Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-22)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-22)

22. இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா?

ஹதீஸ் 22: இம்றான் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஜுஹைனா என்ற குலத்தைச் சேர்ந்த ஒருபெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதினால் கருவுற்றிருந்தாள். அவள் சொன்னாள்: அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனை பெறும் அளவுக்குத் தவறு செய்து விட்டேன். என் மீது தண்டனை நிறைவேற்றுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் பொறுப்பாளரை அழைத்தார்கள். அவரிடம் சொன்னார்கள்: நீர் இவளிடம் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ளும். குழந்தை பெற்றெடுத்ததும் இவளை என்னிடம் அழைத்து வாரும்.

அவ்வாறே அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அவளை நபியவர்களிடம் அழைத்து வந்தார் அவர். அவளது விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். அவள் மீது அவளுடைய ஆடைகள் கட்டப்பட்டன. பிறகு கல்லெறிந்து அவளைக் கொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு நபியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

அப்பொழுது உமர்(ரலி)அவர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவள் விபச்சாரம் செய்தவளாயிற்றே! இவளுக்காகவா நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துகிறீர்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இந்தப் பெண்மணி தேடிக் கொண்டது எத்தகைய பாவமீட்சியெனில், அதனை மதீனத்து முஸ்லிம்களில் எழுபது பேருக்குப் பங்கீடு செய்தால் அவர்கள் அனைவருக்கும் அது போதுமாகி விடுமே! அல்லாஹ்வின் வழியில் தனது உயிரையே இவள் ஈந்து விட்டாளே! இதனைவிடவும் சிறந்த நிலையொன்றை நீர் கண்டுள்ளீரா என்ன? ” நூல்: முஸ்லிம்

தெளிவுரை

பாவமீட்சி தேடுவது கடமை என்பதையும் வாய்மையான பாவமீட்சியின் பயனையும் சிறப்பையும் இந்த அரிய நிகழ்ச்சி அழகாய் உணர்த்துகிறது.

அன்றைய அறியாமைக் காலத்து மக்களின் வாழ்க்கை மிகவும் சீரழிந்திருந்தது. மிருக நிலையொத்தது என்று கூறுமளவு மிகவும் தரம் தாழ்ந்தி ருந்தது. விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களும் கொலை பாதகங்க ளும் மது-சூதுபோன்ற கொடிய பாவங்களும் மக்களின் பார்வையில் சர்வ சாதாரணமாகிவிட்டிருந்தன!

இந்நிலையில்தான் தீனுல் இஸ்லாமெனும் இறைமார்க்கம் இறையருட் போதனைகளுடன் இத்தரணியில் ஒளிவீசிக் கொண்டு உதித்தது! மக்களின் இதயங்களை ஓரிறை நம்பிக்கையிலும் தூய்மைமிக்க இறை வழிபாட்டிலும் நிலைகொள்ளச் செய்தது! மறுவுலகம் பற்றிய அச்சத்தை அவற்றில் ஆழப்பதித்தது! அதன் பயனாய் அறியாமையின் அடிப்படையிலான அநாச்சாரங்களும் வழிகேடுகளும் அழிந்தன. மனித வாழ்வில் தீமைகள் மாய்ந்து அமைதி தவழந்தது. நன்மைகள் மலர்ந்தன!

இஸ்லாம் வழங்கிய இத்தகைய சீர்திருத்தத்தின் உச்சநிலையும் ஆச்சரியமும் என்னவெனில், பாவத்தில் வீழ்ந்த சிலர் தாமாகவே முன்வந்து தவறை ஒப்புக்கொண்டுத் தம் மீது தண்டனை நிறைவேற்றுமாறு வேண்டினார்கள் என்பதுதான்!

இதோ! விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கர்ப்பம் தரித்த மதீனத்து மாது ஒருத்தி, செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள். அதற்கான தண்டனையைத் தாருங்கள் என்று கேட்கிறாள். என்ன தண்டனை? அதனை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் கேட்கிறாள். திருமணமானவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமென்பதுதான் அது! அந்தத் தண்டனையைத்தான் தேடி வருகிறாள். தண்டனை பெற்றால்தான் இறைவன் அக்கொடிய பாவத்தை மன்னிப்பான் எனும் உறுதியுடன் வருகிறாள். இஸ்லாத்தின் வரலாற்றைத் தவிர வேறெங்கும் இதற்கு நிகரான நிகழ்ச்சியை நாம் காண்பது அரிது!

விபச்சாரம் போன்ற சமூகவிரோதச் செயல்களுக்குக் கடும் தண்டனை கொடுக்கத்தான் வேண்டுமென்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் உறுதியான தீர்ப்பாகும். இந்த அளவுக்குத் தண்டனையும் எச்சரிக்கையும் இல்லையெனில், மக்களிடயே பாவச்செயல்களும் ஒழுக்கச் சீரழிவுகளும் பெருகிவிடும்! பிறகு அவற்றை யாராலும் தடுத்து நிறுத்த முடியாமலாகி இறுதியில் அது மனித குலத்தின் அழிவுக்கும் நாசத்திற்கும் வழிவகுத்து விடும்!

ஒழுக்கச் சிதைவுகளில் இருந்தும் நாசத்திலிருந்தும் மனித குலத்தைக் காப்பதே- இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின் குறிக்கோள் என்பதுடன் – தண்டனையை நிறைவேற்றுவதில் நபியவர்கள் மேற்கொண்ட மென்மையான போக்கும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருப்பது நம் கவனத்திற்கு உரியதாகும்.

ஆம்! அந்தப் பெண் மீது – அவள் கர்ப்பத்துடன் உள்ள நிலையிலேயே தண்டனை நிறைவேற்றாமல் குழந்தை பெற்றெடுக்கும்வரை பிற்படுத்துமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். காரணம், அவள் செய்த தவறுக்காக வயிற்றிலுள்ள சிசுவின் உயிர் பறிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான்!

மேலும் பாருங்கள்! அந்த இடைபட்ட காலத்தில் அவளை ஏசவோ கேவலமாகப் பேசவோ கூடாது என்றும் நல்லமுறையில் அவளிடம் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.

குழந்தை பிறந்த பின் அவள்மீது தண்டனை நிறைவேற்றியபோது அவள் மீது அவளுடைய ஆடைகளை நன்கு சுற்றிக்கட்டுமாறு கட்டளை இட்டதற்குக் காரணமும் அவளது கண்ணியம் காக்கப்படவேண்டும் என்பதே! அவளுடைய உடலுறுப்புகள் வெளிப்படக் கூடாதென்பதே!

மேலும் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்பு அவளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது, ஜனாஸா தொழுகை என்பது என்ன? இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும் சுவனப் பேற்றிற்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதும் அதற்காக மேற்கொள்கிற வழிபாடும்தான் அது! நபி(ஸல்) அவர்களே இமாமாக நின்று கூட்டான முறையில் அதனை நிறைவேற்றினார்கள்!

அப்பொழுது உமர்(ரலி)அவர்கள், இவள் விபச்சாரம் செய்தவளாயிற்றே. இவளுக்காகவா நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துகிறீர்கள்?என்று கேட்ட பொழுது நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில் ஆழ்ந்து சிந்திக்கத்தக்க ஒன்றாகும். இஸ்லாத்தின் நடுநிலைப் பார்வையையும் அதன் வழிகாட்டல் இம்மை – மறுமை எனும் இருவகை நலன்களையும் உள்ளடக்கியதென்பதையும் இஸ்லாமிய ஷரீஅத்தின் நீதி மற்றும் குற்றவியல் சட்டங்களின் அடிப்படையையும் தூரநோக்கையும் அது தெளிவுபடுத்துகிறது.

அந்தப் பெண்மணி தானாகவே வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்குரிய தண்டனையைத் தாங்கிக் கொள்கிறாள். அந்த அளவுக்கு வாய்மையானது – தூய்மையானது அவள் மேற்கொண்ட தௌபா -பாவ மன்னிப்பு! அதனால்தான் அது எழுபது பேருடைய பாவமன்னிப்புக்குச் சமமானது என்று நபி(ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறினார்கள்!

ஆம்! அளிக்கப்பட்ட ஒவ்வொரு கால அவகாசத்தின் பிறகும் அவள் தண்டனையைத் தேடித்தான் வருகிறாள்! எந்தக் கட்டத்திலும் அவள் எவ்விதத் தில்லுமுல்லும் செய்யவில்லை. திரிபுவாதம் பேசவில்லை! அவளது உள்ளத்தில் நிறைந்திருந்தது, உறுதியான (ஈமான்) இறை நம்பிக்கைதான்! அத்துடன் – உலகத் தண்டனை எவ்வளவு கடுமையானதாயினும் மறுமைத் தண்டனைக்கு எதிரில் மிகவும் சாதாரணமானதே! தாங்கிக் கொள்ள முடியாதது – சகித்துக் கொள்ள இயலாதது – மறுமையில் இறைவன் கொடுக்கும் தண்டனைதான் என்கிற ஆழமான இறையச்சமும் ஞானமும்தான் இருந்தது!

அதனால்தான், இப்பாருலகம் முழுவதையும் படைத்தாளும் ஆற்றல்மிக்க அல்லாஹ்வின் பேராற்றலுக்கு முன்னிலையில் தன்னையே – தன்னுயிரையே ஒப்படைத்தாள்., அந்த ஸஹாபிப் பெண்மணி! ரலியல்லாஹு அன்ஹா (அந்தப் பெண்மணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக)

இந்நபிமொழியின் மூலம் தெரிவது என்னவெனில், விபச்சாரம் செய்த ஒருவன், தன்னைத்தானே இழிவுபடுத்தும் நோக்கமின்னிறி -முஸ்லிம்களின் தலைவரிடமோ பொறுப்பாளரிடமோ வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டு தன் மீது தண்டனை நிறைவேற்றுமாறு கோரினால் அது பழிப்புக்கோ இழிவுக்கோ உரிய செயலல்ல!

ஆனால் விபச்சாரம் செய்தவன் எல்லோரிடமும் அதைச் சொல்லிக் காட்டிக் கொண்டு திரிவதும் தனக்குத்தானே இழிவைத் தேடிக்கொள்வதும் கூடாது. இப்படிச் செய்பவனுக்கு மன்னிப்பே கிடையாது.

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘என் சமுதாயத்தார் எல்லோரும் மன்னிப்புக்குரியவர்களே. ஆனால் பகிரங்கப்படுத்துபவர்களைத் தவிர! பகிரங்கப்படுத்துபவர்கள் யார் என்று தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: எவர்கள் பாவம் செய்து பிறகு அல்லாஹ் அவர்களது விஷயத்தில் அதனை மறைத்திருக்கும் நிலையில் காலையில் எழுந்து அதனை அனைவரிடமும் அறிவித்துக் கொண்டு திரிகிறார்களோ அவர்கள்தாம்” (நூல்: புகாரி, முஸ்லிம்)

இன்று சமுதாயத்தில் கேடுகெட்ட மனிதர்கள் சிலரைக் காண்கிறோம். அவர்கள் பாவச்செயல்கள் புரிவது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அதனைப் பெருமையாகச் சொல்லிக்காண்பித்துக் கொண்டு திரிகிறார்களே அதனை விடவும் மோசமான சீரழிவு வேறென்ன இருக்க முடியும்! இதனை வேரடி மண்ணோடு கெல்லி எறிவதற்குக் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம்தானே!

இங்கு இப்படி ஒரு கேள்வி பிறக்கிறது: விபச்சாரம் செய்துவிட்ட ஒரு மனிதன் நீதிபதியிடம் சென்று தெரியப்படுத்தி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை நிறைவேற்றுமாறு கேட்பது சிறந்ததா? அதை மறைப்பது சிறந்ததா?

பதில்: அவன் தூய்மையான முறையில் பாவமீட்சி தேடினால் மனம் நொந்து திருந்தினால் மீண்டும் அந்தப் பாவத்தில் விழுவதில்லையென உறுதியுடன் இருந்தால் அப்படிப்பட்டவன் நீதிபதியிடம் செல்லாமல் இருப்பதே சிறந்தது. தனது குற்றத்தைத் தெரிவிக்காமல் இருப்பதே நல்லது. தனக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள ரகசியமாக அதனை ஆக்கிடவேண்டும். வாய்மையான முறையில் பாவமீட்சி தேடுபவனை அந்தக் கருணைமிக்க இறைவன் மன்னித்து விடுவான்!

ஆனால் மீண்டும் அந்தப் பாவத்தில் விழலாமென அவன் அஞ்சினால் – தனது பாவமீட்சி தூய்மையானதல்ல எனத் தெரிந்தால் இத்தகைய மனிதன் நீதிபதியிடம் சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையைக் கோரிப் பெறுவதுதான் சிறந்தது.

அறிவிப்பாளர் அறிமுகம் – இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்கள்

இம்ரான் பின் ஹுஸைன் அவர்களின் குறிப்புப் பெயர் அபூ நுஜைத் என்பதாகும். சிறப்புமிக்க நபித்தோழர்களில் ஒருவராகிய இவர்கள் ஃபிக்ஹு சட்டம் அறிந்தவர்களும்கூட! இவர்கள் இஸ்லாத்தைத் தழுவியது கைபர் போர் நடைபெற்ற ஆண்டில்! நபி(ஸல்) அவர்களுடன் பல போர்களில் கலந்து கொண்டார்கள். இவர்களிடம் இருந்து 180 நபிமொழிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. பஸராவில் குடியேறிய அன்னார் அங்கேயே ஹிஜ்ரி 53 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்கள்.

கேள்விகள்

1) விபச்சாரம் போன்ற சமூகவிரோதச் செயல்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் கடும் தண்டனை கொடுப்பதன் தத்துவம் என்ன?

2) இஸ்லாமிய சன்மார்க்கமும் அதன் ஷரீஅத் சட்டங்களும் இன்றைய உலகிற்கு எந்த அளவு தேவையாய் உள்ளன என்பதைச் சுருக்கமாக விளக்கவும்.

3) இந்நிகழ்ச்சியில் உமர்(ரலி) அவர்கள் ஏன் அவ்வாறு கேள்வி கேட்டார்கள்? அதற்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதிலின் தத்துவம் என்ன?

4) அறிவிப்பாளர் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *