Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-10)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-10)

– M.T.M.ஹிஷாம் மதனீ

றாபிழாக்கள்

அறிமுகம்:
‘றாபிழா’ என்ற வார்த்தை ‘றபழ’ என்ற பதத்திலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் ‘புறக்கணித்தல்’ என்பதாகும்.

கலீபாக்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் ஆட்சியைப் புறக்கணித்தவர்களே றாபிழாக்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ‘இமாமிய்யாக்கள்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுவர்.

அப்துல்லாஹ் பின் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘எனது தந்தை (அஹ்மத் இப்னு ஹன்பல்) அவர்களிடம் றாபிழாக்கள் எனப்படுவோர் யாவர்? என்று கேட்டேன். அதற்கவர், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரை சபிப்பவர்களே றாபிழாக்கள் ஆவர்’ எனப் பதிலுரைத்தார்.

பிரிவுகள்:
றாபிழாக்களுக்கு மத்தியிலும் பல பிரிவுகள் உள்ளன. அவர்கள் மத்தியில் 15 பிரிவினர்கள் இருப்பதாகச் சில அறிஞர்களும், 20 பிரிவினர்கள் இருப்பதாக வேறு சில அறிஞர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

கொள்கை:
நபி (ஸல்) அவர்கள் தனது மரணத்திற்குப் பின் அலி (ரலி) அவர்கள்தான் அடுத்த ஆட்சியாளர் என்பதைத் தெளிவாகவும், பகிரங்கமாகவும் கூறியிருந்தார்கள். எனினும், நபியவர்கள் மரணித்த பின்னர் அலி (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக நியமிக்காததால் பெரும்பாலான ஸஹாபாக்கள் வழிகெட்டு விட்டனர். ஏனெனில், ஆட்சிப் பொறுப்பானது நபியவர்களால் தெளிவாகச் சொல்லப்பட்ட அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். அதில் மாற்றங்கள் இடம்பெறக் கூடாது. இன்னும், இமாமத் என்பது ஒர் இபாதத் ஆகும்… என்றவாறு அவர்களது கொள்கை விளக்கம்; நீண்டு கொண்டு சொல்கின்றது.

மேலும், றாபிழாக்களின் மிகவும் பிரசித்தி பெற்ற இமாம்களில் ஒருவரான முபீத் (முஹம்மது பின் முஹம்மது) என்பவர் கூறும் போது, மறுமை நாள் ஏற்படுவதற்கு முன்னர் மரணித்தவர்களில் அதிகமானோர் நிச்சயம் உலகிற்கு மீண்டும் திரும்பி வருவார்கள் என்றும், ஈமானில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களும், குழப்பம் விளைவிப்பதில் உச்சகட்டத்தை அடைந்தவர்களும் நிச்சயம் இவ்வாறு திரும்பிவருவர் என்றும் கூறியுள்ளார். (அவாஇலுல் மகாலாத்: 51, 95)

அதே போன்று, அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் இவர்கள் இறைவனுக்கு ‘பதாஅத்’ எனும் பண்பு உண்டென்று கூறுகின்றனர். ‘பதாஅத்’ என்பதற்கு இரு கருத்துக்கள் உள்ளன.

1. மறைந்திருந்த பின்னர் தோன்றுதல்,

2. புதிய கருத்துத் தோன்றுதல்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு எதுவுமே மறைந்து விடுவதில்லை. அவ்வாறிருக்க மறைந்திருந்த அல்லது தெரியாதிருந்த ஒரு விடயம் இறைவனுக்குப் பின்னர் தெரியவந்தது என்று எவ்வாறு கூறமுடியும்? அத்தோடு, இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்தது, அவன் ஞானம் மிக்க மகத்தானவனாக இருக்கும் போது புதியதொரு விடயம் எவ்வாறு அவனுக்குத் தோன்ற முடியும்? அவன் அறிவு, ஆற்றல் மற்றும் அனைத்திலுமே ஆரம்பமானவனாக இருக்கும்போது, இவ்வாறு அவனுக்கு ‘பதாஅத்’ உண்டென்று கூறுவது, அவன் மீது வேண்டுமென்றே அபாண்டம் கூறுவதைப் போலல்லவா இருக்கின்றது?

மேலும், இவர்கள் இறைவன் மீது ‘பதாஅத்’ எனும் பண்பு உண்டென்று கூறுவதைப் புனித வணக்கமாகக் கருதுகின்றனர். இது போன்ற கருத்துக்களை விளங்குவதில் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தினர் தடம் புரண்டு விட்டனர் எனவும் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் இமாம்களைப் பற்றிக் குறை கூறிகின்றனர்.

மேற்கூறப்பட்டவைகள் யாவும் றாபிழாக்களுடைய அடிப்படைகளாகும். அவ்வடிப்படைகள் அனைத்திலும் முஃதஸிலாக்கள், கவாரிஜ்கள், ஸைதிய்யாக்கள், முர்ஜிஆக்கள், மற்றும் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தினர் ஆகிய அனைவரும் முரண்பட்ட கருத்துக்களையே கொண்டுள்ளனர். எம் முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் தமது நூட்களில் றாபிழாக்களைக் கண்டித்திருப்பதோடு மட்டுமின்றி இவர்கள் தான் மிக மோசமான பிரிவினர்கள் என்றும் அடையானப்படுத்தியுள்ளனர்.

மேலும், இவர்களைப் பற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:

‘இஸ்லாத்தில் தேன்றியுள்ள அனைத்துப் பிரிவினர்களிடமும் பித்அத்களும் வழிகேடுகளும் காணப்படுகின்றன. எனினும், அவர்களில் எவரும் றாபிழாக்களைவிடக் கெட்டவர்கள் அல்லர். மேலும், அவர்களைவிட முட்டாள்களும், பொய்யர்களும், அநியாயக்காரர்களும், பாவச் செயல்களில் ஈடுபடுவோரும் வேறு எவரும் இல்லை. இன்னும், இறை நிராகரிப்பிற்கு மிக நெருக்கமானவர்களும், ஈமானின் அடிப்படைகளைவிட்டும் மிகத்தூரமானவர்களும் இவர்களே’ என்கிறார்.

2 comments

  1. very usefull matter br,

  2. mohamed yusuf ibn noor ahamed

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    அல்லாஹ் இப்னு தய்மியா (ரஹ்) அவர்களுக்கு அருள் புரிவானாக….ஆமீன்

    மேலும் இது போன்ற அஹ்லுஸ் ஸுன்ன வல் ஜமாத்தினர்களின் கிதாபுகலை தமிழாக்கம் செய்தால் மக்கலுக்கு மிகவும் பயனுல்லதாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *