Featured Posts
Home » வரலாறு » பிற வரலாறு » புகழ்மிக்க அல்குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பாளர்: முஹம்மத் மெர்மதூக் பிக்தால்

புகழ்மிக்க அல்குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பாளர்: முஹம்மத் மெர்மதூக் பிக்தால்

எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A.

கொள்கைகளைப் பேசுவதை விட அவைகளை நடைமுறைப்படுத்துவதே மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. அத்தகைய இஸ்லாமிய நடைமுறையின் ஆகர்ஷிப்பால் இஸ்லாத்தை தன் இதயக் கொள்கையாக ஏற்று, மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை முஸ்லிம் உலகுக்குத் தந்தவர்தான் முஹம்மது மர்தூக் பிக்தால். அவரின் இஸ்லாமியப் பணியும் என்றும் மறக்க முடியாதவை. அன்னாரின் பணிகளின் சிலவற்றை இங்கு அடையாளப்படுத்துவதினூடாக அவரைப் பற்றிய அறிமுகத்தை வழங்க முனைகிறேன்.

1875.04.07 இலண்டனில் மதகுரு Charles Grayson Pickthel க்கும் Mary Almiral D.H. o` Brainக்கும் ஒற்றை மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப கால ஆறுவருடத்தையும் கிராமத்திலுள்ள கிறிஸ்தவப் பாடசாலையில் கழித்தார். அவரின் தந்தை இறந்த பின் பிக்தாலின் சிறிய குடும்பம் இலண்டனுக்குத் திரும்பி வந்து கிங்ஸ்டன் எனும் இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் வாழ ஆரம்பித்தனர். இதன் போது, அங்கே உள்ள ஒரு பாடசாலையில் கல்வியைக் கற்க ஆரம்பித்து, பின்னர் இருவருடத்தை Harrow Public School இல் கழித்தார். Geography Philology ஆகிய பாடங்களை விரும்பிக் கற்றார். இக்காலத்திலேயே தனது எழுத்தாற்றலையும் வளர்த்துக் கொண்டார்.

Harrowயில் தனது கல்வியை முடித்துக் கொண்டு, பிரான்ஸ் மொழியைக் கற்பதற்காக சில வருடங்களை சுவிட்சர்லாந்தில் கழித்தார். அங்கிருந்து இத்தாலிக்குச் சென்று, Florence ல் இத்தாலிய மொழியைக் கற்றுத் தேர்ந்தார். மீண்டும் இலண்டன் திரும்பி ஜெர்மன், இஸ்பானிய மொழிகளில் தனது கவனத்தைத் திருப்பினார்.

1913ல் பிக்தால் அவர்கள் துருக்கிக்குச் சென்று, அங்கிருந்து லெபனான் சென்றார்கள். அங்குதான் அவரின் வாழ்வில் வசந்தம் தரும் ஈமானிய ஒளியும் வீச ஆரம்பித்தது. ஒருநாள் லெபனானில் உயர்ந்த மாடிக்கட்டடம் ஒன்றில் நின்றவாறு சந்தடிமிக்க வீதியை அவதானித்துக் கொண்டிருந்தார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற லெபனானில் பிரதான வீதியில் ஒரு யூதக் கிழவன் கட்டிளம் பருவமுடைய இளைஞன் ஒருனைத் தனது கைத்தடியால் அடிக்கின்ற காட்சி அவரது மனதை நெகிழவைத்தது. உடனே மேலிருந்து படிகளிலே மிக வேகமாக ஓடோடி இறங்கிவந்து, அந்த இளைஞனிடம் ஏன் ஒரு யூதக் கிழவனிடம் இவ்வாறு அடிவாங்குகின்றாய், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரு நாட்டில், திடகாத்திரமான நீ ஏன் இந்த இழிநிலைக்கு ஆளானாய்? என்று ஆச்சரியத்தோடு விசாரித்தார். அதற்கு அந்த இளைஞன், “நான் இவரிடம் கடன் வாங்கியுள்ளேன். கடன் தந்தவருக்கு என்மீது உரிமை உண்டு. என்னால் இப்போது அந்தக் கடனை அடைக்க முடியவில்லை. எமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கடனை உரிய முறையில் நிறைவேற்றப் பணித்துள்ளார்கள். என்னிடம் அவர் கடினமாக நடந்து கொள்ள அவருக்கு உரிமை உண்டு. அதனால்தான் நான் அடியை வாங்கிக்கொள்கிறேன்” என்றான்.

1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, மறைந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கு இவ்வளவு வலிமையா? இத்தனை மகத்துவமா? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் அவர் மனதில் எழுந்தன. நபி (ஸல்) அவர்களின் வாழ்வை மறுகனமே படிக்கத் தொடங்கினார். மனம் இலேசாகியது; இருள் அகன்றது, வாழ்வில் புத்தொளியும் புதுத்தெம்பும் ஏற்பட்டது. 1914ம் ஆண்டு மனம் மாறினார், இஸ்லாத்தை ஏற்றார்.

இங்கிலாந்து திரும்பியவுடன், தான் அவதானித்த இஸ்லாமிய மக்களின், இஸ்லாத்திற்குப் புறம்பான அவலங்களை New Age Magazine என்ற சஞ்சிகையில் விலாவாரியாக எழுதினார். மேலும், இஸ்தன்பூல் நகரில் தான் பெற்ற அனுபவத்தை The Worthy Turk in War time என்ற தலைப்பில் கீழ் எழுதி 1914ல் வெளியிட்டார். இவ்வாக்கங்கள் அனைத்திலும் துருக்கி மக்களின் அவலநிலையை பிரித்தானிய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் படம்பிடித்துக் காட்டினார்.

முதலாம் உலக மகாயுத்தம் ஓய்ந்த பின்னர் மீண்டும் துருக்கியில் உஸ்மானிய கிலாபத் ஏற்பட வேண்டும் என்று கனவு கண்டார். 1915க்கும் 1917க்குமிடையில் தான் எழுதிய (The House of War) யுத்த வீடு என்ற கதையில் துருக்கியில் இஸ்லாமிய ஆட்சியின் நிழலை ஆசித்தார். இதுபோல் அவர் எழுதிய கதைகளிலெல்லாம் உஸ்மானிய கிலாபத்தையே முன்மொழிந்தார்.

1919ல் சிறிது நோய்வாய்ப்பட்டார். இதன் போது அவர் பள்ளியின் பிரதம இமாமாக இருந்து, ஜும்ஆ, பெருநாள் தொழுகைகள் நடத்தினார். நோய்வாய்ப்பட்ட நிலையிலும் எழுதிப் பழகிய கை சும்மா இருக்கவில்லை. The Islamic Review என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை ஆரம்பித்தார். இலண்டனில் உள்ள பள்ளியில் இஸ்லாத்தின் யதார்த்த நிலை பற்றி தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

1920ல் உமர் ஸுப்ஹானி அவர்கள் பிக்தாலை Bombay Chronicles என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக அழைக்க அதனை ஏற்று, 1924 வரை பத்திரிகை ஆசிரியராகக் கடமை புரிந்தார். ஆரம்பத்திலிருந்தே ஒரு பதிப்பாசிரியராக உயர வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. ஏனெனில், சமூகத்தின் அவலங்களைக் கோடிட்டுக் காட்டி, சமூகப் பிளவுகளுக்கு இஸ்லாத்தின் தீர்வை முன்வைக்க முனைந்தார். அதேபோன்று இஸ்லாத்தின் ஏக தலைமைத்துவமான கிலாபத் வீழ்ச்சியையும் அதனால் உலகிற்கு ஏற்பட்ட நஷ்டங்களையும் சிலாகிக்க எண்ணம் கொண்டார். இதனால்தான் அவர் தனது ஆசிரியர் தலையங்களில் துருக்கியைப் பற்றியும் அதன் மீள் எழுச்சியைப் பற்றியும் அதிகமாகத் தலையங்கங்கள் தீட்டினார். இப்பத்திரிகையினூடாக தனது சிறுகதை ஆற்றலையும் The Student The Tower, The colust ஆகிய இரு நூல்களினூடாக வெளிப்படுத்தினார்.

1925ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அன்று ஹைதராபாத்தில் நிதி அமைச்சராக இருந்த Sir Akbar haydai யின் அழைப்பை ஏற்று, Chadarghatல் உயர் பாடசாலையின் பணிப்பாளர் பதவியை ஏற்றுக் கொண்டார். இக்காலகட்டத்தில் Islamic Culture என்ற காலாண்டு சஞ்சிகையை வெளியிட்டு, இந்தியாவில் சிறந்த சஞ்சிகையாக அதனை மாற்றினார். இவர் பன்மொழிப்புலமையினூடாக, இச்சஞ்சிகையில் பல மொழி நூற்களின் அறிமுகத்தையும் பல அறிஞர்களின் பரிச்சயத்தையும் ஏற்படுத்தினார். இதனால், உலகின் 70க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இச்சஞ்சிகையை அப்போது சந்தா செலுத்திப் பெற்றுக் கொண்டன. (இன்றுவரை அந்த சஞ்சிகை வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.)

1927ல் சென்னையில் பிரபல்யமிக்க தொழில் அதிபர் ஜமால் முஹம்மதின் அழைப்பை ஏற்று, இஸ்லாத்தின் சிறப்பைப் பற்றியும், இஸ்லாமிய நகரத்தின் எழுச்சி, வீழ்ச்சி பற்றியும் விரிவுரைகள் ஆற்றினார். இந்த உரைகளினால் ஆகர்ஷிக்கப்பட்ட “The Committee of Madras Lectures on Islam”என்ற அமைப்பு, அவரின் உரைகளை நூலாக்கி “The Cultural side of Islam” என்ற மகுடத்தில் வெளியிட்டது. இது உலகில் பல திருப்பங்களை ஏற்படுத்தி ஆயிரமாயிரம் உள்ளங்களை இஸ்லாத்தின் பக்கம் அரவணைத்துக் கொண்டது.

1928ல் அல்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆரம்பத்தில் மொழி பெயர்த்து முடித்ததும் அதனைச் சரிபார்ப்பதற்காக எகிப்துக்கு எடுத்துச் சென்று மூன்று மாதங்கள் தங்கியிருந்து, எகிப்திய மருத்துவக் கல்லூரி அதிகாரியான Muhammed Ahamed Al- Ghamravi அவர்களிடம் சரிபார்த்துக் கொண்டார். இதன் பின்னர் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் முன்னால் பணிப்பாளர் Shaikh Musthafa Al-Maraghi அவர்களின் சிறந்த அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்ட பின்னர் நாடு திரும்பி 1930ல் இலண்டனிலும், நிவ்யோர்க்கிலும் The Glorious Quran என்ற தலைப்பில் வெளியிட்டார். அதன் பின் அரபு ஆங்கில இரு மொழிகளிலுள்ள பிரதிகளை இரு பாகங்களாக ஹைதராபாத் அரசாங்க மத்திய அச்சகம், தனது செலவில் வெளியிட்டது.

George Sale (1734),T.M. Rodwell (1866), prof. palmer (18800, Arther J.Arbery, prof.Hemry போன்ற முஸ்லிம் அல்லாத ஆங்கில மொழிபெயர்ப்பார்கள் மூலமும், Moulana muhammed Ali jawahar, hafiz Ghulam Srawar, abdullah yusuf ali போன்ற முஸ்லிம் மொழி பெயர்ப்பாளர்கள் மூலமும் அல்குர்ஆன் ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில குறைகள் காணப்படுகின்றன என்ற விமர்சனம் உண்டு.
எனினும், பிக்தால் அவர்களின் மொழிபெயர்ப்பே புகழ்மிக்கதும் வரவேற்பைப் பெற்றதுமாக இன்றுவரை திகழ்கிறது. அமைதியாக இருந்து அறிவுப் பணியாற்றி ஆயிரமாயிரம் உள்ளங்களை இருளிலிருந்து இஸ்லாமிய வெளிச்சத்துக்குள் கொண்டுவந்துவிட்ட அந்த அறிவுக்களஞ்சியம் 1936 மே 16ல் அணைந்துவிட்டது. (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) இறுதியாக இலண்டனிலுள்ள The Royal Central Asian society yy;> The Plight of The Muslim in The Modern World என்ற மகுடத்தில் உரையாற்றிருந்தார். இதுவே, அவரின் இறுதி உரை. அன்னாருக்கு, அவரின் இஸ்லாமியப் பணிக்காக ஒவ்வொரு முஸ்லிமும் நன்றிக் கடன்பட்டுள்ளனர். அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!

(இக்கட்டுரை, The Journal Vol.20 No. 7 Rajab 1413 ல் வெளியான “Muhammed Marmaduck Pickthal an Eminent Translator of The Quran “என்ற தலைப்பில் வெளிவந்த Shahabuddin Ansari யின் ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி 2001ம் ஆண்டு உண்மை உதயம் மாத இதழுக்காக என்னால் எழுதப்பட்டது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *