Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்

– மவ்லவி ஹஸன் அலீ உமரீ (IRGC – சென்னை)
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னக்கிறேன் என்று கூறுகிறான். (அறிவிப்பாளர்: அபு ஹீரைரா, நூல்: புகாரி – 1145)

இந்த ஹதீஸில் அல்லாஹ் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இறங்கி வருவதாக வந்துள்ளது. இதனை எப்படி விளங்குவது? இதற்கு நேரடியான பொருள் கொடுப்பதா? அல்லது மாற்று பொருள் கொடுப்பதா? இதில் எது சரியான நம்பிக்கை என்பதை தெளிவுப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்!

இறங்குதல் என்பது அல்லாஹ்வின் செயல்களோடு தொடர்புடைய பண்பாகும். இதனை அரபியில் ஸிஃபாத்து ஃபிஹலிய்யா என்பார்கள். அவனது கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் தக்கவாறு அவன் நாடும் போது இறங்குவான் என்று நாம் நம்ப வேண்டும்.

அல்லாஹ்வின் பெயர், பண்புகளோடு தொடர்புடைய இந்த இறங்குதல் என்ற பண்பு அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வின் மற்ற பண்புகளை எவ்வாறு நேரடியான பொருளில் விளங்குவோமோ அதுபோன்று இந்த பண்பையும் நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும்.

 

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற் கிறவன், பார்க்கிறவன் (அல்குர்ஆன் 42:11)

அல்லாஹ்வின் பண்புகளை பொருள் மாற்றாமலும், மறுக்காமலும், உதாரணம் கூறாமலும், இப்படிதான் இருக்கும் என்று சொல்லாமலும், படைப்பினங்களோடு ஒப்பிடாமலும் மற்றும் சுயவிளக்கம் அளிக்காமலும் நேரடியான பொருளில் நம்ப வேண்டும். முன்சென்ற நல்லோர்களான ஸஹாபாக்கள் தாபியீன்கள் இப்படிதான் நம்பினார்கள்.

ஜஹமிய்யாக்கள், அஷாயிராக்கள் போன்ற வழிதவறியவர்கள் தான் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தும், மாற்று பொருள் கொடுத்தும் நம்பினார்கள்.

நபி அவர்களிடமிருந்து நேரடியாக மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்கினார்கள். எனவே நாமும் அவ்வாறே விளங்குவோம். அவ்வாறு விளங்குவது தான் சரியென்பதற்கான ஆதாரத்தினை இனி காண்போம்,

ஹதீஸ்களில் 28 ஸஹாபாக்கள் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்ற அறிவிப்பை அறிவிக்கிறார்கள். இமாம் தாருகுத்னி, இமாம் அபுபக்கர் அஸ்ஸாபுனி, ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மற்றும் இமாம் தஹபீ போன்ற மார்க்க அறிஞர்கள் அத்தகைய ஹதீஸ்களை தொகுத்து நூல்களை எழுதியுள்ளார் கள். அவை அனைத்திலும் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்பதை ஆணித்தரமான ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறார்கள்.

 

عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِى فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِى فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِى فَأَغْفِرَ لَهُ (البخاري – 1145)

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். (அறிவிப்பாளர்: அபு ஹீரைரா, நூல்:புகாரி – 1145)

அரபியில் ஒரு பொருள் மேலிருந்து கீழ் நோக்கி இறங்குவதற்கு (النزول) என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அந்த வார்த்தையே இங்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் அல்லாஹ் இறங்கி வருதல் என்ற வார்த்தையை தன்னோடு இணைத்து கூறுகிறான். எனவே இதனை நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும்.

என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று இந்த ஹதீஸில் உள்ளது.

அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், இதனை யார் கூறுவதாக எடுத்துக் கொள்வது? அல்லாஹ்வின் அருளும், சிறப்பு கவனமும் பேசுமா?

 

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « يَنْزِلُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا كُلَّ لَيْلَةٍ حِينَ يَمْضِى ثُلُثُ اللَّيْلِ الأَوَّلُ فَيَقُولُ أَنَا الْمَلِكُ أَنَا الْمَلِكُ مَنْ ذَا الَّذِى يَدْعُونِى فَأَسْتَجِيبَ لَهُ مَنْ ذَا الَّذِى يَسْأَلُنِى فَأُعْطِيَهُ مَنْ ذَا الَّذِى يَسْتَغْفِرُنِى فَأَغْفِرَ لَهُ فَلاَ يَزَالُ كَذَلِكَ حَتَّى يُضِىءَ الْفَجْرُ

2 – அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போதுஇ கீழ் வானிற்கு இறங்கிவந்து, ‘நானே அரசன்; நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்’என்று கூறுகிறான். ஃபஜ்ர் நேரத்தின் வெளிச்சம் வரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான். (முஸ்லிம் – 1387)

இந்த ஹதீஸில் (أنا الملك أنا الملك) நானே அரசன்! நானே அரசன்! என்று கூறுவதாக வந்துள்ளது. அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், நானே அரசன்! நானே அரசன்! என்று கூறுவதை யார் கூறுவதாக எடுத்துக் கொள்வது?

இதனை அல்லாஹ் கூறுவதாக நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும். அதுவே சரியான முடிவாகும்.

 

عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا كَانَ ثُلُثُ اللَّيْلِ الْبَاقِى يَهْبِطُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى السَّمَاءِ الدُّنْيَا ثُمَّ تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ ثُمَّ يَبْسُطُ يَدَهُ فَيَقُولُ هَلْ مِنْ سَائِلٍ يُعْطَى سُؤْلَهُ فَلاَ يَزَالُ كَذَلِكَ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ (احمد – 3673)

3 – அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், இரவின் மூன்றாவது பகுதி மீதம் இருக்கும் போது அல்லாஹ் முதல் வானத்தை நோக்கி இறங்குகிறான். பிறகு வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. பிறகு அல்லாஹ் தனது கையை விரித்தவாறு கூறுவான், எவரேனும் (தனது தேவையை) கேட்பவர் உண்டா? அவரது கேள்விக்கு பதிலளிக்கப்படும். ஃபஜ்ர் நேரம் உதயமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறான். (நூல்: அஹமத், 3673) ஸஹீஹ்)

(يهبط) இவ்வார்த்தைக்கு அரபியில் இறங்கி வருதல் என்று பொருள்.

இந்த ஹதீஸில் அல்லாஹ் இறங்கி வருகிறான் பிறகு தனது கையை விரிக்கிறான் என்று வந்துள்ளது. அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் இறங்குகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், அல்லாஹ்வின் அருளுக்கும், சிறப்பு கவனத்திற்கும் கை இருக்குமா?

எனவே அல்லாஹ் இறங்குகிறான் என்பதற்கு நேரடியான பொருள் கொடுப்பதே தெளிவான முடிவாகும்.

 

عن الْأَغَرُّ أَبُو مُسْلِمٍ، قَالَ: أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ يَشْهَدَانِ لَهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ” إِذَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوْسَطِ هَبَطَ الرَّبُّ تَعَالَى إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَقُولُ: هَلْ مِنْ [ص:29] دَاعٍ؟ هَلْ مِنْ سَائِلٍ؟ هَلْ مِنْ مُسْتَغْفِرٍ؟ هَلْ مِنْ تَائِبٍ؟ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ ثُمَّ يَصْعَدُ

4 – புகாரி, முஸ்லிமில் வந்துள்ள அதே கருத்தில் முஸ்னத் அபி அவனா என்ற நூலிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் கூடுதலாக பிறகு ஃபஜ்ர் நேரம் வந்த பிறகு மேலே உயர்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா, அபு சயீத் அல்குத்ரி அவர்கள் அறிவிக்கும் சஹீஹான ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. (முஸ்னத் அபி அவானா)

மேலே உயர்கிறான் என்ற வார்த்தையை நபி அவர்கள் கூறியதின் மூலம் அல்லாஹ் முதல் வானத்திற்கு நேரடியாக இறங்கி வருகிறான் என்ற பொருளில் தான் நம்ப வேண்டும். அப்படி இருந்தால் தான் மேலே உயர்கிறான் என்ற வார்த்தைக்கு சரியான பொருள் அளிக்க முடியும்.

இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் வைத்து அல்லாஹ் இறங்குகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் நம்ப வேண்டும் என்பதை அறியலாம். இதுவே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதில் சரியான, தெளிவான, உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கை ஆகும்!

அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் வருகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பவர்களுக்கு மறுப்பு

1- இவ்வாறு மாற்று பொருள் கொடுப்பதற்கு என்ன ஆதாரம்?

2- அல்லாஹ்வின் அனைத்து பண்புகளையும் நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்று விதி இருக்கும் போது, இறங்கி வருகிறான் என்ற பண்பிற்கு மட்டும் மாற்று பொருள் கொடுப்பதற்கான அவசியம் என்ன?

3- அல்லாஹ் இறங்கி வருகிறான் என்று கூறிய நபி அவர்கள் அவன் எப்படி இறங்குகிறான் என்ற விளக்கத்தை எங்கும் கூறவில்லை. எனவே அல்லாஹ்வின் பண்புகள் தொடர்பான விதியான நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு இங்கும் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும். அப்படி தான் இந்த ஹதீஸை அனுகிய ஸஹாபாக்கள், தாபியீன்பகள், ஹதீஸ்கலை இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் எடுத்திருக்கிறார்கள்.
அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால்,

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவ்விஷயத்தில் தவறு செய்துவிட்டார்களா?

மார்க்கத்தை முழுமையாக நபி அவர்கள் எத்திவைத்து விட்டார்கள் என்றிருக்கும் போது, அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பது பற்றி கூறிவிட்டு வேறு விளக்கம் அளிக்காமல் இருந்ததை அவர்கள் கூறியதை நேரடியான பொருளில் விளங்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா?
அல்லது நபி அவர்கள் இதற்கு விளக்கம் கூறாமல் மறைத்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்வதா?

4- பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான். அரபி மொழியை தாய்மொழியாக கொண்ட ஸஹாபாக்களுக்கும் இது தெரியும். அவ்வாறே அல்லாஹ் முதல் வானத்திற்கு இரவின் மூன்றாவது பகுதியில் இறங்கி வருகிறான் என்று நபி அவர்கள் கூறிய ஹதீஸூம் தெரியும். எத்தனையோ சந்தேகங்களை நபி அவர்களிடம் கேட்ட ஸஹாபாக்கள் இதனை ஏன் கேட்கவில்லை?

பதில் இதுதான்:
அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்போடு ஒப்பிடக் கூடாது, மாற்று பொருள் கொடுக்க கூடாது. மாறாக நேரடியான பொருளில் விளங்க வேண்டும் என்ற அடிப்படையை அவர்கள் நபி அவர்களிடமிருந்து அறிந்து வைத்திருந்தார்கள். ஆகவேதான் இதுப்பற்றி நபி அவர்களிடம் கேட்கவில்லை.

5- அல்லாஹ் இறங்கி வருவதை நேரடியான பொருளில் விளங்கினால் அர்ஷ் காலியாகி விடும் என்ற வாதத்தை வைத்து சிலர் அல்லாஹ்வின் இந்த பண்பை மறுக்கின்றனர். அல்லாஹ் இறங்கி வருகிறான் என்ற ஹதீஸை கூறிய நபி அவர்களுக்கு அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான் என்பது தெரியும். நபி அவர்களிடமிருந்து இதனைக் கேட்ட ஸஹாபாக்களுக்கும் இது தெரியும். ஆனாலும் அவர்கள் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்கினார்கள்.

மேலும் மனிதன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது முதல் இருந்த இடம் காலியாகி விடும். அதுபோலவே அல்லாஹ் இறங்கி வந்தால் அர்ஷ் காலியாகி விடும் என்று ஒருவர் கூறினால், அவர் அல்லாஹ்வை படைப்பினங்களோடு ஒப்பிடுகிறார். இதனை (التشبيه) தஷ்பிய் என்பார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்போடு ஒப்பிட்டதால் சிலர் வழிகேட்டில் சென்றார்கள்.

அல்லாஹ்வின் பண்புகளை இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளபடி நேரடியான பொருளில் நம்புவது அவசியமாகும். அதில் சுயவிளக்கத்தை வைத்து மாற்று பொருள் கொடுப்பது வழிகேடாகும். அல்லாஹ் இத்தகைய வழிகேட்டிலிருந்து நம்மை காப்பானாக! ஆமீன்!

3 comments

  1. ஷஃபீக்

    அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான், அல்லாஹ் பிடரி நரம்பை விட சமீபத்தில் இருக்கிறான் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது அறிஞர் அவர்களே

  2. ஷஃபீக், தாங்கள் கேட்ட கேள்வி போன்று பல வசனங்கள் இருக்கின்றன. ஆதன் விளக்கத்தை பெற “இஸ்லாமிய இறைகோட்பாடு”(அகீதத்துல் வாஸிதிய்யா) எனும் புத்தாகத்தை வாங்கி படிக்குமாறு கேட்டுகொள்கிறேன். இதை எழுதியவர் ஷைகுல் இஸ்லாம் இப்ன் தைம்மியா. தாருல் ஹுதா – விலை 50 ரூபாய்.

  3. பஷீர் அஹமது

    ஷஃபீக் அவர்கள் கூறியது போல மாற்றுக் கருத்து உடையவர்களின் வாதங்களையும் உள்ளடக்கி அதற்க்கும் சேர்த்து பதில் அளித்து பதிவிடுங்கள்…. மாறாக இப்னு தைமியா நூலை படியுங்கள் என்பது என்ன விளக்கம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *