Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் நடைப் பாதைகள்

ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் நடைப் பாதைகள்

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)-
மக்கள் அன்றாடம் பாதையில், கடை வீதியில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு ஒன்று கூடுகிறார்கள். பலரும் பல நோக்கங்களுக்காக வருவார்கள். போவார்கள். சிலர் அடுத்தவர்களுடைய வேலைகளில் தலையிட்டு வீண் வம்பை வளர்ப்பார்கள். மற்றும் சிலர் வீண் வேடிக்கைகளில் ஈடுபட்டு வெட்டிப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பார்கள்.

இன்னும் சிலர் நாட்டின் தலை விதியை மாற்றி நாளைக்கே புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவது போல் தேசிய பிரச்சினைகளையும் நாடாளுமன்ற விவகாரங்களையும் நடுவீதியில் நின்று கொண்டு வீணே முழங்குவார்கள். வாலிபர்கள் பாதையில் குறுக்காக நின்று கொண்டு போக்குவரத்துக்களை தடைப்பண்ணுவதிலும் பெண்பிள்ளைகள், யுவதிகளைக் கிண்டல் பண்ணுவதிலும், இம்சைப்படுத்துவதிலும், முதியோர்களைப் பரிகாசிப்பதிலும் ஈடுபடுவார்கள்.

நடைபாதை மனிதனது ஒழுக்கத்தையும், உயர்வையும், நேர்மையையும் அத்தோடு அவன் பின்பற்றும் மார்க்கத்தின் சமூகத்தின் நம்பகத் தன்மையையும் உரசிப் பார்க்கும் இடம் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள மறந்து விட்டார்கள். அதனால்தான் விபரீதங்களை விலைக்கு வாங்க முழு ஈடுபாடு கொள்கிறார்கள்?!.

பணிவு, கண்ணியம், முதியோர் சிறுவோர் பலஹீனமானோர் மற்றும் தேவையுடையோருக்கு உதவி புரியும் மனப்பான்மை, நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் சுபாவம் வீண் காரியங்களைக் அனாச்சாரங்களை கண்டு ஒதுங்கிச் செல்லும் பக்குவம் ஆகியன பாதையில் நடந்து செல்பவரிடம் குடிகொள்ள வேண்டிய உயரியப் பண்புகளாகும். இவைதான் நல்லவர்களையும் தீயவர்களையும் பிரித்துக் காட்டும் அளவு கோளாகும். இன்னுமொரு வார்த்தையில் கூறுவதானால் ‘இறை அடியானிடம்’ இருக்க வேண்டிய உயரிய பண்புகளாகும்.

அத்துடன் பாதையில் நடக்கும் போது அதன் வீதி ஒழுங்குகளை கவனித்து பயணிக்க வேண்டும். மக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கக் கூடியதாக பயணிக்கக் கூடாது. அது போல் வீதி சமிஞ்சை விளக்கத்தை பார்த்தும் பாதை சாரிகள் கடவை (மஞ்சல் கடவை) ஊடாக பயணிக்க வேண்டும். தேவையற்ற முறையிலும் ஒழுங்கி வீதிகளுக்கு அப்பாலும் நடக்கும் போதும் வாகனங்களை செலுத்தும் போது மக்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகுவது போல் சில சமயம் திட்டி சபிக்கவும் செய்வார்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம் என்ற அடையாளத்தை கண்டதும் வேண்டுமென்று திட்டவும் முனைவார்கள். இத்தகைய தவறுகள் வேறுபல பிரச்சனைகளுக்கும் காரணமாகிவிடும் வீண் வம்புகளுக்கும் வழியாக அமையும். எனவே பாதையின் ஒழுங்கு விதிகளை சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள் அறிவிலிகள் (மடையர்கள்) அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் ஸலாம் கூறி (விலகி) விடுவார்கள். அவர்கள் வீணான காரியத்தின் பக்கம் சென்றுவிட்டால் அதனைத் தவிர்த்து கண்ணியமான முறையில் சென்றுவிடுவார்கள். (25:63)

இன்று வீதியோரங்களில் சூதாட்டம், ஜெக்போர்ட், கெஸினோ, ரேஸ் புக்கி, மதுபானசாலைகள், பாபுல் பீடா, பான்பராக் தட்டுக்கள், விபச்சார விடுதிகள், போன்றன புதுப் பொலிவுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பல மதங்கள் இருக்கக் கூடிய இந்நாட்டில் இவ்வாறான பாவங்கள், அசிங்கங்கள், பரவிக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயங்களாகும். இவைகளினால் வளரும் இளம் சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது. தனிமனித, குடும்ப, சமூக வாழ்வு சிதறடிக்கப்படுகிறது.

அவற்றுக்கெதிராக பிரச்சாரம் செய்ய வேண்டிய கடமைப்பாடு அவர்களுக்கு உண்டு. முஸ்லிம்களும் அவர்கள் வாழக்கூடிய வீதிகளில் அல்லது பகுதிகளில் இவ்வாறான காரியங்கள் பரவாது சமூகத்தை விழிப்படையச் செய்யவேண்டும்.

‘நீங்கள் வீதிகளில் அமர்வதை எச்சரிக்கிறேன்’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அங்கு அமர்ந்து உரையாடுவதற்கு எங்கள் மஜ்லிஸ் (சபை) இருக்கிறதே என்று சஹாபாக்கள் கேட்டார்கள். அப்படியாயின் நீங்கள் உங்கள் சபைக்கு வரும் பொது பாதைக்கு அதற்குரிய உரிமையைக் கொடுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.
பாதைக்குக் கொடுக்கக்ககூடிய உரிமை என்ன? அல்லாஹ்வின் தூதரே! எனறு சஹாபாக்கள் கேட்டார்கள். பார்வையைத் தாழ்த்திக் கொள்ளல், தீங்கு தருபவற்றை அகற்றுதல், ஸலாத்திற்கு பதிலளித்தல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் ஆகிய காரியங்களைச் செய்வதே பாதைக்குக் கொடுக்கக்ககூடிய உரிமைகள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி), நூல்: புகாரி

பாதையில் முஸ்லிம்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் இப்பணியை செய்தாக வேண்டும். முடியாது விட்டால் உடனே அங்கிருந்து அகன்றுவிட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் இந்த நபிமொழியில் கூறப்பட்டுள்ள உரிமைகளைச் சரிவர புரிந்து கொண்டு தன் கடமையைச் செய்ய முன் வந்திருந்தால் எல்லா ஃபித்னாவுக்கும் புகழிடமாக உறுமாறிக் கொண்டிருக்கும் வீதியோரங்கள் நல்ல காரியங்களின் முகவர் நிலையங்களாக தோற்றம் பெற்றிருக்கும். இனிமேலாவது இக்காரியங்களை உருப்படியாகச் செய்ய முன்வருவார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *