Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (1-7)

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-7)

7. ஒழுக்க மாண்பே உயர்வுக்கு அடிப்படை!

அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் உள்ளங்களைப் பார்க்கிறான்’ (முஸ்லிம்)

தெளிவுரை

இறைவன் உங்களுடைய உடலையும் தோற்றத்தையும் குலத்தையும் பார்த்து எடைபோட்டு உங்களுக்கு உயர்வும் தாழ்வும் அளிப்பதில்லை. உங்கள் உடல் பெரியதா? சிறியதா? பிணியுற்றதா? ஆரோக்கியமானதா? உங்களது தோற்றம் அழகானதா? அலங்கோலமானதா? நீங்கள் பிறந்தது உயர்ந்த குடும்பத்திலா? தாழ்ந்த குடும்பத்திலா? இதேபோல் உங்களிடம் செல்வம், செல்வாக்கு உள்ளதா? பட்டம், பதவியைப் பெற்றுள்ளீர்களா? இவற்றை வைத்து எந்த மனிதனுக்கும் இறைவன் கண்ணியம் அளிப்பதில்லை. இவற்றில் எதனையும் அளவுகோலாய்க் கொண்டு மனிதர்களை இறைவன் தரம் பிரிப்பதில்லை.

ஆனால் ஓரே ஓர் அம்சத்தைக் கொண்டு மனிதர்களை அவன் தரம் பிரிக்கிறான். அதுவே பயபக்தியும் நல்லொழுக்கமும் கொண்ட தூயவாழ்வு! ஆம்! இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு இதனை அடிப்படையாகக் கொண்டதே! இறைவனுக்கு அஞ்சி வாழ்பவர் யாரோ அவரையே கண்ணியமும் உயர்வும் உடையவராக அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அவரே அவனிடத்தில் அதிகம் நெருக்கமானவராகிறார். நல்லொழுக்கம் தவறியவர் இறைவனிடம் தரம்தாழ்ந்தவர் மட்டுமல்ல தண்டனைக்கு உரியவரும்கூட!

குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது: ‘ஓ மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆண் பெண்ணிலிருந்து படைத்தோம். பிறகு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியது, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டே! நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் அதிகக் கண்ணியமானவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தான்! திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான் ” (49: 13)

இதுதான் குர்ஆனின் போதனை. மனித குலத்திற்குச் சிறப்பும் உயர்வும் அளிக்கவல்ல இஸ்லாமிய சன்மார்க்கத்தின் அடிப்படைச் சித்தாந்தம்.

மொழி, இனம், நிறம், குலம்-கோத்திரம், பிரதேசம் ஆகியவற்றைக் கொண்டு மனிதர்களிடையே பேதமை பாராட்டும் சித்தாந்தங்கள், பிறப்பால் உயர்வு-தாழ்வைக் கற்பிக்கும் மதங்கள் மனித தர்மத்திற்கே எதிரானவை! இழிவானவை ஆகும்! ஏனெனில் அவற்றை ஏற்ற மனிதன் தன் இனத்தையே இழிவுபடுத்தத் தலைப்படுகிறான். தன்னினத்தை இழிவுபடுத்துபவன் தன்னையே இழிவுக்குள்ளாக்குகிறான் என்பதல்லாமல் வேறென்ன!

நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாயின் இந்த அடிப்படையை உளமார ஏற்றுச் செயல்படுத்துங்கள். செல்வம், செல்வாக்கு. வசதி வாய்ப்புகள் ஆகியவற்றை நீங்கள் பெற்றிருந்தால் அவற்றைக் கொண்டு பெருமையடிக்காதீர்கள். அவற்றை அடையாத மக்களை இழிவாகக் கருதாதீர்கள்! இறைவனை அஞ்சி, பாவம் – பழிகள் தவிர்த்து வாழும் தூய்மை நிலை – தக்வா உங்களிடம் உள்ளதா என்று பாருங்கள். இதுவே இறைவன் உங்களுக்கு வழங்கிய பேரருள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

‘ஆனால் உங்களின் உள்ளங்களைப் பார்க்கிறான்’

– ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: அவன் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் பார்க்கிறான். – ஆக, செயல்கள் சிறப்பாய் இருப்பதுடன் அவற்றின் பின்னணியில் உள்ள எண்ணங்களும் தூய்மையாய் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இறைவன் கண்ணியம் அளிக்கிறான்!

இதோ! ஒரே இமாமைப் பின்பற்றி ஒரே வரிசையில் நின்றுதொழும் இரு மனிதர்களைப் பாருங்கள். ஒருவர் தன்னைத் தொழுகையாளி என்று காட்டிக் கொள்வதற்காகப் பள்ளிவாசல் வந்து தக்பீர் கட்டியுள்ளார். அவர் உடலளவில்தான் இங்கு தொழுகை வரிசையில் நிற்கிறார். அவரது உள்ளமும் உணர்வும் வேறெங்கோ சுற்றித் திரிகிறது!

இன்னொருவர் வாய்மையோடு தொழுகையில் நிற்கிறார். அவரது உள்ளத்தில் பயபக்தியும் தூய்மையும் நிறைந்துள்ளது.

முதலாமவர் உலகை நாடி வந்துள்ளார். இரண்டாமவர் இறைஉவப்பைத் தேடி வந்துள்ளார். முதலாமவரின் தொழுகை நிராகரிக்கப்படுகிறது. இரண்டாமவரின் தொழுகை நிறைவான கூலியைப் பெறுகிறது! இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்? உள்ளத்தின் எண்ணம் தான் காரணம்!

நற்சிந்தனையே ஈமானுக்குப் பலம்

எண்ணத்தைத் தூய்மையாக்குவதற்கு என்ன வழி என்று நீங்கள் கேட்கலாம். இறைவனின் வல்லமைகளைச் சிந்திப்பதும் அவனது பேராற்றலை நிரூபிக்கும் சான்றுகளின் பக்கம் கவனம் செலுத்துவதும்தான் அதற்கான வழியாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: ‘திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும் இரவு – பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன” (3 : 191) – வேறோர் இடத்தில்,

‘திண்ணமாக இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. மேலும் உங்களைப் படைத்ததிலும் (பூமியில்) அல்லாஹ் பரப்புகிற எண்ணற்ற உயிரினங்களிலும் உறுதி கொள்ளும் மக்களுக்குப் பெரும் சான்றுகள் உள்ளன,” (45:3-4)

சிலபொழுது உள்ளத்தில் ஷைத்தானிய ஊசாட்டங்கள் புகுந்து உங்கள் இறைநம்பிக்கையைப் பலவீனப்படுத்தலாம். உடனே இறையாற்றலின் பக்கம் கவனத்தைத் திருப்பி சிந்தனையைச் சீராக்குங்கள்., கூராக்குங்கள். இப் பேரண்டத்தைப் பாருங்கள்! இதனை நிர்வகிப்பவன் யார்? உலகின் நிலைமைகள் எவ்வாறு மாற்றம் அடைகின்றன? காலங்களை ஏற்றயிறக்கங்களோடு இறைவன் எவ்வாறு சுழன்று வரச் செய்கிறான்?

இவ்வாறெல்லாம் சிந்திக்கும்பொழுது – இறைவன் இல்லாமல் இவ்வுலகம் இல்லை. நுண்ணறிவாளனும் சிறந்த நிர்வாகியுமான இறைவனால்தான் இவ்வுலகம் நிர்வகிக்கப்படுகிறது எனும் பேருண்மையை உறுதியாக அறிந்து கொள்வீர்கள்!

இதேபோல் ஷிர்க்-இறைவனோடு பிறிதொன்றை இணைவைத்தல் எனும் கொடிய பாவத்தை விட்டும் உங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் மனத்திடம் கூறுங்கள்: மனிதர்கள் யாரும் நமக்கு எவ்வித நன்மையோ தீமையோ அளித்திட முடியாது. அல்லாஹ்வின் கட்டளையை நாம் மீறினால் அவனது தண்டனையிலிருந்து மனிதர்கள் எவரும் நம்மைக் காப்பாற்றவும் முடியாது அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் மனிதர்கள் நமக்கு நற்கூலி வழங்கப் போவதுமில்லை. நமக்கு நற்கூலியோ தண்டனையோ லாபமோ நஷ்டமோ அளித்திட மனிதர்களால் முடியாது. நம்முடைய செயல்களுக்கு நன்மையோ தண்டனையோ தரும் ஆற்றல் பெற்றவன் அல்லாஹ் ஒருவன்தான்!

இப்படி இருக்கும்பொழுது இணைதுணையற்ற அந்த இறைவனோடு பிறரை ஏன் நாம் இணையாக்க வேண்டும்? நாம் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகளின் மூலம் மனிதர்களின் பக்கம் நெருக்கம் பெற நாம் ஏன் நாடவேண்டும்?

இறைவனின் உவப்பைப் பெறநாடி வழிபாடு செலுத்தாமல் மனிதர்களின் உவப்பைப் பெறும் எண்ணத்திற்கு உள்ளத்தில் ஏன் இடம் கொடுக்க வேண்டும்? அப்படிச் செய்தால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்! இறைவனும் நம்மை நேசிக்க மாட்டான். மனிதர்களையும் நம்மை விட்டு விலகிச் சென்றிடுமாறு செய்திடுவான்!

இறைவனையே நாடுவோம். அவனது உவப்பைப் பெறுவதையே இலட்சியமாகக் கொள்வோம்!

அறிவிப்பாளர் அறிமுகம் – அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்

இவர்களின் இயற்பெயர் அப்துர் ரஹ்மான் பின் ஸக்ர். இஸ்லாத்தைத் தழுவும் முன்பு இவர்களின் பெயர் அப்துஷ் ஷம்ஸ் (சூரியனின் அடிமை) என்றிருந்தது. நபியவர்கள் அப்துர் ரஹ்மான் (கருணைமிக்க இறைவனின் அடிமை) என்று பெயர் மாற்றம் செய்தார்கள். அபூ ஹுரைரா என்பது பட்டப் பெயராகும். இந்தப் பெயரின் பின்னணியில் சுவையான கதை ஒன்றுண்டு. அபூ ஹுரைராவே அறிவித்திருக்கிறார்கள்.

‘நான் என் வீட்டின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் பூனைக் குட்டி ஒன்று இருந்தது. இரவில் எனது அறையில் அதை வைத்திருப்பேன். பகலில் என்னுடன் அதை எடுத்துச் செல்வேன். அதனுடன் விளையாடுவதிலேயே எனது ஓய்வான நேரம் கழியும். இதனைக் கண்ட மக்கள் (பூனையைச் சுமந்து திரிபவர்) என்கிற பொருளில் என்னை அபூ ஹுரைரா என்று அழைக்கலாயினர்”

தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த இவர்கள் கைபர் யுத்தம் நடைபெற்ற ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார்கள். அந்தப் போரிலும் அதன்பிறகு நடந்த அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டார்கள். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அதிக காலம் நபியவர்களின் சமூகத்திலேயே கழிந்தது. நபிகளாரிடம் இருந்து கல்வி ஞானம் பெறுவதில் அவர்களுக்கிருந்த அதிக ஆர்வமே அதற்குக் காரணம்! அதனால் தான் ஸஹாபாக்களிலேயே அதிக அளவு நபிமொழிகளை மனனம் செய்திருந்தவர்கள் என்று இவர்கள் பிரபலமானார்கள். அதைக் குறித்து அவர்கள் சொல்கிறார்கள்:

‘நபித்தோழர்களில் என்னை விடவும் அதிகமாக ஹதீஸ்களை அறிந்தவர் யாருமில்லை. ஆனால் இப்னு உமரைத் தவிர! ஏனெனில் அவர் எழுதிவைத்துக் கொள்வார். நான் எழுதுவதில்லை” – அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் அழைப்பை ஏற்று அவர்களுடைய தாயாரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்து 5304 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதீனாவில் வசித்து வந்த இவர்கள் ஹிஜ்ரி 57 ஆம் ஆண்டு 78 வது வயதில் அங்கேயே மரணம் அடைந்தார்கள். மதீனாவின் பகீஃ மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கேள்விகள்

1) மனிதனுக்கு இறைவன் அளிக்கும் கண்ணியத்தின் அடிப்படை என்ன?

2) மொழி, இனம், நிறத்தின் அடிப்படையில் அல்லது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு – தாழ்வு கற்பிப்பதன் தீய விளைவுகளை விவரிக்கவும்.

3) ஒழுக்க மாண்பே உயர்வுக்கு அடிப்படை எனும் சித்தாந்தத்திற்கு குர்ஆன் – ஹதீஸின் ஆதாரங்களைக் கூறவும். அதனால் மனித வாழ்வில் மலரும் நல்ல பயன்களைச் சுருக்கமாக எழுதவும்.

4) உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் வழிமுறை என்ன?

5) ஷிர்க் என்பதன் பொருள் என்ன? அது கொடிய பாவம் என்பதற்கான ஆதாரம் என்ன?

6) அறிவிப்பாளரைக் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *