Featured Posts
Home » இஸ்லாம் » குடும்பம் » வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும்
Close-up Of A Two Hearts With A Wedding Rings On Sandy Beach

வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும்

வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும்

مَوَدَّةً وَرَحْمَةً

படைப்பினங்களை எவன் படைத்தானோ, இல்லாமல் இருந்தவற்றை எவன் உருவாக்கினானோ அவன்தான், படைப்பினங்களை படைத்தான் என்பதற்கு அவைகளை அத்தாட்சியாகவும் ஆக்கியிருக்கின்றான். ஆதாரம், சான்று, சாட்சி இவற்றுக்கு பொதுவாக அத்தாட்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலத்தில் evidence, witness, proof போன்ற சொற்களைப் பயன்படுத்துவர்.

இறைவனின் அத்தாட்சிகள் இரண்டு வகைப்படும்: ஒன்று வானத்தில் உள்ள அத்தாட்சிகள், இன்னொன்று பூமியில் உள்ள அத்தாட்சிகள். படைப்பினங்களைப் படைத்தது அல்லாஹ் ஒருவன்தான் என்பதற்கு வானத்திலும் பூமியிலும், ஏராளமான சான்றுகள் உள்ளதை திருமறைகுர்ஆனில் பல இடங்களில் இறைவன் பட்டியலிடுகின்றான்.

اِنَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّلْمُؤْمِنِيْنَؕ

முஃமின்களுக்கு (இறைநம்பிக்கையாளருக்கு) நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்:45:03)

وَفِى الْاَرْضِ اٰيٰتٌ لِّلْمُوْقِنِيْنَۙ

உறுதியான இறைநம்பிக்கை கொண்டவர்களுக்குப் பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்:51:20)

وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ تَقُوْمَ السَّمَآءُ وَالْاَرْضُ بِاَمْرِهٖ‌ ؕ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةً مِّنَ الْاَرْضِ اِذَاۤ اَنْـتُمْ تَخْرُجُوْنَ

வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளில் உள்ளதாகும்; பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டுவருவீர்கள். (அல்குர்ஆன்:30:25)

اِنَّ اللّٰهَ يُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ۚوَلَٮِٕنْ زَالَــتَاۤ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْۢ بَعْدِهٖ ؕ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏

நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு அல்லாஹ்வே தடுத்துக்கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்:35:41)

இறைவனின் படைப்பில் மனிதன், வானம், பூமி, விவசாயம், உணவு, ஆறுகள், நதிகள், மலை, இடி, மின்னல், தேன், தேனீ, இரவு, பகல், புற்பூண்டுகள், மொழிகள் உறக்கம், ஓய்வு, இன்னும் ஏராளமானவற்றை அல்லாஹ் தனது அத்தாட்சியாக ஆக்கியிருப்பதாக திருமறைகுர்ஆன் கூறுகின்றது. (பார்க்க அல்குர்ஆன்: 02:219, 226, 03:191, 06:50, 07:176-184, 10:24, 13:03, 30:20-24, 45:13, 59:21)

படிப்பினை பெறுவோர் யார்?

இறைவனின் அத்தாட்சிகள் (ஆதாரங்கள்) மூலம் படிப்பினை பெறுவோர் யார்? அல்லாஹுவின் அத்தாட்சிகளை யார் சிந்திக்கிறார்களோ? அல்லாஹுவின் சான்றுகளை யார் அறிவுப்பூர்வமாக யோசிக்கின்றார்களோ அவர்கள்தான் இதிலிருந்து படிப்பினைப் பெறுவார்கள்.

இறைவன் பட்டியலிடும் அத்தாட்சிகளில் முக்கியமானது கணவன்-மனைவிக்கு இடையே அல்லாஹ் ஏற்படுத்திய அன்பும் – நேசமுமாகும்.

وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ

இன்னும், நீங்கள் ஆறுதல் அடைவதற்காக (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்:30:21)

அல்குர்ஆன்:30:21 இந்த ஒருவசனம் இறைவனின் இரண்டு அத்தாட்சிகளைச் சொல்லிக்காட்டுகின்றது.

1- ஆறுதல் அடைவதற்காக ஆணிலிருந்தே பெண்ணைப் படைத்திருப்பது.

2- அந்த ஆண்-பெண் கணவன் மனைவிக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டாகியிருப்பது.

ஆணை படைத்து அந்த ஆண் ஆறுதலும் அமைதியும் அடைவதற்காக இறைவன் பெண்ணைப் படைத்தான். ஒரு ஆண், பெண் இல்லாமல் அதாவது (திருமணம் செய்யாமல்) அவன் அமைதியடைய முடியாது. இதற்குத்தான் திருமணத்திற்கான சக்தியை எவர் அடைவாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும், திருமணம் எனது வழிமுறை எவர் திருமணத்தை நிராகரிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல! என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

ஆணின் ஆறுதலுக்காக, அமைதிக்காக பெண்ணை படைத்திருப்பது அல்லஹுவின் அத்தாட்சியாகும்.

அல்லாஹுவின் படைப்புகளாகிய மற்ற அத்தாட்சிகளெல்லாம் கண்கூடாக பார்க்கக்கூடியவை. கணவன்-மனைவிக்கு இடையே அல்லாஹ் ஏற்படுத்திய அன்பும் – கருணையும் அது அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தியது.

இங்கு இறைவன் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்படுத்திய நேசத்தைச் சுட்டிக்காட்ட مَوَدَّةً وَرَحْمَةً  (மவத்ததவ் வர்ரஹ்மா) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். இந்தச் சொல் அன்பு, பாசம், நேசம், கிருபை, கருணை இறக்கக் குணம் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கிய சொல்லாகும்..

எல்லா உயிரினங்களையும் அல்லாஹ் ஆண் – பெண் என்று ஜோடி ஜோடியாகவே படைத்திருக்கின்றான். எல்லா உயிரினங்களும் தன் இச்சைகளைத் தனது ஜோடியோடு தனித்துக்கொண்டு அதன்மூலம் இனப்பெருக்கமும் செய்கின்றன. ஆனால் அந்த ஜோடிகளுக்குள் இவ்வளவு பெரிய مَوَدَّةً وَرَحْمَةً  (மவத்ததவ் வர்ரஹ்மா) என்ற அன்பும்-நேசமும் கிடையாது. மற்ற உயிரினங்களெல்லாம் தன் இச்சையைத் தனித்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்வதோடு முடிந்துவிடுகின்றது.

ஆனால் எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்த அறிமுகமில்லாத ஒரு ஆணும், அறிமுகமில்லாத ஒரு பெண்ணும் திருமணம் என்ற உறவுக்குள் நுழைந்தவுடன் கணவன் – மனைவிக்கிடையில் எவ்வளவு பெரிய அன்பு, அசைக்க முடியாத நேசம், அவர்களுக்குள் எத்தனை பெரிய தியாகங்கள், இவளுக்கு ஒரு சிறிய தலைவலி என்றாலும் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது! இவனுக்கு சிறியதொரு துன்பம் வந்தாலும் அவளுக்குத் தூக்கம் வராது! தன் மனைவிக்கு முதல் பிரசவம் என்றவுடன், உலகத்தின் கடைக்கோடியில் இவன் இருந்தாலும் அவளது பிரசவத்திற்கு முதல்நாள் ஊருக்கு வந்துவிடுகின்றான். இடையில் இவர்களுக்குள் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் வந்தாலும் அவைகளையெல்லாம் களைந்து மீண்டும் (refresh) எல்லாவற்றையும் புதுப்பித்துக்கொண்டு அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படும் அன்பும் – நேசமும் இருக்கின்றதே…, (சுப்ஹானல்லாஹ்) இது مَوَدَّةً وَرَحْمَةً  (மவத்ததவ் வர்ரஹ்மா) என்ற அன்பையும் – நேசத்தையும் இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் வைத்திருப்பதுதான் காரணமாகும்.

இங்கு ஒரு சந்தேகம் வரும், காதல் ஜோடிகளும், வீட்டைவிட்டு ஓடிப்போய் மணமுடிக்காமல் வரம்பு மீறி வாழ்க்கை நடத்துபவர்களும் இப்படித்தானே ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்கின்றனர் என்று சந்தேகம் வரும். ஆம்…,  இறைவன் ஏற்படுத்திய வரம்புகளை மீறி, அனுமதிக்காத வழியில் இவர்களின்  நேசங்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதால் இந்த ஜோடிகள் பாவத்தையும் சேர்த்தே சுமக்கின்றனர். மறுமையில் இவர்கள் அல்லாஹுவின் தண்டனைக்குரியவர்கள்.

இறைவன் தந்த அருட்கொடைகளை அவன் அனுமதித்த வழியில் அடியான் அனுபவிக்கும்போது அதற்கு மறுமையில் நற்கூலியும் கிடைக்கின்றது. குறிப்பாகக் கணவனும் – மனைவியும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் அன்பிற்கும், நேசத்திற்கும் அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைந்துகொள்வார்கள்.

இன்னும் அல்லாஹுவின் அத்தாட்சியாகிய இவ்வளவு பெரிய مَوَدَّةً وَرَحْمَةً (மவத்ததவ் வர்ரஹ்மா) என்ற அன்பையும், நேசத்தையும் யார் அல்லாஹுவை ஏற்றுக்கொண்டார்களோ அவர்களுக்கு மட்டும் இதை அவன் வழங்கவில்லை! அல்லாஹுவை ஏற்றுக்கொண்டவர், அல்லாஹுவை மறுப்பவர், அல்லாஹுவை திட்டக்கூடியவர், அல்லாஹுவை புகழக்கூடியவர், கடவுளே இல்லை என்று சொல்பவர், மனோயிச்சையை பின்பற்றுபவர், வழிகேட்டில் விழுந்தவர், நேர்வழியில் பின்பற்றுபவர் என்று ஜாதி, மதம், நிறம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் மனித இனம் அனைத்திற்கும் அல்லாஹ் இதை வழங்கியிருக்கின்றான்.

மனிதன் மற்றும் அனைத்து ஜீவராசிகளையும் அல்லாஹுதான் படைத்தான் என்பதற்கு இந்த உலகில் ஏராளமான சான்றுகள், அத்தாட்சிகள் உள்ளன. அதில்  مَوَدَّةً وَرَحْمَةً  (மவத்ததவ் வர்ரஹ்மா) என்பதும் முக்கிய ஆதாரமாக இருக்கிறது  என்பதைச் சிந்திப்பவர்கள் மட்டுமே உணர்வார்கள்.

———————

S.A.Sulthan

Jeddah

07/092019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *