Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-28)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-28)

28. இப்படிச் செய்வதற்கு எப்படி மனம் வந்தது?

ஹதீஸ் 28: அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்)அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டபொழுது கடும் துன்பத்திற்கு உள்ளானார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்: ஆஹ்! என் அன்புத் தந்தைக்கு ஏற்பட்ட துன்பமே! – இதனைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இந்நாளுக்குப் பிறகு உன் தந்தைக்கு துன்பம் என்பதே இல்லை, என்று! – நபியவர்கள் மரணம் அடைந்தபோது ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்: என் அன்புத் தந்தையே! இரட்சகன் விடுத்த அழைப்புக்குப் பதில் அளித்து விட்டீர்களோ! அன்புத்தந்தையே! ஃபிர்தௌஸ் எனும் சுவனத் தோட்டம்தான் உங்கள் தங்குமிடம் ஆனதோ! அன்புத் தந்தையே! உங்கள் மரணச் செய்தியை ஜிப்ரீலுக்கு நாங்கள் தெரிவித்து விடுகிறோம்.

நபியவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டபொழுது ஃபாத்திமா(ரலி) அவர்கள் (நபித்தோழர்களை நோக்கிக்) கேட்டார்கள்: நபி(ஸல்) அவர்களின் (உடலை அடக்கம் செய்து அவர்கள்) மீது மண்ணை அள்ளிப்போட்டது உங்கள் மனத்திற்குத் திருப்தியாக இருந்ததா?’ (நூல்: புகாரி)

தெளிவுரை

நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான துன்பம் என்பது மரணத் தருவாயின் கடும் பிணியும் காய்ச்சலுமாகும். கடுமையான காய்ச்சல் என்றால் இருமடங்கு அதாவது சாதாரணமாக இரண்டு நபர்களுக்கு ஏற்படும் காய்ச்சலை நபியவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று!

காருண்ய நபியவர்களுக்கு ஏன் இவ்வளவு கடுமையான கஷ்டமும் துன்பமும்? என்று எவருக்கும் ஓர் ஐயம் எழலாம். ஆனால் இறைவன் இதில் ஒரு தத்துவத்தை நாடியுள்ளான். அதுதான், பொறுமையின் மிக்க மேலான – உயர்ந்த அந்தஸ்தை நபியவர்கள் அடையவேண்டும் என்பது! இறைவனால் பெரும் சோதனை கொடுக்கப்பட்டு அதில் பொறுமையைக் கடைப்பிடித்தால் தான் அது முடியும்! மனம் வெறுக்கக்கூடிய சங்கடமான காரியத்தில்தானே பொறுமையின் சோதனை உள்ளது!

இந்த ரீதியில் இரண்டு மனிதர்கள் தாங்கும் காய்ச்சலையும் கஷ்டத்தையும் நபியவர்கள் சகித்துக் கொள்ளும்படியான பொழுது -அதைக் கண்ணுற்ற ஃபாத்திமா(ரலி) அவர்கள் கடும் சஞ்சலத்துடனும் மனவேதனையுடனும் சொன்னார்கள்:

‘ என் அன்புத் தந்தைக்கு ஏற்பட்ட துன்பமே!’

ஏனெனில் அவர்கள் ஒருபெண்மணிதான். பெரும்பாலும் பெண்களால் எதுவொன்றையும் பொறுத்துக் கொள்ள இயலாது! இதனால்தான் ஃபாத்திமா(ரலி) அவர்களின் சஞ்சலத்தைத் தணித்துப் பொறுமையூட்டும் வண்ணம் நபிவர்கள் சொன்னார்கள்:

‘இன்றைய தினத்திற்குப் பிறகு உன் தந்தைக்கு எந்தத் துன்பமும் இல்லை’

ஏனெனில் மரணத்தருவாயின் இந்தத் துன்பத்திற்குப் பிறகு இனி எந்தத் துன்பமும் கஷ்டமும் நபியவர்களுக்கு வராது! நபியவர்கள் இவ்வுலகில் இருந்து விடைபெற்றுச் சென்றதும் மிக்க மேலான தோழரிடம் அதாவது, அல்லாஹ்விடம் போய் சேர்ந்து விடுகிறார்கள்.

ஆம்! நபி(ஸல்) அவர்கள்; மரணத்தருவாயில் ‘மிக்க மேலான தோழரை நான் விரும்புகிறேன்’ என்று வீட்டின் முகட்டைப் பார்த்தவண்ணம் கூறிக் கொண்டிருந்ததாக ஹதீஸ் அறிவிப்புகளில் காணப்படுகிறது. மிக்க மேலான தோழன் (அர் ரஃபீக்குல் அஃலா) என்பது அல்லாஹ்வைக் குறிக்கும் சொல்லாகும்.

‘அன்புத் தந்தையே! ஜீப்ரீலிடம் உங்கள் மரணச் செய்தியை அறிவித்து விடுகிறோம்’

– ஜிப்ரீல் என்பவர் மலக்குகள் எனும் வானவர்களின் தலைவர். நபியவர்களின் மரணச்செய்தியை அவருக்கு அறிவிப்பதென்றால் இனி அவர் வானிலிருந்து வஹி எனும் இறையருட் செய்தியை ஏந்திய வண்ணம் பூமிக்கு இறங்கமாட்டார் என்பதை உணர்த்துவதே இதன் கருத்து. ஏனெனில் அவர்தான் காலையும் மாலையும் நபியவர்களுக்கு வஹியைச் சேர்ப்பித்துக் கொண்டிருந்தார். இப்பொழுது அது நின்று விடுகிறது!

‘அன்புத் தந்தையே! இரட்சகனின் அழைப்புக்கு பதில் அளித்து விட்டீர்களோ! ‘

-ஏனெனில் உலகிலுள்ள எல்லாப் பொருட்களின் மீதும் முழு அதிகாரத்துடன் ஆட்சி செய்து கொண்டிருப்பவன் அந்த இறைவன்தான். ஒவ்வொரு படைப்பின் ஆயுட்காலத் தவணைகள் அவன் கைவசமே உள்ளன. எல்லா மனிதர்களும் அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.

‘ பிர்தௌஸ் எனும் சுவனமே உங்கள் தங்குமிடம்’

– ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் சுவனத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தை அடையக் கூடியவர்கள். வேறு எந்த மனிதரும் அதை அடைந்திட முடியாது. நபியவர்களே அது குறித்து இவ்வாறு நவின்றதாக ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது போன்று:

‘வஸீலா எனும் உயர் அந்தஸ்தை நான் அடைவதற்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். திண்ணமாக அது சுவனத்தின் மிக உயரிய அந்தஸ்தாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஓர் அடியாருக்கே அது கிடைக்கும். அந்த அடியார் நானாகவே இருக்க விரும்புகிறேன் ‘ – அது சுவனத்தில் ஃபிர்தௌஸ் எனும் உல்லாசத் தோட்டம்தான். ஏனெனில், அதுவே சுவனத்தின் மேல்தட்டில் அமைந்ததாகும்.

‘நபியவயர்களின் (உடலை அடக்கம் செய்து அவர்கள்) மீது மண்ணை அள்ளிப் போடுவது உங்கள் மனத்திற்குத் திருப்தியாக இருந்ததா? ‘

– ஃபாத்திமா(ரலி) அவர்கள் இவ்வாறு கேட்டது அவர்களது மனம் அடைந்த கடும் சஞ்சலம், கவலை மற்றும் சோகத்தின் வெளிப்பாடே தவிர, அடக்கம் செய்ததை ஆட்சேபித்தல்ல! ஏனெனில், ஸஹாபாப் பெருமக்கள் நபியவர்களின் மீது அதிக அளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதன் அடிப்படையில்தான் – உயிருக்கு உயிராய், ஏன், உயிரினும் மேலாய் நீங்கள் நேசித்து வந்த நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்து மண்ணைப் போட்டு மூடிவிட்டீர்களே! உங்கள் மனம் எப்படி இடம் கொடுத்தது? என்கிற கருத்தில் அவ்வாறு கேட்டுள்ளார்கள், ஃபாத்திமா(ரலி) அவர்கள்.

ஆம்! அவ்வாறு செய்வது அன்புத் தோழர்களின் மனத்திற்குத் திருப்தியே என்று சொல்வதுதான் அதற்குப் பதில்! ஏனெனில் அல்லாஹ் வழங்கியுள்ள ஷரீஅத்தும் நபியவர்கள் போதித்துச் சென்ற வழிகாட்டலும் அதுதான்! இறந்தவர்களை மண்ணினுள் வைத்து நல்லடக்கம் செய்யவேண்டும் என்பதுதான்!

நபித்தோழர்களோ – இவ்வுலகம் முழுவதையும் ஈடாகக் கொடுத்து நபி(ஸல்) அவர்களை மரணத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முடியும் என்றிருந்தால் அவர்கள் அதைச் செய்திருப்பார்கள்! ஆனால் பரிசுத்த ஏக இறைவன் அல்லாஹ்தான் என்றென்றும் நிலைத்திருப்பவன். மனிதர்கள் அனைவரும் மரணம் அடைபவர்களே! பின்னர் அவனிடம் திரும்பிச் செல்ல வேண்டியவர்களே! அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பது போன்று :

‘(நபியே!) நீரும் மரணமாகத்தான் போகிறீர். இவர்களும் மரணமாகத்தான் போகிறார்கள்’ (39 : 31)

இந்த நபிமொழியிலிருந்து பல உண்மைகள் தெரியவருகின்றன:

◊ நபி(ஸல்) அவர்கள் மனிதர்தாம். ஏனைய மனிதர்களைப்போல் அவர்களுக்கும் நோய் வந்தது. பசிக்கும் தாகத்திற்கும் ஆளானார்கள். வெயிலும் குளிரும் அவர்களை வாட்டியதும் உண்டு! மரணம் அவர்களுக்கு ஏற்பட்டது., மண்ணினுள் வைத்து அடக்கமும் செய்யப்பட்டார்கள். மனிதர்களுக்கு ஏற்படுகிற எல்லா நிலைகளும் அவர்களுக்கும் ஏற்படத்தான் செய்தன. நபி(ஸல்) அவர்களே நவின்றது போன்று:

‘நான் உங்களைப் போன்று மனிதன்தான். உங்களுக்கு மறதி ஏற்படுவது போன்று எனக்கும் மறதி ஏற்படத்தான் செய்கிறது;’
(புகாரி, முஸ்லிம்)

◊ நபி(ஸல்) அவர்களின் விஷயத்தில் வரம்புமீறிச் செல்பவர்களுக்கு இந்நபிமொழியில் தெளிவான மறுப்பு உள்ளது. இவர்கள் நபியவர்களுக்கு சிறப்பும் உயர் அந்தஸ்தும் அளிப்பதாகச்  சொல்லிக் கொண்டு ஷிர்க் எனும் இணைவைப்பில் சிக்கி விடுகிறார்கள். நபியவர்கள் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இவர்கள் நபியவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்வது எவ்வளவு பெரிய தவறு. இரட்சிக்க வேண்டுமென நபியவர்களை அழைக்கிறார்களே! இன்னும் சிலர் இறைவனிடத்தில் எந்தப் பிரார்த்தனையும் செய்யாமல் நபியவர்களிடம் மட்டும் பிரர்த்தனை செய்கிறார்களே. இதனை ஷிர்க் என்று தீர்ப்பளிக்காமல் வேறென்ன சொல்வது?

மதீனாவில் – மஸ்ஜிதுந் நபவியில் இவர்கள் நபியவர்களின் கப்றை முன்னோக்கி நிற்கும்போது அவர்களை நீங்கள் பார்த்தால் தெரியும். ஆம்! தொழுகையில் அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவுடனும் பயபக்தியுடனும் நிற்பதுபோன்று, ஏன், அதை விடவும் அதிகப் பக்தியுடனும் பணிவுடனும் நபியுடைய கப்றை நோக்கி இவர்கள் நிற்பதை நீங்கள் காணலாம்! இரட்சிக்க வேண்டி நபியவர்களின் கப்றை நோக்கி இவர்கள் பிரார்த்தனை செய்வதை நீங்கள் கேட்கலாம்! (இவர்களின் வழிகேட்டிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இத்தகையவர்கள் தீன் – இறைமார்க்கத்தில் வழிதவறிப் போய்விட்டார்கள். இவர்களின் புத்தி பேதலித்து விட்டதோ என்றுதான் கருத வேண்டியதிருக்கிறது! தமக்குத் தாமே நன்மை செய்து கொள்ளவோ தீங்கைத் தடுக்கவோ எந்த அதிகாரமும் நபியவர்களுக்குக் கிடையாது எனும் நிலையில் பிறருக்கு அப்படிச் செய்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு எப்படி இருக்க முடியும்?

நபி(ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுவதைப் பாருங்கள்:

‘(நபியே! இவர்களிடம்;) கூறும்: அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றோ மறைவானவற்றை நான் அறிகிறேன் என்றோ உங்களிடம் நான் கூறவில்லை. நான் ஒரு மலக்கு என்றும் நான் உங்களிடம் கூறவில்லை. நானோ என்மீது இறக்கியருளப்படுகிற வஹியை மட்டும்தான் பின்பற்றுகிறேன்’ (6 : 50)

-ஆம்! நபியவர்கள் மலக்குகளைச் சேர்ந்தவர் அல்லர். அல்லாஹ்வின் ஓர் அடியார்தான் – மனிதர்தான்!

‘(நபியே!) கூறும்: உங்களுக்கு ஏதேனும் தீமையோ நன்மையோ செய்திடும் ஆற்றல் எனக்கில்லை. கூறும்: அல்லாஹ்வின் பிடியிலிருந்து எவராலும் என்னைக் காப்பாற்ற முடியாது. மேலும் அவனைத்தவிர வேறெந்தப் புகலிடத்தையும் என்னால் பெறமுடியாது! அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனுடைய தூதுச் செய்திகளையும் சேர்ப்பித்து விடுவதைத் தவிர வேறு எந்தப் பணியும் எனக்கில்லை’ (72 : 21-22)

மேலும் பாருங்கள்!- ‘(நபியே!) உம்முடைய மிக நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!’ (26 : 214) எனும் வசனம் நபியவர்களின் மீது இறக்கியருளப்பட்ட பொழுது நபி(ஸல்) அவர்கள் தம் உறவினர்களைப் பெயர் கூறி அழைத்து எச்சரிக்கை விடுத்தார்கள். தம் மகளையும் அழைத்து இவ்வாறு கூறினார்கள்:

‘ . . . முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! எனது செல்வத்தில் நீ எவ்வளவு விரும்பினாலும் கேள். தருகிறேன்! ஆனால் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது!’
(நூல்: புகாரி)

எந்த அளவுக்கு சொல்கிறார்கள், பாருங்கள்! அதுவும் யாரை அழைத்து? தம் உயிருக்கு உயிரான மகளை- யாருக்கு ஒரு சஞ்சலம் என்றால் நபியவர்களின் மனம் நோகுமோ அத்தகைய கண்மணி ஃபாத்திமாவை அழைத்தே இவ்வாறு சொன்னார்கள் எனில் மற்றவர்ளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை!

ஆக, இவற்றிலிருந்து ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது: அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து ஒருவரைக் காப்பாற்றுவதோ நோய்நொடிகள் அகற்றி உதவி செய்வதோ துன்பங்களை அகற்றுவதோ குழந்தைப் பேறுகள் அருளுவதோ நபியவர்களின் ஆற்றலுக்குட்பட்ட விஷயங்கள் அல்ல. அவர்களால் தனிப்பட்ட முறையில் இப்படி எதுவும் செய்ய இயலாது. இவை எல்லாம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளவை. எனவே அல்லாஹ்விடம் மட்டும்தான் எந்த ஓர் உதவியும் கேட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவனையே நாடவேண்டும். அவற்றைத் தருமாறு நபி(ஸல்) அவர்களிடம் பிரார்த்தனை செய்வது ஷிர்க் எனும் மன்னிப்பில்லாத இணை வைப்பாகும்! ஆம்! இது நபியவர்களைக் கடவுளாக்கும் கொடிய செயல். இந்தப் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது!

நபியவர்கள் மரணம் அடைந்தபொழுது ஃபாத்திமா(ரலி) அவர்கள் நபியவர்களின் நற்புகழை எடுத்துச் சொல்லி அழுதது மிகக்குறைவே! அது-அல்லாஹ் நிர்ணயித்த விதியை நொந்து அழுததாக ஆகாது!

மேலும் இந்நபிமொழியிலிருந்து தெரிய வருகிறது:

நபியவர்களது வாழ்நாளிலேயே அவர்களுடைய ஆண்மக்கள், பெண்மக்கள் அனைவரும் மரணம் அடைந்து விட்டர்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களைத் தவிர! அவர்கள் மட்டுமே நபியவர்களின் மரணத்திற்குப் பிறகும் உயிர் வாழ்ந்தார்கள்.

ஆகவே நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு வாரிசு சொத்து கிடைத்ததா? வேறு யார் யாருக்குக் கிடைத்தது? இதன் பதிலைத் தெரிந்து கொள்வது அவசியம்.

நபியவர்கள் விட்டுச் சென்றதில் இருந்து அனந்தரச் சொத்தாக யாருக்கும் எதுவும் கிடையாது. ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கோ அலீ(ரலி) அவர்களுக்கோ நபியவர்களின் மனைவியருக்கோ நபியவர்களின் பெரிய தந்தை அப்பாஸ்(ரலி) அவர்களுக்கோ வாரிசுச் சொத்து என்று எதுவும் இல்லை! வேறு எந்த வாரிசுகளுக்கும் இல்லை. ஏனெனில் நபிமார்கள் விட்டுச் செல்வது வாரிசு சொத்தல்ல, அதனை உறவினர் யாரும் அனந்தரமாகப் பெற முடியாது!

நபியவர்கள் அருளியதாக ஆதாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளது: ‘நபிமார்களாகிய எங்களிடம் இருந்து வாரிசுச் சொத்தாக யாரும் எதையும் பெற முடியாது. நாங்கள் விட்டுச் செல்வது அனைத்தும் தர்மமாகும்’ (புகாரி)

நபிமார்களுக்கு மட்டுமே உரிய இந்நியதியில் அல்லாஹ் ஒரு தத்துவத்தை வைத்துள்ளான். அதாவது, நபிமார்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை அவர்களுடைய உறவினர்கள் வாரிசுச் சொத்தாகப் பெற்றார்களெனில் இப்படி ஓர் ஆட்சேபனை எழுப்பப்படலாம்: நாங்கள் இறைவனின் தூதர்களாய் – நபிமார்களாய் வந்துள்ளோம் என்று இவர்கள் சொல்லிக்கொண்டு வந்தது இதற்காகத்தான் போலும்! அதிகாரத்தை அவர்கள் பெற வேண்டும். அவர்களுக்குப் பிறகு அவர்களின் சந்ததிகளுக்கும் அதிகாரம் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தானா! – இத்தகைய அவதூறுக்கும் பழிச் சொல்லுக்கும் இடம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நபிமார்களின் விஷயத்தில் அல்லாஹ் இந்த நியதியை ஏற்படுத்தியுள்ளான்.

எனவே நபிமார்கள் விட்டுச் சென்றது வாரிசுச் சொத்துக்கள் அல்ல. தர்மச் சொத்துக்கள். ஏழை எளியோருக்கே செலவு செய்யப்பட்டன!

கேள்விகள்

1) நபியவர்களுக்கு மரணத் தருவாயில் இரு மடங்கு காய்ச்சல் கொடுக்கப் பட்டதேன்? அதில் இறைவன் நாடிய தத்துவம் என்ன?

2) ஃபிர்தௌஸ், வஸீலா எனும் வார்த்தைகளை விளக்கவும்.

3) நபியவர்களை அடக்கம் செய்து அவர்களின் உடலின் மீது மண்ணை அள்ளிப்போட்டது உங்கள் மனத்திற்குத் திருப்தியாக இருந்ததா? என்று ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொன்னதன் கருத்து என்ன?

4) நபி(ஸல்) அவர்கள் மனிதர்தாம் என்பதை குர்ஆன் – ஹதீஸின் ஆதாரங்களுடன் விவரிக்கவும்.

5) நபி(ஸல்) அவர்களின் விஷயத்தில் வரம்பு மீறிச் செல்பவர்களுக்கு இந்நபிமொழியில் தக்க மறுப்பு உள்ளதென்பதை ஆதாரங்களுடன் விளக்கவும்.

6) நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் சொத்துக்களை யார் யார் வாரிசுச் சொத்தாகப் பெற்றார்கள்?

7) அறிவிப்பாளர் வரலாறு சுருக்கமாக எழுதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *