Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » எதிர்கால முத்துக்கள்

எதிர்கால முத்துக்கள்

– பர்சானா றியாஸ் –

ஊர்ப் பாடசாலையில் பெற்றோருக்கான கூட்டம் நடைபெற்றது. தரம் ஆறிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோரைப் பிரதானப்படுத்தி, மாணவர்களின் நடத்தைகள் தொடர்பான கலந்துரையாடலாக அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. நீண்ட கால இடைவெளியின் பின்னரான இவ்வேற்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெற்றோர்களைக் காணக்கிடைத்தது.

ஆசிரியரும் பெற்றோரும் அடிக்கடி சந்தித்து மாணவர்கள் தொடர்பான நடத்தைக் கோலங்களை கலந்துரையாடுவது காலத்தின் தேவையே. பிள்ளைகளுடன் அதிக நேரத்தை கடத்துபவள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தாய்க்கும் இது மிகத் தேவையானதொன்றும்கூட.

மாணவ பருவத்தினர் அனைவரையும் சிறுவர் என்ற வகுதிக்குள் அடக்கி அவர்களுக்காக இயற்றப்பட்ட அரசாங்கத்தினது சுற்றுநிரூபங்கள் மாணவர்களின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்தி இருப்பதென்னவோ உண்மைதான். இருப்பினும், அதே சுற்றுநிரூபம் மாணவர்களை ஆசிரியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துள்ள அதேவேளை, ஓர் அசட்டு தைரியத்தையும் பெரியோர்களை எதிர்த்துப் பேசும் அளவிற்கு சிந்தனைத் தூண்டலையும்
அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளதை மறுப்பதற்கில்லை.

மாணவர்கள் தொடர்பாக ஆசிரியர்கள் முன்வைத்த கீழ்க் குறித்த குற்றச்சாட்டுகள் அவதானத்தில் கொள்ளப்பட வேண்டியன.

  • சில மாணவர்கள் ஆடை நாகரீகத்திற்கு உள்வாங்கப்பட்டிருப்பதை, தாய்மார்கள் ஏன் கண்டுகொள்வதில்லை?
  • சில மாணவர்களின் முடி வெட்டுவதில் வெளிப்படுத்தும் அகோர நாகரீகத்தை தந்தையர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை?
  • அத்துடன், மாணவர்கள் பிழையான கைபேசிப் பாவனைக்கு ஆளாவதை பெற்றோர் ஏன் கண்டுகொள்வதில்லை?

போன்ற பல கேள்விகளை முன்வைத்து ஆசிரியர் தரப்பு குற்றஞ் சாட்டுகிறது.

ஆனால், தங்கள் உபதேசங்களைப் பிள்ளைகள் கவனத்தில் எடுப்பதில்லையென பெற்றோரின் மௌனம் பறைசாற்றுகிறது. கலந்துரையாடலின் இறுதியாக ஒழுக்க விடயத்திற்கு போலிஸ் அதிகாரியின் உதவியையும் நாடுவதென்ற முடிவும் பெறப்பட்டது. இப்பிரச்சினை பெருமளவு எல்லாப் பாடசாலைகளுக்கும் பொதுவானதொன்றாகி விட்டது.

பிள்ளையின் ஆசிரியையுடன் தாய் கொண்டிருக்கும் உறவு, அல்லது ஆசிரியருடன் தந்தைக்குள்ள உறவு மற்றும் மார்க்க விடயங்களில் பிள்ளைக்கு ஊட்டப்பட்ட அறிவு, சூழலில் பிள்ளை பெற்றுக்கொண்ட பாடம் போன்றவை பிள்ளையின் பண்பாட்டியலைத் தீர்மானிப்பவை.

ஆனால், கூட்டத்தின்போது, எனக்குப் பக்கத்தில் இருந்து ஒருதாய் தனக்குள் முணுமுணுத்ததை வைத்துப் பார்க்கும்போது, இவை எல்லாவற்றையும் தாண்டி சிலதை மீள்பரிசீலனை செய்யவேண்டியிருக்கிறது.

அதாவது, சிறுவர் தொடர்பாக இவ்வளவு கரிசனையான சட்டங்களை கவனமாகப் பார்த்து இயற்றிய அரசாங்கம் அவர்களின் படிப்பு நேரங்களில் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களை தாராளப்படுத்தியுள்ளது ஏன்? மாலைநேர விளையாட்டின் பின் பாடங்களை மீட்ட உட்காரும் பிள்ளைகளுக்கு முன்னால் தொலைக்காட்சியைத் திறவாதீர்கள் என பெற்றோருக்கு அறிவுறுத்துகிறார்கள். அப்படியெனில், யாருக்காக அந்தப் பொழுதுபோக்கு அம்சங்களை ஒளிபரப்புகிறார்கள்? குறைந்த பட்சம் அன்றைய தினசரிச் செய்திக்காகவேனும் இருக்கட்டும் என்று வீட்டிலிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டி தொல்லைக் காட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? அந்தத் தாய் அங்கலாய்த்துக் கொண்டதைப்போல தொலைக்காட்சிகளின் திட்டமிடப்படாத நேரசூசியா? அல்லது பொறுப்பாளர்களின் பாராமுகமா? அப்படியானால், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சிறுவருக்கான சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்கும் நிபந்தனைக்கு அப்பாற்பட்டவர்களா?

ஆசிரியர்களின் அடுத்த குற்றச்சாட்டு மாணவர்களின் அளவுக்கு மீறிய கைப்பேசிப் பாவனை பற்றியது.

இரவு நேர டேட்டாச் (Data) சலுகைகளின் பாரதூரங்கள் பற்றி ஏன் யாரும் சிந்திப்பதில்லை. தூக்கத்தில் கழிய வேண்டிய மாணவர்களின் இரவுப் பொழுதுகள் விழித்திருந்து வீணாக்கப்படுகிறது.

இரவு நேரக் கடமையில் ஈடுபடும் நிறுவனங்களுக்காகத்தான் இரவு டேட்டா வழங்கப்படுவதாகவும் அது தவிர்க்க முடியாத ஒன்று எனவும் வைத்துக்கொள்வோம்.

ஆனால், அதை மாணவர்களுக்கும் பொதுமைப்படுத்தி வழங்குவதன் நியாயம் என்ன? இரவு டேட்டா தேவையுள்ள நிறுவனங்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாய் வழங்குவது பற்றியும் அது மாணவர்களைப் பாதிக்காதவாறு திட்டமிட்டுச் செயற்படுத்துவது பற்றியும் ஏன் சிந்திப்பதில்லை?

சிறுவர்களின் உரிமைகளைப் பேணுவதில் தொடர்பாடல் நிறுவனங்களின் முக்கியத்துவம் உணரப்படாதிருப்பதும் மாணவர் சமுதாயத்திற்கு ஏற்பட்ட துரதிஸ்டமே.

இத்தனை இலகு வழிகளையும் மாணவர்களுக்குத் திறந்து விட்டு, ஆசிரியர்களும் பெற்றோர்களும் மட்டும் சட்டத்தால் கட்டப்பட்டதை எந்த வகுதிக்குள் அடக்குவது? அவர்களின் இந்த இயலாமையின் வெளிப்பாடு யாரை நொந்துகொள்வதெனத் தெரியாமலே கூடிக் கலைகின்றனர்.

பெற்றெடுத்த அன்னை இருந்தும், வளர்த்தெடுக்க தந்தையிருந்தும் அறிவூட்ட ஆசிரியர் இருந்தும் அனுபவம் சொல்லிக்கொடுக்க உறவுகள் இருந்தும் பிள்ளையின் ஒழுக்கம் பேணலுக்கு கூடவே ஒரு போலிஸின் உதவியும் பெறப்படுவது துரதிஸ்டமானதே. ஆனால், அதுதான் இன்றைய காலத்தின் தேவையாகிப் போயிருக்கிறது.

எது எவ்வாறாயிருப்பினும், பிள்ளைகளின் மீது தாய்மாரின் அக்கறை பிரதானமாக வேண்டப்பட்டதொன்றே. நேரகாலத்தோடு தூக்கத்திற்குச் செல்வதையும் அதிகாலை எழுதலையும் இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. அதை விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளவும் செய்கிறோம். ஆனால், செயற்படுத்துவதில் கோட்டை விடுகிறோம்.

சூழலில் நடக்கும் எதுவாயினும் அதை இஸ்லாத்தின் கண்ணாடி கொண்டு நோக்கி, அதுதொடர்பான வரலாறுகள், நபிமொழிகள் மற்றும் இறைமொழி என்பவற்றினை பிள்ளைகளுக்கு ஊட்டுவது தாய்மாரின் பொறுப்பாகிறது. இஸ்லாமிய விழிப்புணர்வு வகுப்புகள் தற்போது கிராமம்வரை ஊடுருவி இருப்பதால், அவை தாய்மாருக்கு உகந்த வழிகாட்டியாகிறது.

மேலும், பிள்ளைகளை கௌரவிக்கும் முகமாக ஆலோசனை கேட்பதும், கருத்துக்களுக்கு மதிப்பளித்தலும் கூட அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமன்றி,

“நான் சமுகத்தின் ஒரு முக்கிய பாத்திரமாக இருக்கிறேன்… தவறுகளில் இருந்து நான் விலகியிருந்தால்தான் மரியாதையை தக்க வைக்கலாம்…”
என்ற உள்ளுணர்வை பிள்ளைக்கு வழங்கும்.

  • நல்ல வாழ்க்கை பாடங்கள் கூறும் நூல்களை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குதல்…
  • சந்தர்ப்ப துஆக்களை பேணுகிறார்களா என்பதில் கவனமாக இருத்தல்…
  • அவர்களின் நட்பு ஆரோக்கியமானதா என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்தல்…

போன்றவற்றை நடைமுறைப் படுத்தினாலே தாயின் பெரும் கடமை நிறைவேறிவிடுகிறது.

அடுத்து ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் “கண்ணுக்கு தெரியாத கரமாக” இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆசிரியர் என்பதை தொழிலாகவன்றி ஒரு சேவையாக நோக்குவோருக்கே அதன் திருப்தியை உணர முடியும். அவ்வாறான ஆசிரியர்களின் அனுபவங்களை கேட்டறியும்போது அவர்கள் மாணவர்களுக்காக செய்யும் அளப்பெரும் தியாகங்களை அறிய முடியும். அவ்வனுபவங்களை பெற்றோரிடம் பரிமாற்றம் செய்வதற்கு இவ்வகையான பெற்றோர் -ஆசிரியர் கூட்டங்களே வழிசமைக்கின்றன.

மேலும், பெண் ஆசிரியைகள் ஆடை விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். இது வளர்ந்த மாணவர்களுக்கிடையில் உணர்வு ரீதியான நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

அத்தோடு, கற்பித்தலில் புதுமை செய்வது ஆசிரியர்களுக்கு வெற்றியைத் தரக்கூடியது. அது நான் அனுபவத்தில் கண்ட உண்மையும்கூட. இரு தசாப்தங்களுக்கு முன்னர் உயர்தரம் எழுதிவிட்டு வீட்டில் இருந்த எனக்கு எனது ஊர் பாடசாலையில் சில காலங்கள் கற்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தரம் ஆறு மாணவர்களுக்கு சித்திரம் கற்பித்தேன். நான் அவர்களுக்கு ஒருகதையைக் கூறிவிட்டு அதில் தத்தமக்குப் பிடித்தமான சந்தர்ப்பங்களை சித்திரமாக வரைந்து வரச்சொல்லி அதை வீட்டு வேலையாக கொடுத்திருந்தேன். மறுநாள் அப்பியாசப் புத்தகத்தைப் பார்வையிட்டபோது, ஒவ்வொருவரினதும் ரசனை வேறுபட்ட காட்சியாக இருந்ததை உணர்ந்தேன். அது எனக்கு பெரும் அனுபவத்தையும் படிப்பினையையும் பெற்றுக் கொடுத்த ஒருவிடயமாகும்.

மேலும், மாணவர்களின் மனதைப் படிக்க ஆசிரியர்கள் சிரமப்படத் தேவையில்லை. உளவளத் துறைப் பயிற்சிகளால் ஆசிரியர்களையும் பெற்றோரையும் சற்று தேர்ச்சிப் படுத்தினால் அது ஒன்றே, மாணவர்களின் மனதை ஆசிரியர்களும் பிள்ளைகளின் மனதை பெற்றோரும் நன்கு கிரகித்து பௌதீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் முன்னேற்றப் போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *