Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஏன் இந்த உற்சாகம்?

ஏன் இந்த உற்சாகம்?

பீஜே விலகல் செய்தி அறிந்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை எனது சொந்த வேலைகளைக் கூட மறந்து விட்டு, பீஜே ஒரு பொய்யர் என்பதை நிரூப்பதிலேயே குறியாக ஏராளம் பதிவேற்றங்களை இதுவரை பதிவேற்றி வந்தேன்.

இதைப் பார்க்கும் சிலர், பீஜேயின் மாமிசத்தைத் தொடர்ந்தும் புசிப்பதில் நான் மிகவும் ஆனந்தம் அடைவது போல் கற்பனை செய்தும், கற்பித்தும் வருவதைப் பார்க்க முடிகிறது.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்து விட்டுப் போங்கள். அதற்கெல்லாம் மசிகிறவன் நானில்லை.

எனது இந்தத் தொடர் முயற்சிக்கு ஒரு காரணம் உள்ளது. நியாய உணர்வோடு சிந்திப்போருக்கு அந்தக் காரணத்தையும் நான் சொல்லி விட வேண்டும். எனவே சொல்கிறேன்.

பீஜே உருவாக்கிய அசத்தியக் கோட்பாடுகளை எதிர்த்து இதுவரை நாம் கடுமையாகப் போராடி வந்துள்ளோம். அந்த முயற்சிகள் எல்லாமே எதற்காக?

பீஜேயின் வார்த்தை ஜாலங்களில் மயங்கி, அவரது பொய்யான கருத்துக்களையும் உண்மையென்று நம்பி ஏமாந்து போயிருக்கும் மக்களை அசத்தியத்திலிருந்து மீட்டெடுக்கத் தான் அவ்வளவும் செய்தோம். அதற்காகத் தான் விவாத மேடை வரை சென்றோம்.

அல்லாஹ்வின் அருளால் பலரும் அதிலிருந்து ஏற்கனவே மீண்டு விட்டார்கள். அதே நேரம் இன்னும் பலர் அந்த அசத்தியத்தில் இதுவரை மாட்டிக் கொண்டு தான் உள்ளார்கள்.

அவ்வாறான மக்கள் நடுநிலையோடு இரு தரப்பு வாதங்களையும் சீர்தூக்கிப் பார்க்காமல் இதுவரை பீஜேயின் வழிகேட்டில் நிலைத்திருக்கக் காரணமே பீஜேயின் நம்பகத் தன்மையில் அவர்களுக்கு இருந்து வந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான்.

சத்தியத்தை அவர்கள் இனம்காணத் தடையாக இதுவரை இருந்து வந்ததே பீஜே மீது அவர்களுக்கு இருந்த அசையாத நம்பிக்கை தான்.

அந்த நம்பகத் தன்மையை இப்போது அல்லாஹ்வே அடியோடு தகர்த்துள்ளான். பீஜே என்பவரும் தனது சுய லாபத்துக்காக பொய் சொல்லக் கூடிய ஒரு சாதாரண மனிதர் என்பதை அழகாக அல்லாஹ் நிரூபித்துக் காட்டி விட்டான்.

இப்படி நிரூபித்ததன் மூலம் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் அழைப்பாளர்களுக்கு அல்லாஹ் ஓர் அரிய சந்தர்ப்பத்தையும் சேர்த்தே வழங்கியுள்ளான்.

பீஜேயின் நம்பகத் தன்மை இப்போத் தகர்ந்து விட்டது. அவரை மிதமிஞ்சி நம்பி வந்த பல அப்பாவி மக்கள் இப்போது நடுநிலையோடு சிந்திக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

இந்த வாய்ப்பை நழுவ விடாமல், பீஜேயின் கொள்கையும் அசத்தியம் என்பதை அந்த மக்களுக்கு இப்போது எத்தி வைத்தால், முன்பு போல் அல்லாமல் இம்முறை இரு தரப்பு கருத்துக்களையும் சம அந்தஸ்த்து கொடுத்து அம்மக்களில் பலர் சீர்தூக்கிப் பார்க்க வாய்ப்புகள் அதிகம்.

சத்தியத்தை எடுத்துச் சொல்லும் ஓர் அழைப்பாளனின் கடமைகளுள், அதைச் சொல்வதற்குக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் உபயோகிப்பதும் ஒன்று.

இந்த அடிப்படையிலேயே இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் முழு வீச்சோடு என் கருத்துக்களை முன்வைத்து வருகிறேன். பீஜே ஒரு பொய்யர் என்பது எப்படி உண்மையோ, அதே போல் அவர் பரப்பிய கொள்கையும் ஒரு பொய் என்பதைத் தகுந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு முழு வீச்சில் எத்தி வைக்கிறேன்.

இந்தச் செயல் பலரது பார்வையில் தவறாகத் தெரிந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை.

“என்ன இருந்தாலும், பீஜேயும் ஒரு காலத்தில் சத்தியத்தைச் சொன்னவர். எனவே, அவரை நோவிக்க என்னால் முடியாது; என் மனம் அவருக்காக இரங்கி விட்டது; பாவம்…” என்றெல்லாம் அளவுக்கதிகம் நல்லபிள்ளை பாத்திரமாக மாற இப்போது என்னால் முடியாது.

அப்படி நான் நெகிழ்வோடு நடந்தால், அது நான் தவ்ஹீதுக்கு செய்யும் உதவி அல்ல; எனது உணர்வுகளுக்கும், நற்பெயருக்கும் மட்டுமே நான் உதவி செய்து கொள்கிறேன் என்றே அது பொருள் படும்.

ஏனெனில், எது உண்மையான தவ்ஹீத்? எது போலி தவ்ஹீத் என்பதைத் தெள்ளத் தெளிவாக மக்களுக்குப் பிரித்துக் காட்ட அல்லாஹ்வே வழங்கிய ஒரு சந்தர்ப்பம் இது.

இந்த சந்தர்ப்பத்தை நான் தவ்ஹீதின் லாபத்துக்காக மட்டுமே உபயோகிக்க வேண்டும். அந்த முயற்சியில் எனக்கு அவப்பெயர் வந்தாலும், அது எனக்கு ஒரு பொருட்டல்ல.

நாலு பேர் தம் நிலைபாடுகளை மறுபரிசீலனை செய்து சரியான கொள்கைக்கு மீளுவதற்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது முயற்சிகள் காரணமாக அமைந்தால், அது ஒன்றே எனக்குப் போதும். அல்லாஹ் போதுமானவன்.

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *