Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 1

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 1

அன்வர்தீன், பெரம்பலூர்

1980 களின் ஆரம்பத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் புறையோடிப்போயிருந்த அனாச்சாரங்களை ஒழிப்பதில் சகோதரர் பீஜே அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலட்சக்கணக்கான தமிழக முஸ்லிம்கள், முக்கியமாக இளைஞர்கள் அவர் சொல்லிவிட்டால் அதை வேதவாக்காக எடுத்து பின்பற்றும் அளவுக்கு அவர் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்தனர். இயக்கங்களுக்கு நிதி கேட்டாலே ஐந்தும் பத்தும் கொடுத்தது போய், லட்சக்கணக்கில் ஏன் கோடிகளில் கொட்டிக் கொடுக்க ஆரம்பித்தனர்.

இவரை இப்படியே விட்டால் ஒரு பெரும் கூட்டம் நேர்வழியில் சென்று விடும் என்று ஷைத்தான் தன் வேலையை காட்டத் துவங்கினான். ஆரம்பத்தில் குர்ஆன் ஹதீஸ் வழியில் சென்று கொண்டிருந்தவர், ஷைத்தானின் ஊசலாட்டத்தால் வழி பிறழ ஆரம்பித்தார். நேர்மறை கருத்துக்களைவிட எதிர்மறை கருத்துக்கள் இளைஞர்களை அதிகமாக தாக்கும் எனபதை நன்கு அறிந்தவராதலால் இளைஞர்களை தன் கட்டுக்குள் வைத்திருந்தார்.

குர்ஆன் ஹதீஸின் ஆதாரங்களை விட்டுவிட்டு, மனோ இச்சைகளை மார்க்கம் என்ற பெயரில் மக்களிடையே விதைக்க ஆரம்பித்தார். தான் எதைச்சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற மக்களின் மனோநிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டார். யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்தானோ அவர்கள், இவரின் இந்த ஷைத்தானிய போக்கை கண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவரிடமிருந்து விலக (நானும் அதில் ஒருவன்) ஆரம்பித்தனர்.

இஸ்லாத்தின் அடிப்படையான அகீதாவை ஆட்டம் காணவைக்கும் இவரின் இந்த நிலையை கண்டு தமிழக, இலங்கை ஆலிம்கள் சுத்தமாக வெளியேறிவிட்டனர். தற்போது நாம் அறிந்த வைத்துள்ள தமிழக, இலங்கை ஆலிம்களில் அதிகமானோர் அவரிடமிருந்து ஆரம்பத்திலேயே பிரிந்து வந்தவர்கள். இவர் தவறான வழியில் பயணிக்கிறார் என்பதற்கு, தற்போது இந்த TNTJ தமிழ்நாடு தில்லுமுல்லு ஜமாஅத்தில் ஒரே ஒரு கற்றறிந்த ஆலிம்கூட இல்லை என்பதே சான்று.

ஒற்றுமையை விதைக்க வந்த பெயர்தாங்கி தவ்ஹீத்வாதிகள், பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் தங்களிடையே பிரிவினையை அறுவடை செய்ததுதான் இவர்களின் சாதனை. கூட்டம் குறைய ஆரம்பித்து, தொண்டர்கள் மட்டுமல்ல வருமானமும் லட்சங்களில் இருந்து ஆயிரங்களாக சுருங்க ஆரம்பித்தது. பாவம்! பீஜே போன்று யாருக்கும் இந்த நிலை அவ்வளவு எளிதில் வந்துவிடக்கூடாது. எப்படி இருந்த பீஜே இப்படி ஆகிவிட்டாரே. இறைவன் ஒரு சிலரை ஆடவிட்டு முன் நெற்றியை பிடிப்பான் என்பது இவர் விஷயத்தில் நிதர்சனமாகிவிட்டது.

  • ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தவர்;
  • பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர்;
  • பிறர் மானத்தில் விளையாடியவர்;
  • பல இயக்கங்களை கண்டு அதிலிருந்து வெளியேறியவர்/வெளியேற்றப்பட்டவர்;
  • மார்க்க விவாதங்களில் வெற்றிக்கொடி கட்டியவர்?
  • மனோ இச்சைகளை மார்க்கத்தில் திணித்தவர்;
  • அறிவை முற்படுத்தி ஆதாரங்களை பிற்படுத்தியவர்;
  • குர்ஆனுக்கு சுயமாக விளக்கம் கொடுத்தவர்;
  • தன் மீதான எதிர்ப்பையே தனக்கு சாதகமாக ஆக்கி ஒரு பெரும் இளைஞர் கூட்டத்தை கட்டி எழுப்பியவர்;
  • அறிஞர்களை மதிக்காதவர்.
  • நான் என்ற பிம்பத்தை நிலைநாட்ட கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் வலம் வந்தவர்.
  • தமிழக முஸ்லிம் சமூகத்தில் தவிர்க்க முடியாத சக்தி(?)யாய்  வலம் வந்தவர்…
  • கொடுத்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க தேவையில்லை என்று, இதுவரை யாருமே சொல்லாத நச்சுக்கருத்தை விதைத்தவர். Etc….

என்று பல்வேறு புகழ்களுக்கு சொந்தமான ஒருவர் தன் மீதான பிம்பங்கள் சுக்கு நூறாய் உடைந்து, தான் வாழும் போதே  மறக்கடிக்கப் படுகிறோம் என்ற நிர்கதியற்ற நிலை, தான் நம்பிய, தானே உருவாக்கிய கூட்டத்தால் ஏற்படுகிறதே! தான் வளர்த்த கடா மார்பில் பாய்கிறதே! என்றெண்ணி தன் இருப்பை மீண்டும், மீண்டும் பதிவுசெய்ய பகீரத பிரயத்தனங்கள் செய்வதை பார்த்து பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

பிஜே ஒரு தனி நபராக இருந்தாலும், அவர் உருவாக்கிய பிஜே- யிஸம் அவ்வளவு எளிதில் மறந்து போகக்கூடியது அல்ல. JAQH முதற்கொண்டு TNTJ வரை அவர் தானாக விலகினாலும் , விலக்கப்பட்டாலும் அவர் சென்ற பிறகும், அவ்வியக்கங்களை  சார்ந்தோர்களிடம் அவருடைய சிந்தனையையும், பேச்சின் தொனியையும், பெரும் தாக்கம் ஏற்படும் அளவிற்கு நிரந்தரமாக விட்டுச் செல்லக்கூடியவர்.

குர்ஆன், ஹதீஸ் என்ற இரட்டை வார்த்தைகள் இவருடைய வருகைக்கு பிறகே சர்ச்சைக்குரிய சொல்லாடலாக பார்க்கப்பட்டது. நஜாத், ஜன்னத், முபீன், ஏகத்துவம், உணர்வு என்று பல பத்திரிக்கைகளை களம் கண்டவர். ஆனால் தற்பெருமை காரணமாக ஒன்றைகூட தன்வசம் தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை. தன் கருத்தை நிரூபிக்க, யாரும் யாரையும் எல்லை மீறி விமர்சனம் செய்யலாம், அது தவறில்லை என்று சத்தியம் செய்யும் அளவுக்கு, குர்ஆனின் போதனைக்கு மாற்றமாக வரம்பை மீறி விவாத களங்களை எதிர்கொண்டார்.

ஓர் இயக்கம் நிறுவுவதை ஏதோ கிலாபத்தையே நிறுவுவது  போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்ற இன்றைய மார்க்கெட்டிங் தந்திர செயல்பாடுகள் அத்தனையும் பிஜே பாணியின் எச்சங்கள். சுருக்கமாகச்  சொல்வதென்றால் ஒரு எதிர்மறை அடையாளமாக்கப்பட்ட பிஜேயிஸம் இன்றைக்கு நம் எல்லோரிடமும் இயக்க வித்தியாசமில்லாமல் நாடி நரம்பெல்லாம் ஊறி திளைத்திருக்கிறது. தூய வடிவில் மார்க்கம் என்ற போர்வையில் தீய வடிவில் மனிதர்கள் என்ற இலக்கை எட்டியது தான் பிஜே யிஸத்தின் ஒரே சாதனை. பிஜே யினால் மாற்றங்களும், பலன்களும் இல்லாமல் இல்லை. ஆனால், ஒட்டு மொத்தமாக பலனைவிட தீங்கு அதிகமானால் அது எதுவானாலும் தூக்கி எறியப்படும் என்ற குர்ஆனின் பார்வைக்கு ஏற்ப இந்த பிஜே யிஸமும் துடைத்து எறியப்பட வேண்டியதே.

இப்படியாக, மக்கள் உண்மையான ஏகத்துவத்தை அறிந்து கொள்ளவும், போலி ஏகத்துவ வாதிகளை தோலுரிக்கவும் பீஜே மற்றும் TNTJ கூட்டத்தினரின் தில்லுமுல்லுகள் ஒவ்வொன்றாக வரும் தொடர்களில் அலசப்படும். உலகத்தில் வேறு எங்கும் காணப்படாத மார்க்கத்தில் விளையாடும் இந்த போக்கு, தமிழகத்தில் மட்டும் (தமிழ் மொழி பேசப்படுவதால் இலங்கையிலும்) இருப்பதால் தமிழ்நாட்டு ஃபித்னாக்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *