Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-2)

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-2)

– எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ
கடந்த இதழில் ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் மறுக்கும் பெரியவர் பால் குடித்தது தொடர்பான ஹதீஸுக்கு விளக்கமளித்திருந்தோம். இந்த வழிகேடர்களின் தவறான வாதங்களால் தடுமாற்றம் அடைந்திருந்த பல சகோதரர்கள் தெளிவு பெற்றதாக தெரிவிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இப்போது இந்த ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் நிராகரிக்கும் இன்னொரு ஹதீஸைப் பார்ப்போம்.

”குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல் : முஸ்லிம் 2876, 2877

இந்த ஹதீஸை நிராகரிப்பதற்காக பெயர்தாங்கி தவ்ஹீத்வாதி தனது திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பில் எழுதுவதைப் படியுங்கள்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் அப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் அந்த வசனம் இன்றும் குர்ஆனில் நிச்சயம் இருந்தாக வேண்டும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின் குர்ஆனில் உள்ள எதையும் நீக்கவோ, இல்லாததைச் சேர்க்கவோ முடியாது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் முழுவதும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு விட்ட தாலும் ஏராளமான நபித்தோழர்கள் முழுக்குர்ஆனையும் மனனம் செய்திருந்ததாலும் குர்ஆனில் இருந்த ஒரு வார்த்தைக் கூட விடுபடுவதற்கு வழியே இல்லை.

ஆனால் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவது போல் ஒரு வசனம் குர்ஆனில் காணப்படவில்லை. இந்த நிலையில் ”முஸ்லிம் நூலில் இடம் பெற்ற ஹதீஸாயிற்றே? நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே” என்று காரணம் கூறி இதை ஏற்றுக் கொண்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

”குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின் குர்ஆனில் இருந்த பல வசனங்கள் நீக்கப்பட்டன” என்ற கருத்து இதனால் ஏற்படும் குர்ஆன் இறைவனின் நேரடிப் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்தச் செய்தி கேள்விக் குறியாக்கி விடும். எனவே இந்த ஹதீஸை நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். (இவ்வாறு ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கைக்காரர் தனது குர்ஆன் தமிழாக்கத்தின் விளக்கக் குறிப்பு பகுதியில் எழுதியுள்ளார் பக்கம் 1441, பதிப்பு 8)

இந்த ஹதீஸை நிராகரிப்பதற்குச் சொல்லும் காரணம் இதை நம்பினால் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் குர்ஆனில் ஒரு வசனம் நீக்கப்பட்டுள்ளது என்று நம்ப வேண்டிய நிலை ஏற்படும் என்பதுதான். உண்மையில் அப்படி ஒரு பாதகம் வருவதில்லை. எளிதாக புரிய வேண்டிய ஒன்றை பூதாகரமாகவும் தவறாகவும் சித்தரிக்கிறார்கள். இந்த ஹதீஸை ஏற்பதில் சிக்கல் இல்லை. முதலில் ஒன்றை கவனிக்க வேண்டும். இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் மட்டுமின்றி திர்மிதி, நஸாயீ, இப்னு ஹிப்பான், தாரகுத்னீ, பைஹகீ உள்ளிட்டோரும் பதிவு செய்துள்ளனர். அறிவிப்பாளர் தொடரில் பல அறிவிப்பாளர்களும் உள்ளனர். இந்த நூற்களின் ஆசிரியர்களும் ஆயிஷா (ரலி) அவர்கள் உள்ளிட்ட அறிவிப்பாளர்களும் இப்படி ஒரு வசனம் திருக்குர்ஆனில் இல்லை என்பதை அறிந்தே அறிவிக்கின்றனர். அப்படியானால் இவர்களெல்லாம்குர்ஆனில் ஒரு வசனம் நீக்கப்பட்டிருக்கிறது என்று நம்பிக்கை கொண்டவர்களா? இல்லை. ஒரு பேச்சுக்கு இவர்களெல்லாம் அப்படிச் சொல்வதாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அந்த வசனம் குர்ஆனில் இருந்தது பிறகு அது அகற்றப்பட்டது என்றுதான் அறிவித்திருப்பார்கள்.

ஆனால் இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில் நபி(ஸல்) அவர்கள் மரணித்ததாக குறிப்பிடுகின்றனர். அப்படியானால் அந்த வசனம் பற்றி இந்த ஹதீஸ் என்ன சொல்கிறது? திருக்குர்ஆனில் சில வசனங்களின் சட்டங்கள் வேறு சில வசனங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட வசனமும் மாற்றிய வசனமும் குர்ஆனில் இருந்து கொண்டிருக்கும்.

இன்னும் சில வசனங்கள் அப்படியே குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு முறைக்கும் நஸ்க் என்று பெயர். இந்த இரண்டு முறையும் அல்லாஹுதஆலா தனது நபிக்குஅறிவித்ததன் மூலம் நடந்ததாகும். இது குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததை அல்லது அது போன்றதை நாம் கொண்டு வருவோம். அல்குர்ஆன் 2:106

அல்லாஹுதஆலா நபிக்கு உத்தரவிடுவதன் மூலம் குர்ஆனிலிருந்து நீக்கி மறக்கச் செய்யும் வசனங்களில் ஒன்றாக இந்த வசனமும் உள்ளது என்பதை நாம் புரியலாம். இவ்வாறு இந்த வசனத்தை நீக்க வேண்டுமென்ற அல்லாஹ்வின் உத்தரவு, நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சிறிது காலத்துக்கு முன்பு தான் வந்துள்ளது. அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தெரிவித்தார்கள். அந்த தகவல் கிடைத்தவர்கள் இந்த வசனத்தை ஓதுவதை நிறுத்தினார்கள். அந்த தகவல் கிடைக்காத சிலர் இந்த வசனத்தை ஓதிக்கொண்டிருந்தார்கள். தகவல் கிடைத்ததும் அவர்களும் நிறுத்தி விட்டார்கள். இதைப் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸை விளங்குவதில் சிக்கல் இல்லை. நிராகரிக்கவும் தேவையில்லை.

குர்ஆனில் சில வசனங்களின் சட்டம் மாற்றப்பட்டாலும் அவை ஓதப்பட்டுக் கொண்டுள்ளன. அதற்கு உதாரணம் மரண வேளையில் பெற்றவர்களுக்கும் உறவினருக்கும் வசிய்யத் செய்ய வேண்டுமெனக் கூறும்(2:180) வசனம் சூரத்துன்னிசாவிலுள்ள வாரிசுரிமை தொடர்பான வசனங்கள் (4:11, 12, 176) மூலம் நஸ்க் (மாற்றம்) செய்யப்பட்டு விட்டது. ஆயினும் குர்ஆனில் ஓதப்படுகிறது.

குர்ஆனிலிருந்து அல்லாஹ்வின் உத்தரவுப்படி அப்படியே எடுக்கப்பட்ட வசனங்களும் உள்ளன. உதாரணமாக பிஃரு மஊனாவில் கொல்லப்பட்ட நபித்தோழர்கள் குறித்த வசனத்தைச் சொல்லலாம். ”நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தி அடைந்து விட்டான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தி அடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்” என்று ஒரு வசனம் குர்ஆனில் இறங்கியிருந்ததாகவும் தாங்கள் அதை ஓதி வந்ததாகவும் பின்பு அது நஸ்க் செய்யப்பட்டு விட்டதாகவும்அனஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

பார்க்க: புகாரி 2801, 2814, முஸ்லிம் வேறு சில வசனம் குர்ஆனிலிருந்து அல்லாஹ்வின் உத்தரவுப்படி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கூறப்பட்டிருந்த சட்டம் நபி(ஸல்) அவர்களால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு உதாரணமாக புகாரியின் 6830வது ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம் அதில் உமர்(ரலி) அவர்கள் கூறுவது: ”திண்ணமாக அல்லாஹ் முஹம்மது(ஸல்) அவர்களை சத்தியத்துடன் அனுப்பினான். மேலும் அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம்….” (இது அபூதாவூத் 4420 திர்மிதி 1432மற்றும் அஹ்மத் உள்ளிட்ட நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

குர்ஆனில் திருமணம் செய்தவர் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று கூறும் வசனம் இப்போது இல்லை. ஆனால் அப்படி ஒரு வசனம் இறக்கப்பட்ட பின்பு நபியின் காலத்திலேயே அல்லாஹ்வின் உத்தரவு மூலம் வார்த்தை மட்டும் நஸ்க் செய்யப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆக இவ்விதங்களில் அமைந்த வசனம் பற்றிய செய்தியைத் தான் சம்பந்தப்பட்ட முஸ்லிம் நூலின் 2876, 2877 ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.

ஆகவே இந்த பெயர் தாங்கி தவ்ஹீத்வாதிகள் சொல்வது போல் இந்த ஹதீஸை நிராகரிக்க ஒன்றுமில்லை.

இந்த ஹதீஸ், இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் கருத்தைக் கொண்டுள்ளதாகவும் திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் இவர்தனது தர்ஜுமாவில் எழுதிவைத்திருப்பது பிதற்றலாகும். ஒரு ஹதீஸின் கருத்து தனக்குப் புரியாவிட்டால் ஹதீஸ் துறை அறிஞர்கள் கூறியுள்ள விளக்கங்களை உண்மையைத் தெரிந்து கொள்ளும் நல்லெண்ணத்துடன் பார்க்க வேண்டும். எனக்குப் புரியாவிட்டால் அது ஹதீúஸ இல்லை என்று சொல்வது அபூஜஹ்ல் தனம். இந்த அபூஜஹ்ல் தனமுள்ள ஒருவருக்கு தமிழ்நாட்டுத் தவ்ஹீத் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை. மட்டுமல்ல தொண்டி என்ற சிற்றூரின் தவ்ஹீத் கூட்டத்துக்குக் கூட தலைமை தாங்குவதற்கு தகுதியில்லை. இந்த அபூஜஹ்ல் தனத்தை கைவிட்டால் இத்தனைக் குழப்பங்கள் இருக்காது. அல்லாஹ் நல்வழி காட்டுவானாக

(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

நன்றி அல்-ஜன்னத் மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *