Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » தந்தையைப் பேணுவோம்

தந்தையைப் பேணுவோம்

பொதுவாகத் தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும், சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பில் கழிய நேரிடுகின்றது என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இதனால் தான் கடைசிவரை உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்குச் செல்வதற்கு முன்னர், தான் மரணித்துவிட வேண்டும் என்றும் பல தந்தைகள் நினைக்கின்றனர்.

குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் போனவர் கௌரவிக்கப்பட்டு வாழ வழிகாட்டப்படவேண்டியவர் ஒரு மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி மூன்றுவேளைச் சாப்பிட்டுவிட்டுப் பேசாமல் கிடந்தால் போதும் என்ற நிலைதான் பல தந்தைகளுக்கு.

உண்ணும் நேரமும், உறங்கும் நேரமும் தவிர மற்ற நேரங்களைப் பல தந்தைகள் கழிப்பது டீக்கடை பென்சு, முடிதிருத்தகம், பள்ளிவாசல் வளாகம், அல்லது எங்காவது ஒரு அகலமான திண்ணை. சில தந்தைகளின் உணவும் கடையில்தான். நாற்பது ஐம்பது ஆண்டுகள் கெத்தாக உழைத்த தந்தை ஊரில் உணவகத்தில் போய் உண்ணுவதற்கு வெட்கப்படுவாரே என்பதெல்லாம் அவர் பெற்று வளர்த்த குழந்தைகளுக்கு தெரிவதில்லை.

தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து உழைத்துக் கொடுத்துப் பழக்கப்பட்ட குடும்பத் தலைவனுக்குக் கடைசிக் காலத்தில் குடும்பத்தில் எதையும் கெஞ்சிக் கேட்டுப் பெறவேண்டிய நிலை! சூழ்நிலையை அறிந்துகொண்டு சில தந்தை வாய்திறந்து கேட்கமாட்டார்.

வெளிநாடுகளுக்கு பிழைப்பைத்தேடிச் சென்ற பல தந்தைமார்கள் கொரோனாவின் பின் விளைவுகள் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால் வெளிநாட்டை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்குத் தயாராக உள்ளனர். உங்களால் இயன்ற அளவு உங்கள் தந்தையோடு இணக்கமாக இருங்கள், அவரை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடாதீர்கள்,  அவரை தனிமைப்படுத்தி மூலையில் அமர்த்திவிடாதீர்கள், வயதான காலத்தில் தனிமை மிகவும் கொடுமையானது.

அதிலும் தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிக கொடுமையானது, அவரது சில்லறை சிலவுக்காகப் பணம் கொடுங்கள், பிணக்குகளை காரணமாகக் கொண்டு பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரித்து விடாதீர்கள், அவர்கள் உங்கள் தந்தையால் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

குடும்பத் தலைவன், சம்பாதித்தவன், அதிகாரம் செலுத்தியவன், பிறர் மதிப்பிற்குரியவன் போன்ற பல படித்தரங்களில் வாழ்ந்த தந்தையை அன்பு, பாசம், நெருக்கம், நிம்மதி இவற்றுக்காக ஏங்க வைத்துவிடாதீர்கள்!

அவர் மரணித்தபிறகு என் தந்தை இப்போது இருந்தால் அதைச் செய்திருப்பேன், இதைச் செய்திருப்பேன் என்று பிறகு ஏங்குவதைவிட, அவர் இருக்கும்போது மிகவும் நெருக்கமாக இருந்து அவரது தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

இஸ்லாமியர்களின் தந்தைகளை விட, முஸ்லிம் அல்லாதவர்களின் தந்தைகளின் நிலை மிகவும் மோசம்! தாய் தந்தையரைப் பேணுவதை இஸ்லாம்தான் வணக்கமாக்கியுள்ளது. தாய் தந்தையரை நோவினை செய்பவன் பெரும் பாவம் செய்தவனாவான் என்ற அளவிற்குத் தாய் தந்தையரை இஸ்லாம் மட்டுமே கண்ணியப்படுத்தியுள்ளது.

ஒருவனுக்குப் பெற்றோர் ஒருவரோ அல்லது இருவருமோ இருந்திருந்தும் சுவனத்தைப் பெற்றுக்கொள்ளாதவன் மிகப்பெரிய நஷ்ட வாளியாவான் என அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) என்பதை உணர்ந்து உங்கள் தந்தைக்கு நலவை நாடுங்கள்.

***

S.A Sulthan

19/09/1441h

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *