Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-20)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-20)

20. நூறு கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால்?

ஹதீஸ் 20: அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டான். அவர், கிடையாது என்று சொல்லி விட்டார். உடனே அவரையும் கொலை செய்து அவருடன் நூறைப் பூர்த்தியாக்கினான்.

பிறகு இப்புவி வாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று கேட்டான். கல்லி அறிவுபெற்ற இன்னொரு மனிதரின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப்பட்டது. (அவரிடம் சென்று) கேட்டான்: நான் நூறு பேரைக் கொலை செய்துள்ளேன். எனக்குப் பாவமன்னிப்பு உண்டா?

அவர் சொன்னார்: ஆம், உண்டு! பாவமன்னிப்புப் பெறவிடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும்? நீ இன்ன இன்ன ஊருக்குச் செல்! அங்கு, அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளனர்., அவர்களுடன் சேர்ந்து நீயும் அல்லாஹ்வை வணங்கு. உனது சொந்த ஊருக்கு நீ திரும்பி விடாதே! அது கெட்டதொரு பூமியாகும்!

உடனே அவன் (அந்த ஊரை நோக்கிப்) புறப்பட்டான். பாதி வழி வந்திருக்கும்பொழுது மரணம் அவனைத் தழுவிக்கொண்டது! அவனைக் கைப்பற்றும் விஷயத்தில் கருணை மலக்குகளும் தண்டனை மலக்குகளும் தர்க்கம் செய்யலானார்கள்!

கருணை மலக்குகள் சொன்னார்கள்: இவன் பாவமீட்சி தேடியவனாக – தனது இதயத்தால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவனாக வந்துள்ளான்,. என்று! தண்டனை மலக்குகள் சொன்னார்கள்: இவன் எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை என்று!

இந்நிலையில் வேறொரு மலக்கு மனித வடிவத்தில் அங்கு வந்தார். அவரைத் தங்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும் நடுவராக்கினார்கள், அந்த மலக்குகள். அவர் சொன்னார்: இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை அளந்து பாருங்கள். இந்த மனிதன் எந்த ஊரின் பக்கம் நெருக்கமாக இருக்கிறானோ அந்த ஊரைச் சேர்ந்தவனாவான்! ”

அவ்வாறு அளந்து பார்த்த பொழுது அவன்,எந்த ஊரை நாடி வந்தானோ அந்த ஊரின் பக்கம் நெருக்கமானவனாக இருந்தான். உடனே கருணை மலக்குகள் அவனைக் கைப்பற்றிக் கொண்டார்கள்!” (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஸஹீஹ் (முஸ்லிமின்) ஓர் அறிவிப்பில் வந்துள்ளது: ‘அவன் நல்ல ஊரின் பக்கமே ஒருசாண் அளவு அதிக நெருக்கமாக இருந்தான். எனவே அவ்வூர்வாசிகளுடன் சேர்க்கப்பட்டான்’

ஸஹீஹ் (முஸ்லிமின்) வேறோர் அறிவிப்பில் உள்ளது: ‘இந்த ஊருக்கு நீ தூரமாகிவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மேலும் அந்த ஊருக்கு- நீ நெருக்கமாகிவிடு என்று கட்டளையிட்டான். மேலும் கூறினான்: (இப்பொழுது) இரு ஊர்களுக்கும் மத்தியில் அளந்து பாருங்கள் என்று! அதன்படி அந்த மனிதன் இந்த ஊரின் பக்கமே அதிக நெருக்கமாக இருக்கக் கண்டார்கள்!’

ஸஹீஹ் (முஸ்லிமின்) இன்னோர் அறிவிப்பில் உள்ளது: ‘அவன் தனது இதயத்தால் அந்த ஊரை நாடிப் புறப்பட்டான்.

தெளிவுரை

வாய்மையுடன் பாவமன்னிப்புத் தேடும் மனிதனுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. அவன் செய்த பாவம் எவ்வளவு பெரிதாயினும் எவ்வளவு அதிகமாயினும் சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் கருணை எல்லையில்லாதது! உலகின் எல்லாப் பொருள்களையும் வியாபித்து நிற்கக் கூடியது! இந்த உண்மைக்கு இன்னோர் ஆதாரமே இந்நபிமொழி.

நபி(ஸல்) அவர்கள் முற்காலச் சமுதாயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தத்துவார்த்தமான முறையில் விளக்கிக்காட்டி பாவமீட்சி தேடுவதன் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் உணர்த்துகின்றார்கள்.

பாவமீட்சி தேடும் மனிதனுக்கு மன்னிப்பு கிடைக்கவேண்டுமாயின் அதற்கு மிகமுக்கியமான நிபந்தனை, அவன் மனம் திருந்தியிருக்க வேண்டும் என்பதே. பாவம் குறைவாக, லேசானதாக இருக்க வேண்டும் என்பதல்ல. அவன் மனம் வருந்தி – திருந்தி வாழ முன்வந்து விட்டால் அவனது பாவம் எவ்வளவு கடுமையானதாக – கொடுமையானதாக இருந்தாலும் அவனுக்கு மன்னிப்பு உண்டு!

இந்தக் கருத்துக்கு ஓர் உவமை கூறி தத்துவார்த்தமாக விளக்கித் தருகிறார்கள், நபி(ஸல்) அவர்கள்! உவமையுடன் எடுத்துரைக்கும் கருத்துக்கள் மனதில் நன்கு பதிகின்றன! அவற்றைக் கடைப்பிடித்து வாழ வேண்டுமெனும் நல்லார்வமும் பிறக்கிறது. – மக்களின் உள்ளங்களில் கருத்துக்களை நயமாகப் புகட்டுவதில் நபி(ஸல்)அவர்கள் மேற்கொண்ட நுட்பமான பாணியாகும் இது!

மட்டுமல்ல இஸ்லாத்தின் அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். நல்லவற்றை நயமாக எடுத்துக்கூறி மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க வேண்டும். அவர்களை நிராசை அடையச் செய்து விடக்கூடாது என்பதையும் இங்கு நபியவர்கள் நயமாக வலியுறுத்தியுள்ளார்கள்! இறைமார்க்கம் – ஆன்மிகம் பற்றிப் பேசுபவர்கள் -அறிவுரை கூறுபவர்கள் ஷரீஅத்தின் அடிப்படைகளை நன்கு அறிந்து அதன்படி செயலாற்றுவது அவசியம். அழைப்புப் பணியின் வழியில் இது ஓர் அடிப்படை அம்சமாகும்.

99 பேரைக் கொலை செய்த குற்றத்திற்கு மன்னிப்பு உண்டா என்ற கேள்விக்கு- ஆலயத்தில் அமர்ந்து வழிபட்டுவந்த அந்தத் துறவி தவறான பதிலைத் தந்தார். குற்றத்தின் கடுமையை மட்டுமே பார்த்தாரே தவிர பாவமீட்சி தேடிவந்த மனிதனின் மனமாற்றத்தைப் பார்க்கவில்லை. உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லி அவனை நிராசை கொள்ளச் செய்தார்.

ஆனால் மார்க்கத்தைக் கற்றுணர்ந்த அந்த அறிஞரின் அணுகுமுறை சரியாக இருந்தது. முதலில் – மன்னிப்புத் தேடிவந்த மனிதனின் மனத்தில் நம்பிக்கை ஒளி பாய்ச்சினார். மன்னிப்புப் பெறவிடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும் என்று கூறி தைரியமூட்டினார்.

இரண்டாவதாக – இனி என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? எங்குச் செல்ல வேண்டும்? எங்குச் செல்லக்கூடாது என்று -செயல்படும் விதத்தையும் விளக்கினார். தீமை செய்த ஒருமனிதன் திருந்திய பிறகு மீண்டும் தீமையில் சிக்காதிருப்பதற்கு இது மிகமிக முக்கியம்! கெட்ட-மோசமான சூழ்நிலையை விட்டு வெளியேறிட வேண்டும். நல்லோருடன் சேர்ந்து வாழவேண்டும். இறைவழிபாடு செய்துவர வேண்டும்.

ஆகா! இது எத்துணை விவேகமான பதில்! கடும் முரடனின் கல்மனத்தையும் கனியச் செய்திடும் காரியசாத்தியமான அணுகுமுறை! பாவமீட்சி தேடிப் புறப்பட்ட அந்த மனிதனிடம் – அந்த வழியில் எத்தனை சோதனைகள் வந்தாலும் பின்வாங்கக்கூடாது எனும் மன உறுதி இருந்தது. வாய்மையான எண்ணம் இருந்தது. இதனால்தான் நல்லோர் வாழ்ந்த ஊரை நோக்கிப் புறப்பட்டு -அதனை அடையும் முன்பே அவன் மரணம் அடைந்த நிலையிலும், எவ்வித நற்செயலும் அவன் செய்யவில்லை என்பதுடனேயும் அவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. நல்லூரை நெருங்கி விட்டானா என்று மலக்குகளால் அளக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக நபியவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது – உண்மையான மனமாற்றத்திற்கும் மனத் தூய்மைக்கும் இறைமார்க்கம் எத்துணை முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர்த்தவே! இறைவனின் ஆணைகளும் மலக்குமார்களின் செயல்களும் மிக நுட்பமானவை. அவற்றின் யதார்த்த நிலையை நம்மால் அறியமுடியாது. ஆனால் நாம் புரியும் பாஷையில் – பாணியில் நபியவர்கள் விளக்கச் சொல்லியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸஹீஹ் முஸ்லிமின் பல்வேறு அறிவிப்புகளின் வாசகங்கள் உணர்த்தும் கருத்தும் இதுவே!

கொலைகாரன் திருந்தி மனம் வருந்தி பாவமீட்சி தேடினால் அவனுக்கு மன்னிப்பு உண்டு என்பதே ஷரீஅத் சட்ட வல்லுனர்கள் பெரும்பாலோரின் கருத்தாகும். ஆனால் புகழ்பெற்ற நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கருத்து- கொலை செய்தவனுக்கு மன்னிப்புக் கிடையாது என அறிவிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். மேலும் அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டான். அவனை சபித்தும் விட்டான். மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது’ (அல்குர்ஆன் 4: 95)

ஆயினும் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தே சரியானதாகும். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கருத்து பின்வரும் விளக்கத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது:

கொலை செய்தவனுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது என்பது கொலை செய்யப்பட்டவனைப் பொறுத்துச் சொல்லப்பட்டதாகும். அதாவது கொலை செய்தவனுடன் மூன்று உரிமைகளின் தொடர்பு ஏற்படுகிறது.

அல்லாஹ்வின் உரிமை

கொலை செய்யப்பட்டவனின் உரிமை

கொலை செய்யப்பட்டவனின் வாரிசுகளின் உரிமை

அல்லாஹ்வின் உரிமையைப் பொறுத்தவரையில் – கொலை செய்தவன் பாவமீட்சி தேடினால் அல்லாஹ் மன்னிப்பு வழங்கி விடுவான். குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் :

‘(நபியே!) கூறுவீராக: தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்து விடாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான்’ (39:52) மற்றோர் இடத்தில்,

‘மேலும் அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. (கொலை செய்யக் கூடாதென) அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் அவர்கள் கொலை செய்வதில்லை. மேலும் விபச்சாரமும் செய்வதில்லை. யாரேனும் இந்தச் செயல்களைச் செய்தால் அவன் தன் பாவத்திற்கான கூலியைப் பெற்றே தீருவான். மறுமை நாளில் அவனுக்கு இரட்டிப்புத் தண்டனை அளிக்கப்படும். அதிலேயே இழிவுக்குரியவனாக வீழ்ந்து கிடப்பான். ஆனால் எவர் மன்னிப்புக்கோரி இறைநம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிந்தாரோ அவரைத் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுகிறான். அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனும் ஆவான்’ (25:69 – 70)

கொலைசெய்யப்பட்டவனின் உரிமையைப் பொறுத்தவரையில் கொலை செய்தவனின் பாவமீட்சியினால் அவனுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அவனது உயிர் திரும்பப் போவதுமில்லை. அவனது உரிமை நிறைவேறப் போவதுமில்லை. அவன் இறந்தது இறந்ததுதான். அவனிடம் மன்னிப்பு கோரிடவும் முடியாது. அவனது உயிரைப் பறித்த குற்றத்தில் இருந்து பொறுப்பு நீங்கிடவும் முடியாது. கொலை செய்தவனின் மீதான ஒரு களங்கமாகவே அது நீடிக்கும்! மறுமை நாளில் அல்லாஹ் அவ்விருவருக்கும் மத்தியில் தீர்ப்பு வழங்குவான்.

இந்தக் கோணத்தில்தான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

கொலை செய்யப்பட்டவனின் வாரிசுகளின் உரிமையைப் பொறுத்த வரையில் கொலை செய்தவன் தன்னை அவர்களிடம் ஒப்படைத்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, நீங்கள் விரும்பினால் என்னைக் கொன்று பழி தீர்த்துக் கொள்ளுங்கள். விரும்பினால் எனக்கு மன்னிப்பு வழங்குங்கள்! என்று சொல்லாத வரையில் அவனது பாவமீட்சி தேடல் நிறைவேறாது!

அறிவிப்பாளர் அறிமுகம் – அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள்

அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள் வயதின்மையின் காரணத்தால் உஹுத் போரில் கலந்து கொள்ளவில்லை. அதில் அவர்களின் தந்தை கொல்லப்பட்டு ஷஹீத் ஆனார்கள். அதற்குப் பிறகு நடந்த அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டார்கள். இவர்களிடம் இருந்து ஏராளமான நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை சுமார் 1270 இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள், நபித்தோழர்களில் இளைய தலைமுறையில் ஷரீஅத் சட்டங்களை அதிகம் தெரிந்தவர்களாயும் சிறப்புக்குரியவர்களாயும் திகழ்ந்தார்கள். ஹிஜ்ரி 64 ஆம் ஆண்டு ஜும்ஆ நாளில் மரணம் அடைந்தார்கள். அவர்களது ஜனாஸா மதீனாவில் பகீஃ மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கேள்விகள்

1) அழைப்புப் பணி செய்வோருக்கு இந்நபிமொழி தரும் பாடம் என்ன?

2) கொலை செய்வது அழிவிலாழ்த்தும் பெரும்பாவம் என்பதற்கு குர்ஆன், ஹதீஸின் ஆதாரங்களை எழுதவும்.

3) இந்நபிமொழியின் மூலம் கிடைக்கும் படிப்பினைகள் என்ன?

4) அறிவிப்பாளர் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *