Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு » இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கெதிரான பௌத்த போராட்டம்

இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கெதிரான பௌத்த போராட்டம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி
முஸ்லிம்களுடைய வியாபாரம் மற்றும் மார்க்க ரீதியான கடமைகளுக்கு எதிர்ப்புப் தெரிவிப்பது போலவே கல்வி முன்னேற்றத்திற்கும் எதிரான எதிர்ப்புக்களை இன வாதிகள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

முஸ்லிம்களுடைய விகிதாசாரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது கல்வி அறிவிலோ பொருளாதார ரீதியிலோ முஸ்லிம்கள் வளர்ச்சியடைந்தது போதாது என்பதே உண்மை. ஆனால் பெரும் பான்மை சமூகத்தின் பார்வையில் பாரக்கையில் சின்னஞ்சிறிய கூட்டமாகிய முஸ்லிம்களுடைய வளர்ச்சி பெரும் வளர்ச்சியாகவே தென்படுகிறது.

100பேர் கொண்ட கூட்டத்தில் ஓரிருவர் நல்லது செய்தாலோ கெட்டது செய்தாலோ பெரிதாக தென்படாது. அதே வேலையை 10 பேர் கொண்ட கூட்டத்தில் ஒருவர் செய்யும் போது அது பெரும் காரியமாக காட்சித்தரும். இத்தகைய நிலையே இன்று நாட்டில் காணப்படுகிறது.

முஸ்லிம்களுடைய கல்விரீதியான பல பிரச்சினைகள் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. வளப்பற்றாக்குறை ஆசிரியர் பற்றாக்குறை ஆளுமைளுயுள்ள அதிபர்கள் இன்மை பாடசாலை தரங்களிலுள்ள குறைப்பாடு போன்ற பல பிரச்சனை கள் ஆய்வுரீதியாக புள்ளி விபரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தனை ஆய்வுகளையும் அரசாங்கம் கையேற்று பத்திரமாக பூட்டிவைத்துள்ளது. உறுப்படியான எந்த தீர்வினையும் தரவில்லை.

சிங்கள பாடசாலைகளிலும் முஸ்லிம் பிள்ளைகளுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் இஸ்லாமிய கலாசாரங்கள் பேணி செல்வதற்கு அனுமதிப்பதில்லை. வலுக்கட்டாயமாக மத ரீதியான அனுஷ்டானங்களுக்கு முஸ்லிம் மாணவ மாணவிகளை உட்படுத்துகிறார்கள். இஸ்லாமிய பாடங்களைப் படிப்பிப்பதற்குக் கூட ஆசிரியர்கள் இன்றி பிள்ளைகள் தவிக்கிறார்கள்.

முஸ்லிம் பாடசாலைகளில் போதிய முன்னேற்றம் இல்லாத வேளையிலும் கஷ்டப்பட்டு படித்து முன்னே வரக்கூடிய பிள்ளைகளின் புள்ளி விபரங்களைப் பார்த்து மொத்த முஸ்லிம் சமூகமும் முன்னேறி சிங்கள சமூகத்தை பின்தள்ளியுள்ளது என்பது எவ்வளவு பெரிய அபாண்டம் அநியாயம்.

கடைசியாக நடந்த (Low College) சட்டக் கல்லூரி பரீட்சையில் முஸ்லிம்கள் ஆரம்ப இடங்களில் –அதிக புள்ளிகளுடன்-வெற்றிப் பெற்றுள்ளார்கள் என்பதை கண்டவுடன் இனவாதக் குழுக்கள் சட்டக் கல்லூரி பரீட்சையின் பெறுபேறுகளை ஏற்க முடியாது. அவைகளை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும். இந்த புள்ளிகளின் அடிப்படையில் நுழைவுச் சீட்டை வழங்ககக் கூடாது என பத்தரிகை மாநாடுகள் நடாத்தி ஊர்வலங்கள் சென்று கோஷங்கள் எழுப்பி போராட்டங்கள் நடாத்தினர். அது மட்டுமன்றி சட்டக் கல்லூரிக்குள் நுழைந்து அதிகாரிகளுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் துரத்தி துரத்தி அடித்த காட்சிகளை மீடியாவில் பார்க்கும்போது இவர்களுடைய போக்கு எத்தகைய விளைவினை கொண்டதாக இருக்கும் என்பது தெளிவாகிறது.

தாடிவைத்த ஒரு அதிகாரியை விரட்டிச் சென்று அடிக்கும் போது “தம்பியா, தம்பியா” என்று கூறியே பௌத்த பிக்குமாறு அடித்தனர். கலவரம் முடிந்த பின் பார்த்த போது அவர் முஸ்லிமல்ல அவரும் சிங்கள பௌத்தர் என்று தெளிவாகியது.

இத்தனை அட்டகாசங்களுக்குப் பின்னும் அரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்று சட்டக் கல்லூரிக்கான பெறுபேறுகளை இடைநிறுத்திவிசாரனைகள் நடாத்த குழுக்களை நியமித்துள்ளது.

அரசுக்கெதிராக மக்கள் தங்களுடைய உரிமைகளை கோரி ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்யும் போது சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்வதாக கூறி அவ்வார்பாட்டங்களுக்கு தடை விதித்து கண்ணீர் புகையடித்து அடிதடிகள் நடாத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செயது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். ஜனநாயகத்திறகு விரோதமாக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி சட்ட ஒழுங்குகளுக்கு முரணாக நடக்கும் இவ் வினவாத குழுக்களுக்கெதிராக இது வரை எத்தகைய நடவடிக்கைகளயும் அரசாங்கம் மேற்கொள்ளாது ஏன்? காவி ஆடைகளுக்கு அரசு அஞ்சுகிறதா அல்லது ஆதரவு தெரிவிக்கிறதா?

வருடாந்தம் புலமை பரிசில் பரீட்சை சாதாரண மற்றும் உயர்தர (O|L A|L) பரீட் சையின் பெறுபேறுகள் வெளியாகும் போது பெரும்பான்மை அசமூகத்தினர் அதிகப் படியான புள்ளிகளுடன் வெற்றிபெற்றிருப்பதை காண முடிகிறது. அப்படியாயின் இதிலும் மோசடிகள் நடக்கப் பெற்றுள்ளது மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று சிறுபான்மை சமூகம் கோரினால் அரசு செவியேற்குமா?

அரசாங்கம் நியமித்த நான்கு குழுக்கள் தங்களுடைய விசாரணைகளின் அறிக்கைகளை தற்போது கையளித்துள்ளன. இவ்வறிக்கையின்படி சட்டக் கல்லூரி பரீட்சையில் மோசடிகளோ அல்லது பரீட்சை தாள்கள் வெளியானதாகவோ எவ்வித ஆதாரங்களும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வறிக்கையின் செய்தியை அறிந்தவுடன் அதே இனவாதிகள் பத்திரிகை மாநாட்டை கூட்டி பரீட்சை தாள்களை ( வினா பத்திரங்களை) ஆங்கில மொழியில் தயாரித்து பிறகு அதனை சிங்கள மொழியில்மொழி பெயர்த்துள்ளனர். இதனால் சரியான அர்த்தம் புரியாத சில வரிகள் இடம் பெற்றுள்ளதனால் சிங்கள மாணவர்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகி புள்ளிகளை இழந்துள்ளனர். அதற்கான 17 புள்ளிகளை அரசு வழங்க வேண்டும் என தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

எந்த நியாயமும் மனிதாபிமானமுமின்றி அநியாயமாக குற்றங்களை சுமத்தி பெரும் புரளிகளை கிளப்பியதற்காக இவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்வி குறியே எனினும் சிங்கள சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய காரியம் இது. முஸ்லிம் மாணவ மாணவிகள் மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கப் பெற்றது சந்தோசமான செய்தி. அல்ஹம்துலில்லாஹ்.

சட்டம் ஒழுங்கு எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இல்லையேல் நாடு குட்டிச்சுவராகி விடும்.

‘விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வுக்காக நீங்கள் உறுதியான சாட்சிகளாக இருங்கள். மக்களில் ஒரு சாரார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அக்கிரமம் செய்யும்படி உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருக்க மானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 5:08)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *