Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

“அல்லாஹ் உங்கள் மீது புரிந்த அருளை நினைத்துப் பாருங்கள்.நீங்கள் (ஒருவருக்கொருவர்) விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப்பிணைப்பை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்.(அதற்கு முன்பு) நீங்கள் நரக நெருப்பு குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள். அதிலிருந்தும அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.(3:102)

மனித சமூகத்தில் மிக மோசமானவர்களாக நடமாடிய ஒரு சமூகத்தை நேர்வழியின் கொண்டு வந்தது பற்றி அல்குர்ஆன் இங்கே பிரஸ்தாபிக்கிறது.

படுபாதகத்தில் வாழ்ந்த வாழ்விலிருந்து காப்பாற்றியதை நினைவூட்டி நேர்வழியில் தொடர்ந்திருப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது அல்குர்ஆன்.

யார் அந்த சமூகம்?
நாளா பக்கங்களிலும் பாராங்கற்களினால் சூழப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தவர்கள்!
தோற்றத்தில் மனிதர்களாகவும் செயற்பாட்டில் அசிங்கமாகவும்; இயங்கியவர்கள்!
கற்பாரைகளைப் போன்றே உள்ளங்களும் கடுமையாகவே இருந்தன!
வரலாறு அவர்களை ஜாஹிலியா சமூகம் என்று அழைக்கிறது!
அந்த சமூகத்தினர் அல்குர்ஆன் மூலம் அடைந்த மாற்றங்கள் மற்றும் உயர்நிலைகள் வரலாற்றில் எந்த சமூகமும் பெற்றதில்லை.

அந்த சமூக மாற்றத்தில் அல்குர்ஆன் செய்த புரட்சி பசுமையானது. இனிமை சேர்க்கும் அந்த வரலாற்றின் ஒரு சில பக்கங்களை கொஞ்சம் கவனியுங்கள்.

கல்லையும் மண்ணையும் வணங்கி பூஜித்து அறியாமையில் மூழ்கிக் கிடந்து மூடர்களாகவும் முரடர்களாகவும் கல்நெஞ்சம் படைத்தவர்களாகவும் வாழ்ந்த அந்த மக்கள் அல்குர்ஆனை கேட்டு மனமுறுகினார்கள். கண்ணீர்வடித்தார்கள். ஒரே ஆண்டவனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முன் மன்டியிட்டார்கள். மனிதர்களாகவும் புனிதர்களாகவும் மாற்றியமைப்பதில் அல்குர்ஆன் தனியான பங்கை வகிக்கின்றது என்பதை உறுதியாக நம்பி செயற்பட்டார்கள்;. அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் வீட்டையும் சூழலையும் குர்ஆனிய மத்ரஸாவாக மாற்றிக் கொண்டார்கள். இதென்ன சாதாரண மாற்றமா?

அகம்பாவம் ஆணவம் மற்றும் அரக்கத்தனத்துடன் ஆடித்திரிந்தவர்களை அன்பாளர்களாக பண்பாளர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

பலவீனர்களை அடக்கி ஆண்டு உரிமைகளை பறித்தெடுத்து அட்டகாசம் புரிந்த சண்டாளர்களை ஆண்டவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு முன் சரணடையச் செய்து உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் உத்தமர்களாக மாற்றியது அல்குர்ஆன்.

சுகபோக வாழ்க்கையில் சுழன்று உலக மோகத்தில் மூழ்கி குறிக்கோளின்றி சென்றவர்களை இப்பூமியில் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டும் இலட்சிய புருஷர்களாக தியாக செம்மல்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

ஷைத்தானின் சுலோகங்களில் கட்டுண்டு காட்டுத் தர்பார் புரிந்தவர்களை காடேரிகளாக வாழ்ந்தவர்களை நாடாளும் மன்னர்களாக நம்பிக்கைவான்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

சடவாத சிந்தனைக்குள் சிக்குண்டு நாஸ்தீக பட்டறைக்குள் பதுங்கியிருந்தவர்களை ஒரே ஒரு கடவுளாகிய அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்தோதும் பகுத்தறிவாளர்களாக அழைப்பாளர்களாக நடமாடச் செய்தது அல்குர்ஆன்.

உயிர் உடலை விட்டு பிரிந்து மண்ணறைக்குள் மறைந்ததன் பின்னால் எல்லாம் முடிந்துவிட்டது என்ற மமதையில் ஓடித் திரிந்தவர்களை மறுமை நாளின் சிந்தனையுடையவர்களாக மனித விவகாரங்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக வாழச் செய்தது அல்குர்ஆன்.

குலபேதம், நிறபேதம், மொழிபேதம், பிரதேச வாதம், பேசி இனவெறிப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிந்து கிடந்தவர்களை சகோதர நேசர்களாக சமாதானத்தின் தூதுவர்களாக காட்சியளிக்கச் செய்தது அல்குர்ஆன்.

உயர்வு தாழ்வு பேசி உயிர்களை மாய்த்துக் கொண்டு பல காலம் பலி பீடத்தில் பயணித்தவர்களை ‘தக்வா எனும் இறையச்சமுடையவர்களே அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையில் உறுதியுள்ளவர்களாக பாசபிணைப்புள்ளவர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

மதுவிலும் மங்கையர்களிலும் மயங்கி பாவங்களில் குதூகலித்து அநாகரீகமாக ஆடிக் கொண்டிருந்தவர்களை ஒழுக்கச் சீPலர்களாக நாகரீகத்தின் காவலர்களாக மாற்றியது அல்குர்ஆன்.

பொதுவுடமை பேசி பொதுமக்களின் சொத்துக்களை சூரையாடி நிலமானியம் பேசி நிலங்களை கொள்ளையடித்து அரசியல் பேசி அராஜகம் பண்ணி அரசாண்டவர்களை நீதியாளர்களாக உலகம் போற்றும் நீதிமான்களாக உயர்த்திக் காட்டியது அல்குர்ஆன்.

பெண் குழந்தைகளை இழிவாகக் கருதி உயிருடன் புதைத்து பெண்களின் உரிமைகளைஉரித்தெடுத்து உல்லாசபுரி வாழ்க்கையில் திளைத்திருந்தவர்களை நற்பண்புகளுக்கு நற்சய்தி சொல்லக் கூடியவர்களாக மாற்றியது அல் குர்ஆன்.

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அர்த்தமுள்ள சம அந்தஸ்துகளை வழங்கி
உரிமைகளை, கடமைகளை பகிர்ந்து கொடுத்து
தனிமனித குடும்ப சமூக வாழ்க்கையை பண்படுத்தி ஒழுக்க விழுமியங்களுடன் வாழச் செய்தது அல் குர்ஆன்.

நரகத்தின் படுகுழியில் பக்கத்தில் இருந்தவர்களை சுவனத்துப் பூங்காவில் நிழல் பெறும் சமூகமாக மாற்றிக் காட்டியது அல் குர்ஆன்

இருண்ட உள்ளங்கள் அல்லாஹ்வின் ஒளி பொருந்திய வசனங்களை கேட்டு சிரம்பனியச்செய்தது அல் குர்ஆன்.

உலக மக்கள் தங்களுடைய விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் இவர்களை தேடி தூது அனுப்பக் கூடியதாக எடுத்துக் காட்டியது அல்குர்ஆன்.

ஒரு காலத்தில் உலக மக்கள் இவர்களை கண்டு அஞ்சினார்கள். ஒதுங்கி நின்றார்கள். குறுகிய காலத்தில் அவர்களை கண்டு அரவணைக்கவும் ஆதரவு தேடவும் புறப்பட்டார்கள்.

நாகரீகத்தையும் அறிவியலையும் ஒழுக்கவிழுமியங்களையும் இவர்களிடமிருந்தே உலகம் கற்றுக் கொண்டது. இந்த மாபெரும் அதிசயத்தை ஆற்றிய பெருமை மாமறை அல்குர்ஆனுக்கே உண்டு. மனித சமூகத்தில் தனிப் பெரும் செல்வாக்கை செலுத்தக் கூடியதாக முத்திரை பதித்து அல்குர்ஆன்.

நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்களில் குர்ஆனிய போதனைகளின் அடிப்படையில் தோற்றுவித்த சமுதாயம் இது. இவர்களை “சஹாபாக்கள்” என்று சரித்திரம் இன்று சான்று பகிர்கின்றது.

“அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்தி கொண்டார்கள்”.(அல்குர்ஆன் 98:8)

அதே அல்குர்ஆன் இன்றும் எங்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆனாலும் எந்த மாறுதல்களும் எங்களுக்குள் உருவாக வில்லை என்றால் அது குர்ஆனின் கோளாறு அல்ல. எங்களது கோளாறு.

அல்குர்ஆனை முறையாக ஓதுவதில்லை, படிப்பதில்லை, விளங்குவதில்லை, பின் பற்றுவதில்லை என்றால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?

2 comments

  1. அகம்பாவம் ஆணவம் மற்றும் அரக்கத்தனத்துடன் ஆடித்திரிந்தவர்களை அன்பாளர்களாக பண்பாளர்களாக உருவாக்கியது .அல்குர்ஆன்

  2. Really, very good benefitable article

    May allah bless you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *