Featured Posts

ஒரு கதை

ஊரே அசத்தியத்தில் உழன்று கொண்டிருக்க; ஒருசிலர் மட்டும் ஆங்காங்கே ஏகத்துவம் சொல்லி அடிவாங்கிக் கொண்டிருக்க….
.
இறுதியில் ஒருவர் வந்தார். தனியாக ஏகத்துவத்தை உரத்துச் சொன்னார். நடுத் தெருவில் நின்று மக்களை ஏக இறைவன் பக்கம் அழைத்தார். அதற்காக அடி பட்டார்; மிதிபட்டார்; அவமானப்படுத்தப்பட்டார்.
.
அவர் பேச்சில் ஏகத்துவம் மின்னியது. ஏற்கனவே ஏகத்துவம் சொல்லி ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகிக் கொண்டிருந்த பல பிரச்சாரகர்கள் கூட இவர் பேச்சில் கவரப்பட்டுக் கைகோர்த்தனர்.
.
ஏகத்துவம் எழுச்சி பெறத் தொடங்கியது. ஷிர்க்கும் பித்அத்தும் ஆட்டம் காணத் தொடங்கின. இறுதியில் என்னைப் போன்ற மார்க்க ஞானம் அற்றவர்களையும் அவர் பிரச்சாரம் கவர்ந்தது. ஆசையோடு இணைந்தோம்; அவரிடம் பல நுணுக்கங்களையும் கற்றோம்.
.
மார்க்கத்தை ஊர்ஜிதப் படுத்துவது மதுஹபு கித்தாபுகளோ, பள்ளி நிர்வாகிகளோ அல்ல; திருமறையும் நபிமொழியும் நேரடியாகவே அணுகப்பட வேண்டியவை எனும் உண்மையையும் அவரிடமே கற்றோம். கற்றதோடு நிற்கவில்லை; கற்றதை அமுலுக்கும் கொண்டு வந்தோம்.
.
அன்று முதல் எனக்குள் ஏற்பட்ட எந்த சந்தேகத்தையும் தீர்க்கும் இறுதித் தளம் இறைவேதமும் நபிமொழியும் மட்டுமே என்றானது.
.
காலம் உருண்டோடியது. அதுவரை நல்லதை மட்டுமே கற்பித்து வந்த அந்த ஆசான் புதிதாகச் சிலவற்றையும் மார்க்கம் என்று கற்பிக்கலானார்.
.
அதுவரை எந்த நெருடலும் இல்லாதிருந்த எனக்குள் அவர் கற்பித்த ஓரிரு அம்சங்கள் லேசாக நெருட ஆரம்பித்தன. அதைக் கேள்விகளாகவும் பல வழிகளில் முன்வைத்தேன்.
.
“இன்ன அம்சத்தில் உங்கள் விளக்கம் வஹிக்கு மாற்றமாகத் தோன்றுதே” என்றேன்.
.
“இல்லை, இதுவே சரியான விளக்கம்” என்றார்.
.
“இருந்தாலும் இந்தக் குர்ஆன் வசனம் உங்கள் விளக்கத்தைப் பிழையென்று சொல்கிறதே” என்று சுட்டிக்காட்டினேன்.
.
“அந்த குர்ஆன் வசனத்தின் அர்த்தம் அதுவல்ல; வேறொன்று” என்றார். அவர் விளக்கத்துக்கு ஒத்து வரும் விதத்தில் குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பையும் மாற்றியமைத்தார்.
.
“அப்படியாயின் இந்த ஹதீஸ் கூட உங்கள் விளக்கத்தைப் பிழையென்று தானே சொல்லுது?” என்றேன்.
.
“இது ஹதீஸே இல்லை; கட்டுக்கதை” என்றார்.
.
“அன்று முதல் ஹதீஸ் என்று ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, தகுந்த சாட்சிகள் வாயிலாக உறுதிப்படுத்தப் பட்ட ஒரு ஹதீஸ், உங்களுக்கு மட்டும் எப்படித் திடீரென்று ஹதீஸ் இல்லையென்று ஆனது?” என்று கேட்டேன்.
.
“இன்ன குர்ஆன் வசனத்துக்கு இந்த ஹதீஸ் முரண்படுவதால் இது ஹதீஸே இல்லை” என்றார்.
.
“உங்கள் பார்வையில் அது முரண் போல் தோன்றினாலும், எனது பார்வையில் அதில் எந்த முரண்பாடுமே இல்லையே?” என்று கேட்டேன்.
.
“அதற்குக் காரணம் நீ வழிகேடன் என்பது தான்” என்றார்.
.
“இப்படிக் கண்டபடி ஹதீஸ்களை குர்ஆனோடு மோத விட்டுக் கடாசுவதை மார்க்கம் அனுமதிக்கவே இல்லையே” என்றேன்.
.
“இல்லை, இமாம் ஷாஃபி அப்படி கூறியுள்ளார்; இமாம் ஸுயூத்தி இப்படிக் கூறியுள்ளார்” என்று சில மேற்கோள்களைக் காட்டினார்.
.
“அந்த இமாம்கள் எவருமே நீங்கள் மறுக்கும் ஹதீஸ்களை மறுக்கவே இல்லையே. அவர்கள் கூற்றுக்களின் அர்த்தமும் அதுவல்லவே” என்றேன்.
.
“உள்ளம் ஏற்றுக் கொள்ளாத ஹதீஸ்கள் ஹதீஸே அல்ல என்று நபியே கூறியுள்ளார்கள்” என்று ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டினார்.
.
“இந்த ஹதீஸில் ஏற்கனவே சில பலவீனங்கள் உள்ளனவே. மேலும் இது நீங்கள் சொல்லும் கருத்தையும் சொல்லவில்லையே” என்றேன்.
.
“அல்லாஹ் சொன்னதாகச் சொன்னாலும் முஃமின்கள் அதில் குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழ மாட்டார்கள்; புத்திக்கு ஒத்து வந்தால் மட்டுமே ஏற்பார்கள்” என்று ஒரு குர்ஆன் வசனத்துக்கு அநியாயத்துக்குத் தலைகீழ் வியாக்கியானம் சொன்னார்.
.
“சரி உங்கள் வாதப்படியே எடுத்துக் கொண்டாலும், குர்ஆன் வசனங்களையும் சேர்த்துத் தானே நீங்கள் இந்த அடிப்படையில் மறுக்க வேண்டி வரும்? குர்ஆனிலும் புத்திக்கு ஒத்து வராத பல வசனங்கள் உள்ளனவே? அவற்றை மறுக்காத நீங்கள் ஹதீஸுக்கு மட்டும் இந்த விதியைப் பொருத்துவது எந்த விதத்தில் நீதி?” என்று கேட்டேன்.
.
அதற்கு அவர் பதிலே சொல்லவில்லை.
.
“அறிஞர்கள் கூற்றெல்லாம் மார்க்கமாகாது; வஹீ மட்டுமே மார்க்கம் என்று அன்று முழங்கிய நீங்களே இன்று உங்கள் வியாக்கியாணத்தை ஏற்காதவனெல்லாம் முஷ்ரிக் என்கிறீர்களே, இது எந்த விதத்தில் சரியாகும்?” என்றேன்.
.
“உனது கேள்வியே மடத்தனமானது” என்று வாய் கூசாமல் சொன்னார்.
.
அத்தோடு சுதாகரித்தேன். இறைச்செய்திகள் இது பற்றி என்ன கூறுகின்றன என்பதை நானாகத் தேட ஆரம்பித்தேன். பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தன.
.
இதுவரை அறிஞர் என்று நான் நம்பிய அவர் சில விடயங்களை மார்க்கம் என்ற பெயரில் இட்டுக்கட்டி நமக்குத் திணிக்கிறார் எனும் உண்மையும் புரிந்தது.
.
எனது புரிதலை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், இது குறித்து முன்சென்ற ஏகத்துவ அறிஞர்கள், மற்றும் இவர் கருத்தைச் சாராத சமகால ஏகத்துவ அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்றும் தேடிப் பார்த்தேன். அதிர்ச்சி இன்னும் பன்மடங்கானது.
.
இவர் பயணிக்கும் பாதை இறை நிராகரிப்புக்கே இட்டுச் செல்கிறது எனும் உண்மையும், இதற்கு முன்பும் சில வழிகெட்ட பிரிவினர் இதே பாதையில் பயணித்து, இஸ்லாத்தை விட்டே வெளியேறினார்கள் எனும் உண்மையும் அப்போது தான் வெளிச்சத்துக்கு வந்தன.
.
முற்காலத்தில் இவரோடு கைகோர்த்திருந்த பல சமகால ஏகத்துவ அறிஞர்கள் கூட ஏன் இவரை விட்டு விலகினார்கள் என்பதன் உண்மையான அர்த்தமும் புரிந்தது.
.
அத்தோடு இவர் மீதிருந்த நம்பிக்கை செத்துப் போனது. இவரது வழிகேடுகளை உற்ற நண்பர்களிடமே முதலில் எடுத்துச் சொல்ல விழைந்தேன். செவி கொடுப்பதற்குப் பதிலாக அவர்கள் என்னோடு பழகுவதையே நிறுத்திக் கொண்டார்கள். அவர் மீது அவர்களுக்கிருந்த பக்தி எவ்வளவு குருட்டுத்தனமானது என்பது இன்னும் தெளிவாக அப்போது புரிந்தது.
.
இதற்கு மேலும் இவர் அமைப்பில் இருந்தால், என் மறுமை வாழ்வு பாழாகி விடும் என்பது உறுதியாகி விட, உடனடியாக வெளியேறினேன். பகிரங்கமாக இவர் வழிகேடுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தேன். விளைவுகள் வினோதமாகவே அமைந்தன.
.
அதுவரை நண்பர்களாக இருந்தோரெல்லாம் பகைவர்களாயினர். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதற்குப் பதிலாக என் மீது சேறு பூச ஆரம்பித்தனர். நான் சொல்ல வந்ததைக் கூட பொறுமையோடு உட்கார்ந்து கேட்கும் நிதானம் அதில் எவருக்குமே இருக்கவில்லை.
.
கேட்க வேண்டிய தேவையே இல்லையென்று அவர்களாகவே தீர்மாணித்துக் கொண்டார்கள். நான் சொல்ல முன்பே நான் சொல்லப் போவது அசத்தியம் தான் என்பதை அவர்களே முடிவு செய்தும் விட்டார்கள். காரணம், ஆசானின் நம்பகத் தன்மை மீது அவர்களுக்கிருந்த பக்தி அத்தகையது.
.
அந்த ஆசானின் நம்பகத் தன்மையைத் தான் இன்று அல்லாஹ் அடியோடு அழித்திருக்கிறான். அவரையே பொய்யனென்று அல்லாஹ் நிரூபித்து விட்டான். அவரது பக்தர்கள் சிந்திக்க வேண்டிய சரியான தருணம் இதுவே.
.
இதற்கு மேலும் பக்தர்கள் ஒரு கணமேனும் சிந்திக்க நேரம் ஒதுக்கவில்லையென்றால், அவர்கள் அழிவுக்கு அவர்களே காரணம் என்றாகி விடும். இந்த உண்மையையே இதுவரை பல வடிவங்களிலும் உரத்துச் சொல்லி வந்தேன்.
.
உண்மையைச் சொன்னதற்காக எனக்குக் கிடைத்த அவப் பெயர்கள் ஏராளம். “காழ்ப்புணர்ச்சியில் உளறுபவன்” / “அவரது மாமிசத்தைப் புசிப்பவன்” / “தனி மனித தாக்குதலில் குளிர்காய்பவன்”… இப்படிப் பல பெயர்கள்.
.
சொல்வது என் கடமை; சொல்லி விட்டேன். கேட்பதும் கெட்டுக் குட்டிச்சுவராகிப் போவதும் இனி அவரவர் உரிமை.
.
இறுதியாக ஒரு விடயம். வஹியை வஹியோடு மோத விட்டு முரண்பாடு கற்பித்ததாலேயே முன்சென்ற பல சமூகங்களை அல்லாஹ் நாசமாக்கினான் என்று அல்லாஹ்வின் தூதரே கடுமையாக எச்சரித்திருக்கும் போது, அந்த எச்சரிக்கை குறித்துத் துளியும் அச்சமில்லாமல், இந்தப் பொய்யான மனிதர் கொண்டுவந்த நூதனமான ஒரு ஹதீஸ் கலை அடிப்படையை உண்மையென்று நம்பி இதுவரை பல ஹதீஸ்களை காலில் போட்டு மிதிக்கும் குருட்டு பக்தர்கள் இனியும் தம் நிலைபாட்டை சுயபரிசோதனை செய்யாது போனால், அவர்கள் அழிவுக்கு அவர்களே பொறுப்பாளர்கள்.
.
– அபூ மலிக்

One comment

  1. இனிமேலும் பக்தர்கள் முழித்து கொள்ளவில்லை என்றால் , இவர்களை விட பெரிய மூடர்கள் யாரும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *