Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » புரிதல்

புரிதல்

feather_icon
எழுதியவர்: ஜைனப் காதர் சித்தீகிய்யா

புரிதல் ஓர் அற்புதமான அறிவு. இவ்வறிவின்மையே நம் பிரச்சனையின் ஆணிவேர்.பிறந்த குழந்தையின் அழுகையைப் புரியாத அன்னை இருப்பது அரிது. ஆம், அக்குழந்தை அழுவது பசிக்காகவா? இல்லை வயிற்றுவலிக் காகவா? என்பதை அன்னையினால் மாத்திரமே புரிய முடியும். ஆனால் இன்று பல குடும்பங்களில் அதனை அன்னையின் அன்னையே புரிந்து கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில் ஆயாக்கள்தான் புரிகிறார்கள். இன்றைய அவசர உலகில் அன்னையின் அரவணைப்பைப் பெறாத குழந்தையின் நிலை இது.

தன்னையே புரிந்து கொள்ள முடியாத வயதில், இனக்கவர்ச்சியை தவிர்க்க முடியாத சூழலில், காதல் வயப்பட்டுப் பிடிவாதமாக ஒருத்தரை ஒருத்தர் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம் என நம்பி திருமணம் என்ற பந்தத்தை அவசரஅவசரமாக ஏற்படுத்திக் கொள்ளும் அறியாமையில் இன்றைய இளைய சமுதாயத்தில் பலர் மூழ்கிவிட்டனர்.

புரிந்துதான் திருமணம் செய்தோம். ஆனால் திருமணத்திற்கு பின் எங்களுக்குள் புரியாமை புகுந்துவிட்டது. இனி எங்களால் இணைந்து வாழ முடியாது. பிரிந்து வாழ்வதே எங்கள் எதிர் காலத்திற்கு நல்லது எனப் பிரிந்துவிடுகிறார்கள். இது இவர்களின் அறியாமையின் அடுத்த கட்டம். மணம் முடிந்த ஒரு வருடத்திற்குள் மன முறிவு. இது இன்றைய சமூகத்தின் சாபக்கேடு.

பலவருடம் இணைந்து வாழும் தம்பதிகளாவது புரிந்து வாழ்கிறார்களா? என ஆராய்ந்தால் அவர்களின் நிலைமை இதைவிட கொடுமை.

தன் உணர்வுகளை புரியாத, தன் தேவைகளை உணராத, தன்னையே அறியாத கணவனோடு மனைவியும், மனைவியோடு கணவனும் வாழ்வது தான் அதிகம்.

5 வருடம், 10 வருடம், 15 வருடம் என ஒரே வீட்டில், ஒரே அறையில் ஒன்றாக தூங்கும் இவர் கள், ஒருவரின் தேவையை ஒருவர் அறியாமல் இருக்கிறார்கள் என்றால் இது எத்தனை பெரிய அறியாமை! எவ்வளவு போலித்தனமான வாழ்க்கை! கணவனின் பார்வையை புரியாத மனைவியும், மனைவியின் வார்த்தையை விளங்காத கணவனும் சிறந்த தம்பதிகளா?

நாம் நமது அழகிய முன்மாதிரியின் வாழ்விலி ருந்து பாடம் படிப்போமா!

ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்லும் செய்தி இதோ…

ஒரு பெருநாள் அன்று தெருவில் சிறுவர்கள், பெரியவர்களின் ஆரவாரம் கேட்டது நபிகளாருக்கு. அபிசீனிய நீக்ரோக்கள் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அவர்களைச் சூழ்ந் திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா! இங்கு வந்து பார் என்றார்கள். எனது கன்னங்களை அவர்களது தோளின் மீது வைத்துக்கொண்டு, நான் அவர்களது புஜத்துக்கும் தலைக்கும் இடையிலிருந்து பார்த்தேன்.

நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா, உனக்குத் திருப்தியா? ஆயிஷா உனக்குத் திருப்தியா? என்று கேட்க ஆரம்பித்தார்கள். என் மீது அவர்களுக்கு இருந்த நேசத்தை அறிந்துகொள்வதற்காக நான் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். (ஜாமிவுத் திர்மிதீ – 4055)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! எப்போது நீ என்னைப் பற்றி திருப்தியுடன் இருக்கிறாய், எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன் என்றார்கள். எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னைப் பற்றி நீ திருப்தியுடன் இருக்கும்போது பேசினால், முஹம்மதுடைய இறைவன் மீது சத்தியமாக! என்று சொல்வாய் என் மீது கோபமாக இருந்தால், “இப்ராஹீம் உடைய இறைவன் மீது சத்தியமாக! என்று சொல்வாய். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் மீது சத்தியமாக! ஆம் உண்மைதான், அல்லாஹ்வின் தூதரே! இருப்பினும், நான் உங்கள் பெயரைத்தான் விடுவேன்” என்று கூறினார்கள். ( புகாரி – 5228)

எவ்வளவு அழகான புரிதல் பாருங்கள். நம் நிலை என்ன?

பணம் வேண்டும், பொருள் வேண்டும் என்றால் எந்தவொரு தயக்கமும் காட்டாமல், கணவனின் பாக்கெட் பற்றிக் கூட யோசிக்காமல் பிடிவாதமாக கேட்கும் பெண்கள், தாம்பத்திய வாழ்வில் மட்டும், தனது தேவை என்ன? தன் எதிர்பார்ப்பு என்ன? தனக்கு என்ன கிடைக்கவில்லை என தன் துணையிடம் பேசுவதற்கு தயங்குகிறார்கள். தன் தேவையை உணராத துணைவனை மன நிறைவோடு ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் தாம்பத்திய வாழ்க்கையே வெறுத்தது போன்றும், தனக்கு முதுமை வந்துவிட்டது போலவும் போலியான ஒரு போர்வைக்குள் ஒளிந்துகொள்கிறார்கள் பலர். தவறிவிடுகிறார்கள் சிலர்.

இவ்வாறே ஆண்களில் பலர் வெளியுலக பெண்களின் நடை, உடை, பாவனைகளில் மயங்கி இப்படியொரு அழகு தேவதை தனக்கு கிடைக்க வில்லையே என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். எப்பொழுதும் ஒரே மாதிரி உடையில் இருக்கும்மனைவி இவர்களின் கண்களுக்கு தேவதையாகத் தெரியவில்லை. தன் மனைவியை தன்னிடம் மட்டும் தேவதையாக்கும் முயற்சியில் இவரும் ஈடுபடுவதில்லை. அவளுக்கும் புரிய வைப்ப தில்லை. அவளும் புரிந்துகொள்வதும் இல்லை. காலத்தின் கட்டாயம், குடும்பத்தின் பல பொறுப்புகள் இருவரையும் சூழ்ந்துகொள்ள ஒரே வீட்டில் இரு துருவங்கள். வாழ்க்கைப் பயணம் மட்டும் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

பெற்றோர்களில் பலர் புகுந்த வீட்டில் பெண்கள் சௌபாக்கியங்களுடன் வாழ வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கேற்ற வரனாய் பார்க்கிறார்கள். துபாய் மாப்பிள்ளை, மாத வருமானம் ஐம்பதாயிரத்தையும் தாண்டி. இதுபோதுமே, என்னோட பொண்ணு சந்தோஷமாக இருப்பாள் என எண்ணி மகிழ்கிறார்கள். உண்மைதான், அப் பெண்ண்ணுக்கு சகலமும் கிடைக்கும்.

ஆனால் கணவன் மட்டும் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டும்தான் உடன் இருப்பான். திருமணமான புதிதில் அப்பெண்ணின் நிலை வேறு. ஒரு வருடம் கழித்து அவன் வரும்போது அவளின் நிலை வேறு. ஆம், மனம் வெந்து, உடல் பருத்து காணப்படுவாள். உணவும், தூக்கமும், சீரியலும்தான் அவளுடன் ஒருவருடமாக துணையிருந்தது. காலம் உருண்டோடும் திருமணமாகி பத்து, பதினைந்து வருடங்கள் ஆகியிருக்கும். ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் வளர்ந்து நிற்பார்கள். ஆனால் இவர்கள் வாழ்ந்ததோ ஒரு வருடமோ, ஒன்னரை வருடமோதான். இருவரின் உடலும், மனமும் தளர்ந்த நிலையில் ஒன்றாக வாழும் சந்தர்ப்பம் அமையும். ஒருவருக்கொருவர் சேவை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்; வாழ்வில் சலிப்புத்தட்டும்; மனஅழுத்தம் ஒன்றே வாழ்வாக மாறிவிடும். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலரின் நிலை இதுதான்.

சிலருக்கோ, ஊரறிய இவள் இன்னாரின் மனைவி, இவன் இன்னாரின் கணவன்; ஆனால் நிஜத்தில், மறைவான வாழ்வில் வேறொரு நிலை. கள்ளத்தொடர்பு; கருவையே சந்தேகிக்க வைக்கும் மகா கொடுமை. இத்தனைக்கும் ஆணி வேர் ஒருவரின் தேவையை இன்னொருவர் புரிந்துகொள்ளாமையே.

தன் கணவன் தன் மேல் அன்பு வைத்திருக்கிறாரா? தன்னை அவருக்கு பிடிக்குமா? தன்னால் அவருக்கு நிம்மதி கிடைத்திருக்கிறதா? என்ற கேள்விகள் எழாத மனைவியர்கள் இல்லை. இதே கேள்விகள் கணவன்மார்களிடமும் காணத்தான் செய்கின்றது. கேள்விக்கான பதிலை அறிந்து கொள்வதற்கான வழிகள் தெரியாமல், தடுமாறி நிற்கின்றனர் தம்பதிகள். இருவரும் தங்களுக்காக நேரம் ஒதுக்கிகொண்டால் மாத்திரமே இதற்கான வழி பிறக்கும்; கணவன் வரும்போது மனைவி அடுப்படியில் இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டுக்கு வரும் கணவன் வெளிப்பிரச்சனைகளை வெளியிலேயே விட்டுவிட்டு வரவேண்டும். அது இயலவில்லையெனில் மனைவியிடம் அத் தருணமே பகிர்ந்துவிட்டு, அதிலிருந்து வெளியே வர வேண்டும். இருவரும் தங்களிருவருக்காகவும் ஒதுக்கிக்கொண்ட நேரத்தில் செல்ஃபோனை தொடக்கூடாது. இதுபோன்ற சில முயற்சிகளை தங்கள் வாழ்வின் வளத்திற்காக மேற்கொண்டாலே போதும், ஒருவர், ஒருவரைப் பற்றி புரிந்து கொள்வதற்கான வழி கிடைத்துவிடும். வாழ்க்கைப் பயணமும் இறையருளால் இனிமையாகத் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

நன்றி: அல்-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *