Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » கரும்பு தின்னக் கூலியா…

கரும்பு தின்னக் கூலியா…

உறவினரின் வீட்டு விசேசம் ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த அந்த வயதான பெண்ணும் நானும் குசலம் விசாரித்துக் கொண்டோம். அவரது பேச்சில் எப்போதும் விரக்தி கலந்திருக்கும். இளவயதிலேயே கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக இருந்து தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி தற்போது பேரப்பிள்ளைகள் கண்டுவிட்ட நிலைமையிலும்கூட கடந்தகால வடுக்களால் நொந்து போனவர்.

நம்பிக்கையானவர்களிடம் முறையிடுவதால் தன் மனப் பாரம் குறையும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். அந்தவகையில் என்னுடனான அன்றையச் சந்திப்பும் வழமையான அவரது முறைப்பாட்டுடன் ஆரம்பித்தது. என்னிடம் அடிக்கடி மீட்டுவதனால், நான் நேரில் கணாத அவரது கடந்தகாலங்கள் என்மனதில் துல்லியமாகப் பதிந்து போயிருந்தன.

நாம் எவற்றை ஞாபகத்தில் வைத்திருத்தல் வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மனதின் பங்களிப்பும் இருக்கிறது. உறவுகளால் உள்ளத்தில் ஏற்படுத்தப்படும் காயங்கள் இலகுவில் மறந்து விடக்கூடியதல்ல. சந்தோசமான பொழுதுகளிலும்கூட அந்தக் காயங்கள் ஞாபகத்தில் வந்து புன்னகையைப் பறித்துவிடும்.

சிலருக்கு சில அருள்களை அதிகமாகக் கொடுத்த இறைவன் அந்தப் பெண்ணுக்கு மறதி என்ற அருளைச் சற்று அதிகமாகக் கொடுத்திருந்தால், அனைத்தையும் மறந்து சந்தோசமாக இருந்திருப்பாரே! என ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்மீது பரிதாபப்படுவேன்.

தன்னைவிடச் சிரமப்படுபவர்களுடன் தன்னை ஒப்பிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தும்படி இஸ்லாம் கூறுகிறது. ஆனால், விதியோடு தொடர்ந்து போராட்டம் நடத்துபவர்களுடன் ஒப்பிடுவதில் தயக்கம் கொள்கிறேன். ஏனெனில், அவர்கள் தங்களையறியாமலே மறுமைப் பயணத்திற்கான சம்பாத்தியங்களை குவித்துக் கொண்டிருப்பவர்கள்.

இறைவனிடத்தில் தாங்கள் எத்துணை பெறுமதியுடையவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்தால் அல்லது, இவ்வுலகில் அனுபவித்த ஒருநிமிட துன்பத்திற்கான நன்மைகள் அவர்களுக்கு காட்டப்பட்டால் சந்தோச மிகுதியால் அக்கணமே இதயம் வெடித்துவிடுவர். அந்த ஒரே காரணத்தால் வாழ்க்கையில் கஸ்டப்படுபவர்களைப் பார்த்தாலே எனக்குள் பொறாமை உணர்வு வந்து விடும். அவர்களைவிட அதிஸ்டசாலிகள் யாரிருக்க முடியும்?

அந்த வரிசையிலுள்ள ஒருவராகவே அந்தப் பெண்ணைக் காண்கிறேன். ஆனால், அவர் தன்னை தான் முழுமையாக இன்னும் உணரவில்லை என்பது மாத்திரம் அவரது உரையாடல்களில் இருந்து அறிய முடிந்தது.

01. தனக்குக் கிடைக்கப்பெற்ற கணவன் தன் கடமையை சரிவரச் செய்யவில்லை என்ற கோபத்தினால் அந்தப் பெண், கணவரைத் திட்டுவதுமுண்டு.

02. தனக்கும் பிள்ளைகளுக்கும் கணவன் நல்ல துணையாக இருக்காமல் போனாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்துவிட்டாரே என்ற ஆத்திரம் ஒருபுறம்.

03. தனக்கெனத் திறந்திருந்த வாழ்க்கைப் பாதைகளை அடைத்து வஞ்சகம் செய்துவிட்டாரே என்ற வைராக்கியம் மறுபுறம்.

04. எல்லாவற்றிற்கும் மேலாக, தனது வாழ்நாட்கள் வேதனையுடன் கழிந்துவிட்டதே என்ற காழ்ப்புணர்வு இன்னொருபுறம்.

இவையெல்லாம் ஒன்று சேர்ந்து வாழ்க்கை கசப்பானது என்ற உணர்வினை அவருக்குக் கொடுத்திருக்கலாம்.

ஆனால், தான் சேர்த்து வைத்த நன்மைகள் தனது தவறான வார்த்தைப் பிரயோகங்களால் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுவதை அவர் அறிந்தால், யாரையும் ஒரு வார்த்தையேனும் கடிந்து பேசத் துணியமாட்டார். மாறாக பொறுமையும் சகிப்புத்தன்மையும் குடிகொண்ட ஓர் இறை அடியாள் ஆகிவிட அவருக்கு அதுவே போதுமாயிருக்கும்.

இதுபோன்ற வலிமிகுந்த தருணங்களை நாமும் கடந்திருக்கலாம். ஆறுதல் என்பது பிறரால் எமக்கும் எம்மால் பிறருக்கும் அடிக்கடி பரிமாறப்பட வேண்டியதொன்றே. தன் கவலைகளை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தும்போது அதை மேலும் ஊதிப் பெருக்க வைப்போரையும் நகைப்போரையும் நாம் காண்கிறோம். ஆனால், முறையீட்டைக் கேட்பவருக்கும் சில பண்புகள் கடமையாகிவிடுகின்றன.

பெரும்பாலும் தனக்கு கவலை எனக்கூறிக்கொள்பவர்கள் கடந்தகாலக் காயங்களை புதுப்பிப்பவர்களாவே இருப்பர். இன்னும் ஆழமாக நோக்கினால், வாழ்ந்து, அனுபவித்து, சரிகண்டு, வழியனுப்பி வைத்த பொழுதுகளில்தான் தற்போது பிழை காண்கின்றனர்.

உதாரணத்திற்கு அந்தப் பெண்ணையே எடுத்துக்கொண்டால்,

01. தனக்கு பிடிக்கவில்லையெனில், மண விடுதலை செய்துகொள்ள அவருக்கு உரிமையுண்டு. என்பதை அறிந்திருந்தும், அந்த உரிமையை பயன்படுத்த அவர் முன்வரவில்லை. அதற்கு காரணம், அன்றைய அவரின் மனோநிலை, வாழ்க்கை பற்றிய பயம், அனுபவமின்மை மற்றும் உறவினர்களின் பராமரிப்பு என்பனவாகவும் இருக்கலாம்.

02. விதவைகளுக்கு வாழ்வளிப்பது பற்றி இஸ்லாத்தின் ஊக்குவிப்பும், பெண்களுக்கு அது வழங்கியுள்ள பாதுகாப்பும் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வரமாக இருக்க, அதற்கு மாற்றமாக நடக்கும் சமூகச் சூழல் அந்தப் பெண்ணின் அன்றைய வாழ்க்கை முறையை அவ்வாறே தீர்மானித்திருக்கலாம்.

03. ஒருபெண்ணானவள் தந்தை, சகோதரன், மகன், கணவன்… இவர்களில் யாரேனும் பொறுப்பில் இருக்க வேண்டியவள்.

ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சகோதரிகளை அல்லது பெண்மக்களை பராமரித்து திருமணம் செய்து வைக்கும் ஆணுக்கு சுவனம் நுழைய அது ஒன்றே போதுமானது. என இஸ்லாம் பெண்ணின் பாதுகாப்பினை நம்பிக்கை ரீதியாகவும் வலுவூட்டுகிறது.

ஆனால், தான் விவாக விடுதலை செய்வதன் மூலம் தனது உறவுகள் சிரமப்பட வேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம்.

04. இஸ்லாமிய சக்காத் முறை மற்றும் அரசாங்கத்தின் சுயதொழில் ஊக்குவிப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பினும், சமுகத்தின் மீதான நம்பிக்கையீனத்தினால் அவர் விவாக விடுதலை செய்வதை விரும்பாமல் இருந்திருக்கலாம்.

இறுதியில் பெயரளவிலான கணவன் மனைவியாக எப்படியோ வாழ்ந்து காலத்தைக் கடத்திய அவர் தன் கடந்த காலத்தைக் காலம் கடந்து திரும்பிப் பார்க்கிறார். போராட்டங்களே புலப்படுகிறன. அவர் சரி என்று வாழ்ந்து கடத்திவிட்ட கடந்த காலங்கள்தான் இப்போது எதிரியாகத் தென்படுகின்றன.

இந்நிலையில், அந்தப் பெண் யாரை நொந்து கொள்வது? யாரைக் குற்றம் சொல்வது?

ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும்போது,

01. அந்தப் பொறுப்பற்ற கணவன் விசாரிக்கப்படுவார்

02. அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டி வாழ வைத்துப் பார்க்காத சகோதரர் விசாரிக்கப்படுவார்.

03. மகளின் எதிர்காலம் பற்றி அக்கறையாகச் சிந்திக்காத தந்தை விசாரிக்கப்படுவார்.

04. பிள்ளைகள் தாயின் தியாகத்தைப் புரியாமல் நடந்திருந்தால் அவர்களும் விசாரிக்கப்படுவர்.

05. அந்தப் பெண்ணின் நிலைமைக்கு சமூகம் காரணமாக இருந்திருந்தால் அவர்களும் விசாரிக்கப்படுவர்.

எனவே, போராட்டம் மிகுந்த வாழ்க்கையை மறுமையை ஆதரவு வைத்து பொறுமை செய்வதே புத்திசாலித்தனமாகும்

தாயைவிட பன்மடங்கு இரக்கம் கொண்ட இறைவன் எவ்வுயிரும் அதன் சக்திக்கு மீறிச் சிரமப்படுத்தப்படமாட்டாது என்கிறான்.

தங்களுக்குள் நல்லுபதேசத்தையும் பொறுமையையும் பகிர்ந்துகொண்டவர்களே வெற்றியாளர்கள் எனக் காலத்தின்மீது சத்தியம் செய்து கூறுகின்றான்

ஓர் இறை நம்பிக்கையாளர் உணரும் சிறு மனவேதனைக்கும் அவருடைய சில பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அனைத்தும் அறிந்த இறைவனின் ஆறுதல் மொழிகளாக இவை இருக்க… பரந்து விரிந்த உலகில் வாழும் வழி இருக்க… ஈமான் (நம்பிக்கை) கொள்ளச்சொன்ன ஆறாவது கத்ர் (விதி) இருக்க… தீர்மானிப்பவராக நாமிருக்க… வாழத் தேவை ஒரு புன்னகை மாத்திரமே.

அந்தப் பெண்ணும் நானும் உரையாடியதன் பின்னர் இறுதியில் அவரிடமிருந்து வெளிப்பட்ட பெருமூச்சு இறைவனிடம் தவக்குல் (பொறுப்புச்சாட்டுதல்) வைக்கப்பட்ட குளிர் மூச்சாக வெளிப்பட்டது.

விரைவில் அதுவே, இறைவனிடத்தில் அவரது கணவருக்கான நற் பிரார்த்தனையாகவும் மன்றாட்டமாகவும் மாறக்கூடும். இறைவன் அவருக்கு ஈருலகிலும் அருள் புரிவானாக!

– பர்சானா றியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *