Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » இலங்கை முஸ்லிம்களும் தாயத்திற்கான சேவைகளும்

இலங்கை முஸ்லிம்களும் தாயத்திற்கான சேவைகளும்

எஸ். ஹுஸ்னி ஸலபி (B.A. (Cey)
(விரிவுரையாளர்: தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்)

இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். பல்வேறு இனக் குழுமங்களும், மதக் கோட்பாடுகளும் வாழும் பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு இனமும் வித்தியாசப்பட்ட விகிதாசாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

பெரும்பான்மையினமாக பௌத்தர்கள் வாழும் அதேவேளை, இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இங்கு ஜீவிக்கின்றனர். மத, கலாசார, பண்பாட்டு வித்தியாசங்கள் பாரியளவில் இருந்தாலும் இலங்கையர்கள் என்ற தாயக உணர்வு அனைவரின் மனதிலும் இளையோடியுள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீகம் மிகத் தொண்மையானது. அதேபோல் ஆதிதொட்டு இலங்கையில் முஸ்லிம்களின் கதாபாத்திரம் அப்பழுக்கற்றதாகவே இருந்து வருகிறது. நாட்டு நலனிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் எந்தப் பங்கமும் விளைவிக்கும் வகையில் அவர்களின் நடவடிக்கைகள் என்றும் இருந்ததில்லை. பயங்கரவாதத்துக்குத் துணை போகவில்லை, தீயசக்திகளின் நாசகார நடவடிக்கைகளில் பங்கு கொள்ளவில்லை. சுதந்திரத்துக்கு முன் பண்டைய மன்னர் களோடும், சுதந்திரத்திற்குப் பின் ஜனநாயகக் குடியரசோடும் தேசநலன் விடயத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் காத்திரமானது.

நாட்டின் நற்பிரஜை என்ற வகையில் தேச நலனுக்காக உழைக்கும் முயற்சிகளில் முஸ்லிம் சமூகத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இனவாதக் குழுக்களும், வரலாறு தெரியாதோரும் விமர்சிப்பதைப் போல் முஸ்லிம்கள் தனதும் தன் இனத்தினதும் நல்வாழ்வை மட்டும் கருத்திற் கொண்டு சுயநல மனநிலையோடு வாழவில்லை. தமது வர்த்தகத்தை விருத்தி செய்து தமக்காக மட்டும் உழைக்கவில்லை.

ஒரு நாட்டின் இஸ்தீரத்துக்கும், அபிவிருத்திக்கும் எந்தெந்தத் துறைகள் முன்னேற வேண்டுமோ அத்துறைகளில் முஸ்லிம்களின் முன்மாதிரிமிக்க பங்களிப்புக் களை வரலாறு பதிந்தே வைத்துள்ளது. நாட்டுக்காகவும் அரசுக்காகவும் அவர்கள் புரிந்த சேவைகள் ஏராளம். வர்த்தகம், வாணிபம், இராணுவம், மருத்துவம், கைத்தொழில், விவசாயம், அரசியல் போன்ற சகல துறைகளிலும் முஸ்லிம் பிரமுகர்கள் புரிந்த சேவையின் தடயம் ஆழமாகப் பதிந்துள்ளது.

வரலாறு நெடுகிலும் இதற்கான சான்றுகள் அங்கும் இங்கும் சிதறிக் காணப்படுகின்றன.

மஹியங்கனை – பங்கரகமவில் வெளிநாட்டு ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து தப்பிப்பதற்காக, ஓடி வந்து ஒழிந்து கொண்ட இரண்டாம் இராஜசிங்கனை காட்டிக் கொடுக்காமல் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த முஸ்லிம் பெண்மணி தொடக்கம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த முதலாவது முஸ்லிம் பொலிஸ் அதிகாரி என்று நாட்டுக்கான இந்த சமுதாயத்தினது தியாகமும் சேவையும் நீண்ட பட்டியலைக் கொண்டது.

அனைத்தையும் சேர்த்துத் தொகுத்தளிப்பது இங்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓரிரு பக்கத்தில் சாத்தியமற்றதே! அவற்றில் ஓரிரண்டை மாத்திரம் பொறுக்கி எடுத்து வாசகர் மன்றத்தில் முன்வைப்பதே இவ்வாக் கத்தின் நோக்கமாகும்.

மன்னர்களின் தூதுவர்களாக முஸ்லிம்கள்:
ஒரு நாட்டின் தூதுவர் என்பது அரசாங் கத்தின் உயர்மட்ட பதவியாகும். அரசாங்கத்தின் அல்லது மன்னரின் பிரதிநிதியாகப் பணியாற்றுவதே தூதுவரின் சேவையாகும். அந்தவகையில் பண்டைய இலங்கையில் பல்வேறு இராசதானிகளிலும் முஸ்லிம் பிரமுகர்கள் தூதுவர்களாக சேவையாற்றி யுள்ளனர். முஸ்லிம்களின் கடற் பயண அனுபவம், பன்மொழித் தேர்ச்சி, தொடர்பாடல் திறண், சர்வதேசத் தொடர்புகள் போன்றன இதற்கான முக்கிய தகைமைகளாகக் காணப்பட்டன.

உதாரணமாக, கண்டி மன்னனின் தூதுவர்களாக முஸ்லிம்கள் இருந்துள்ள மையைக் குறிப்பிட முடியும். 1762 இல் கண்டி மன்னன் கீர்த்தி சிறி இராஜசிங்கனைச் சந்திப்பதற்காக, கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் தூதுவராக ஜோன் பைபஸ் வந்திருந்த வேளை அவரை வரவேற்பதற்காக ஒரு முஸ்லிம் பிரமுகரையே மன்னர் அனுப்பிவைத்தார்.
மவுலா முகாந்திரம் என்பவரது புதல்வர் உதுமான் லெப்பை என்பவர் மன்னரின் சிறப்புத் தூதுவராக திருகோணமலை சென்று அவரை வரவேற்று கண்டிக்கு அழைத்து வந்தார் என்பதாக வரலாற்று நூற்கள் குறிப்பிடுகின்றன.

கி.பி. 1258 இல் யாப்பகுவையை ஆண்ட முதலாம் புவனேகுவபாகு எகிப்தில் மம்லூக்கிய மன்னனுடனான வர்த்தகத் தொடர்பு நிமித்தம் அபூ உஸ்மான் என்பவரை தூதுவராக அனுப்பி வைத்தான். அதேபோல் போர்த்துக்கேயருக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை விரட்டியடித்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக கள்ளிக்கோட்டை சமோரினின் உதவியைப் பெற மாயாதுன்னை மன்னன் முஸ்லிம்களையே தூதனுப்பினான்.

இவ்வாறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிங்கள மன்னர்களின் உயர்மட்டத் தூதுவர்களாக முஸ்லிம்கள் செயற்பட்டமைக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

இராணுவத்துறைப் பங்களிப்பு:
இராணுவம் ஒரு நாட்டின் முதுகெலும்பாக அமைந்துள்ள முக்கிய அங்கமாகும். நாட்டினதும் அரசினதும் பாதுகாப்பும், இஸ்தீரமும் இராணுவத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இராணுவத் துறைக்கு வீரம் மட்டும் தகைமையாகக் கொள்ளப்படுவதில்லை. நம்பிக்கை, நாணயம் இராணுவ வீரர்களிடம் முக்கிய பண்பாக இருக்க வேண்டும். பண்டைய இராசதானிகளில் மன்னர்கள் முஸ்லிம்களை இராணுவத் துறையில் பயன்படுத்தினார்கள் என்ற வரலாறு முஸ்லிம்களின் உச்சகட்ட தேசியப் பங்களிப்பையே எடுத்துக் காட்டுகிறது.

உதாரணமாக, ஓரிரு சம்பவங்களைக் கோடிட்டுக் காட்ட முடியும். போர்த்துக் கேயருக்கு எதிரான போராட்டத்தில் மாயாதுன்னை மன்னனுக்கு முஸ்லிம்களின் இராணுவப் பங்களிப்பு கனிசமானளவு இருந்துள்ளது. பிற்பட்ட காலங்களில் அவரது புதல்வன் இராஜசிங்கனுக்கும் முஸ்லிம்களின் இராணுவ உதவிகள் தொடர்ந்துள்ளன.

2 ஆம் இராஜசிங்கன் காலப் பகுதியில் வெல்லவாய போரில் முஸ்லிம்கள் மன்னருக்கு ஆதரவாகப் பங்கெடுத்துள்ளனர். ‘இது ‘ஒட்டுப்பந்திய” – ஒட்டகப் படை என்று புகழ்ந்து பேசப்பட்டது. ஹங்குரன்கட்ட தேவாலயத்திற்கு மன்னர் அன்பளிப்புச் செய்த புடவையில் இவ்வொட்டகப்படை பொறிக்கப்பட்டு முஸ்லிம்கள் கௌரவப் படுத்தப்பட்டனர்.

1760 இல் நடந்த ஒரு சம்பவமும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். அரசனைக் கொலை செய்து அந்த இடத்தில் சீயம் நாட்டிலிருந்து பிக்கு வேடம் தரித்து வந்த ஒருவரை சிம்மாசனத்தில் ஏற்ற சதிமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்துரோகச் செயல் மன்னருக்கு விசுவாசமான முஸ்லிம் மருத்துவர் கோபால முதலியார் மூலமாகத் தெரிய வந்தது. இதனால் சதிமுயற்சி முறியடிக்கப்பட்டு அரசு பாதுகாக்கப்பட்டது.

கோபால முதலியாரின் செயலால் மனம் நெகிழ்ந்த மன்னன்ளூ மருத்துவரின் நாணயத்தை மெச்சி உயர்பட்டமளித்து கௌரவித்தார். மேலும், பல பரிசுகளை அளித்து அரசவையில் அவருக்கு உயர் அந்தஸ்த்து வழங்கினார்.

கேகாலையில் அமைந்துள்ள ‘உதுவன் கந்த’ என்ற வரலாற்று சிறப்புமிக்க இடம் முஸ்லிம்களின் நாட்டுப் பற்றை பறைசாட்டும் இடமாகும். மம்மாலி மரிக்கார் (உதுமான்) என்ற நபர் சரதியல் என்ற சிங்கள சகோதரருடன் இணைந்து மேலை நாட்டு ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். மேற்படி மலைப்பாறையிலிருந்து ஆங்கில ஆக்கிரமிப் பாளர்களைத் தாக்கியும், அச்சுறுத்தியும் வந்த இவர்கள் ஆங்கிலக் கோஷ்டிகளுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்தார்கள்.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பொருட்களை அப்பிரதேச ஏழை எழியவர்களுக்கு வழங்கியும் வந்தனர். இறுதியில் சில நயவஞ்சகர்களின் காட்டிக் கொடுப்பினால் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

எனவே, தேசியப் பாதுகாப்பும் நாட்டின் சுதந்திரமும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் உழைப்பிற்கும் தியாகத்திற்கும் பின்னால் உள்ளதல்ல. மாறாக, சகல தரப்பினரும் இணைந்து செய்த போராட்டமேயாகும். குறிப்பாக இதில் முஸ்லிம்களின் வகிபாகம் அளப்பரியது.

மருத்துவத்துறைப் பங்களிப்பு
குடிமக்களின் ஆரோக்கிய வாழ்வும் சுகாதாரமும் நாட்டின் மனித வளத்தைப் பாதுகாக்கிறது. இத்துறையில் முஸ்லிம்களின் சேவைகள் அளப்பரியது. நாட்டின் குடிமக்களுக்கான சேவை என்பதையும் தாண்டி மன்னர்களின் உத்தியோகபூர்வ மருத்துவர் களாகவும் முஸ்லிம்கள் இருந்துள்ளனர். மருத்துவத்தின் முன்னோடிகளாகப் புகழ் பெற்ற அத்தபரி, அர்ராஸி, இப்னு ஸீனா போன்ற மருத்துவத்துறை முன்னோடிகளின் அறிவுக் கருவூலத்திலிருந்து வளர்ச்சி கண்ட யூனானி மருத்துவம் நாட்டுக்குப் பல சேவைகள் புரிந்துள்ளது.

கேகாலை மாவட்டத்திலுள்ள கெடபேரியா குடும்பத்தினரின் மருத்துவப் பங்களிப்பு குறிப்பிடத்தக்க சேவையாகும். இவர்கள் முஸ்லிம் ஸ்பெயின் சுல்தான் அபூ யாகூப் யூஸுபின் அரண்மனை மருத்துவராகப் பணி புரிந்த முஹம்மத் பின் துபைலின் வம்சாவளியினர் எனக் கூறப்படுகின்றது.

image004
image006

அதேபோல் கோபால முஸ்லிம் மருத்துவக் குடும்பம் பிரபல்யம் பெற்றது. இவர்கள் வட இந்தியாவில் சிந்து மாகாணத்திலுள்ள கோப் எனும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அங்கு இப்னு துபைலின் இரண்டு ஆண் மக்கள் வாழ்ந்து வந்தனர். இலங்கையில் தம்பதெனியாவை ஆட்சி புரிந்த 2 ஆம் பராக்கிரமபாகுவின் வேண்டுகோளுக்கிணங்க டில்லி சுல்தான் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தாக வரலாறு குறிப்பிடுகிறது.

இவர்களில் ஒருவருக்கே மன்னன் ‘பெஹெத்கே முகந்திர’ – அரசமருத்துவ இலாக்காவின் அதிகாரி என்ற பொறுப்பை வழங்கினார். பின்னர், தும்பர, மாத்தளை, யடிநுவர, ஆகிய இடங்களில் குடியமர்த்தினார். வைத்தியதிலக ராஜ கருணா கோராள முதலியார்’என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வணிகத்துறைப் பங்களிப்பு:
வர்த்தகத் துறையில் முஸ்லிம்களின் திறமைகளும் ஈடுபாடும் ஆழமானவை. உள் நாட்டு வர்த்தகம், சர்வதேச வர்த்தகம் என்று பரந்தளவிலான வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். முஸ்லிம்களின் வியாபார நடவடிக்கைகள் நாட்டின் வருவாயில் பெருமளவில் தாக்கம் செலுத்தின. குறிப்பாக, நாட்டின் விவசாயத் துறையை விருத்தி செய்ய முஸ்லிம்களின் சர்வதேச வர்த்தகத்திலிருந்து கிடைத்த வருவாய் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

கடல் மார்க்கமாகக் கப்பல்களைப் பயன்படுத்தி சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டதைப் போல் தேசிய வர்த்தகத்திற்காக பல்வேறு புதிய உத்திகளைக் கண்டு பிடித்து கையாண்டனர். குறிப்பாக கண்டி கரையோர வர்த்தகம் முஸ்லிம்களால் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது. கரையோரத்திலிருந்து வியாபாரப் பொருட்களை மலைநாட்டுக்கு எடுத்துச் செல்வதும், மலையகத்திலிருந்து கரையோரத்திற்கு எடுத்து வருவதும் அன்று இலகுவான காரியமாக இருக்கவில்லை.

இதற்காக ‘தவளம்’ போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தினர். மாடுகளைப் பிணைத்து அதிலே பொருட்களை ஏற்றிச் செல்லும் முறையே இதுவாகும். அரபு மக்கள் பயன்படுத்திய கரவன் எனும் போக்குவரத்து முறையைத் தழுவியே தவளம் எனும் போக்குவரத்து முறை அமைந்திருந்தது.

இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் முஸ்லிம்கள் நாட்டுக்காகச் செய்த சேவைகள் ஏராளம். அரசோடும், ஆட்சியாளர்களோடும் நம்பிக்கை நாணயத்தோடு நடந்து கொண்டதோடு நாட்டுப் பற்று மிகுந்த நற்செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

முஸ்லிம்கள் பிற மத வழிபாடுகளில் ஈடுபடக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். இருப்பினும் இன நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் எமது முன்னோர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள்.

அன்றைய காலகட்டத்தில் கண்டியில் யானைகளைப் பெறுவது கடினமாக இருந்தது. அச்சமயத்தில்தான் முஸ்லிம் ஒருவர் தளதா மாலிகைக்கு யானையொன்றை அன்பளிப்புச் செய்தார். இச்செயலை கௌரவிக்கும் நோக்கில் 1000 ரூபா நாணயத் தாள்களில் அந்த நபர் யானையை ஓட்டி வருகின்ற காட்சி பொறிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

image008

அதே போல கொழும்பு நூதன சாலை வாப்புச்சி மரிக்கார் எனும் முஸ்லிம் நபர் ஒருவரின் அரசாங்கத்திற்கான அன்பளிப்பாகும். ஒரு நாட்டின் அரும்பெரும் சொத்துக்களில் நூதனசாலை முக்கியமானதாக இருக்கின்றது. இலங்கையில் ஒரு நூதனசாலை முஸ்லிம் ஒருவரின் சொத்திலிருந்து அன்பளிப்புச் செய்யப்பட்டது என்ற பெருமை எமது வரலாற்றுக்கு உண்டு. அதை அன்பளிப்புச் செய்த வேளை, ‘உங்களுக்குப் பிரதியுபகாரமாக என்ன வேண்டும்?’ என்று கேட்கப்பட்ட வேளை, வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் இந்நூதன சாலை மூடப்பட வேண்டும்’ என்ற அவரது மெச்சத்தக்க கோரிக்கை உண்மையில் போற்றப்பட வேண்டிய மார்க்க உணர்வையே பிரதிபலிக்கின்றது.

image010

அதே போல் இலங்கை வரலாற்றின் தேசிய பங்களிப்பு பக்கத்தில் ஆளப் பதிந்த ஒரு ஆளுமைதான் ‘ஜஸ்டிஸ் அக்பர்’ என்பவராவார். சட்ட சபை உறுப்பினராக, பல்கலைக்கழக ஆணைக்குழுத் தலைவராக, பேராதெனிய பல்கலைக்கழக நிறைவேற்றுக் குழு தலைவராக.. என்று இவரது சேவைகளின் தடயங்கள் ஏராளம்.

1970 இல் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிசிட்டர் ஜெனரலாக வும் பதில் சட்டமா அதிபராகவும் பதிவி வகித்தார். பேராதெனிய பல்கலைக்கழகத்தை அமைத்த பெருமையும் இவரையே சாரும். தும்பர பள்ளத்தாக்கிலே இப்பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்று தீர்மாணித்து அங்கே அதை நிறைவேற்றினார். இன்று அக்பர் விடுதி, அக்பர் பாலம் என்ற பெயர்களில் அன்னாரின் பெயர் பல்கலைக்கழக வளாகத்தில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

image012 1016 ஆம் ஆண்டு மே மாதம், 7 ஆம் திகதி இடப்பட்ட சிங்கள அரச சாசனம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

‘பெரிய முதலியார் மரிக்காரும் அவரது சந்ததியினரும் சிறைவாசம், மரணம் ஆகிய தண்டனைகளிலிருந்து இத்தால் விலக்களிக்கப்படுகிறார்கள். அவர்கள் அரசுக்கு செய்த சேவையினையிட்டு மாட்சிமை தங்கிய அரசன் சந்தோசமடைந்திருப்பதால் இவர்கள் இவ்வாறு கௌரவிக்கவும் கண்ணியப்படுத்தவும் படுகிறார்கள். இன்னும் எல்லா வேளைகளிலும் அவர்களை எல்லா இன்னல்களிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் அரசாங்கம் பாதுகாக்கும். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றவும் அவர்கள் தெரிவு செய்யும் எந்த நிலப்பரப்பிலும் பள்ளிவாயில்களையும் அதேபோல் வணக்கஸ் தலங்களையும் கட்டுவதற்கும் சுதந்திரமுள்ளவர் களாக இருப்பார்கள். கப்பல்கள் கட்டவும் அவைகளைக் கொண்டு ஏனைய நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்.’

இந்த இடத்தில் முஸ்லிம் தலைவர்கள் இருவர் மொழிந்த பொன்வாக்கு நினைவூட்டத் தக்கதாகும்.

ஒரு முறை மாக்கான் மாக்கார் உரையாற்றும் போது, ‘இந்நாட்டின் பெரும்பான்மை சிறுபான்மையாக மாறுவதை அனுமதிக்க முடியாது” என்பதாக கருத்துத் தெரிவித்தார்.

பதியுதீன் மஹ்மூத் அவர்கள் கூறும் போது,”எமது நாட்டுக்கு பூரண சுதந்திரம் கோருவதில் சிங்கள அரசோடு நானும் இணைந்து கொள்கிறேன்”என்பதாகத் தெரிவித்தார்.

எனவே, முஸ்லிம் தலைவர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை அனைவரும் நாட்டுக்காக உழைத்துள்ளனர், சேவை செய்துள்ளனர், தியாகங்கள் புரிந்துள்ளனர். இது விடயத்தில் வரலாறு பதிந்து வைத்துள்ள சம்பவங்களும் முஸ்லிம் தலைவர்களின் கூற்றுக்களும் பொய்யான குற்றச் சாட்டுக்களிலி ருந்தும், தப்பெண்ணங்களிலிருந்தும் முஸ்லிம்களை விடுவிப்பதற்குப் போதுமானவை.

அத்தோடு மத நல்லிணக்கம், சுமுகமான இன உறவு முறை, அமைதி, பாதுகாப்பு என்பவற்றுக்கு முஸ்லிம்களால் எந்த இடையூறும் ஏற்படப் போவதில்லை. மாறாக, அவற்றுக்கு முஸ்லிம்களின் நடவடிக்கைகள் ஒத்துழைப் பாகவும் பக்கபலமாகவுமே அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நாட்டுக்கான முஸ்லிம் களின் தியாகமும் சேவைகளும் இதையே உறுதிப்படுத்துகிறது.

துணைநின்றவை:
01. ஸேர் ராஸிக் பரீத் – வழியும் நடையும்.
(முஹம்மது எம். ஸபர்)
02. சோனகர் தேசம். (மருதூர் பஷீத்)
03. இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் அறிஞர் சித்திலெப்பை. (முஹம்மது அமீன்)
04. ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சனைகள் iii
(அ. முஹம்மது சமீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *