிபதி யாரோ, எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ,மேலும் எவன் வாழ்வையும்; மரணத்தை யும் கொடுக்கிறானோ அத்தகைய அல்லாஹ்வின் தூதராக உங்கள் அனைவர் பாலும் நான் அனுப்பப்பட்டுள்ளேன். எனவே அல்லாஹ்வின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகிறாரோ அப்படிப்பட்ட உம்மீ நபியாகிய அவனுடைய இந்தத் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அவரைப் பின்பற்றுங்கள். அதனால் நீங்கள் வெற்றி பெறக் கூடும்’ (7: 158)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஹம்மதின் உயிர் எவன் கை வசத்தில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த எவர் ஒருவர் – யூதரோ கிறிஸ்தவரோ -என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு பிறகு என் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தூதுச் செய்தியை நம்பிக்கை கொள்ளாமல் மரணிக்கிறாரோ அவர் நரகவாசிகளைச் சேர்ந்தவரே தவிர வேறில்லை ‘ (நூல்: முஸ்லிம்)

முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மனித இனம் முழுவதற் கும் தூதராக அனுப்பப்பட்டவர்கள் என்பது போன்று அவர்களே இறுதித் தூதர். அவர்களுக்குப் பிறகு நபியோ ரஸூலோ யாரும் வரப்போவதில்லை! அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

(மக்களே) முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக் கும் தந்தையல்லர். ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் இறுதி நபியாகவும் இருக்கிறார் ‘
(33:40)

எனவே நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நானும் ஒரு நபிதான் என்று எவனாவது சொல்லிக்கொண்டு வந்தால் அவன் நிராகரிப்பாளனும் பொய்யனும் ஆவான். யாரும் அவனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அப்படி ஏற்றுக்கொள்பவனும் நிராகரிப்பாளனாகி விடுவான்!

பித்அத்தின் பேராபத்து!

இந்த சாட்சியத்தை நீங்கள் வழங்கிவிட்டால் அதன் பிறகு வணக்க வழிபாடு தொடர்பாக இஸ்லாமிய ஷரீஅத் வகுத்துள்ள நடைமுறைகளிலும் நபியவர்களின் ஸுன்னத்களிலும் நீங்கள் நபி(ஸல்)அவர்களை முழுமையாகப் பின்பற்றுவது அவசியம். அவர்கள் வழங்கிய தீனில் (இறைமார்க்கத்தில்) எவ்வித புதுஅனுஷ்டானங்களையும் நீங்கள் புகுத்தக் கூடாது.

இந்த அடிப்படையில்தான் – நபிகளாரின் ஷரீஅத்தில் பித்அத்கள் எனும் புது அனுஷ்டானங்களை புகுத்துபவர்கள் நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் எனும் சாட்சியத்தை உறுதிப்படுத்தியவர்களாய் ஆக மாட்டார்கள் என்று நாம் சொல்கிறோம்!

பித்அத்வாதிகளின் பிடிவாதம் எவ்வாறு உள்ளதெனில், நபி(ஸல்) அவர்கள் தீனை – இறைமார்க்கத்தையும் ஷரீஅத்தை யும் முழுமைப்படுத்தவில்லை, அவர்கள் விளக்கித்தராத சில நடைமுறைகள் உள்ளன. அவற்றையும் ஷரீஅத்தில் சேர்த்தால் தான் அது நிறைவு பெறும் என்று சொல்லது போல் உள்ளது! இந்த ரீதியில் பித்அத்தின் ஆதிக்கம் நபியவர்களின் பெயரையும் புகழையும் தூய பணியையும் களங்கப்படுத்தக் கூடியதாகும்.

மட்டுமல்ல இந்தப் பித்அத் வாதிகள் ‘இன்றைய தினம் உங்களது தீனை-மார்க்கத்தை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன்’ (5:3) என்கிற அல்லாஹ்வின் வாக்கினை பொய்ப்படுத்தவும் செய்கிறார்கள். ஆம், இவர்கள் அல்லாஹ்வுடைய தீனில்- அதில் இல்லாத தஸ்பீஹ்களையும் திக்ர்களையும் செயல்களையும் புகுத்துவதால் தீனில் உள்ள குறைபாட்டை இவர்கள்தான் நிவர்த்தி செய்கிறார்களோ, தீனை இவர்கள்தான் நிறைவுபடுத்துகிறார்களோ என்பது போன்ற தோற்றம் ஏற்படகிறது! பித்அத்தின் தவிர்க்க முடியாத பேராபத்தாகும் இது.

இந்தப் பிரார்த்தனை ஷிர்க் – இணைவைப்பாகும்!

நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சியம் அளிப்பதன் நிறைநிலையில் சேர்ந்ததுதான் நபியவர்கள் அறிவித்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் உண்மைப் படுத்திட வேண்டும் என்பதும், அவர்கள் மொழிந்ததாக, செய்ததாக, அனுமதித்ததாக ஆதரப்பூர்வமாகப் பதிவாகியுள்ள அனைத்து கருத்துகளையும் ஏன், எதற்கு என்று கேட்காமல் நீங்கள் ஏற்றிட வேண்டும். பின்பற்றிட வேண்டும்;.

உங்கள் அறிவை முன்னிலைப்படுத்தி, உங்கள் அனுமானங்களுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்துக் கொண்டு நபியவர்களின் வழிகாட்டல்களை நீங்கள் ஆட்சேபித்தால், எதனை அறிவு சரி என்று சொல்கிறதோ அதனை மட்டும்தான் நம்புவேன், ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னால் நபியவர்கள் மீது உண்மையில் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாய் ஆக முடியாது. சுய கருத்தை புகுத்துபவர் மனஇச்சையைப் பின்பற்றுபவர் எனும் பெயர்தான் உங்களுக்குக் கிடைக்கும்.

எனவே நபி(ஸல்) அவர்கள் மீது நீங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நபியவர்கள் விட்டுச்சென்ற அனைத்து வழிகாட்டல்களையும் ஏற்றுக்கொண்டோம், கீழ்ப் படிந்தோம் என்று சொல்வது உங்கள் கடமையாகும்.

நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் எனும் சாட்சியத்தின் மற்றொரு தேட்டம் என்னவெனில் நபியவர்கள் விஷயத்தில் யாரும் வரம்பு மீறிப் பேசக்கூடாது. அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அந்தஸ்தைக் கடந்து, அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து அவர்களின் அந்தஸ்தை உயர்த்திக்கொண்டே போய் இறுதியில் ஏகத்துவக் கொள்கைக்குக் களங்கம் ஏற்படுத்தும் நிலைக்குச் சென்று விடக் கூடாது.

இந்த விஷயத்தில் எல்லை கடந்து செல்பவர்களை நீங்கள் கவனித்தீர்களா? நோய்நொடிகள் அகற்றும் ஆற்றல்கூட நபியவர்களுக்கு உண்டு என்று சொல்கிறார்கள். வாதிடுகிறார்கள்! நபியவர்களின் அடக்கத்தலத்திற்குச் சென்றால் துன்பங்களை அகற்றுமாறும் நன்மைகள் வழங்குமாறும் நபியவர்களிடமே நேரடியாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தகைய வரம்பு மீறல்தான் கூடாது. இதுதான் ஷிர்க்- இணைவைக்கும் கொடிய பாவம் என்கிறோம். ஏனெனில் நோய் நொடிகள் அகற்றி நிவாரணம் அளிப்பதும் துன்பங்கள் களைந்து நிம்மதி அளிப்பதும் நன்மைகளைக் கொடுப்பதும்-இவை அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளவை. இப்படிப்பட்ட ஆற்றல்கள் வேறொருவருக்கு உண்டென வாதிடுவது கூடாது. நபியவர்களுக்கு அப்படிப்பட்ட எந்த ஆற்றலும் கிடையாது. மரணத்திற்குப் பிறகு நபி(ஸல்) அவர்களுக்னெ எந்த அதிகாரமும் இல்லை!

நபி(ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு அன்புத் தோழர்களின் வாழ்வில் எத்தனையோ கஷ்டங்கள் ஏற்பட்டன. அப்போது அவர்கள் நடந்து கொண்டதென்ன? இதோ! உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மதீனாவில் கடும் பஞ்சம்! எங்கும் பசி, பட்டிணி! உடனே ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் ஒன்றுகூடி மழை வேண் டிப் பிரார்த்தனை செய்தார்களே தவிர நபியயவர்களின் கப்று – அடக்கத்தலத்திற்கு வந்து நபியவர்களை நேரடியாக அழைத் துப் பிரார்த்தனை செய்யவில்லை. நபியே! மழை பொழியச் செய்யுங்கள் என்றோ மழை பொழியச் செய்யும்படி அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்யுங்கள் என்றோ கேட்கவில்லை!

என்ன காரணம்? நபி(ஸல்) அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். மரணம் அடைந்தவர்கள் நிலை என்ன? இதோ, அது பற்றி நபியவர்களே சொல்லித் தருகிறார்கள்:

‘மனிதன் இறந்து விட்டால் அவனுக்கும் அவன்; செய்த அமல்களுக்கும் தொடர்பு இல்லாமலாகி விடுகிறது,. மூன்றைத் தவிர! நீடித்த நிலையான தர்மம், பயன் கொடுத்துக் கொண்டிருக்கும் கல்வி, அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் பிள்ளைகள்’ (நூல்: முஸ்லிம்)

ஆக, மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நபியவர்களுக்கென எந்த அதிகாரமும் இல்லை. அப்படிப்பட்டதான ஓர் அந்தஸ்தை அவர்களுக்கு அல்லாஹ் அளிக்கவில்லை. அப்படிப்பட்ட எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வின் கைவசம் மட்டுமே உள்ளன. எனவே யார் அப்படிச் சொல்கிறாரோ அவர், நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் எனும் சாட்சியத்தை உறுதிப்படுத்தியவர் ஆக மாட்டார். மாறாக முஹம்மதும் அல்லாஹ்வுடன் சேர்ந்து ஓர் இறைவன் என்று சொல்பவராகி விடுவார்! (இத்தகைய நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!) ஏகத்துவத்திற்கும் இணைவைப்புக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டையும் கருத்தில் கொண்டு ஏகத்துவக் கொள்கையைப் பேணுவதன் மூலம்தான் இஸ்லாத்தின் தனித்துவம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது!

தொழுகை:

ஓர் உளப்பூர்வமான பிணைப்பு!

தொழுகையை நிலைநாட்ட வேண்டும்- இது இஸ்லாத்தின் இரண்டாவது கடமை.தொழுகைக்கு அரபியில் அஸ் ஸலாஹ்- பிரார்த்தனை என்று சொல்வர். ஏனெனில் தொழுகையில் மனிதன் மேற்கொள்ளும் முனாஜாத் -ரகசிய உரையாடல், புகழ்தல், துதித்தல் போன்றவற்றில் துஆ எனும் பிரார்த்தனைதான் முக்கிய பங்கு வகிக்கிறது.

அடியான் மேற்கொள்ளும் உரையாடல், புகழ், துதி மற்றும் பிரார்த்தனை ஆகியவற்றிற்கு அல்லாஹ்வும் பதிலும் அளிக்கி றான்! எடுக்கிறான், கொடுக்கிறான். இந்த ரீதியில் தொழுகை அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் வலுவானதொரு பிணைப்பை ஏற்படுத்தும் பாலமாகவும் திகழ்கிறது! நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘தூய்மை மிக்கவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: ‘தொழுகையை நான் எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் இரு பாகங்களாய்ப் பிறித்துள்ளேன்’

(பிறகு அதனை நபியவர்கள் விளக்கினார்கள்)அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன் (எல்லாப் புகழும் அகிலம் முழுவதையும் பரிபாலிக்கக்கூடிய அல்லாஹ்வுக்கே சொந்தம்) என்று அடியான் ஓதினால், அதற்கு பதிலில் அல்லாஹ் கூறுகிறான், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று! பிறகு அர் ரஹ்மானிர்ரஹீம் (அவன் அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையவன்) என்று அடியான் ஓதினால், அதற்கு பதிலில் அல்லாஹ் கூறுகிறான், அடியான் எனக்குத் தொடர் புகழைச் சூட்டுகிறான் என்று! பிறகு மாலி(க்)கி யவ்மித்தீன் (கூலி கொடுக்கும் நாளின் அதிபதி) என்று அடியான் ஓதினால் அதற்கு பதிலில் அல்லாஹ் கூறுகிறான், என் அடியான் என்னைப் பெருமைப் படுத்தினான் என்று! பிறகு அடியான், இய்யா (க்)க நஅஃபுது வ இய்யா(க்)க நஸ்தஈன் (இறைவா!உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று ஓதினால் அதற்கு பதிலில் அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் மத்தியில் இரு பகுதிகளாகும். பிறகு அடியான், இஹ்தினஸ் ஸிறா(த்)த்தல் முஸ்தகீம் (எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக என்று (கடைசி தொடர்ந்து வரை) ஓதினால் அதற்கு பதிலில் அல்லாஹ், இது என் அடியானுக்குரியது. அவன் கேட்டது அவனுக்கு கிடைக்கும் என்று கூறுகிறான்’ (நூல்: முஸ்லிம்)

– தொழுகை இறைவனுக்கும் அடியானுக்கும் எத்தகைய பிணைப்பாக அமைந்துள்ளது என்பதைப் பாருங்கள். ரகசிய உரையாடல், எடுத்தல், கொடுத்தல் என எல்லா அம்சங்களும் அதில் உள்ளன.

ஆனால் நம்மில் பலர் சிந்தையை ஒருமுகப்படுத்தாமல் பாராமுகமாகத் தொழுவதைக் காணலாம். யார் முன்னிலையில் நிற்கிறோம்? யாருடன் உரையாடுகிறோம் என்கிற உணர்வோ உள்ளச்சமோ இருப்பதில்லை. உள்ளத்து இரகசியங்களைக்கூட அறியும் ஆற்றலுள்ள எல்லாம் வல்ல இறைவனின் திருமுன்னால் நிற்கும் பொழுது, அவனோடு உரையாடும் பொழுது கவனம் எங்கெல்லாமோ சுற்றித் திரிகிறது!

மன ஓர்மையுடனும் உள்ளச்சத்துடனும் தொழும்பொழுது தான் தொழுகையின் பயன்களை முழுமையாக காணமுடியும்! இதோ! குர்ஆன் தொழுகையின் நற்பயன்கள் பற்றி ‘(நபியே) தொழுகையை நிலைநாட்டுவீராக. திண்ணமாகத் தொழுகை, மானக்கேடான செயலை விட்டும் தீமையை விட்டும் தடுக்கிறது’ (29:45) என்று கூறுகிறது.

இந்தத் திருவசனத்தை அனைவரும் ஓதத்தான் செய்கி றார்கள். ஆனால் தொழுகையாளியின் உள்ளத்தில் தீமையின் மீது வெறுப்போ நன்மையின் மீது பிரியமோ வருவதில்லை. சிந்தனையிலோ செயல்பாட்டிலோ எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. என்ன காரணம்? தொழுகையில் உயிர்த்துடிப்பு இல்லை. பள்ளிவாசலில் தொழுகையின் ஒழுங்கு முறைகள் போதிக்கப்படுவதில்லை. தொழுகையாளியின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு பண்படுத்தப்படுவதில்லை. தொழுகையின் ஒழுங்குமுறை பற்றி முறையான போதனை இல்லை. சரியான பயிற்சி இல்லை. ஏனோதானோ என்று வருகிறார்கள். ஏதோ தொழுகிறார்கள். பிரிந்து செல்கிறார்கள் அவ்வளவு தான்! ஆனால் ஷஹாதா கலிமாவுக்குப் பிறகு இஸ்லாத்தின் அடிப்படைகளில் தொழுகைதான் அதிமுக்கியமானது.

தொழுகையின் நேரங்கள்

இ(க்)காமத்துஸ் ஸலாத் – தொழுகையை நிலைநாட்டுதல் என்பது கருத்துச் செறிவானதொரு வார்த்தை. தொழுகையை-அதன் நிபந்தனைகளையும் அதற்குரிய கடமைகளையும் ஒழுங்கு முறைகளையும் – அனைத்து அம்சங்களையும் முறை யாகப் பேணிச் உயிர்த்துடிப்புடன் சீராகவும் செம்மையாகவும் நிறைவேற்றுவதே கருத்தாகும்.

தொழுகையின் நிபந்தனைகளில் முக்கியமானதுநேரம். தொழுகைகளை நேரப்படி நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

‘திண்ணமாகத் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் எனும் நிபந்தனையுடன் நம்பிக்கை யாளர்கள் மீது கடமை யாக்கப்பட்டதாகும்’ (4:103) இந்த ரீதியில் தொழுகை மனிதனின் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துகிறது. எல்லாப் பணிகளையும் கால நேரத்துடன் செய்வதற்காக நல்ல பயிற்சி கிடைக்கிறது.

தொழுகைகள் ஐந்து என்றாலும் அவற்றிற்கான நேரங்கள் ஐந்து அல்லது மூன்று ஆகும். பயணம் போன்ற தக்க காரணம் உடையோருக்கு மூன்று. ஏனையோருக்கு ஐந்து. தக்க காரணம் உடையோர் ளுஹர் – அஸர் தொழுகைளை இணைத்து ஒரே நேரத்தில் தொழலாம். இஷா- மஃக்ரிப் தொழுகைளை இணைத்து ஒரே நேரத்தில் தொழலாம்.

ஃபஜ்ர் தொழுகைக்கு ஒரே நேரம்தான். அதனால்தான் குர்ஆன் அதனை தனியாக எடுத்துச் சொல்லியுள்ளது. (அதன் விபரம் பின்னால் வருகிறது)

1) ஃபஜ்ர் நேரம் கீழ் வானில் அகலவாட்டில் வெண்மை தோன் றும் நேரத்திலிருந்து சூரிய உதயம் வரை.

2) ளுஹர் நேரம் (நடுவானிலிருந்து) சூரியன் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருளுக்கும் அதுபோன்ற நிழல் ஏற்படும் வரை. ஆனால் சூரியன் சாயும்போதுள்ள நிழலைக் கணக்கில் சேர்க்கக் கூடாது.

3) சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரை.

4) இஷா நேரம் மஃக்ரிப் தொழுகையின் நேரம் முடிந்ததிலிருந்து நடு இரவு வரை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இஷாவின் நேரம் நடுநிசி வரையிலாகும்’ (அறிவிப்பு: அப்துல்லாஹ் பின் அம்ருப்னுல் ஆஸ் நூல்: முஸ்லிம்)

இஷா நேரம் அதிகாலை உதயம் வரை நீண்டதாகும் என்று அறிவிக்கும் ஹதீஸ் எதுவும் வரவில்லை. எனவே இஷாவின் நேரம் நடு இரவு வரை என்பதே சரியான கருத்தா கும். குர்ஆனும் அதைச் சுட்டிக்காட்டுகிறது.

‘சூரியன் (நடுவானைவிட்டு) சாய்ந்ததிலிருந்து இரவின் காரிருள் வரை தொழுகையை நிலைநிறுத்துவீராக. அதிகாலை (தொழுகை) யில் ஓதவதைக் கடைப்பிடிப்பீராக. திண்ணமாக அதிகாலையில் குர்ஆன் ஓதுவது சாட்சி சொல்லப்படக் கூடியதாகும்’ (17:78)– சூரியன் நடுவானை விட்டும் சாய்ந்தது முதல் சூரியன் உதயமாகும் வரை என்று சொல்லவில்லை.

இரவின் காரிருள் என்பது நடு இரவைக் குறிக்கும். நண்பகலில் இருந்து நடு இரவு வரை என்பதில் ளுஹர் தொழுகையிலிருந்து இஷா வரை உள்ள நான்கு தொழுகை கள் அடங்கும். இவற்றின் நேரங்களை ஒருசேர இணைத்துக் கூறிய குர்ஆன் ஃபஜ்ர் நேரத்தை மட்டும் தனியாகச் சொல்கிறது. ஏனெனில் அதற்கும் ளுஹருக்கும் மத்தியில் பகலின் முன்பாதி உள்ளது. அதற்கும் இஷாவுக்கும் மத்தியில் இரவின் பின் பாதி உள்ளது.

காரணமின்றி தொழுகையைப் பிற்படுத்தினால்?

நேரம் வருவதற்கு முன் தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஒருவன் ரமளான் மாதம் வருமுன் – ஒரு நாள் என்றாலும் சரிதான் – நோன்பு நோற்றால் அது ரமளான் மாதத்து நோன்பாக ஆகாது. இதுபோன்றதுதான் தொழுகையும். ஆனால் ஒருவன் நேரத்தை அறியாத காரணத்தால் முன்கூட்டியே தொழுதால் அது நஃபில் தொழுகையாகத்தான் ஆகும். கடமையான தொழுகையை மீண்டும் தொழுதிட வேண்டும்.

ஒருவன் நேரம் தப்பித் தொழுதால் அதில் இரண்டு நிலைகள் உள்ளன.

1) அறியாமை, மறதி, தூக்கம் போன்று தக்க காரணம் இருந்தால் அந்தத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும். ஏனெ னில் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவன் தொழுகையை விட்டுவிட்டு தூங்கினாலோ அதனை மறந்தாலோ எப்பொழுது அது பற்றி அவனுக்கு நினைவு வருகிறதோ அப்பொழுது அதனை அவன் தொழுது கொள்ளவும். அதைத் தவிர வேறு பரிகாரம் அதற்கு இல்லை ‘ (நூல்: புகாரி, முஸ்லிம்)

2) தக்க காரணம் எதுவுமின்றி வேண்டுமென்றே நேரப்படி தொழாமல் பிற்படுத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அப்படிப்பட்டவன் பாவியாவான். அல்லாஹ் – ரஸூலின் கட்டளையை மீறியவன் ஆவான்.

நேரம் தப்பித்தொழுகிற தொழுகையின் நிலை என்ன? அறிஞர் சிலரின் கருத்து: அது ஏற்றுக்கொள்ளப்படும். ஏனெனில் அவன் மனம் வருந்தி நேர்வழி திரும்பி விட்டான். மறதியினால் நேரம் தப்பித் தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப் படுவது போன்றதே இதுவும்.

ஆனால் சரியான கருத்து என்னவெனில், அந்தத் தொழுகை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவன் ஆயிரம் முறை தொழுதாலும் சரியே! ஏனெனில் நபியவர்கள் கூறினார்கள்: ‘நமது வழிகாட்டல் இல்லாத ஒரு செயலை (வழிபாட்டை) ஒருவர் செய்வாராயின் அது ரத்து செய்யப்படும்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

-ரத்து செய்யப்படும் என்றால் ஏற்றுக் கொள்ளப்படமாட் டாது என்று பொருள். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? தொழுகையைப் காரணமின்றி பிற்படுத்தியதற்காக மனம் வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும். இனி அவ்வாறு செய்வதில்லை என்று உறுதி கொண்டு நல்ல அமல்களை அதிகமாகச் செய்து பரிகாரம் தேட வேண்டும். யார் மன்னிப்புத் தேடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான்.

சுத்தமின்றி தொழுகை இல்லை!

தொழுகையை நிலைநாட்டுதலின் கருத்தில் சுத்தத்தை மேற்கொள்வதும்; அடங்கும். இதுவும் ஒரு நிபந்தனையாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் துடக்கு எனும் அசுத்தம் அடைந்தால் சுத்தத்தை மேற்கொள்ளாதவரை அவரது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்’ (புகாரி, முஸ்லிம்) எனவே சுத்தத்தை முறைப்படி மேற்கொள்ள வேண்டும்.

சிறு துடக்கு எனில் ஒளூ செய்வது அவசியம். பெரும் துடக்கு எனில் குளிப்பது அவசியம்.

தண்ணீர் கிடைக்கவில்லையெனில் அல்லது அதைப் பயன் படுத்தினால் நோய்அதிகரிக்கும் அல்லது உயிருக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினால் அல்லது கடுமையான குளிரின் அச்சம் இருந்து தண்ணீரைச் சூடுபடுத்தும் வசதி இல்லை என்றால் தயம்மும் செய்து கொள்ள வேண்டும். (தயம்மும் என்பது கைவிரல்களை மண்ணில் பதித்து முகம்,மணிக்கட்டில் தடவுதல் ஆகும்) அல்லாஹ் கூறுகிறான்:

‘ஆனால் நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந் தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்தால் அல்லது பெண்களை தீண்டியிருந்தால் (அதாவது, மனைவியுடன் உடலுறவு கொண்டால்) -தண்ணீர் கிடைக்க வில்லையானால் தூய்மையான மண்ணைப்பயன்படுத்தி அதில் உங்கள் கைகளைப் பதித்து அதனை உங்கள் முகங்களிலும் உங்கள் கரங்களிலும் தடவிக் கொள்ளுங்கள்’ (5 :6)

தொழுகை நிறைவேற சுத்தம் மிக முக்கியம். சுத்தத்தைப் பேணுவதில் – உடல், உடை, இடம் ஆகிய அனைத்தின் சுத்தமும் அடங்கும். எனவே இம்மூன்றை விட்டும் அசுத்தத்தை அகற்றி முழுமையாகச் சுத்தத்தைப் பேணுவது அவசியமாகும்.

மேலே சொன்ன தயம்மும் என்பது ஒளு, குளிப்புக்கு மாற்று ஏற்பாடே தவிர உடலிலோ ஆடையிலோ அசுத்தம் பட்டு அதை அகற்றத் தண்ணீர் கிடைக்காததற்கு மாற்று அல்ல தயம்மும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிப்லாவை முன்னோக்குதல்!

கிப்லாவை அதாவது மக்கமா நகரில் உள்ள கஃபா ஆலயத்தின் திசையை முன்னோக்கி நின்று தொழுவதும் ஒரு நிபந்தனை ஆகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

‘மஸ்ஜிதுல் ஹராம் (கஅ;பா ஆலயம்) நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்புவீராக. இனி நீங்கள் எங்கிருப்பினும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப் பவும் (2 :144)

நோய், அச்சம் போன்ற காரணத்தால் கிப்லாவை நோக்கி முகத்தைத் திருப்ப முடியாவிட்டால் அது அவசியமல்ல. அல்லாஹ் கூறுகிறான்:

‘அல்லாஹ் எந்த மனிதனையும் அவனது சக்திக்கு அதிகமாக (பொறுப்புளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை’ (2:186)

பயணத்தின்போது-விமானத்தில், காரில், ஒட்டகம் போன்ற வாகனத்தில் – எதில் பயணமானாலும் நஃபிலான தொழுகைகளில் கிப்லாவை முன்னோக்குவது அவசியம் இல்லை.

நிய்யத்தும் வேடிக்கையான நிகழ்ச்சியும்

நிய்யத் (உள்ளத்தில் எண்ணுதல்) என்பது தொழுகையின் மற்றொரு நிபந்தனையாகும். நிய்யத் இன்றி தொழுகை நிறை வேறாது. நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: ‘செயல்கள் அனைத் தும் நிய்யத் – எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன (முஸ்லிம்)

வணக்க வழிபாடுகளில் நிய்யத் அவசியம் என்று வலியுறுத்தும் பல வசனங்கள் குர்ஆனில் உள்ளன. நபி(ஸல்) அவர்களையும் அவர்கள் தம் அன்புத் தோழர்களையும் புகழ்ந்து ஓரிடத்தில் குர்ஆன் கூறுகிறது:

‘அவர்கள் ருகூவு, ஸுஜூது செய்பவர்களாயும் அல்லாஹ்வின் அருளைத் தேடுபவர்களாயும் இருப்பதை நீர் காண்பீர்’ (48 :29)

உண்மையில் நிய்யத் (உள்ளத்தில் எண்ணுதல் என்பது) கஷ்ட மான ஒன்றல்ல. அறிவும் சுதந்திரமும் உடைய மனிதன் ஒரு செயலைச் செய்யும்பொழுது உள்ளத்தில் அதை எண்ணித்தான் செய்வான். எனவே நிய்யத்திற்கு எந்தச் சிரமமும் தேவையில்லை. நாவால் மொழிய வேண்டியதுமில்லை.

நபி(ஸல்) அவர்களும் நிய்யத்தை நாவால் மொழிந்தில்லை. அப்படி மொழியுமாறு தம் சமுதாயத்தினரை ஏவிடவுமில்லை. நபித்தோழர்கள் யாரும் அப்படிச் செய்யவுமில்லை. எனவே நிய்யத்தை நாவால் மொழிதல் என்பது பித்அத் – தீனில் இல்லாத புதுமையே, பாவமான செயலே என்பதில் ஐயமில்லை.

ஒரு நண்பர் வேடிக்கையான நிகழ்ச்சி ஒன்றைச் சொன் னார். முன்னொரு தடவை கஃபா பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த ஒருவன், இகாமத் சொல்லப்பட்டதும் ‘யா அல்லாஹ்! இந்தப் புனித மஸ்ஜிதின் இமாமை பின்பற்றி கிப்லாவை முன்னோக்கியவாறு ளுஹர் தொழுகை நான்கு ரக்அத்தை அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் என்று சொல்லிக் கொண்டு தக்பீர் கட்ட முனைந்தபொழுது அருகில் இருந்தவர் ‘இன்னொரு விஷயத்தை விட்டு விட்டாயே! இன்ன வருடத்தில் இன்ன மாதத்தில் இன்ன கிழமையில், இன்ன நேரத்தில் என்பதையும் சேர்த்துக்கொள். பத்தரம் எழுதுவது தவறி விடப்போகுது’ என்று நினைவூட்டினாராம்.

என்ன வேடிக்கை பார்த்தீர்களா? உள்ளத்தில் நினைப்பதை அல்லாஹ்வுக்குச் சொல்லிக் காண்பிக்க வேண்டுமா, என்ன? உள்ளத்து இரகசியங்களைக்கூட அறிபவன் அல்லவா அவன்?

தொழுகையின் கடமைகள்!

தொழுகையில் அவசியம் பேண வேண்டிய கடமையான அம்சங்களைப் பேணுவது தொழுகையை நிலைநாட்டுதலில் அடங்கும். சொல் மற்றும் செயல் ரீதியான எந்த அமல்களைப் பேணுவதின்றி தொழுகை நிறைவேறாதோ அந்த அமல்கள் தான் தொழுகையின் கடமைகளாகும்.

அவற்றுள் ஒன்றுதான் தக்பீர் தஹ்ரீமா என்பது. இதுவே தொழுகையில் நுழைவதற்காகத் தொடக்கத்தில் சொல்லும் தக்பீர். தொழுகை அமைவதற்கு இது மிக முக்கியம். இதை மறந்து விட்டால் தொழுகை கூடாது. நபி(ஸல்) அவர்கள் ஒருவருக்கு தொழக் கற்றுக் கொடுத்தபொழுது சொன்னார்கள்: ‘நீ தொழுகைக்குத் தயாரானால் முறையாக ஒளு செய்ய வேண்டும். பிறகு கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டு தக்பீர் சொல்ல வேண்டும்…‘(நூல்:புகாரி,முஸ்லிம்)

சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது மற்றொரு கடமை. அஃதன்றி தொழுகை நிறைவேறாது. நபியவர்கள் அருளி னார்கள்: ‘ஒருவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதவில்லையானால் அவருக்குத் தொழுகை இல்லை ‘ (புகாரி, முஸ்லிம்)

தொழுகையின் மற்றொரு கடமை ருகூஉ. அதாவது நீங்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக அவனது திருமுன் நிற்கிறீர்கள். அப்பொழுது அவனுக்குக் கண்ணியம் அளிக்கும் வகையில் குனிவதற்கே ருகூஉ என்று சொல்லப்படும்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘ருகூஉ -வில் இரட்சகனை நீங்கள் கண்ணியப்படுத்துங்கள்’ (முஸ்லிம்) அதாவது ஸுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்தான என் இரட்சகளை நான் துதிக்கிறேன்) என்று சொல்லுங்கள்.

குனிவது செயல் ரீதியில் அளிக்கும் கண்ணியம். இந்த திக்ர் சொல்லால் அளிக்கும் கண்ணியம். ருகூஉ – வில் உள்ளத்தால் அளிக்கும் கண்ணியத்துடன் இவை சேரும்போது இவை மூன்று கண்ணியங்களாகின்றன.

திக்ர்களின் தத்துவம்!

தொழுகையின் மற்றொரு கடமை ஸுஜூது. அல்லாஹ் கூறுகிறான்:

‘நம்பிக்கை கொண்டவர்களே! ருகூஉ செய்யுங்கள்., ஸுஜூத் செய்யுங்கள். உங்கள் இரட்சகளை வணங்குங்கள்’ (22:77)

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘ (உடலின் ஏழு பாகங்களை தரையில் வைத்து அதாவது) நெற்றி, (மூக்கு அதில் சேரும் என்பதாக) நபி(ஸல்) அவர்கள் தம் கையால் மூக்கைச் சுட்டிக்காட்டினார்கள் – கை மணிக்கட்டுகள், முட்டுக்கால்கள், கால்களின் ஓரங்கள் (விரல்கள்)ஆகிய உடலின் ஏழு எலும்புகளை (உறுப்புகளை) தரையில் வைத்து அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்ய வேண்டுமென நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

எனவே ஸுஜூது தொழுகையின் கடமை. அஃதின்றி தொழுகை நிறைவுபெறாது.

ஸுஜூதில், ஸுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வுமிக்க என் இரட்சகனை நான் துதிக்கிறேன்) என்று சொல்கிறோம். ருகூஉ-வில் ஸுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்தான என் இரட்சகளை நான் துதிக்கிறேன்) என்று சொல்கிறோம்.

இந்த திக்ர்களில் உள்ள தத்துவத்தை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ருகூஉ, கண்ணியம் அளிப்பதற்கான அமைப்பு கொண்டது. எனவே அதில் மகத்துவமிக்க என் இரட் சகனை நான் துதிக்கிறேன் என்பது பொருத்தமாக உள்ளது.

ஸுஜூது கீழிறகக்கமான செயல்முறை கொண்டது. நெற்றி தரைக்கு வந்துவிடுகிறது. இறைவனைத் துதித்துக் கண்ணியப் படுத்துவதன் இறுதி நிலையாகும் இது. இதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா – உயர்வுமிக்க என் இரட்சகனை நான் துதிக்கிறேன் என்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது. அதாவது எல்லாவற்றிற்கும் மேலே உள்ள என் இறைவனை அனைத்து விதமான உயர்வுகளுக்கும் உரியவன் என்று போற்றுகிறேன், எல்லா விதமான கீழிறக்கத்தை விட்டும் கீழ் நிலைகளை விட்டும் தூயவன் என்று துதிக்கிறேன். இதோ! என் உறுப்புகளின் சிகரமாகிய தலையை தரையில் – காலால் மிதிபடும் இடத்தில் வைத்து விட்டேன் எனும் விரிவான கருத்தை இது உள்ளடக்கியுள்ளது.

மனிதன் ஏன் ஏமாளியாக இருக்கிறான்?

தொழுகையின் கடமைகளில் மற்றொன்று அமைதியை மேற் கொள்வது. அதாவது நிற்கும் நிலையிலும் பிறகு ருகூஉ -விலும் பிறகு அதிலிருந்து எழுந்து நிற்கும்பொழுதும், ஸுஜூதிலும், இரு ஸுஜூத்களுக்கு மத்தியிலான அமர்விலும்- இவ்வாறாக தொழுகையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அமைதியை மேற்கொள்வது தொழுகையின் கடமைகளுள் முக்கியமானதாகும்.

ஏனெனில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் பிரபலமான ஓர் அறிவிப்பு உள்ளது: நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு மனிதர் வந்து அவசர அவசரமாகத் தொழுகிறார். பிறகு நபியவர்களிடம் வந்து ஸலாம் சொன்னபொழுது திரும்பச் சென்று தொழும், நீ தொழுதது சரியல்ல என்று சொல்கிறார்கள். இவ்வாறு மூன்றாவது முறை திருப்பி அனுப்பியபொழுது அந்த மனிதர் எப்படித் தொழுவது என்று கற்றுத்தாருங்கள். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான் என்று சொல்லவே நபி(ஸல்) அவர்கள், ஒவ்வொரு நிலையிலும் அமைதியை மேற்கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)– இந்த அறிவிப்பு ருகூஉ, ஸுஜூது போன்ற ஒவ்வொரு நிலைகளிலும் அமைதியை மேற்கொள்வது தொழுகையின் இன்றியமையாக் கடமை என்பதைக் காட்டுகிறது.

அமைதியை மேற்கொள்வதன் நேரம் எவ்வளவு? அறிஞர் சிலர் சொல்லும்பொழுது ருகூஉ-வில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் என்று சொல்லும் அளவு – ஸுஜூதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று சொல்லும் அளவு அமைதியை மேற் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

ஆனால் இதனினும் அதிக நேரம் அமைதியை மேற் கொள்ள வேண்டும் என்றே நபிவழியிலிருந்து தெரியவருகிறது.ருகூஉ- வில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் என்று மட்டும் சொல்லிவிட்டு தலையை உயர்த்தினால் அதில் எங்கே அமைதி இருக்கிறது? தொழுகையில் ஒவ்வொரு செயலிலும் இவர் அமைதியைக் கடைப்பிடிக்கிறார் என்று பிறர் சொல்லும் அளவு இருக்க வேண்டும்.

என்னே ஆச்சரியம்! ஷைத்தான் எந்த அளவுக்கு மனிதனைப் பந்தாடுகிறான், என்பதைக் கவனித்தீர்களா? முதலில் தொழுகைக்கு வரவிடாமல் மனிதனைத் தடுப்பதற்கு ஷைத்தான் பெரிதும் முயற்சி செய்கிறான். அதனையும் மீறித் தொழுகைக்கு மனிதன் வந்து விட்டாலோ அவனது உள்ளத்தில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தி அவனது கவனத்தைச் சிதறடிக்கிறான்.

மனிதன் ஏன் இவ்வளவு ஏமாளியாக, துர்ப்பாக்கியவானாக இருக்கிறான்! பாருங்கள்! கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வை தொழுவதற்காக அவனது முன்னிலையில் வந்து அவன் நிற்கிறான். இரகசிய உரையாடலை மேற்கொள்கிறான். இறைவேதத்தை ஓதுகிறான். இறையைப் புகழ்ந்து துதிக்கிறான். தன் தேவைகளை நிறைவேற்றும்படி அவனிடம் மன்றாடுகிறான். இவ்வளவுக்குப் பிறகும் ஏதோ ஓர் ஆபத்து வந்து விட்டதுபோல, ஏதோ ஓர் எதிரியின் பிடியில் சிக்கிக்கொண்டது போல அவசரப்படுகிறானே, ஏன்? விட்டால்போதும் என்று விரண்டோடுகிறானே, பள்ளியிலிருந்து, ஏன்? என்னே மனிதனின் துர்ப்பாக்கியம்!

ஓர் அரசன் முன்னிலையில் நீங்கள் நிற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை முன்னோக்கி உரையாடுகிறார்., தனியாகப் பேசுகிறார் என்றால் அதற்கு இரண்டு மூன்று மணி நேரம் பிடித்தாலும் அதனை இலகுவாகக் கருதுவீர்கள், இல்லையா? உட்காராமல் அசையாமல் நின்றவாறே பேச வேண்டும் என்றாலும் பரவாயில்லை என்று அரசரோடு உரையாடிக்கொண்டேதான் இருப்பீர்கள், இல்லையா? அப்படி இருக்க உங்களைப் படைத்து வாழ்வாதாரங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் இறைவன் முன்னிலையில் -உதவிகள் செய்து தொழுகை எனும் உன்னதமானதொரு வழிபாட்டை மேற் கொள்ளும் அளவுக்கு உங்கள் மீது கருணை பொழிந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இரட்சகனின் திருமுன்னால் நின்று அவனுடன் நீங்கள் உரையாடும் பொழுது இப்படி அவசரப்படுவது முரண்பாடாக இல்லையா?

ஷைத்தான் மனிதனுக்கு விரோதி. நீங்கள் ஈமானில் உறுதியும் விவேகமும் உள்ளவராக இருந்தால் ஷைத்தானை விரோதியாகவே எடுத்துக் கொள்வீர்கள். தொழுகையின் கடமையான செயல்களிலும் சொற்களிலும் அமைதியின் தாக்கம் வெளிப்படும் அளவு அமைதியுடனும் மன ஓர்மையுடனும் தொழுகையை நிறைவேற்றுவீர்கள். குர்ஆன் கூறுகிறது:

‘உண்மையில் ஷைத்தான் உங்களுக்குப் பகைவன். ஏனவே நீங்களும் அவனை உங்கள் பகைவனாகவே கருதுங்கள். அவன் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தன் வழியில் அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்து விட வேண்டும் என்பதற்காகத்தான்’ (35 :6)

தொழாதவனின் சட்ட நிலை என்ன?

தொழுகையை நிலைநாட்டாதவனின் சட்டநிலை என்ன? இந்தக் கேள்விக்கான பதில் சற்று விரிவானது. தொழுகையை ஒருவன் நிலைநாட்டத் தவறினால் அதாவது நிறைவாகத் தொழுவில்லையானால், தொழுகையைப் பூரணப்படுத்தக்கூடிய அதிகப்படியான அமல்களை – திக்ர்களை விட்டு விடுகிறான் என்றால் அவன் குற்றவாளி அல்ல. அந்த நிறைவான அமல்களுக்கான – திக்ர்களுக்கான கூலி அவனுக்குக் கிடைக்காது, அவ்வளவுதான்.

ஆனால் தொழுகையை நிலைநாட்டவில்லை என்றால், அதாவது, முற்றிலுமாகத் தொழுகையைக் கைவிட்டு விட்டான் என்றால் அப்படிப்பட்டவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டான்., நிராகரிப்பாளனாகி விட்டான் என்றுதான் பொருள்! இவ்வுலகில் முஸ்லிம் சமுதாயத்தில் இணைந்தவனாக, அதன் ஓர் அங்கத்தினனாக அவன் ஆகமுடியாது! மறு உலகத்தில் நிராகரிப்பாளர்களுடன்தான் எழுப்பப்படுவான்.

தொழுகையை கைவிட்டவன் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும்பொழுது, மறு உலகத்தில் அவன் எழுப்பப்படுவது ஃபிர்அவ்ன், ஹமான், காரூன், உபை இப்னு கலஃப் ஆகியோருடன்தான் என்று கூறினார்கள்! – இவர்கள் நிராகரிப்பாளர்களின் தலைவர்கள். தொழுகையை கைவிட்டவன் இவர்களுடன் சேர்த்து எழுப்பப்படும் துர்ப்பாக்கிய நிலைக்குத்தான் ஆளாவான்.

இது என்ன, மிகைப்படுத்தப்பட்ட கருத்தா? அல்லது உணர்ச்சி வசப்பட்டுக் கூறும் முடிவா? என்று யாரேனும் கேட்கலாம்.

அப்படி ஒன்றும் இல்லை. நாம் குர்ஆன் -ஹதீஸ் மற்றும் நபித்தோழர்களின் கருத்துகளின் அடிப்படையில்தான் இவ்வாறு சொல்கிறோம்.

குர்ஆன் சிலைவணங்கிகளைப் பற்றி கூறும்பொழுது குறிப்பிடுகிறது:

‘ஆயினும் இவர்கள் பாவமீட்சி பெற்று தொழுகையை நிலைநாட்டினால், ஜகாத்தும் கொடுத்தால் தீனில் – இறை மார்க்கத்தில் உங்களின் சகோதரர்கள் ஆவர் (9 :11)

அப்படிச் செய்யவில்லை என்றால்?

அப்படிப்பட்டவர்கள் தீனில் நம் சகோதரர்கள் அல்லன் என்பதுதானே பதில்! அப்படியெனில் அவர்கள் நிராகரிப்பாளர் தான். ஏனெனில் ஒவ்வொரு முஸ்லிமும் -அவன் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தாலும் அந்தப்பாவம் அவனை தீனை விட்டும் வெளி யேற்றி விடாது. அவன் நம் சகோதரன்தான்.

இதோ! முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுவது குஃப்ர் எனும் நிராகரிப்புதான். ஆயினும் அது தீனை விட்டு வெளியேற்றக் கூடிய அளவுக்கு கடுமையானதல்ல ‘ஒரு முஸ்லிமை ஏசுவது தீமை. அவனுடன் சண்டை போடுவது குஃப்ர்- நிராகரிப்பு ‘ என்பது (புகாரி, முஸ்லிம்) நபிமொழிதான். ஆயினும் சகோதரனுடன் சண்டை போடுவது என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். எனவே அது ஈமானின் வட்டத்தை விட்டு வெளி யேற்றக் கூடியதல்ல. இதோ குர்ஆனில், இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள் (49:10) எனும் தொடரில் அல்லாஹ் கூறு கிறான்:

‘இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களா வர். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். (49 :10)– சண்டை போட்டுக்கொள்ளக் கூடிய இரு சாராரும் நம்முடைய சகோதரர்கள் என்றுதான் குர்ஆன் கூறுகிறது.

ஆனால் பலதெய்வ வழிபாட்டுக்காரர்களைப் பற்றி – அவர்கள் ஷிர்க் எனும் பாவத்திலிருந்து பாவமீட்சி பெற்று தொழுகை, ஜகாத் போன்ற அமல்களை நிலைநாட்டவில்லை என்றால் அவர்கள் உங்கள் சகோதரர்கள் அல்லர் என்றே கூறப்பட்டுள்ளது.

தொழுகையை விடுவது இறைநிராகரிப்பாகும் என்று நபி மொழிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘ஒருமனிதனுக்கும் குஃப்ர் மற்றும் ஷிர்க்-க்கும் வேறுபடுத்தும் எல்லைக்கோடு தொழுகையை விடுவதே’ (அறிவிப்பு: ஜாபிர் பின் அப்துல்லாஹ் நூல்: முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘நமக்கும் அவர்களுக்கும் (நிராகரிப்பாளர்களுக்கும்) உள்ள உடன்படிக்கை (அதாவது, வேறுபடுத்தும் எல்லைக் கோடு) தொழுகையாகும். எவர் அதனை விட்டு விட்டாரோ அவர் நிராகரித்து விட்டார்’ (நூல்: திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா, அஹ்மத், ஹாகிம்) அதாவது அத்தகையவன் நிராகரிப்பாளர்களைச் சேர்ந்தவனே தவிர நம்மைச் சேர்ந்தவன் அல்லன்.

நபித்தோழர்களின் கருத்து வருமாறு: அப்துல்லாஹ் பின் ஷகீக் எனும் பிரபலமான தாபிஈ சொல்கிறார்: ‘நபித்தோழர்கள் எந்த ஓர் அமலைக் குறித்தும் – அதனை விடுவது குஃப்ர் – நிராகரிப்பு என்று கருதவில்லை, தொழுகை நீங்கலாக’ (நூல்: திர்மிதி) அதாவது தொழுகையைக் கைவிடுவது நிராகரிப்பு எனக் கருதினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் கிடையாது ‘

மூன்றாவது கடமை ஜகாத்

ஜகாத் என்பது, ஜகா எனும் வேர்ச்சொல்லிருந்து பிறந்த அரபிச் சொல்லாகும். அதற்கு தூய்மை, வளர்ச்சி என்று பொருள். ஜகாத் வழங்குபவர் தனது உள்ளத்தை கஞ்சத்தனத்திலிருந்து தூய்மைப் படுத்துகிறார். தனது செல்வத்தை வளர்ச்சி அடையச் செய்கிறார்.

‘(நபியே) அவர்களின் செல்வத்திலிருந்து தர்மத்தை வசூல் செய்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக. (நல்வழியில்) அவர்களுக்கு முன்னேற்றம் அளிப்பீராக’ (9:103)

ஜகாத் என்பது சிறு அளவிலான தர்மம்தான். அதன் மூலம் மனிதன் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் முக்கியமான கடமையை நிறைவேற்றுகிறான். தனது மனத்தைத் தூய்மைப் படுத்துவதுடன் பாவக்கறைகளில் இருந்து தனது பட்டோலையின் பக்கங்களைப் பாதுகாக்கவும் செய்கிறான். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘தர்மம் பாவங்களை அணைத்து விடுகிறது. தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று ‘(நூல்: திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்)

ஜகாத் எனும் கட்டாயத் தர்மம், ஏனைய தர்மங்களை சிடச் சிறந்தது. உயர்வானது. நீங்கள் வழங்கும் ஒரு ரூபாய் ஜகாத் சாதாரண தர்மமாகக் கொடுக்கும் ஒருரூபாயை விடச் சிறந்தது.

ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுகிறான்: ‘நான் அவன் மீது கடமையாக்கிய, எனக்கு அதிகப்பிரியமாக உள்ள வணக்க வழிபாட்டின் மூலம்தான் என் அடியான் (என் பக்கம் நெருங்கி வருகிறான்., அதைத் தவிர) எனக்கு அதிகப் பிரியமான வேறு எதன் மூலமும் என் பக்கம் அவன் நெருங்கி வருவதில்லை ‘(நூல்: புகாரி) அதாவது கடமையான வழிபாடுதான் எனக்கு அதிகப் பிரியமானது. அதன் மூலமாகத்தான் என்னிடம் அவன் அதிகம் நெருங்கி வருகிறான் என்பதே பொருள். கடமையான இரு ரக்அத் தொழுவது நஃபிலான இரு ரக்அத்தை விடச் சிறந்ததாகும்.

ஜகாத்தை அமல்படுத்துவதில் மக்களுக்கு நல்லுபகாரம் செய்தல் உள்ளது. ஜகாத் கொடுப்பவர் அல்லாஹ்வின் தனிப்பட்ட அன்புக்குரியவர்களின் வரிசையில் இடம் பெறுகிறார்: அல்லாஹ் கூறுகிறான்:

‘நல்லுபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக நல்லுபகாரம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான் ‘ (2 :195)

மக்களின் இதயங்களை இணைக்கும் பாலமாகவும் ஜகாத் திகழ்கிறது. செல்வந்தர்கள் இதுபோன்ற தர்மங்களை ஏழைகளுக்கு வழங்கும்பொழுது செல்வந்தர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்வதில்லை.

ஏழை எளியோர் நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்படாமல் இருந்தால் நாட்டில் வன்முறை பரவும். மனிதன் பசி பட்டினிக்கு உள்ளாகும் பொழுது அடித்துப் பறித்துத்தான் சாப்பிடுவான்! எனவே ஜகாத் பணம் வசூல் செய்யப்பட்டு ஏழையோருக்கு வழங்கும்பொழுது இப்படிப்பட்ட எதிர்மறையான போக்குகள் தலைதூக்காது.

வானத்திலிருந்து அருட்கொடைகளை ஈர்த்துக் கொண்டு வரும் ஆற்றலும் ஜகாத்துக்கு உண்டு. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘ஒரு சமுதாயம் தங்கள் செல்வத்தில் இருந்து ஜகாத் வழங்காமல் தடுத்துக்கொண்டால் அவர்களை விட்டும் வானத்து மழை தடுக்கப்பட்டே தீரும்’ (இப்னு மாஜா, ஹாகிம்)

மக்கள் ஜகாத்தை முறையாக வழங்கினார்கள் எனில் அவர்களுக்காக அல்லாஹ் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பல்வேறு அபிவிரித்திகளை இறக்கியருள்வான். மழை பொழியும். விவசாயம் செழிப்படையும்.கால்நடைகளுக்கு தண்ணீரும் உணவும் தாராளமாகக் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியும் இன்னும் பல நலன்களும் பெருகிக்கொண்டே இருக்கும்.

நான்காவது கடமை: நோன்பு:

ரமளான் மாதத்து நோன்பு ஆகும். நோன்பின் காரணமாகத்தான் ரமளான் எனும் பெயரை இம்மாதம் பெற்றது. மற்றொரு கருத்து: மாதங்களுக்குப் பெயர் வைத்தபோது இம்மாதத்தில் கடுமையான வெயிலும் வெப்பமும் நிலவியது. அதனால் ரமளான் – சுட்டுக்கரிக்கும் மாதம் என்று பெயர் வைக்கப்பட்டது.

மற்றொரு கருத்து: இம்மாதத்தின் மூலம் பாவங்களின் வெப்பம் தணிக்கப்படுவதால் இம்மாதம் ரமளான் எனப் பெயர் பெற்றது. நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவர் ரமளான் மாதத்தில் உறுதியான ஈமானுடனும் (மறுமைக் கூலியின்) எதிர்பார்ப்புடனும் நோன்பு வைக்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஆக, இந்த மாதம் முஸ்லிம்களுக்கு மிகவும் அறிமுகமானதாகும். ‘ரமளான் (நோன்பு) மாதம் எப்படிப்பட்டதெனில் அதில்தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டது’ (2:185) என்று குர்ஆனில் இந்த மாதத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள் ளான். வேறு எந்தமாதத்தின் பெயரையும் கூறவில்லை:

ரமளான் மாத நோன்பு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் மிக முக்கியமானதாகும். அஃது இன்றி இஸ்லாமிய மார்க்கம் நிறைவடையாது. ஆயினும் அது கடமையாவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பருவ வயது, புத்திநிலை சீராக இருப்பது, நோன்பு நோற்கும் ஆற்றல், ஊரில் தங்கியிருத்தல், தடைகள் எதுவும் இல்லாதிருத்தல் ஆகிய நிலைகளைப் பெற்றுள்ள ஒவ்வொரு முஸ்லிம் மீதும் ரமளான் நோன்பு கடமையாகும்.

சிறுவர், புத்தி சுவாதீனமாவர் ஆகியோர் மீது நோன்பு கடமை இல்லை. பயணி மீதும் மாதவிடாய், பிரசவத் துடக்கு போன்ற தடைகள் உள்ள பெண்கள் மீதும் கடமை இல்லை. ஆனால் வேறு நாட்களில் அவர்கள் நோன்பை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

இதே போன்று இயலாமை என்பதற்கு, குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் தற்காலிகமான நோய் காரணம் எனில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நிறைவேற்ற வேண்டும்.வயோதிகத்தால் அல்லது குணமாகாத கடுமையான நோயினால் இயலாமைக்கு உள்ளாகிவிட்டால் ஒவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவு அளிக்க வேண் டும்.

ஐந்தாவது கடமை ஹஜ்:

ஹஜ்ஜின் கிரியைகளை – குர்ஆனிலும் நபிமொழிகளிலும் விளக்ககப்பட்டபடி நிறைவேற்றுவதற்காக மக்காத் திருநகரிலுள்ள கஃபா ஆலயத்தை நாடிச்செல்வதாகும் இது.

ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் மிக முக்கியமானதாகும். உம்றா செய்வதும் ஹஜ்ஜில் சேர்ந்ததே. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அதற்கு சிறிய ஹஜ் என்று பெயர் சூட்டினார்கள்.

பருவ வயது, புத்திசீர்நிலை, சுதந்தரம், ஆற்றல் ஆகிய நிபந்தனைகளைப் பெற்ற ஒவ்வொரு முஸ்லிம் மீதும் ஹஜ் கடமையாகும்.

இயலாமை என்பதற்கு பணம் இல்லாமை காரணம் எனில் அப்படிப்பட்டவர் மீது ஹஜ் அறவே கடமையாகாது. அவர் நிறை வேற்றுவதும் கடமையில்லை. அடுத்தவர் மூலம் நிறைவேற்றச் செய்வதும் கடமை இல்லை.

ஆனால் உடல் ரீதியான இயலாமை எனில் அதில் இரு நிலைகள் உள்ளன. ஒன்று: அந்த இயலாமை குணமாகி விடும் என்றிருந்தால் அல்லாஹ்வின் உதவியால் குணம் கிடைத்து தடை நீங்கும் வரையில் எதிர்பார்த்திருக்க வேண்டும். பிறகு ஹஜ் செய்ய வேண்டும்.

ஆனால் வயோதிகம் போன்று குணமாகாத நிலையெனில் தனக்குப் பகரமாக ஒருவரை அனுப்பி ஹஜ் செய்யச் சொல்வது கடமையாகும். ஏனெனில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்: திண்ணமாக என்னுடைய தந்தை மீது ஹஜ் கடமையானபோது வாகனத்தில் அமர முடியாத அளவுக்கு முதுமை அடைந்துவிட்டார். எனவே அவருக்குப் பகரமாக நான் ஹஜ் செய்யவேண்டுமா? அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் என்று கூறினார்கள். ( புகாரி, முஸ்லிம்)

அந்தப் பெண்ணின் தந்தை இயலாதவராக இருந்ததுடனேயே ஹஜ் அவர் மீது கடமையானது என்று கூறியதை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். ஏனெனில் பணத்தால் அவர் ஆற்றல்பெற்றிருந்தார். எனவே உன் தந்தைக்குப் பகரமாக நீ ஹஜ் செய் என்று சொன்னார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *