Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 02 – Part 2)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 02 – Part 2)

Magic Series – Episode 02 – Part 2:

சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்:

வாதம் 1: சூனியத்தை உண்மையென்று நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டானா?

பாகம் 2: (பாகம் 1 இன் தொடர்ச்சி…)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள், “சுலைமான் இப்னு உத்பா”என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் மட்டுமே இந்தஹதீஸைத் தனித்து அறிவிக்கிறார். ஆகவே முதலில் இவர் யாரென்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

அனேகமான அறிஞர்கள் இவரை நேர்மையானவர் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம், ஒரு ஹதீஸை இவர் மட்டும் தனித்து அறிவித்து இருந்தால், அப்போது அந்த அறிவிப்பை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இவர் உறுதியான நினைவாற்றல் உடையவர் அல்ல.

இதனால் தான், இவரை இமாம் தஹபீ, மற்றும் இமாம் இப்னு ஹஜர் ஆகியோர் “ஸதூக்” (நேர்மையானவர்; ஆனால், உறுதியான நினைவாற்றல் இல்லாதவர்) என்று குறிப்பிடுகின்றனர். மேலும், இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவரை ஸதூக் என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை; வேறு யாருமே அறிவிக்காத சில ஹதீஸ்களை இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டுவதன் மூலம் இவரது நினைவாற்றல் மீதிருக்கும் ஐயப்பாடுகளை மேலும் வெளிக்காட்டுகிறார்.

“ஸதூக்” ஆன அறிவிப்பாளர்கள், தனித்து ஹதீஸை அறிவித்தால், அது மற்ற ஹதீஸ்களுக்கு முரணில்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ளலாம். சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ஒரு “ஸதூக்”வழியாக வருமேயானால், அவ்வாறான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது தான் விதி.

இந்த விதியை அடிப்படையாக வைத்துத் தான், அறிஞர் ஷுஐப் அர்னாஉத் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு இதன் கீழ் பின்வருமாறு இவரது அறிவிப்பைப் பற்றித் தீர்ப்புச் சொல்கிறார்:

இந்தச் செய்தி “ஹசன் லிகை(Gh)ரிஹி”என்ற தரத்தில் அமைந்தது. இதை சுலைமான் இப்னு உத்பா என்பவர் தனித்து அறிவிக்கிறார். யார் தனித்து அறிவித்தால் ஏற்றுக்கொள்ள முடியாதோ, அவ்வாறான நபர்களில் இவரும் ஒருவர்.
நூல்: முஸ்னத் அஹ்மத் (பாகம் 6 பக்கம் 441)

“ஹஸன் லிகைரியி” என்ற தரத்துக்கு ஹதீஸ் கலையில் என்ன அர்த்தம் என்பதை நான் சொல்லித் தான் ஹதீஸ் மறுப்பாளர்கள் விளங்க வேண்டுமென்பதில்லை. இருந்தாலும் வாசகர்களின் வசதி கருதி அதையும் இங்கு பதிவு செய்து விடலாமென நினைக்கிறேன்:

ஒரு செய்தியைக் கூறும் ஓர் அறிவிப்பில், மனித தவறுகள் மூலம் சில குறைபாடுகள் காணப்பட்டால், அது பலவீனமான அறிவிப்பு என்ற தரத்தைச் சேரும். இது அனைவரும் அறிந்த விடயம். இவ்வாறு இயல்பில் பலவீனமாக இருக்கும் ஒரு ஹதீஸ், சில சந்தர்ப்பங்களில் “ஹஸன்” (மிகவும் நம்பகமானதும் இல்லை; அதே நேரம் பலவீனமும் இல்லை) என்ற தரத்துக்குத் தரம் உயர்த்தப் படுவதும் உண்டு.

உதாரணத்துக்கு, ஒரு பலவீனமான ஹதீஸ் சொல்லும் அதே செய்தியை, சிறு சிறு வித்தியாசங்களோடு கூறும் வேறு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இருந்தால், அந்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இருக்கும் அதே செய்தி தான் இது என்பதற்காக இந்தப் பலவீனமான ஹதீஸுக்கு ஒரு மேலதிக கன்னியம் வழங்கப்படும். அதன் அடிப்படையில், “ளஈஃப்” என்ற தரத்திலிருந்து, “ஹஸன்” என்ற தரத்துக்கு இது உயர்த்தப் படும்.

இவ்வாறு தரம் உயர்த்தப் பட்டாலும், இதை அறிவித்தவர்கள் விட்ட சில மனித தவறுகள் மூலம், இதன் வசன அமைப்புகளில் அல்லது கருத்துக்களில் சில பலவீனங்கள் இருப்பதனால், தனித்து முன்வைக்கப்படும் ஓர் ஆதாரமாக இதைக் கருதவும் முடியாது.

இவ்வாறான ஹதீஸ்களைப் பிரதான ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது; வேண்டுமென்றால், பிரதான ஆதாரமாக முன்வைக்கப்படும் வேறு ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்குத் துணை ஆதாரமாக இவ்வாறான ஹதீஸ்களை முன்வைக்கலாம்.

அதாவது, ஆதாரமாக எடுத்துக் கொள்ளவும் முடியாத, அதே நேரம் பலவீனமென்று தூக்கியெறிந்து விடவும் முடியாத ஓர் இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கக் கூடிய ஒரு வகை தான் இது. எனவே, இவ்வாறான ஹதீஸ்கள், “ஹஸன்” தரத்துக்கு உள்ளேயும், கொஞ்சம் தரம் குறைந்த ஒரு தனித் தரத்தில் சேர்க்கப்படும். இந்தத் தரத்தைத் தான் “ஹஸன் லிகைரிஹி” என்று சொல்வார்கள்.

இனி இதன் அறிவிப்பாளர் ஸுலைமான் பின் உத்பா பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். இவர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் அறிவிப்பாளரும் அல்ல. சில அறிஞர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறினாலும், வேறு சிலர் இவரை குறை கூறியும் உள்ளனர்.

ஒருசில உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்:

இமாம் அஹ்மத் கூறுவதைப் பாருங்கள்:
“இவரைப் பற்றி எனக்குத் தெரியாது.”

இமாம் யஹ்யா இப்னு மயீன் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்:
“இவர் எதற்கும் தகுதியில்லாதவர்”
(இந்த விமர்சனத்தைத் தான் சகோதரர் பீஜே கூறாமல் மழுப்பியதாக மேலே சுட்டிக் காட்டினேன்)

மேலும், அறிஞர் சாலிஹ் ஜஸ்ரா கூறுகிறார்:
“இவர் பல தவறான செய்திகளை அறிவித்தவர்”

இமாம் அபூ ஹாதிம் இவர் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
“இவர் சுமானரான நிலையில் உள்ளவர்”

இந்தத் தகவல்களையெல்லாம் தஹ்தீபுத் தஹ்தீப் 4 / 184 இல் பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வளவையும் பார்த்த பிறகு நாம் சிந்திக்க வேண்டியது என்ன?

ஸுலைமான் இப்னு உத்பாவைப் பற்றி இவ்வளவு விமர்சனங்கள் இருக்கும் போது, அதையெல்லாம் மூடி மறைத்து விட்டு, கொஞ்சம் கூட நாவு கூசாமல் “இவரைப் பற்றி யஹ்யா இப்னு மயீன் மட்டுமே காரணம் இல்லாமல் விமர்சித்திருக்கிறார். மற்ற எவருமே இவரைக் குறை சொன்னதில்லை; இவர் மிகவும் நம்பகமானவர்”என்று சகோதரர் பீஜே பச்சையாகப் புழுகியிருக்கிறாரே; அவருக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? இதையெல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள் என்ற அசட்டு தைரியத்தில் தானே இப்படியெல்லாம் பன்னுகிறார்? அல்லாஹ் என்ற ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையே மறந்து விட்டார் போலும்.

ஆக, சுருக்கமாகக் கூறுவதென்றால், இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதே அல்ல; ஹஸன் தரத்திலும், அடிமட்டத்தில் இருக்கக் கூடிய ஒரு ஹதீஸ் இது. இதை ஆதாரமாகக் காட்டி, நம்பகத் தன்மையில் உச்ச நிலையில் இருக்கக் கூடிய பல ஹதீஸ்களை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்களது நியாயம் வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

இதையெல்லாம் ஒரு நிமிடம் மறந்து விட்டு, ஒரு வாதத்துக்கு இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று தான் வைத்துக் கொண்டாலும், இந்த ஹதீஸ் சூனியத்துக்குத் தாக்கம் இருக்கிறது என்று நம்புவது வழிகேடு என்ற அர்த்தத்தில் தான் சொல்லப்பட்டதா என்று பார்த்தால், அது கூட இல்லை. ஏனெனில், இதன் வாசகம் “சூனியத்தை உண்மையென்று நம்புபவன்” என்று சொல்லவே இல்லை; மாறாக “சூனியத்தை ஈமான் கொண்டவன்” என்று தான் சொல்லப் பட்டிருக்கிறது. இதைத் தான் இவர்கள் இருட்டடிப்பு செய்கிறீர்கள். அதையும் என்னவென்று பார்த்து விடலாம்.

சூனியத்தை ஈமான் கொள்வது என்றால் என்ன?

மார்க்கத்தில் ஒரு விசயத்தை ஈமான் கொள்ளுதல் என்பது இரண்டு அடிப்படைகளில் சொல்லப் படும். முதலாவது அடிப்படை, “இன்ன பெயரில் ஓர் அம்சம் இருக்கின்றது; இதற்கு இன்னின்ன தன்மைகள் இருக்கின்றன என்பதை நம்ப வேண்டும்”என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டவை. இரண்டாவது அடிப்படை,“இன்ன பெயரில் ஓர் அம்சம் இருக்கின்றது; இதை எவன் உளமாற நம்பி, ஏற்றுக் கொண்டு, அதைத் தன் வாழ்விலும் செயல்படுத்துகிறானோ, அவன் தான் முஃமின்.” என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டவை.

இந்த வேறுபாட்டை சரியாகப் புரிந்து கொள்வதற்கு, ஓர் உதாரணத்தைச் சொல்லிக் காட்டலாம்:

அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கும் இதே மார்க்கம் தான் தஜ்ஜாலையும் ஈமான் கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு ஈமானுக்கும் இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது.

அல்லாஹ்வை ஈமான் கொள்வது என்றால்…:
“அகிலத்தின் இறைவன் அல்லாஹ் மட்டும் தான்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் அருளிய வேதத்தில் சொல்லப்பட்ட கடமைகளை சரிவர நிறைவேற்றினால் தான் மறுமையில் வெற்றி பெறலாம்” என்பதை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, அதன் பிரகாரம் ஒருவன் தனது மொத்த வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வது தான்.

தஜ்ஜாலை ஈமான் கொள்வது என்றால்…
“தஜ்ஜால் என்ற ஒருவன் வர இருக்கிறான். அவன் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவான். அதன் மூலம் அவன் தன்னை இறைவன் என்று வாதிடுவான். அதை நம்பி யாராவது அவன் பின்னால் சென்றால், அவன் வழிகெட்டு விடுவான்.” என்று ஒருவன் நம்புவது தான்.

ஒவ்வொரு முஃமினும், இந்த வேறுபாடுகளைத் தெளிவாகப் பிரித்தறிந்து தான், இரண்டையும் ஈமான் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம், அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டுமோ, அப்படி நம்பி, அதன் படி செயல்படுகிறார்கள். இன்னொரு புறம், தஜ்ஜால் என்பவன் எப்பேர்ப்பட்ட பொய்யன் என்பதை எப்படி நம்ப வேண்டுமோ, அப்படி நம்பி, அதன் படி எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள்.

இதே அடிப்படையில் தான் இந்த ஹதீஸும் சொல்லப் பட்டிருக்கிறது. அதாவது, அல்லாஹ்வை ஒரு முஃமின் நம்புவதைப் போல் சூனியத்தை எவன் நம்பி, அதில் ஈடுபடுகிறானோ, அப்படி நம்பியவன் சுவர்க்கம் புக முடியாது என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து; தஜ்ஜாலை நம்புவது போல் சுனியம் என்ற ஒரு கெட்ட கலை இருக்கிறது என்று நம்பியவன் நரகம் புகுவான் என்ற கருத்தில் இது சொல்லப் படவே இல்லை.

இதை நான் சுயமாக சொல்லவில்லை; இந்த ஹதீஸை இப்படித் தான் புரிய வேண்டுமென்று, அறிஞர் முஹம்மது இப்னு ஸாலிஹ் உஸைமீன் கூட அல்கவ்லுல் முஃபீத் (பாகம்: 2 பக்கம்: 13) என்ற நூலில் கூறியிருக்கிறார்.

இதையெல்லாம் மூடிமறைக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள், தமது நாத்திக வாதங்களை நியாயப் படுத்தும் நோக்கில், இந்த ஹதீஸுக்குப் பொய்யான அர்த்தங்களைக் கொடுப்பதன் மூலம் தமக்கு சாதகமாக இந்த ஹதீஸையும் வளைத்திருக்கிறார்கள். இவர்களது பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்டுவதற்கு இதையும் ஒரு சந்தர்ப்பமாக அல்லாஹ் இன்று ஏற்படுத்தியிருக்கிறான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *