Featured Posts
Home » பொதுவானவை » கல்வி » பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும்

பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும்

-M.A.Hafeel Salafi  (M.A. Public Administration)

பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும்

    கல்வி என்பது பொதுவாக மனித வாழ்க்கையினுடைய, மனிதப் பண்பாட்டினுடைய முழு மனிதனுடைய முன்னேற்றமே ஆகும். மனித நாகரிகத்தினுடைய முன்னேற்றமே அறிவு. அந்த அறிவை ஒழுங்குபடுத்தி, காலத்திற்கும்  மனித தேவைக்கும் ஏற்றவாறு மிகக் குறுகிய வேகத்தில், குறுகிய காலத்தில் வழங்கப்படுவதை கல்வி என்கின்றோம். கல்வி என்பது ஒரு வளர்ச்சி, அபிவிருத்தி. அது ஒரு பரம்பரையிலிருந்து  இன்னொரு பரம்பரைக்குக் கடத்தப்படுகிறது. ஓர் உருமாற்றம் நடைபெறுகிறது.

  மனித இனத்தின் துவக்கத்திலிருந்து வரலாற்றை நாம்  நோக்கும் போது, சமூகம் படிப்படியாக முன்னேறியது அதற்கு கிடைத்த அறிவினால்தான் என்பது புலனாகிறது. மனிதனுடைய வரலாறே அறிவுடன் தொடர்புற்ற நிலையிலேயே ஆரம்பமாகின்றது என்பதை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ், ஆதம் (அலை) என்ற முதல் மனிதரைப் படைத்து, அவரிலிருந்து அவரது மனைவியை உருவாக்கினான். அந்த இருவர் மூலம் மனித இனத்தைப் பல்கிப் பெருகச் செய்தான்.

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ )الحجرات : 13(

 இறை நியதியின் விளைவாக பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் பெருக்கிவிடப்பட்ட மனித இனம் சுமக்க உள்ள பொறுப்புக்களையும் அல்லாஹ்வே வகுத்துக் கொடுத்தான். அந்த மகத்தான பொறுப்பை நிறைவேற்ற அவனுக்கு அடிப்படையாகத் தேவைப்பட்டது அறிவாகும்.

எனவேதான், ஆதம் (அலை) அவர்களை, அல்லாஹ் சிருஷ்டித்த பின்னர், அவன் ஆரம்பப் பணியாக ஆதமுக்கு அறிவு புகட்டியதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ) البقرة : 31

‘…ஆதமுக்கு எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்தான்.’ (அல்குர்ஆன் 02:31)

இங்கு ‘பெயர்’ என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்மா’ என்ற பதம் எல்லாப் பொருட்களையும் பற்றிய அறிவையே பொதுவாகக் குறிக்கின்றது என்று மொழியியல் சார்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

மனித இனம் பாரம்பரியமாக தமது பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள் வழங்கிய அறிவினாலேயே வளர்ச்சி கண்டது. அத்தகைய அறிவுப் பாரம்பரியம் தற்போதும் நமது ஊர்களில் உள்ளன.

 மனிதன் ஆரம்பகாலத்தில் அறிவற்ற மிருக நிலையில் இருந்தான் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், மனித இனத்தின் துவக்கத்திலேயே அவனைப் படைத்த அல்லாஹ்வினால் அறிவு புகட்டப்பட்டுவிட்டது என்பதை ஆணித்தரமாக அல்குர்ஆன் பிரகடணப்படுத்துகிறது.

இஸ்லாமிய நோக்கில், அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ். அவன் காலத்திற்குக் காலம் இறைத் தூதர்களை உலகிற்கு அனுப்பி, வஹியின் மூலம் மனிதகுலத்திற்கு கல்வியறிவை வழங்கினான். அந்தவகையில், இஸ்லாம் வஹியின் நிழலில் அறிவை வழங்கிய ஒரு மார்க்கமாகத் திகழ்கிறது.

صحيح البخاري 79 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ مَا بَعَثَنِي اللهُ بِهِ مِنَ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتِ الْمَاءَ فَأَنْبَتَتِ الْكَلَأَ وَالْعُشْبَ الْكَثِيرَ وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ (إِخَاذَاتٌ) أَمْسَكَتِ الْمَاءَ فَنَفَعَ اللهُ بِهَا النَّاسَ فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى إِنَّمَا هِيَ قِيعَانٌ لَا تُمْسِكُ مَاءً وَلَا تُنْبِتُ كَلَأً فَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهَ (فَقِهَ) فِي دِينِ اللهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللهُ بِهِ فَعَلِمَ وَعَلَّمَ وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا وَلَمْ يَقْبَلْ هُدَى اللهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ قَالَ أَبُو عَبْد اللهِ قَالَ إِسْحَاقُ وَكَانَ مِنْهَا طَائِفَةٌ قَيَّلَتِ الْمَاءَ قَاعٌ يَعْلُوهُ الْمَاءُ وَالصَّفْصَفُ الْمُسْتَوِى مِنَ الْأَرْضِ

‘அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையானது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர். (தமது கால்நடைகளுக்கு) புகட்டினர்.  விவசாயமும் செய்தனர்.

 அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது, (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டந்தரை. அது, தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்கவிடவுமில்லை.

இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, 79)

குறுகிய மனிதன அறிவால் நேர்வழியைக் கண்டுபிடிக்க முடியாது. அல்லாஹ்விடமிருந்து வஹியின் மூலம் கிடைக்கும் நேர்வழியைப் பின்பற்றித்தான் மனிதன் வெற்றி பெற முடியும். எனவே, பகுத்தறிவு ரீதியான அறிவையும் வஹியின் மூலமான அதை நெறிப்படுத்தும் ஆன்மிகக் கல்வியையும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். இவை, இரண்டின் மூலம்தான் சுபிட்சமான வாழ்வை அனுபவிக்க முடியும். ஒன்றை ஏற்று மற்றொன்றைப் புறக்கணித்தால், மனித வாழ்வு சீர்குலைந்துவிடும்.

இன்று, நாம் அவதானம், ஆராய்ச்சி, அனுபவம், பரிசீலனை போன்றவை ரீதியாகக் கற்பவற்றிற்கு கல்வி என்று நவீன பெயர் வைத்து அழைக்கின்றோம்.  அவசரமாகவும் வேகமாகவும் பெறுவதற்காக அதை ஒழுங்குபடுத்தி வைத்துள்ளோமே தவிர, கல்வி எப்போதும் மனித வாழ்க்கையோடும்  வரலாற்றோடும் தொடர்புபட்டதுதான். உலகம்;, பண்பாடு என்று அழைப்பது ஒரு வகைக் கல்வியைத்தான். அத்தகைய கல்வியைத்தான நாம் வாழும் சமூக சூழல் நமக்குத் தருகிறது.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி, ஒழுங்கு, கட்டமைப்பு என்பனவற்றில் பண்பாடு உள்ளது. பண்பாடு – நாகரிகம் என்று நாம் சொல்லுவது எல்லாமே அறிவு ரீதியாக நடக்கும் ஒருவகை நடவடிக்கையைத்தான்.

அல்லாஹ் மனிதனுக்கு அறிவை வழங்கினான். அந்த அறிவு மனித சமூகம் பெற்றுக்கெண்ட மாபெரும் அருட்கொiடாகும்.

الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ (4) عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ  ) العلق : 4 ، 5

‘அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தான்’ (அல்குர்ஆன் 96:4-5)

  ஒருவேளை, Schools எனும் பாடசாலைகள் என்ற நவீன கல்விக் கூட கல்வி முறைமை ஒன்று நமக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், பாரம்பரிய, குடும்ப சூழலில் பெறப்பட்ட அந்த அறிவைக்கொண்டுதான் நாம் முன்னேறியிருப்போம்.

  உலக வரலாற்றை நோக்கும் போது, 15ம், 16ம், 17ம்  நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மறுமலர்ச்சி ஏற்படுகிறது. அதற்கு முன்னர் ஐரோப்பா அறியாமை எனும் அந்தகார இருளில் மூழ்கிக்கிடந்தது. சுதந்திர சிந்தனை, அறிவு வேட்கை, ஆராய்ச்சி உணர்வு என்பனவற்றிற்கு எதிராகச் செயல்பட்ட இக்கால கட்டத்தை ஐரோப்பிய வரலாற்றாசிரியர் H.A.FISHER தனது HISTORY OF EUROPE  எனும் நூலில் ‘அறிவியலானது நிலை பெற்று வளர்ச்சியடைவதற்குத் துணைபுரியும் சுதந்திரமான ஆய்வுக்கு எதிரான ஒரு சூழல் ‘ என்று குறிப்பிடுகின்றார்.

வீரர்களும் வீர வணக்கமும் என்ற நூலில்: ‘மவ்டீகம் நிரம்பிய மக்களுக்கு அல் குர்ஆனின் போதனைகள் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவது போல் இருந்தன. இத்தகைய போதனை என்னும் தீப்பொறி அரேபியாவின் கரு மண்ணில் விழுந்ததும் அந்த கருமணல் பீரங்கி மருந்தாக மாறி, டெல்லி முதல் கனடா வரை ஓர் ஒளி உண்டாகிற்று’ என்று  தோமஸ் கார்லைல் குறிப்பிடுகின்றார்.

அறியாமை இருள் முழு உலகையும் சூழ்ந்திருந்த 7ம் நூற்றாண்டில் இரட்சகனின் நாமத்தால் கற்றுக் கொள்ளுங்கள்! கற்றுக் கொடுங்கள்! என்ற அல்குர்ஆனின் அழைப்பு, கல்விக்கான  ஒரு நவீன குரலாக ஒலித்தது. நவீன கல்விக்கான ஓர் ஆரம்பம் திண்ணைப் பள்ளியில் நபியவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது மனித இனத்தின் வரலாற்றுப் போக்கில் ஒரு முக்கிய புள்ளியாகும். அது, மனித இனம் மறக்க முடியாத கல்விப் புரட்சியாகும்.

 ஐரோப்பாவில் 15-17 நூற்றாண்டுகளில் அவர்கள் ஒரு கல்வி முறையை கொண்டு வருகின்றார்கள். எமக்கு 7ம் நூற்றாண்டில் ஆன்மிகக் கல்வி  அரபு மூலத்தில் அருளப்பட்ட வஹியிலிருந்துதான் கிடைக்கப்பெற்றது. பொதுக்கல்வி ஐரோப்பா மூலமாக வந்தது என்று கருதப்படுகிறது. எனினும் ஐரோப்பாவிற்கு கல்வியை முஸ்லிம்களே வழங்கினர் என்று சில ஐரோப்பிய அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

நன்றி நவிலல் (Thanks Giving) என்ற நூலில் ‘பத்தாம் நூற்றாண்டிலேயே முஸ்லிம்கள் உலகத்தின் ஞானத்தை உச்சத்திற்கு உயர்த்தி விட்டார்கள். மங்கோலியா, பாரசீகம், சிரியா எகிப்து ஆகிய நாடுகளில் அவர்கள் பெரிய கலா பீடங்களை நிறுவினர். ரோமப் பேரரசை காட்டிலும் அவர்களது ஆட்சியின் எல்லை பரந்து விளங்கியது. அவர்கள் நவீன விஞ்ஞானத்தைப் போதித்தார்கள். வான வெளியை ஆராய்ந்தார்கள். அவர்கள் வைத்த பெயர்களே நட்சத்திரங்களுக்கு இன்றும் இருக்கின்றன. உலகின் பரிமாணத்தை அவர்களே தீர்மானித்தார்கள். கடிகாரங்களை செய்தார்கள். ரசாயன அறிவை புதிதாக உலகுக்கு அளித்தார்கள். சல்பூரிக் அமிலம், நைட்ரிக் அமிலம், அல்கஹோல் ஆகியவற்றை கண்டுபிடித்தார்கள். மருத்துவ நூல்களையும் மருத்துவ நிலையங்களையும் உலகுக்கு அளித்தார்கள். காகிதம் உருக்கு ஆகியவற்றை ஐரோப்பாவிற்கு வழங்கியவர்களும் அவர்களேயாவர். அவர்களே முதன் முதலில் நவீனங்களையும் கட்டுரைகளையும்  பல விஷயங்களையும் குறித்த ஆராய்ச்சிகளை நூல்களாக வெளியிட்டார்கள். நவீன விஞ்ஞானத்துக்கு வித்தூன்றிய முஸ்லிம்களுக்கு வெள்ளையர்களாகிய நாங்கள்; மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம். முஸ்லிம்கள், விஞ்ஞான மேதைகளாக விளங்கிய காலத்தில் ஐரோப்பியர் விஞ்ஞானத்தின் எதிரிகளாக இருந்தனர். மத்தியகால கிறிஸ்தவ பாதிரிமார்கள் மறு உலகை பற்றி மட்டுமே பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால், உலக அறிவைத் தந்தவர்கள் முஸ்லீம்களே ஆவர்’ என இங்கர்சால் குறிப்பிடுகின்றார்.

வஹியின் நிழலில்  நபியவர்கள் போதித்த கல்விமுறை, Residential University தங்கிப்படிக்கும் நவீன பல்கலைக்கழக கல்வி முறையைவிட  மேம்பட்டது. இப்போது மதுரசாக்களில் தங்கிப் படிக்கும் மார்க்கக் கல்வி முறையிலிருந்து அது வேறுபட்டது. அதில், ஆன்மிகம், வாழ்வியல் முறைமை போதிக்கப்பட்டது; தொழில் விபரங்களை உள்ளடக்கிய, வாழ்வதற்கு தேவையான பல விடயங்கள், சரித்திரங்கள், பண்பாடுகள், படிப்பினைகள், கணிதம்,  விஞ்ஞானம் என்பன இருந்தன. இன்று அதுபோன்ற முழுமையான கற்பித்தல் ஒழுங்குமுறை பின்பற்றப்படுவதில்லை என்று பல அந்நிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொதுக்கல்வி மூலமாக எமது வாழ்வை, எண்ணங்களை, எங்கள் எதிர்காலத்தை எங்கள் பொருளாதாரத்தை நாம் நேர்த்தியாக அமைத்துக் கொள்ளலாம்.

 கல்வி மூலம் சமூக முன்னேற்றம் என்று நாம் இப்போது கருதுவதே அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, ஒற்றுமை, நண்பர்களுக்கு இடையிலான நட்புறவு என்பன போன்றனவைகளாகும்.

 மனிதர்கள், சமூக சூழலில் வழங்கப்படும்; கல்வியைப் பெற்று, மீண்டும் சமூகத்திற்கு தான் வருகின்றார்கள். சமூகத்தில் உள்ளவர்களை கல்விக்காக பாடசாலைக்கு அனுப்புகின்றோம். சமூகத்தில் இருந்துதான் அங்கு செல்கிறார்கள். சமூகத்திற்கு அதைவிட ஒரு நவீனமான புதிய எதிர்காலத்திற்குரிய தூரநோக்குடைய கல்வி அங்கு கிடைக்கிறது.

பொதுவாக, நவீன உலகில் 25-50 வருடங்களுக்குத் தேவையான கல்வித் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. நாம் ஒரு வகையில் ஒரு முறையில் முன்னேறுவதற்கு தேவையான கல்வித் திட்டம் அங்கு கிடைக்கிறது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை ஆன்மிக செழுமையற்ற, சடவாதப் பண்பியல்புகள் நிறைந்தவை.

சமூகத்திலுள்ள ஒரு நபர் கற்கிறார். அவர் ஒரு  Doctor, இன்ஜினியர், ஆலிம்;  விரிவுரையாளர் Lowyer என்ற கல்விப் படிநிலை உயர்வு பெற்று, மீண்டும் சமூகத்திற்கு தான் வருகின்றார். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில்தான் கற்கிறார்கள். ஆனால், மொத்தத்தில் அது சமுதாயத்திற்கு ஒரு தனித்துவமான பங்களிப்பு ஆகிறது. கல்வி கற்றவர்கள் அதிகரிக்கும் போது, அந்த சமூகம் ஒரு கல்வி கற்ற, நாகரிகமான சமூகமாக மாறுகிறது. அதனால், கல்வி கற்ற உலகம் ஒன்று உருவாகிறது.

நம்மைச் சூழ கல்வி கற்ற சமூகம் ஒன்று  உருவாகும் போது, நாம் வாழும் சமூகமும் கல்வி கற்ற சமூகமாக மிளிர வேண்டும். இல்லாவிட்டால் அந்த உலகில் என்ன நடக்கிறது? அவர்கள் என்ன சொல்கிறார்கள்? எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? எத்தகைய கொள்கைகளை வகுக்கின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விடும். அதனால், நாங்கள் ஏமாற்றப்படுவோம். உலகம் தெரியாத சமூகமாக நாம் இருக்கக்கூடாது என்பதை இஸ்லாம் எமக்கு மிகவும் வலியுறுத்தியுள்ளது. எமது சமுதாய விழிப்புணர்வு கல்வியினால் மாத்திரமே சாத்தியமாகும் என்பதை ஆழமாக அறிந்திருக்க வேண்டும்.

 இளைஞர்கள் கல்வி மூலமாக தயார் படுத்தப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு அவர்கள் நகர்த்தப்பட வேண்டும். அவர்களின் ஆரோக்கியமிக்க நகர்வு, முன்னேற்றம் என்பது சமுதாயத்தை முன்னுக்குக் கொண்டு செல்லும்.

 18ம்; நூற்றாண்டுகால சமுதாயம் அல்ல பத்தொன்பதாம் நூற்றாண்டு சமுதாயம். 19ம் நூற்றாண்டுகால சமுதாயம் அல்ல இருபதாம் நூற்றாண்டு சமுதாயம். இருபதாம் நூற்றாண்டு சமுதாயம் அல்ல 21வது நூற்றாண்டு சமுதாயம். சமூகம் கால – சூழல் மாற்றங்ளாலும் கல்வியினாலும் அறிவியல், தொழில் நுட்பங்களின் வளர்ச்சியினாலும் மாற்றமடைந்து, முன்னேறி வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வலிமையுள்ள சமூகமாக எமது சமூகம் தகவமைக்கப்படவேண்டும்.

மரபு சார்ந்த கல்வி இப்போதும் எம்மிடம் இருக்கிறது. பாடசாலை சென்று வகுப்பியில் கொப்பியில் நாம் எழுதினாலும் எமது பண்பாடுகள் மூலம் மரபு சார்ந்த ஒரு கல்வி எமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. எங்கள் குடும்பம், பெற்றோர் தரும் கல்வியும் பாடசாலைக் கல்வியும் எமது வாழ்வில் இணைகிறது அந்த இரண்டு கல்வியும் இணைந்து வரும் கல்வியால் ஒரு பொதுக் கல்வி பெறப்படுகிறது. இதன் மூலம் சமுதாய முன்னேற்றம் ஏற்படுகிறது. எமது பண்பாட்டுக் கல்வி இஸ்லாமிய விழுமியங்களிலிருந்து ஊற்றெடுக்கிறது. அந்தப் பாரம்பரியத்தை நாம் என்று மறுதலித்துவிடக் கூடாது.

 கல்வி இல்லாமல் சமுதாயம் இல்லை. பழைய கால அறிவை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இன்று முன்னேறலாம் இன்று இறுமாந்திருக்க முடியாது. நாம் பெறும் கல்வி சமுதாயத்திற்குப்; பயனுள்ளதாக இருக்க வேண்டும். சமுதாயமும் காலத்திற்குத் தேவையான கல்வி பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும்.

சமூகத்தில் கல்வியினால் ஓர் இயக்கம் (Movement)  நடைபெறுகிறது. அந்த ஆசைவியக்கம் சரியாக நடைபெற வேண்டும். அந்த அசைவினால்; சமூக முன்னேற்றம் நடைபெறும். இந்த முன்னேற்றம் இறை வழிகாட்டலை அடிப்படிடையாகக் கொண்டமைந்திருக்க வேண்டும் என வஹி எதிர்பார்க்கிறது.

நாம் இங்கு ஒரு சிறுபான்மை சமூகமாக இருக்கின்றோம். எமது கல்வி முறைமையை  நாம் சரியான முறையில் ஒழுங்கு படுத்தாவிட்டால், காலத்தை விரயமாக்கியதில் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். கல்வி மூலமாக சிறு பராயத்தில் இருந்து பயனுள்ள, பொருத்தமான ஒரு நெறிப்படுத்தலை வழங்குவதன்; மூலம், நமது சமூகத்தை ஓர் உயர் மட்டத்திற்கு கொண்டு போகலாம். இதில் பொறுப்பற்று இருந்தால் எமது எதிர்கால சந்ததி மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *