Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » இலங்கையில் இனவாதம் பின்னனி யார்? நடக்கப் போவது என்ன?

இலங்கையில் இனவாதம் பின்னனி யார்? நடக்கப் போவது என்ன?

– இப்னு ஹவ்வா
பொதுபலசேனா எனும் சிங்கள இன, மத வாத அமைப்புக்கு சிங்கள பௌத்த மக்களின் பலம் இருக்கின்றதோ இல்லையோ பலமான பின்புலம் உண்டு என்பது மட்டும் நிச்சயமாகும்.

83 ஜூலைக் கலவரம் அல்லது 1915 கலகெதரக் கலவரம் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இன மதவாதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்பட்டு வரும் இந்த அமைப்புக்கு இஸ்ரேல், நோர்வே போன்ற நாடுகளின் சதி நடவடிக்கை பின்னணியில் இருப்பதாக முஸ்லிம்களில் பலரும் நம்புகின்றனர்.

மங்கள போன்ற எதிர்க் கட்சி அரசியல் தலைவர்கள் பொதுபல சேனாவுக்குப் பின் புலமாக அரசே இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். நடக்கும் சில நிகழ்வுகள் இச் சந்தேகத்துக்கு வலுவூட்டுவதாகவே அமைந்துள்ளது.

அனுராதபுரத்தில் சியாரம் உடைக்கப்பட்டது முதல் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட எந்த தாக்குதல்கள், வன்முறைகள், வரம்பு மீறல்கள், மத நிந்தனைகளின் போதும் இதுவரை ஒருவர் மீது கூட எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெதுபலசேனாவின் உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றது. ஹலால் விவகாரம், பயங்கரவாதத் தடைச் சட்டம் (இஸ்லாமும், முஸ்லிம்களும் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்களே! இருப்பினும் இந்தியாவில் தடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது போன்று இங்கும் இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதே முஸ்லிம்களின் அச்சம்!) பள்ளிவாயல்களைக் கண்காணிக்கக் குழு புதிய சுற்று நிரூபம் என்பவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

பாராளுமன்றத்தில் நிமல் சிரிபாலடீ சில்வா இலங்கையில் எந்தப் பள்ளிவாயல்களும் தாக்கப்படவில்லை என பகிரங்கமாக பச்சைப் பொய்யைக் கூறுகின்றார். ஒரு தீவிரவாத அமைப்பின் செயற்பாட்டை மூடி மறைக்க ஒரு அரச அமைச்சர் எதற்காக முனைய வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி அமைச்சர் அப்படிப் பேசும் போது முஸ்லிம்கிள் உரிமைக் குரலாக பாராளுமன்றத்தில் ஒளிக்கச் சென்றவர்கள் ஊமைகளாக இருந்தமை வெறுப்பூட்டும் நிகழ்வாகும். கட்சிகளைக் களைந்து விட்டு இவர்கள் அரச கட்சியுடன் சேர்ந்தே செயற்படலாம். பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பங்களாளிகள் என்ற வகையில் கூட்டுப் பொறுப்பு இருப்பதை நாம் மறுக்கவில்லை. தனிக்கட்சியாக செயற்படுவோர் கூட மௌனம்தான் காக்க வேண்டும் என்றால் இப்படியொரு அரசியல் தேவையில்லை. தனித்து அரசியல் கட்சி என்ற சிந்தனைக்காக முஸ்லிம் சமூகம் எவ்வளவு இழந்துள்ளது என்று எண்ணிப் பார்க்கும் போது இவர்களின் இந்த கையாலாகாத தனத்தைப் பார்த்து காரித் துப்ப வேண்டும் போலிருந்தது. ஆனால் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமித்த குரலில் பேசி அந்த வெறுப்பையும் வேதனையையும் சற்று தனித்துவிட்டனர்.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் ஆயுதம் கேட்கக் குனூத் ஓருகின்றீர்கள் என்ற கேள்வியும் மங்களவின் கூற்றில் உண்மை இருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இராணுவப் புலனாய்வுத் தகவல்களை வைத்து முடிவுகள் செய்ய வேண்டிய நாட்டுத் தலைவர் நாட்டில் குழப்பத்தையும் சட்ட ஒழுங்கையும் சீர்குழைக்கத் துடிக்கும் ஒரு இனவாதக் குழுவின் கருத்துக்களின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார் என்பது வேதனையான விடயமே! எவ்வளவு பிரச்சினை நடந்தும் கூட முஸ்லிம் சமூகம் பொறுமை காத்ததையிட்டு முஸ்லிம்களை அவர் பாராட்டியிருக்க வேண்டும்.

இந்தக் கேள்வியின் மூலம் இலங்கை முஸ்லிம்களிடம் ஆயுதம் இல்லையென்பதை மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த நாட்டின் இறைமைக்கு சவால் விடாத சமூகம் முஸ்லிம் சமூகம் மட்டுமே! தமிழ்-சிங்கள இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் இதைச் செய்துள்ளனர். ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் சமூகம் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகக் கிழர்ச்சி செய்ததில்லை எனும் போது இப்போது எதற்காக முஸ்லிம்கள் குணூத் ஓதி ஆயுதம் கேட்க வேண்டும்? அப்படியென்றால் முஸ்லிம்களுக்கு இதுவரை ஏற்படாத பாதிப்பு இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதுதானே இந்தக் கேள்வியின் அர்த்தமாகின்றது?

அடுத்து பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதி தம்முடன் மூன்று மணி நேரம் பேசியதாகவும், தமக்கு ஆசி வழங்கியதாகவும், ஐந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், கர்ப்பத் தடை வயது எல்லையை உடனே ஜனாதிபதி நீடிக்குமாறு கூறியதாகவெல்லாம் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். இவையெல்லாம் இந்தக் குற்றச் சாட்டுக்கு ஓரளவு உண்மைப் படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இதே வேளை ஆளும் கட்சி சார்ந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இது அரசுக்கு எதிரான சதி நடவடிக்கை என்று கூறி வருகின்றனர். இலங்கை ஜெனீவாவில் பிரச்சினையைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில் முஸ்லிம்லிம்களுக்க எதிரான ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டால் இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்து ஆடுகின்றது, அங்கே சிறுபான்மையினர் உரிமை மறுக்கப் படுகின்றது என்பது உறுதி செய்யப்பட்டுவிடும். இதன் மூலம் இந்த அரசின் மீது கலங்கம் கற்பிக்கவும் இலங்கையை சர்வதேச சட்டத்தின் முன் மாட்டிவிடவும் அரசின் எதிரிகளும் நாட்டின் எதிரிகளும் முற்படுகின்றனர் என ஆளும் கட்சி சார்பான அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். இது உண்மையென்றால் இவர்களை விட இந்த உண்மையை கிட்டத்தட்ட ஐம்பது வருட அரசியல் அணுபவமுள்ள அரசியல் ஞானியான ஞனாதிபதி அறிந்தே இருப்பார். அப்படியாயின் இந்த அமைப்பை முடக்கிவிடும் முதல் நபராக அவர் இருந்திருப்பார்.

இருப்பினும் இவ்வளவு நடந்தும் பெறுத்த சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துவதாகவே தெரிகின்றது. கலவரங்கள் இல்லாத ஆட்சியென்பது மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு இருக்கும் தனிச் சிறப்பாகும். அரசு அந்த சிறப்பம்சத்தைக் கட்டிக் காக்கும் என்றே நம்புகின்றோம். அரசு அவர்கள் மூலம் வன்முறை வருவதை அதே வேளை அவர்களையும் தடுக்க ஒரு அனுகுமுறை இவர்களைத் தடுத்தால் ஆணா ஓணா என வளர்ந்துவிடுவார்கள் என்ற அரசியல் உள்நேக்கத்திற்காகக் கடைப்பிடித்து வருவதாக அரச சார்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.

இந்தத் தீவிரவாத அமைப்பின் பின்னணி யாராக இருந்தாலும் இவர்களால் நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்றவர்கள் முஸ்லிம்கள் மட்டுமே என்பது உறுதியாகும். எனNவு, இது குறித்து தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாமே உள்ளோம்.

இந்த நாட்டு பௌத்த மக்களில் பெரும்பாலானவர்கள் நல்லவர்களாவார்கள். அவர்கள் மூலமாகவே இந்தப் பிரச்சாரத்தை செயலிழக்கச் செய்யும் பொறிமுறைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நல்ல பௌத்த மத குருக்கள், சிங்கள அறிஞர்களினூடாக இவர்களது தவறான நிலைப்பாடு குறித்து பௌத்த சமூகத்திற்கு விளக்கமளிக்க முனைய வேண்டும்.

இதே வேளை எமக்குள் இருக்கும் பிளவுகளை மறந்து ஒன்றுபட்டு இதனை எதிர் கொள்ள முனைய வேண்டும். ஈமானின் மூலமும், ஒற்றுமையின் மூலமும் இஸ்லாமிய பழக்க வழக்கங்கள், நம்பிக்கை நாணயத்தின் மூலமும் இச் சதிவலையை முறியடிக்க வேண்டும்.

இதே வேளை முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலவர சூழல் உருவாக்கப்படலாம் என்ற ஐயம் இருந்தால் முஸ்லிம்கள் (நிர்ப்பந்தம் காரணமாக,) தமது வர்த்தக நிலையங்களைக் காப்புறுதி செய்து கொண்டால் அழிவு வந்தாலும் அந்த அழிவை அவர்களே சுமக்கக் கூடிய நிலையை ஏற்படுத்தலாம்.

இந்த மதவாத அமைப்பின் செயற்பாடு முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்கும் பாதிப்பாகவே அமையப் போகின்றது.

பௌத்த மதம்:
இவர்கள் பௌத்த மத எழுச்சிக்காகப் பாடுபடப் போவதில்லை. அவர்கள் பௌத்தம் பற்றிப் பேசாமல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பது குறித்துத்தான் பேசி வருகின்றனர். இஸ்லாமிய மூல தர்மத்தை ஒழிப்பதுதான் தமது நோக்கம் என்று தெளிவாவே கூறிவிட்டனர். இஸ்லாமிய மார்க்கத்தை ஒழிப்பதென்பது எந்த வகையில் பௌத்த மதத்திற்கு எழுச்சியாக அமையும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம்கள் தீவிரவாதிகளானால் அவர்கள் இஸ்லாத்திற்குத் துரோகிகளாகின்றனர். இஸ்லாத்தைக் களங்கப்படுத்துகின்றனர். இவ்வாறே பௌத்த தீவிரவாதிகளால் பௌத்தம் களங்கப்படப் போகின்றது. இந்த வகையில் இவர்கள் பௌத்த மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றனர். “கோ தம்பிலா” என சட்டக் கல்லூரிக்குள் நுழைந்து கொடையால் அடிப்பதெல்லாம் எந்த வகையிலும் அமைதியைப் போதிக்கும் மதமான பௌத்தத்திற்குப் பெருமையைத் தேடித் தராது. பொறாமை கொள்ளக் கூடாது என்பது பௌத்த மதத்தின் அடிப்படைப் போதனையாக இருக்க, இவர்கள் பொறாமையை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்காதே எனப் போதித்து வருகின்றனர்.

பௌத்த மதத்தின் உயர்ந்த தத்துவங்களைக் காலுக்குக் கீழ் போட்டு மிதித்து விட்டே இவர்கள் இந்த இனவாத விஷத்தைக் கக்கி வருகின்றனர். எனவே, இவர்களால் ஒரு போதும் பௌத்தம் எழுச்சி பெறாது பௌத்த சித்தாந்தம் சிதைக்கப்படப் போகின்றது. உண்மையான பௌத்தர்கள் நிச்சயமாக இது குறித்து கவலை கொள்ளவே செய்வர்.

கிறிஸ்தவ சமூகம்:
முஸ்லிம்களுக்கு எதிரான இவர்களது தீவிரவாதம் இத்துடன் நிற்காது. தூண்டி விடப்பட்ட இந்தத் தீவிரவாதத்திற்கு அடுத்து இறையாகப் போவது கிறிஸ்தவமாகும். மதமாற்றம், சமூகப் பணிகள், ஆலயம் அமைத்தல் என பல்வேறு அம்சங்கள் முஸ்லிம்களைப் போன்றே அவர்களும் குறிவைக்கப் படுவார்கள்.

அடுத்தவர்களுடன் பிரச்சினை ஓரளவு தீர்ந்துவிட்டால் இந்தத் தீவிரவாத பௌத்தர்கள் மிதவாத பௌதத்திற்கு எதிராகவும் செயற்பட ஆரம்பிப்பார்கள். எனவே, இவர்கள் இப்போதைக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே பிரச்சினையென்றாலும் இவர்கள் நாட்டுக்கே பிரச்சினையாக மாறுவார்கள்.

நாட்டுக்கும் அரசுக்கும்:
இவர்கள் கக்கும் இனவாத விஷக் கருத்துக்களால் இலங்கை அரசு ஒரு இனவாத அரசு என்ற எண்ணம் சர்வதேச மட்டத்தில் உருவாகுவது மட்டுமன்றி உருவான கருத்துக்களும் உறுதி செய்யப்பட்டுவிடும். இலங்கையில் சிறுபான்மையினருக்கு உரிமைகள் இல்லை என்ற எண்ணமும் ஏற்படும். இதனால் எமது தேசத்தின் நற்பெயருக்கே கலங்கள் ஏற்படும். இந்த வகையில் இவர்கள் தேசத் துரோகிகளாகின்றனர்.

இலங்கை முஸ்லிம் நாடாக மாறும், சிங்களவர்களை முஸ்லிம்களைக் கொல்லுவார்கள் என்றெல்லாம் இவர்கள் பிரச்சாரம் பிரச்சாரம் செய்கின்றனர். பர்மா உலகில் உள்ள ஒரு பௌத்த நாடு. அங்கே முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்கள். இலங்கையிலும் அப்படி நடந்தால் பௌத்தம் அடுத்த மக்களைக் கொல்லச் சொல்கின்றது என்ற தப்பான எண்ணம்தான் ஏற்படும். அந்த வகையிலும் இது பௌத்த தர்மத்தைப் பாதிக்கும்.

பொதுவாக தீவிரவாதத்திற்கு ஒரு சிறப்பான பண்பு உள்ளது. அது வளர்த்தவர்கள் மார்பில்தான் இறுதியாகப் பாயும். இந்த வகையில் இந்தத் தீவிரவாதம் வளர்ந்தால் பௌத்தம், சிங்கள இன நலன் என்ற பெயரில் தீவிரவாதத் திட்டங்களை முன்வைப்பார்கள். அது நடைமுறைச் சாத்தியமற்றதாகும். நடைமுறைப்படுத்த முடியாதவையாகவும் இருக்கும். அப்போது அரசு அவற்றைப் புறக்கணிக்;கும் போது அரசை எதிர்க்க ஆரம்பிப்பார்கள். தமக்குள்ள மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் செய்யப் பார்ப்பார்கள். அப்போது அது இலங்கை அரசுக்கு தீராத தலைவழியாக மாறும். இதே வேளை எந்தச் செயலுக்கும் ஒரு எதிர்விணை உண்டு என்ற அடிப்படையில் இவர்களின் தீவிரவாதம் உருவாக்கும் எதிர்விணையால் நாட்டின் அமைதியும் நிம்மதியும் நிச்சயம் கலங்கப்படும். அது முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாக இருக்காது முழு நாட்டுக்கும் உரியதாகவே இருக்கும்.

எனவே, இத்தகைய இனவாத செயற்பாடுகள் முடக்கப்படாத வரை இலங்கை நாட்டுக்கு ஈடேற்றம் இல்லையென்பதை அனைவரும் அறிந்து செயற்பட முன்வர வேண்டும்.

4 comments

  1. alhamdulillah inda katturaiyai singala molimoolam pirasuriththal nanraka irukkum

  2. Assalamu Alaikkum.
    I think the Shaikh’s below said quote to be revised;

    “இதே வேளை முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலவர சூழல் உருவாக்கப்படலாம் என்ற ஐயம் இருந்தால் முஸ்லிம்கள் (நிர்ப்பந்தம் காரணமாக,) தமது வர்த்தக நிலையங்களைக் காப்புறுதி செய்து கொண்டால் அழிவு வந்தாலும் அந்த அழிவை அவர்களே சுமக்கக் கூடிய நிலையை ஏற்படுத்தலாம்.”

    We should depend on Allah Almighty not on insurance company. Allah has given this wealth from nothing and we should ask Allah to protect it.

    Allah is sufficient.
    Jazakallah.

  3. can I translate the article into English??

  4. நிர்வாகி

    Everybody can translate for community support purpose. But, showing source information and author name is very important.

    But, Permission is compulsory from Author, when it goes for business purpose only.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *