Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-51-52)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-51-52)

51, 52. நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்…!

ஹதீஸ் 51. இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘நிச்சயமாக என(து வாழ்நாளு)க்குப் பிறகு (உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான) சுயநலப் போக்கும் நீங்கள் வெறுக்கக்கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்!’ தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிடுகிறீர்கள்? நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்கள் மீதுள்ள கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். மேலும் உங்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளை அல்லாஹ்விடம் நீங்கள் கேட்க வேண்டும்!’ நூல்: புகாரி, முஸ்லிம்

அல் அஃதரா: ஒன்றைத் தனதாக்கிக் கொள்வது. உரிமையுள்ளவர்களின் உரிமையைப் புறக்கணித்து விட்டு!

ஹதீஸ் 52. உஸைத் பின் ஹுளைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘மதீனத்து அன்ஸாரித் தோழர்களில் ஒருவர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதரை அதிகாரியாக நீங்கள் நியமித்தது போன்று என்னையும் அதிகாரியாக நியமிக்கக்கூடாதா? அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: என(து வாழ்நாளு)க்குப் பிறகு (உங்கள் உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலான) சுயநலப் போக்கை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும். அப்போது பொறுமையை மேற்கொள்ளுங்கள். (மறுமை நாளில்) தடாகத்தின் அருகே என்னை நீங்கள் சந்திக்கும் வரையில்!’ நூல்: புகாரி, முஸ்லிம்

தெளிவுரை

இவ்விரு நபிமொழிகளும் எதிர்காலத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் தலைதூக்கும் சர்வாதிகாரப் போக்கு குறித்து எச்சரிக்கை செய்வதுடன் அந்தச் சூழ்நிலைகளில் பொறுமை மேற்கொள்ள வேண்டுமென நற்போதனையும் தருகின்றன! இதனால்தான் இவ்விரு நபிமொழிகளையும் இந்தப் பாடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்!

கருத்து இதுதான்: பிற்காலத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் வாழ்க்கைப் போக்கில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். நபிகளார்(ஸல்) அவர்களும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களும் விட்டுச் சென்ற- நீதிநெறிமிக்க உயரிய பண்பாடுகளையும் உன்னத நெறிகளையும் அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்! பொதுமக்களின் சொத்துக்களைத் தன்னிச்சையாகக் கையாளுவார்கள்! முஸ்லிம்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளை தமதாக்கிக் கொள்வார்கள்!
இத்தகைய சுயநலப்போக்கும் உரிமை பறிப்பும் ஆட்சியாளர்களிடத்தில் காணப்படும்பொழுது நாங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமெனத் தோழர்கள் கேட்டபொழுது நபி(ஸல்) அவர்கள் –

‘உங்கள் மீதுள்ள கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்’

என்று கட்டளையிட்டார்கள். அதாவது, அரசாங்கத்தின் பொதுச் சொத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய உரிமையை அந்த ஆட்சியாளர்கள் அபகரித்துக் கொண்டாலும் – உங்களுக்கு அநீதியிழைத்தாலும் செவியேற்றல்- கீழப்படிதல் என்கிற உங்கள் கடமையை நீங்கள் நிறை வேற்றாமல் புறக்கணித்து விடாதீர்கள்! குழப்பம் விளைவிக்காதீர்கள்! பொறுமையை மேற்கொள்ளுங்கள். ஆட்சியதிகாரத்தில் அவர்களுடன் தகராறு செய்யாதீர்கள்! மேலும் சொன்னார்கள்:

‘உங்களுக்குச் சேரவேண்டிய உரிமைகளை அல்லாஹ்விடம் நீங்கள் கேட்கவேண்டும்’

அதாவது அத்தகைய அட்சியாளர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டுமென நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவ்வாறு அவர்கள் திருந்தி விட்டால் உங்கள் உரிமைகளைப் பறிக்க மாட்டார்கள்.

சுயநலப் போக்குடைய ஆட்சியாளர்களின் தன்னிச்சையான நடவடிக்கையின் போது பொறுமை மேற்கொள்ளுமாறு தம் தோழர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் வழங்கிய அறிவுரையில் வேகம் இல்லைதான். ஆனால் விவேகம் நிறைந்துள்ளது! மனிதர்களின் மனங்கள் கஞ்சத்தனம் மிக்கவை! மக்களின் உரிமைகளைப் பறித்து சொந்த வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்களைக் கண்டால் அதனைப் பொறுத்துக் கொள்ள மனித மனங்களுக்கு மிகவும் சிரமம்! இத்தகைய மனித இயல்பை நன்கு அறிந்திருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்! அதற்கேற்ற வகையில் இங்கு வழிகாட்டியுள்ளார்கள்!

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு.

1) நபிகளார்(ஸல்) அவர்கள் உண்மையில் இறைத்தூதரே என்பதற்கான ஆதாரம் இதிலுள்ளது. ஏனெனில் அன்று அவர்கள் முன்னறிவிப்பு செய்தது போன்றே நடைபெற்றது.

ஆம்! கலீஃபாக்கள் – அமீர்கள் என்போர் ரொம்ப காலமாகவே மக்களின் சொத்துக்களைத் தன்னிச்சையாகவே அனுபவித்து வருகிறார்கள்! அவர்களின் உல்லாச வாழ்க்கையை நாம் பார்க்கிறோம். உணவு-பானத்தில் வீண்விரயம்! ஆடை அணிகலன்களில் வீண்விரயம்! ஆடம்பரமான வீடுகள், மாளிகைகள்! சொகுசான வாகன வசதிகள்! இவ்வாறு மக்களின் பொதுச் சொத்துக்களைத் தங்களின் சொந்த நலனுக்காகத் தாராளமாக அவர்கள் செலவு செய்வதை காணலாம்!

ஆட்சியாளர்கள் இப்படி பொதுச்சொத்தை வீண்விரயம் செய்யும்பொழுது மக்கள் அவர்களுக்கு கீழ்படியாமல் இருப்பதும் அவர்களுடன் மோதல் போக்கை மேற்கொள்வதும் உகந்ததல்ல! மட்டுமல்ல ஆட்சியாளர்களுடன் ஒத்துழையாமைப் போக்கை மக்கள் மேற்கொண்டால் – அதனால் ஆட்சி நடத்த முடியாத அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டால் அதனால் வரும் சோதனை எல்லோரையும் சூழ்ந்து கொள்ளும்! இஸ்லாத்தின் நலனுக்கும் கேடு ஏற்படலாம்! எனவே ஆட்சியாளர்கள் நேர்வழி திரும்ப வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதும் அவர்களுக்கு அழகிய முறையில் புத்திமதி புகன்று கொண்டிருப்பதும்தான் அனைவருக்கும் நலம் பயக்கக்கூடியதாகும்!

2) இந்த அறிவுரையில் விவேகமும் நிதானமான போக்கும் உள்ளது. ஆட்சியாளர்கள் நாட்டின் பொதுச்சொத்தை அபகரித்து சுய நலனுக்காகப் பயன்படுத்துவதென்பது நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்யும் கடுமையான விஷயமே! மக்கள் தங்களுடைய உரிமைகளைக் கேட்டு வீதியில் இறங்கிப் போராடக்கூடத் தயங்கமாட்டார்கள்! அவர்களிடையே கொந்தளிப்பையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கான போதனையை நபியவர்கள் வழங்குகிறார்கள்! அதுதான் பொறுமையை மேற்கொள்வதென்பது! அமைதியான முறையில் ஆட்சியாளர்களைச் சீர்திருத்த முயல வேண்டுமென்பது! அதில் தான் நமக்கும் நமது தீன் – இறைமார்க்கத்திற்கும் நன்மை உள்ளது!

உஸைத் பின் ஹுளைர்(ரலி) அவர்கள் அறிவித்துள்ள நபிமொழியின் கருத்தும் இதேபோன்றதே!

‘என(து வாழ்நாளு)க்குப் பிறகு(உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான) தன்னலப் போக்கை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும்! அப்பொழுது பொறுமையை மேற்கொள்ளுங்கள். (மறுமை நாளில்) தடாகத்தின் அருகே என்னை நீங்கள் சந்திக்கும் வரையில்!’

அதாவது, உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளங்களைப் புண்படுத்தும் இத்தகைய கடினமன சூழ்நிலையில் நீங்கள் பொறுமையை மேற்கொண்டால் அதற்குரிய கூலியாக- மறுமை நாளில் நபி(ஸல்) அவர்களது தடாகத்தில் பானம் அருந்தும் பெரும் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கும்! (அத்தகைய பாக்கியமிக்க மக்களின் குழுவில் அல்லாஹ் நம் அனைவரையும் சேர்த்து வைப்பானாக!)

மறுமை நாளில் மகவும் கடுமையான சூழ்நிலையில் நபியவர்களின் இந்தத் தடாகம் மக்களுக்குப் பெரிதும் நிம்மதி அளித்துக் கொண்டிருக்கும்! ஆம்! மக்கள் அந்நாளில் பெரும் கவலையிலும் துன்பத்திலும் சிக்கி விட்டிருப்பார்கள். தாங்க முடியாத வெப்பமும் வியர்வையும் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கும்! அத்தகைய சூழ்நிலையில்தான் நபி(ஸல்) அவர்களது தடாகத்திற்கு மக்கள் வருவார்கள். பாக்கியமிக்க அதன் பானம் அருந்தி மகிழ்வார்கள். நிம்மதி அடைவார்கள்!

பொறுமை மேற்கொள்ளுங்கள். மறுமை நாளில் தடாகத்தில் நீர் அருந்தும் பாக்கியம் பெறுவீர்கள் என்கிற இந்த வாசக அமைப்பில் பொறுமையின் மற்றொரு சிறப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆம்! மறுமை நாளில் நபிகளார்(ஸல்) அவர்களின் தடாகத்திற்கு வந்து நீர் அருந்தும் பாக்கியம் பெற வழிவகுக்கும் காரணிகளுள் பொறுமையும் ஒன்றென்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ளலாம்!

இவ்வாறு இவ்விரு நபிமொழிகளும் – பொதுமக்களின் உரிமைகளைப் பறித்து தம் சொந்த வாழ்க்கையை வளப்படுத்தும் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ள வலியுறுத்தும் இந்த இடத்தில் இன்னோர் உண்மையை நாம் அறிந்திட வேண்டும். அதாவது மக்கள் எந்த லட்சணத்தில் வாழ்கிறார்களோ அதற்கேற்பவே அவர்களின் ஆட்சியாளர்கள் அமைவார்கள்! உலகில் காணப்படும் நிதர்சனமான உண்மையாகும் இது! ஜனநாயகம் உள்ளதெனச் சொல்லப்படும் நாட்டிலும் சரி, சர்வாதிகாரம் உள்ளதெனச் சொல்லப்படும் நாட்டிலும் சரி இதைத்தானே நாம் காண்கிறோம்!

மக்கள் நீதி நெறி தவறினால் – அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் மத்தியிலான உறவுகளில் அதாவது, அவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுதல், அவனுக்கு அஞ்சி வாழுதல், தீமைகள் தவிர்த்தல், நன்மைகளைப் பரவலாக்குதல், இறைமார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுத்தல் போன்ற விஷயங்களை மக்கள் பேணிடவில்லையானால் மேலேசொன்னது போன்று தீய ஆட்சியாளர்களை அவர்கள் மீது அல்லாஹ் திணித்து விடுகிறான்!

‘இவ்வாறே அக்கிரமக்காரர்களில் சிலரை வேறு சிலருக்கு ஆட்சியாளர்களாய் நாம் ஆக்குவோம். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணத்தால்!’
(6 : 129)

ஆம்! மக்கள் நல்லவர்கள் எனில் அவர்களைப் போன்ற நல்ல ஆட்சியாளர்களை அல்லாஹ் அவர்களுக்கு இலகுவாக்கிக் கொடுக்கிறான்! மக்கள் தீயவர்களெனில் அவர்களுக்கு வாய்க்கும் ஆட்சியாளர்களும் தீயவர்களாகவே அமைவார்கள்!

வரலாற்றில் கூறப்பட்டுள்ளது: ஃகாரிஜியாக்கள் என்ற பிரிவைச் சேர்ந்த ஒருவன் அலீ(ரலி) அவர்களிடம் வந்து கேட்டான்: ‘அலீ(ரலி) அவர்களே! மக்கள் இந்த அளவுக்கு உங்களை விமர்சனம் செய்கிறார்கள்! ஆனால் இவ்வாறு அபூ பக்ர்(ரலி) மற்றும் உமர்(ரலி) இருவரையும் யாரும் விமர்சனம் செய்யவில்லையே. என்ன காரணம்?’

அலீ(ரலி) அவர்கள் சொன்னார்கள்: ‘அபூ பக்ர்(ரலி) மற்றும் உமர்(ரலி) இருவருக்கும் என் போன்றவர்கள் கிடைத்திருந்தார்கள்! ஆனால் எனக்குக் கிடைத்திருப்பது உன் போன்றவர்கள்தானே!’ – அதாவது உன்னைப் போன்றவர்கள்தான் அதற்குக் காரணம்!

மற்றொரு நிகழ்ச்சி : பனூ உமைய்யா கலீஃபாக்களில் ஒருவர்தான் அப்துல் மலிக் பின் மர்வான்! இவருடைய ஆட்சிமுறை பற்றி மக்கள் குறை பேசிக்கொண்டிருந்தது இவரது காதுகளுக்கு எட்டியது. உடனே அவர் தன்னுடைய அவைப் பிரதானிகளையும் முக்கிய பிரமுகர்களையும் ஒன்றுதிரட்டினார். அவர்களிடம் கேட்டார்:

‘மக்களே! நான் உங்களுக்கு -அபூ பக்ர் மற்றும் உமர்(ரலி) போன்று சிறந்த ஆட்சியாளனாகத் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா?’

அனைவரும் ஒருமித்த குரலில் ‘ஆம்’ என்று பதில் அளித்தார்கள்!

பிறகு அப்துல் மலிக் சொன்னார்: ‘அப்படியானால் நீங்கள் எனக்கு – அபூ பக்ர் மற்றும் உமர் இருவரும் பெற்றிருந்ததைப் போன்ற சிறந்த பொதுமக்களாகத் திகழுங்களேன்!’

உண்மை தானே. அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன். மக்கள் எப்படிப் பட்டவர்களோ அப்படித்தான் அவர்களுடைய ஆட்சியாளர்களையும் அமைக்கிறான்! மக்கள் கெட்டவர்கள் எனில் ஆட்சியாளர்களும் கெட்டவர்கள்தான். மக்கள் நல்லவர்கள் எனில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆட்சியாளர்களும் நல்லவர்களாய் திகழ்வார்கள்!

ஆயினும் ஆளுவோர் திருந்திவிட்டால் மக்களும் திருந்திவிடுவர் எனும் ரீதியில் ஆட்சியாளர்கள் நல்லவர்களாய் இருக்க வேண்டுமென்பதுதான் அனைத்திற்கும் அடிப்படை! ஏனெனில் ஆட்சியாளர்களிடத்தில் அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி சீர்திருத்த நடவடிக்கையைச் சிறப்பாய் மேற்கொள்வது அவர்களுக்கு எளிது. நெறிபிறழ்ந்து செல்வோரை நெறிப்படுத்தவும் அநீதியும் அட்டூழியமும் செய்வோரைத் தடுத்து நிறுத்தவும் ஆட்சியாளர்களால் இலகுவாக முடியும்!

அறிவிப்பாளர் அறிமுகம் – உஸைத் பின் ஹுளைர்(ரலி) அவர்கள்

உஸைத் பின் ஹுளைர்(ரலி) அவர்கள் மதீனாவில் வைத்து முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்களின் அழைப்புப் பணியின் பயனாய் இஸ்லாத்தைத் தழுவினார்கள்! இரண்டாம் கணவாய் உடன்படிக்கையில் நபியவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்தவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள்!

உஹுத் யுத்தத்திலும் அதன் பிறகு நடைபெற்ற போர்கள் அனைத்திலும் கலந்துகொண்டார்கள். குர்ஆனை அழகிய ராகத்துடன் ஓதும் தோழர்களில் இவர்கள் குறிப்படத்தக்கவர்கள்! எதையும் அறிவிப்பூர்வமாகச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றுத் திகழ்ந்த இவர்கள் ஹிஜ்ரி 20ம் ஆண்டு மதீனாவில் மரணம் அடைந்தார்கள். உமர்(ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த பகீஉ மண்ணறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் இருந்து 18 நபிமொழிகள் அறிவிக்கப் பட்டுள்ளன!

கேள்விகள்

1) ஆட்சியாளர்கள் சர்வாதிகாரப் போக்கை மேற்கொள்ளும்பொழுது பொறுமையை மேற்கொள்ள வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் அறிவுரை கூறுவதன் விளக்கம் என்ன? அநீதியைத் தட்டிக்கேட்காமல் மௌனமாக இருக்க வேண்டுமென்பதா அதன் பொருள்?

2) இந்நபிமொழி சுட்டிக்காட்டும் பொறுமையின் தனிச்சிறப்பு என்ன?

3) நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில் மக்கள் எவ்வாறு நடந்தகொள்ள வேண்டும்?

4) காரிஜியாக்கள் என்போர் யார்? அவர்களின் தீய கொள்கை என்ன?

5) அறிவிப்பாளரின் வரலாற்றுக் குறிப்பு தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *